Music Life Series Of Cinema Music (Per Vaichalum Vaikkamal Ponalum Malli Vasam) Old Tamil Movie Songs Article by Writer S.V. Venugopalan.



சை வாழ்க்கை கட்டுரைகள், அடுத்த மாநிலத்திலும் ரசிக்கப்படுவது உற்சாகத் தகவல். சம்யுக்தா, எங்கள் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேரள நண்பர் சுரேஷ் அவர்களுடைய செல்ல மகள். இசை ஞானம் மிக்க பாடகி. மகள் பாடிய சில பாடல்களின் ஆடியோ பதிவுகளை அவ்வப்பொழுது சுரேஷ் அனுப்பி வருவார். சிறப்பான பாடல்களை அதே சிறப்போடு இசைத்திருப்பார். தமிழ்ப் பாடல்கள் பலவும் அருமையாகப் பாடுபவர். உச்சரிப்பு திருத்தங்கள், பாடல் வரிகள் கவனித்து வாட்ஸ் அப்பில் உடனுக்குடன் தெரிவிப்பது வழக்கம். உள்ளன்போடு ஏற்றுக் கொள்ளும் குடும்பம். கடந்த வாரம் அவர்கள் அனுப்பி இருந்த ஒலிப்பதிவில் அம்சமாகப் பாடி இருக்கிறார் சம்யுக்தா, மாலைப் பொழுதின் மயக்கத்திலே பாடலை. ‘இசை வாழ்க்கை கட்டுரையில் ரசித்து எழுதப்பட்டதை வாசித்துத் தான் இந்தப் பாடலைத் தேர்வு செய்து அவளைப் பாட வைத்தேன்’ என்றார் சுரேஷ். நன்றி தோழா.

‘எதற்கு இத்தனை பாராட்டு என் மகளுக்கு’ என்று வியப்புற்றார். காரணங்கள் நிறைய இருந்தது. அவற்றில் முக்கியமானது, அந்த கரோக்கி அத்தனை சுவாரசியமானதாக இல்லை.  கரோக்கி என்பதை எல்லோரும் அறிந்திருப்பீர்கள், பின்னணி இசை மட்டும் ஒலிக்கும், உரிய இடைவெளியில் பாடலை யாரும் பாடிப் பார்த்துக் கொள்ளலாம். எண்ணற்ற இசை ரசிகர்கள் தனியாகவும், வேறு சிலரோடு இணைந்தும் இந்த கரோக்கி முறையைப் பயன்படுத்தித் தங்கள் பாடல்களைப் பாடி அதைப் பரவலாகப் பகிர்ந்து கொள்வதையும் பார்த்திருப்பீர்கள். ஸ்ம்யூல் பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் இருப்பார்கள் எல்லோருக்கும். இந்தப் பாடலுக்கான கரோக்கி அத்தனை அம்சமாக இராது போயிருந்தது. ஆனாலும் சிறப்பாகப் பாடி இருக்கிறார் சம்யுக்தா.

பாடல் வரிகளை அடுத்தடுத்த சரணங்களை நோக்கி முன்னகர்த்திச் செல்வதில், பாடுபவருக்கான ஊக்கம், ரசிப்பு, திளைப்பு எல்லாம் இசையால் கிடைக்கப் பெறுவது, கவிஞரது சொற்களுக்கு இசை ஒரு வசந்தத்தை வரவழைத்துத் தருகிறது. 

ண்மையில் வந்திருக்கும் உயிர்மை 200வது இதழில், ‘நாம் ஏன் இசையை ரசிக்கிறோம்?’ என்ற அருமையான கட்டுரை எழுதி இருக்கும் மனநல மருத்துவர் டாக்டர் ஜி ராமானுஜம், இசை அனுபவங்களின் காரணிகளை நிறைய ஆய்வுகளின் அடிப்படையில் ஆராய்ந்து எழுதி இருக்கிறார். பின்னணி இசை இன்றி மௌன ராகம், நாயகன் போன்ற படங்களைப் பார்த்தால் நமது அனுபவம் முழுமை அடைவதில்லை என்று ஓரிடத்தில் அவர் சொல்வது கவனிக்கத்தக்கது. 

‘இசையால் மனிதன் உயிர் வாழ்வதில் எந்தப் பலனும் இல்லை. இசை இல்லாமலே மனிதன் உயிர் வாழ முடியும். ஆனால் அதை வாழ்க்கை எனச் சொல்ல முடியுமா எனத் தெரியாது’ என்று உளவியலாளர் ஸ்டீவ் பிங்கர் வாசகங்களைப் பேசும் கட்டுரை, ‘பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும் மல்லிவாசம் என்பதைப் போல் பலன் இருக்கிறதோ இல்லையோ, வாழ்க்கையைச் செழுமையாக்க முழுமையாக்க இசை நமக்குத் தேவை’ என்று நிறைவு பெறுகிறது. 

செழுமையாவதும், முழுமையாவதும் வாழ்க்கையின் முக்கிய பயன் அல்லவா….இசை கேட்பது, இசைப்பது, இசையை ரசிப்பது யாவுமே உறுதிமிக்க பலன்களை அளிக்கவே செய்கிறது.  

மனிதர்மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இடம் பெற்ற கவிஞர் வாலி எழுதிய அந்த வசமான பாட்டில் வந்து முடிக்கிறார் பாருங்கள் கட்டுரையை, அதை விட வேறென்னஇப்போது அந்தப் பாடல் மறு உயிர்ப்புக்கு வேறு வந்துவிட்டது. மலேசியா வாசுதேவனும், எஸ் ஜானகியும் கொண்டாட்டக் குரல்களில் உற்சாக பரவசம் ஏற்றி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த பாடல் அது

துப்பாக்கி விசை அதிர்ந்ததும் ஓட்டம் என்பார்களே, பாடலை டிரம்ப்பெட் இசைக்க தாளக்கருவிகளும், வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளும் எடுக்கிற நாட்டிய பரவச இசையில், நான்கு நாள் காய்ச்சலில் படுத்திருப்பவரைக் கூட எழுந்து பாய்ச்சல் வேகத்தில் ஓடவைக்கத் தக்க பாடல்களில் ஒன்று, இளையராஜாவின் அமர்க்களமான இந்த இசை நாட்டியம்.  



https://youtu.be/70Ql0E6_qJQ



வேகமான தாளகதியில் அடுக்கடுக்கான சந்தங்களுக்குக் காதல் உணர்வுகளை அள்ளியள்ளித் துள்ளித்துள்ளி வழங்கி இருப்பார் வாலி. மலேசியா வாசுதேவன் ரசனையோடு அனுபவித்து அந்த சொற்களை அத்தனை இன்பமாக ராக அடுக்குகளின் சங்கதிகள் தெறிக்கப் பாடி இருப்பார். அதற்கு ஏற்ற அதே ஓட்டத்தில் எஸ் ஜானகி இடையிடையே புன்னகை பூக்களும் தக்க இடங்களில் பூக்கவைத்துச் சிணுங்கலும், சிருங்காரமும் ருசிக்கப் பாடி இருப்பார். 

இசைக்கருவிகளின்அதிர்வேட்டுக் கச்சேரி, ரசிகர்களை ஒரு குடை ராட்டினத்தில் ஏற்றிச் சுற்றவைக்கும் கதியில் ஓடத்தொடங்க, பல்லவியை ஓர் உள்ளச்சிலிர்ப்போடு, ‘பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும் மல்லிவாசம் அது குத்தால சுகவாசம்’ என்று மலேசியா வாசுதேவன் எடுக்கும் இடத்தை ஒரு லட்சம் தடவை கேட்டாலும் அலுக்கவே செய்யாது. அடடா..அடடா… ராஜாவின் மெட்டும், 

வாசுதேவனின் கணீர்க் குரலின் மென்வண்ணக் கலவையும், தொடரும் எஸ் ஜானகியின் கிறக்கமிகுந்த குரலுமாகப் பல்லவி பல்லக்கு பவனியாக அமைந்திருக்கும். 

‘அட இப்போதும் எப்போதும் முப்போதும்’ என்ற சொற்களை ஒவ்வொருமுறையும் இரண்டு பாடகர்கள் பாடுவதில் மட்டுமல்ல, பின்னணியில் கூடவே ஒலிக்கும்  சுவாரசியமான இசை ஜாலங்களுமாக  எத்தனை போதை ஊறவைக்கிறார் இளையராஜா. இரண்டு சரணங்களுமே மென் குத்தாட்ட சங்கதிகள் ததும்பிப் பொங்கி வழிபவை தான். 

‘கோடை வெப்பத்தில்’ என்று தொடங்கும் முதல் சரணத்தில், ‘மந்தாரைச் செடியோரம் ஹோய்…கொஞ்சம் மல்லாந்து நெடுநேரம்’ என்ற இடத்தை வாசுதேவன் அசாத்தியக் காதல் பித்தேறி முத்தாக இசைப்பதும், ‘சந்தோஷம் பெறலாமா ஹோய் அதில் சந்தேகம் வரலாமா?’ என்று ஜானகி பதிலுக்கு வாரி இறைக்கும் காதல் நீரூற்றும் ஆஹா…ஆஹா..

‘காதல் மன்னனா நீயும் கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா?’ என்ற இரண்டாம் சரணத்தின் வரிகளில் ஜானகி பரிமாறும் சங்கதிகளும், துள்ளல் பாவங்களும் அலாதியானவை. ‘தோழி மெல்லத்தான் சேதி சொல்லத்தான் தோன்றினேன் அவதாரமா’ என்று வாசுதேவன் பதிலிசைக்கும் போதும் தான் எத்தனை எத்தனை சங்கதிகள். பாடல் முழுக்க முழுக்க இளம் ஜோடிகளின் காதல் கொண்டாட்ட மெட்டு தான். 

திரையில் கமல், குஷ்பு அத்தனை அம்சமாக, பாடலுக்கேற்ற லயம் பிசகாத உடல் மொழியில் நடித்திருப்பதும் பாடலை அந்நாட்கள் தொட்டு ரசிகர் மனங்களில் ஆட்டம் போடவைத்துக் கொண்டிருக்கிறது. 

இடையறாத ஆன் லைன் வகுப்புகள் நடுவே இடைவேளை 

கிடைக்கையில் அல்லது சுவாரசியம் மிகுந்த ஏதேனும் ஓர் உரையாடல் எங்களுக்குள் நடக்கையில் சட்டென்று எங்கள் மகன் நந்தா ஹாலில் உள்ள டிவியில் யூ டியூப் வருவித்துச் சட்டென்று இந்தப் பாடலுக்குள் கொண்டு நிறுத்திக் கண்களால் என்னிடம், ராஜா பற்றிய பெருமையோடு ஒரு வார்த்தை கடத்திப் பாடலில் முழுதாக ஆழ்ந்து விடும் தருணங்கள் கணக்கற்று நிகழ்ந்து கொண்டிருப்பவை.

ந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கையில், திரைக்கலைஞர் ஸ்ரீ காந்த் மறைவுச் செய்தி வந்திருந்தது. தமிழ்த் திரையில் வெண்ணிற ஆடை மூலம் நான்கு புதிய முகங்களைத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார் இயக்குநர் ஸ்ரீதர். ஜெயலலிதா, நிர்மலா, மூர்த்தி, ஸ்ரீகாந்த். குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் மிகவும் நேர்த்தியான நடிப்பை வழங்கியவர் ஸ்ரீ காந்த். 

இயல்பிலேயே நகைச்சுவை பொங்கும் கண்கள் அவருக்கு இருந்ததைத் தமிழ்த் திரையுலகம் அத்தனை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தக் கொடுமை சவுகார் ஜானகி அவர்களுக்கும் நேர்ந்தது. இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த எதிர் நீச்சல் படத்தில் கிட்டு மாமா, பட்டு மாமி பாத்திரங்களுக்கு வேறு யாரையும் யோசிக்கத் தோன்றவில்லை.

Aduthathu Ambujatha HQ தமிழ் - Song Lyrics and Music by T.m. Soundararajan,  P. Susheela arranged by Diin0z on Smule Social Singing app

‘அடுத்தாத்து அம்புஜத்தப் பார்த்தேளா’ பாடலில், டி எம் சவுந்திரராஜன் அத்தனை கொனஷ்டை செய்து நையாண்டிக் காட்சிக்கான பாவங்களைக் கொணர்ந்திருப்பார். பி சுசீலா, கணவனை வம்புக்கு இழுத்து அலறடித்து அப்புறம் ஒரேயடியாய் வீழ்த்திவிடும் பாத்திரத்திற்கான குரலை அபாரமாக இசைத்திருப்பார். 

இப்படியான பாடல்களை வாலி அன்றி வேறு யார் எழுதி இருக்க முடியும்! வி குமார், குடும்ப சண்டைகளின் போர்க்களத்தை, ஓர் அசட்டு தம்பதியினரின் அன்றாட வம்பு தும்புகளை, அதில் இழையோடும் கொஞ்சல், கெஞ்சல், மிஞ்சல் கொஞ்சமும் நழுவிப் போய்விடாத வண்ணம் மெட்டமைத்து அருமையான பாடல் வழங்கி இருப்பார்.

நடுத்தர வர்க்கம், அடுத்தவர்களோடு தங்களை ஓயாது செய்துகொண்டிருக்கும் ஒப்பீட்டில்தான் தனக்கு இயல்பாக வாய்க்கும் வாழ்க்கையின் இன்பங்களைத்  தொலைத்துவிட்டுத் திண்டாடித் தவிப்பது. அதன் ஒரு வண்ணம் தான் இந்தத் திரைப்பாடல். 

‘ஏன்னா நீங்க சமத்தா நீங்க அசடா’ என்று பல்லவிக்குமுன் பேச்சுமொழியை ராகத்தில் தொடங்கும் இடத்திலேயே சுசீலா முத்திரை பதிப்பார். ‘ஏண்டி புதுசா கேக்கற என்னைப் பாத்து’ என்ற பதில் கோதாவில் இறங்கி இருப்பார் டி எம் எஸ்.   அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேண்டி, அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டிஎன்பதில் ஒரு சமூக செய்தியும் உண்டு.





பாடலும் பாடலின் காட்சியும் மிகக் குறைவான ஒரு கூட்டுக் குடித்தனக் குடியிருப்பின் மிகச் சிறிய இடத்திற்குள் அன்றாட நிகழ்வின் உணர்வாக நிலைபெற்று விட்டுவிட்டது. ‘உங்களுக்கென்று வாக்கப்பட்டு என்னத்தக் கண்டா பட்டு?’ என்று சுசீலா கொண்டு நிறுத்தும் இடத்தில், கோபமாக ஒரு வவுச்சரைக் கம்பியில் குத்திவிட்டுப் பார்க்கும் பணியாளர்கள் சிலர் நினைவுக்கு வந்து போகிறார்கள்.  ‘பட்டு கிட்டு பேரச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு’ என்ற வரிகளை, டென்னிஸ் ஆட்டத்தில் எதிராளி தம் பக்கம் அனுப்பி வைக்கும் சாமர்த்தியமான வீச்சை அநாயாசமாக வாங்கிப் பதிலுக்கு அடித்து அனுப்பும் வீச்சாக டி எம் எஸ் இசைத்திருப்பார்.

சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்குஎன்ற டி எம் எஸ் விளக்கத்திற்கு, ‘எப்போ இருந்தது, இப்போ வர்றதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு..’ என்ற அலுப்பை, அந்த சாக்கு எனும் பதத்தின் உகரத்தில் வைத்துத் தீட்டி இருப்பார் சுசீலா.

‘ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு’ என்ற இடத்திலிருந்து புறப்படும் புயல், ‘பேசினா என்ன வெப்பேளோ  ஒரு குட்டு’ என வலுப்பட்டு வடகிழக்காக நகர்ந்து மேலும் தீவிரமாகி அடிக்கும் பெருமழை,  வாலியின் அபார ஞானத்தை வெளிப்படுத்தும் வரிகளாகும். டி எம் சவுந்திரராஜன், பி சுசீலா எனும் அற்புதமான பாடகர்களது பன்முக இசைத்திறனில்  நகைச்சுவை, நையாண்டி வெளிப்படுத்தும் பாடல்களில் இது முக்கியமானது. பாடலுக்கான உடல் மொழியையும், அந்த கதாபாத்திரங்களின் பண்புகளையும் அசாத்தியமாக வடித்திருப்பார்கள்  நடிகர்கள் இருவரும்.

தனித்துவப் பங்களிப்பு வழங்கிச் சென்றிருக்கும் ஆர்ப்பாட்டம் அற்ற நடிகர் ஸ்ரீ காந்த் அவர்கள் நினைவுக்கு இந்தப் பாடல் மூலம் அஞ்சலி செலுத்தத் தோன்றியது. 

கலை, மனித வாழ்க்கையை அவரவர் காலத்திற்கும் அப்பால் நிலைநிறுத்துகிறது. இசை, மனித வாழ்க்கையை அவ்வப்பொழுது ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் வண்டி குடை சாய்ந்துவிடாது தோள் கொடுத்துத் தற்காத்து அருள்கிறது. நெருக்கமான மனிதர்களோடு ஏற்படும் பிணக்குகளில் இருந்து மனத்தை விடுவித்து அன்பின் பூக்களை மலரச் செய்கிறது. 

(இசைத்தட்டு சுழலும் ….)

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]

முந்தைய கட்டுரைகள் படிக்க: 

இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 48: யாரோடு யாரோ இசை யார் பாடுவாரோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 49: பண்ணுக்குள் பொத்தி வைத்தேன்- எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



4 thoughts on “இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன் ”
  1. அப்பப்பா எவ்வளவு செய்திகள். உங்களது நினைவாற்றல் வியக்கவைக்கிறது.
    அடுத்தாத்து அம்புஜத்தை…..நான் ரசித்த பாடல்களில் ஒன்று. பல முறை பார்த்தாலும் அலுப்புத் தட்டாது.

    1. எப்போதும் போல் அருமை.. ரசித்துப் படித்தேன்..பார்த்தேன்.. இரண்டு பாடல்களை பகிர்ந்து கொண்டேன்

  2. ஆர்ப்பாட்டம் அற்ற நடிகர் ஸ்ரீ காந்த் அவர்களுக்கு, தனித்துவமிக்க அவர்தம் பாடல் வரிகள் மூலம் தாங்கள் புகழ் அஞ்சலி செலுத்தியிருப்பது போற்றுதலுக்கு உரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *