Music Life Series Of Cinema Music (Isaiye isaiyin oliye) Article by Writer S.V. Venugopalan.புலமைப்பித்தன் அவர்கள் மறைவுச் செய்தி வந்த அடுத்த சில நிமிடங்களில், பத்திரிகை நண்பர் ஒருவர் அழைத்து புலவருக்குப் புகழஞ்சலி எழுதுவது பற்றிக் கேட்டார். திரைப் பாடலாசிரியர்கள் யாரேனும் எழுதுவது பொருத்தமாக இருக்கும் என ஒன்றிரண்டு பெயர்கள் சொன்னதில், முக்கியமாக நான் குறிப்பிட்டது, கவிஞர் பிறைசூடன் அவர்களை! அடுத்த சில நாட்களில் இவரையும் இழப்போம் என்று யார் உணர்ந்திருப்பார்?

ஒரு கவிஞர், பாடலாசிரியர், எளிய மனிதர், ஆர்ப்பாட்டங்கள் அற்றவர் என்பதைக் கடந்து அவரைப்பற்றி அதிகம் தேடி வாசித்ததில்லை. நேர்படப் பேசுபவராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. நெளிவு சுளிவுகள் என்று நாகரீகமாக வருணிக்கப்படும், அடிமைத்தன அணுகுமுறையை ஏற்காதவர் என்பதெல்லாம் அவரது நேர்காணல்கள் பார்த்தால் பிடிபடுகிறது. ‘ரயில்வே கேட்டுக்கே தலை குனிஞ்சு போகாதவன்’ என்று நையாண்டியாக ஓரிடத்தில் சொல்கிறவர், வாய்ப்புக்காகத் தன்னைக் குறுக்கி நடத்திக் கொள்ள விரும்பவில்லை. தான் நெருக்கமாக அறிந்த மனிதர்களைப் பற்றித் தனக்கு மனத்தில் பட்டதைப் பட்டவர்த்தனமாகப் பேசுகிறார், தனது தொடக்க காலப் பக்குவமற்ற தன்மைகள், சிறுபிள்ளைத் தனமாக ஏட்டிக்குப் போட்டிப் பேசி அடைந்த சங்கடங்கள் எல்லாம் வெளிப்படையாக அவர் சொல்வதை யூ டியூபில் நிறைய கேட்க முடிகிறது.

Music Life Series Of Cinema Music (Isaiye isaiyin oliye) Article by Writer S.V. Venugopalan.

வறுமையின் தரிசனத்தை கவிஞர் காயங்கள், தழும்புகள் தடவியவாறு கடைசிவரையில் நினைவில் தேக்கி வைத்துக் கடந்த காலத்தை மறக்க முடியாதவராகவே வெளிப்படுகிறார் எந்த உரையாடலிலும் ! ஒரு விஷயத்தை எத்தனை வெவ்வேறு மனிதர்கள் பேட்டியில் சொல்லியிருந்தாலும் ஒன்றுபோலவே அதே வரிசையில் அவர் பகிர்வது, உண்மைக்கு நெருக்கமான அவரது இதயத் துடிப்பைப் படம் பிடிக்கிறது. கிரகங்கள், விதி, ஆன்மீகம், பக்தி என்று அவர் குறிப்பிடும் நேரங்களில் கூட சோகங்களையும் நகைச்சுவையாக நினைவுகூரும் பேச்சு மொழி அவரது! சிறை படத்திற்காக எழுதியவர், முதல் பாடல் இடம் பெற்ற படம் நூறு நாட்கள் ஓடியதும், தனக்கு வாய்ப்புகள் அள்ளிக்கொட்டி வந்துவிழும் என்று நம்பி இருந்தேன் என்கிறார், பாவம்.

கண்ணதாசன் காலியிடத்தில் தனக்கு ஓர் ஆசனம் என்ற தனது திறமை மீதில் வளர்த்துக் கொண்ட கனவுகள் தகர்ந்து போய் வாழ்வாதாரத்திற்காக அலைவுற நேர்ந்த கதியைத் தமது கடைசி நேரம் வரை அவரால் மறக்க முடியவில்லை, தனக்குரிய நியாயமான அங்கீகாரம், தனது எழுத்துக்குரிய நேர்மையான அடுத்தடுத்த வாய்ப்புகள் ஏன் தப்பிப் போயிற்று என்று அறிந்திருந்தார். வெற்றி பெற்ற பாடல்களுக்குப் பிறகும் சென்டிமென்ட்களில் தலையைப் புதைத்துக் கொண்டு அவரவருக்கான டீம் என்ற வார்ப்பைச் சுமந்து கொண்டு தெரியும் திரைப்படவுலகில் எந்த டீமிலும் இல்லாதவராக எப்போதாவது நினைவுக்கு வந்து அழைக்கப்படுபவராக மட்டுமே 400 படங்களுக்குமேல் பாடல்கள் எழுதிக் கொடுத்து மறைந்திருக்கிறார் என்பது உண்மையில் வேதனைப்படவே வைக்கிறது. ‘மீனம்மா மீனம்மா’, ‘நடந்தால் இரண்டடி’, ‘சைலன்ஸ்…காதல் செய்யும் நேரம் இது’, விருது பெற்ற ‘சோலப் பசுங்கிளியே’ போன்ற பல புகழ்பெற்ற பாடல்கள் இயற்றியவரான பிறைசூடன் அவர்களது திரையுலகப் பாடல் பயணம் சுவாரசியமான இடர்ப்பாடுகளைக் கடந்து தான் நிகழ்ந்திருக்கிறது.

தான் கேளாமலே தனக்கு ஒரு நல்ல டேப் ரிகார்டர் வாங்கி அளித்து, எங்கே பார்த்தாலும் மதிப்போடு விளித்த எஸ் பி பாலசுப்பிரமணியம், தனக்கு ஃபோன் கிடைக்க உதவியதிலிருந்து சக மனிதராக நடத்திய வி குமார், தனது அறியாத சிறுபிள்ளைத்தன சேஷ்டையெல்லாம் மறந்து குழந்தையைப் போல் அன்பு கொண்டாடிய மெல்லிசை மன்னர், சங்கர் கணேஷ், தனக்கு வாய்ப்புகள் வழங்கிய இளையராஜா, இரண்டே பாடல்கள் கொடுத்தாலும் அன்பு மறவாத ஏ ஆர் ரெஹ்மான் முதற்கொண்டு தனக்கு அன்பு காட்டிய எல்லோரையும் விடாது பாராட்டும் நெஞ்சு இருந்தது அவருக்கு. பாடல் வரிகளிலிருக்கிறது சங்கீதம் எனும் எம் எஸ் வி அவர்களையும், இசை தான் ஆதாரம், பாடல் அப்புறம் எனும் வேறு வகை இசை அமைப்பாளரையும் ஒப்பிட முடிகிறது அவருக்கு. தத்தகாரத்தையும், பாடல் வரிகளையும் மளமள என்று நினைவுகூர்ந்து பேசிக் கொண்டே இருந்திருக்கிறார் மனிதர்.

எஸ் பி பி மறைவு அவரை மிகவும் பாதித்திருந்தது, அவரது நினைவேந்தல் நிகழ்வொன்றில் எஸ் பி பி சரணை எதிரே பார்த்துக் கொண்டு பேசுகையில், ‘அவரது குரலை மீட்டுருவாக்கம் செய்து உங்கள் பாடல்கள் நீங்கள் பாடவேண்டும், வேறு என்ன நினைவாலயம் எழுப்பினாலும் போதாது’ என்று அவருக்கு நேர்ப்பட அறிவுறுத்தும் திண்மை பிறைசூடனுக்கு இருந்தது மலைக்கவைக்கிறது. திரையிசையில் திறமையாளர்களை வஞ்சனையன்றிக் கொண்டாடும் அவர் பாங்கும் சிறப்பானது. அவரது நகைச்சுவை உணர்ச்சிதான் அவரைத் தக்கவைத்துப் பணியாற்ற வைத்துக் கொண்டிருந்திருக்கும் என்று கூட தோன்றுகிறது. தன்னையே விமர்சித்துக் கொள்ளும் அவரது சுய பகடி மனத்தை என்னவோ செய்கிறது.

பக்திப் பாடல்கள் பக்கம் ஒரு கட்டத்தில் நகர்ந்து சென்றுவிட்ட அவரால், சமூக அவஸ்தைகளைப் பாடு பொருளாக்கி விடுதலை நோக்கிய வெளிச்சப் பாதைகளைத் தேட இயலாமல் போய் விட்டது என்று தோன்றுகிறது. தனது பாடுகளை அவர் ஏதும் பதிவு செய்திருக்கிறாரா, என்று கேட்டறிய வேண்டும் என்று தோன்றியது.

‘என் பொம்முக்குட்டி அம்மா’வுக்கு படத்தில் இளையராஜாவின் உருக்கம் மிகுந்த இசை மெட்டில் கே ஜே யேசுதாஸ் என்ற மகத்தான பாடகர், எஸ் சித்ரா எனும் சின்னக் குயிலோடு சேர்ந்திசைத்துப் புகழ் பெற்ற ‘உயிரே உயிரின் ஒளியே’ பாடல், பிறைசூடன் அவர்கள் வழங்கியது தான்.


ஜேசுதாஸ் அவர்கள், இதயத்தைத் தொடும் ஹம்மிங் தொடர்ந்து ‘உயிரே உயிரின் ஒளியே ஒரு நாள் உறவா இதுவே’ என்று முதலடி தொட்டுப் பாடும் அழகான பல்லவியில், பின்னர் சித்ராவின் குரலுமாக விரியும் பாடல் முழுவதிலும் ரசிகர்கள் தங்களை எப்படி கரைத்துக் கொள்கிறார்கள் என்பதை, 4 லட்சம் பேர் பார்த்திருக்கும் யூ ட்யூப் பதிவில் காண முடியும். கதைக் காட்சிக்கான கருப்பொருளை அந்த பாத்திரங்களின் உள்ளத்து உணர்ச்சிப் போராட்டங்களின் மொழியாக, ஆனால் எளிமையாக வார்க்க வேண்டிய சவாலில், பிறைசூடன் அருமையாகவும், இலகுவாகவும் தத்தகாரங்களில் கலந்து மிதந்து எழுதிக் கொடுத்திருப்பது பிடிபடும்.

பல்லவியிலிருந்து சொல்லவேண்டிய கதையை எடுத்துச் சொல்லிச் செல்கிறது அவரது பாடல் மொழி. ‘நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்’ என்பது தனித்துவமாக ஒலிக்கிறது. ‘இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்’ என்பது பல்லவியின் நிறைவு வரி. பல்லவி, சரணம் இரண்டின் நிறைவிலும் உணர்ச்சிகளின் தெறிப்பை ஓர் ஹம்மிங் வைத்துக் கொண்டு வந்திருப்பார் ராஜா.

தன்னன னா தானே னன தன்னன னா என்ற சரணத்தின் மெட்டு அபாரம். முதல் சரணத்தில் யேசுதாஸ், இரண்டாம் சரணத்தில் சித்ரா அவரவர் பாணியில் சரணத்தை எடுத்துப் பாடுவது அப்படி பாய்ந்து வந்து இதயத்தைத் தொடும். இழப்பின் வலியைக் காற்றின் வெளியில் வேதனைக் கீற்றாக ஒலித்துக் கொண்டே இருக்கும் வரிகளை யேசுதாஸ் அத்தனை அனுபவித்துப் பாடி இருப்பார். சோகம் குழைத்திருப்பார் சித்ரா.

அந்நாட்களில் தெற்கே சிற்றூர்கள் வரை கல்யாணம், காதுகுத்து, திருவிழா ஏதானாலும் திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டிருந்த பாடல்கள் வரிசையில் பிறைசூடன் அவர்களது பாடலும் ஒன்று என்ற குறிப்பை அண்மையில் ஆர்வத்தோடு கவனிக்க நேர்ந்தது. இளையராஜாவின் காதல் துள்ளல் மெட்டு அது. எஸ் பி பி – சொர்ணலதா குரல்களில் ‘உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்’ படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல் ஒரு தபேலா தாளக்கட்டில் நிகழ்த்தப்பட்ட காதல் பரவசம். நாயகனாகவும் நாயகியாகவும் வயலின்களும், குழலிசையும் ஒருவருக்கொருவர் சீண்டிக்கொண்டும், சிணுங்கிக்கொண்டும் தக்க தருணத்தில் ஒருவரையொருவர் ஆரத்தழுவி இன்பம் கொண்டாடியும் கிளர்த்தும் இசைச்சூழலில் தெறிக்கும் காதல் விளைச்சல் அது.

ஹம்மிங் தொட்டுத்தான் ‘என்னைத் தொட்டு’ என்று பல்லவி எடுக்கிறார் சொர்ணலதா. முதல் சரணத்தில் நுழையும் எஸ் பி பி தமது சுவாரசியமான புன்னகை சங்கதிகள் குலுங்கப் பாடலைத் தொடர்ந்து, இரண்டாம் சரணத்தில் அமர்க்களமான ஹம்மிங் தொடுக்கிறார்.

‘மன்னன் பேரும் என்னடி, எனக்குச் சொல்லடி, விஷயம் என்னடி’ என்ற பல்லவி சொற்களில் மெட்டுக்கான அழுத்தம் மேலும் கூட்டுகின்றன, வந்து விழும் சொற்கள். சொர்ணலதா அதற்குச் செய்யும் நகாசு ஒரு பக்கம் எனில், ‘மங்கை பேரும் என்னடி’ என்று எடுக்கும் எஸ் பி பி, இன்னும் அமர்க்களப்படுத்துவார். பல்லவியில் புறப்படும் கனவுப்பயணம் ஒரு துள்ளல் பல்லக்காகவே மாறிவிடுகிறது.

ராஜாவின் வேக சந்தங்களில் அடுக்குத் தொடராக சொற்களை அடுக்கியும், காதல் ஊர்தியின் கனவு சவாரியாகவே மெல்லுணர்வுகளைப் பதுக்கியும் இந்தப் பாடலைப் புனைந்திருக்கிறார் பிறைசூடன். இந்தப் பாடல் எழுதியவர் மட்டுமல்ல, பாடகர்கள் இருவரும் கூட இப்போது இல்லை. (நாயகியாக நடித்த மோனிஷா உண்ணியும் இப்போது இல்லை, மலையாளப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற அவர், கார் விபத்தில் மரிக்கையில் அவருக்கு வயது 22).

ஓர் இசைப்பாடலின் உருவாக்கத்தில் எத்தனையோ நுட்பமான அனுபவங்கள் கலந்திருக்கின்றன. பலரும் சிலவற்றைப் பகிர்ந்தும் வந்திருக்கின்றனர். எழுதப்படாத, பேசப்படாத அனுபவங்கள் ஏராளமானவை இருக்கும். தாம் எழுதிய பாடல்களில் மட்டுமின்றி எழுதப் படாது போனவற்றின் குறிப்புகளிலும் வாழ்ந்து கொண்டே இருப்பார் பாடலாசிரியர் பிறைசூடன்.

‘இளவயதிலேயே முடிவெடுத்துக் கொண்டுவிட்டேன், வாழ்க்கை இசையோடு தான்’ என்று சொல்லி இருக்கிறார் அவர். இன்னாருக்குத் தான் என்றில்லாமல் எந்த இசை அமைப்பாளர் கேட்டாலும் எழுதிக் கொடுத்துக் கொண்டே இருந்தவர் அவர். இசை வாழ்க்கை தான் அவரது வாழ்க்கையும்.

ஓர் இசைப்பாடல் இத்தனை அனுபவங்களின் தொகுப்பாகவும் காலப் போக்கில் கனம் சேர்த்துச் சுழன்று கொண்டிருக்கிறது. அது தான் இசையின் மகத்துவம். வாழ்க்கையின் தனித்துவம். இசை வாழ்க்கையின் உன்னதம்.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய கட்டுரைகள் படிக்க: 

இசை வாழ்க்கை 41: இராத்திரிக்குத் தூங்க வேணும் பாடிக்கிறேன் கொஞ்சம்…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 45: இசையை அணைத்துச் செல்வோம் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 46: எனக்கொரு காதலி இசைக்கின்றாள்  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 47: எல்லாம் எதற்காக நமக்குக் கொண்டாடும் இசைக்காக – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 48: யாரோடு யாரோ இசை யார் பாடுவாரோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 49: பண்ணுக்குள் பொத்தி வைத்தேன்- எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். One thought on “இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் ”
  1. இசை இருக்கும் வரை
    வாழ்ந்து கொண்டே இருப்பார்
    காற்றில் தவழ்ந்து கொண்டே இருப்பார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *