எந்த வயதிலிருந்து இசையில் விழுந்தோம் என்று கேட்டால், எல்லோராலும் துல்லியமாக அந்த முதல் தருணத்தைச் சொல்ல முடியுமா தெரியவில்லை. அன்னை வயிற்றில் இருக்கும்போதே இசை தான் தாலாட்டுகிறது. பிறந்த குழந்தைக்கு இசை தான் பாலூட்டுகிறது. சீராட்டுகிறது. அந்தப் பாடலை எல்லாம் குழந்தையும் பாடத் தொடங்கும்போது இல்லம் கூடுதல் வெளிச்சத்தில் மின்னுகிறது. குழந்தையைப் புற உலகம், பாடாதே என்று எதோ ஒரு புள்ளியில் அதட்டி நிறுத்தி விடுகிறது. அதற்கும் அசராத பிள்ளைகள் பாடியபடியே வளர்கின்றனர்.
‘ரமேஷா, எனக்காகக் கொஞ்சம் பாட்டு பாடுறா கண்ணா’ என்று (வீட்டில் பெயர் ரமேஷ்) என் இசையைக் கொண்டாடிப் பாடவைத்து ரசித்தவள் எங்கள் லலிதா சித்தி. கயிற்றுக் கட்டில், திண்ணை அல்லது மர பெஞ்சு ஏதோ ஒன்றில் அமர்ந்தபடி, சினிமாப் பாடல்கள், நிறுத்தாமல் ஒரு மணி நேரம் கூட அடுத்தடுத்துப் பாடப் பாட அப்படி சுவைத்துக் கேட்டுக் கொண்டிருப்பாள். ஒருபோதும்,
பாட்டைக் கழற்றி வைத்ததில்லை உடலிலிருந்து.
பள்ளிக்கூடப் பருவத்திலேயே இட்டுக்கட்டிப் பாடும் வழக்கம் தொடங்கி இருந்தது. அது வயது ஏறிக்கொண்டே போனாலும் நிற்கவில்லை. மகன் நந்தாவை உறங்க வைக்கையில், அவனுக்காக அப்போதைக்கப்போது உருவாக்கிய பாடலில் ஒன்று,
செல்ல நந்தா தூங்கு – என்
வெல்ல நந்தா தூங்கு
நாள் முழுதும் நீ செய்யும்
குறும்புக்கெல்லாம் ஓய்வு (செல்ல நந்தா )
கையுடைஞ்ச பொம்மைக்கு ஒரு
காலு கூடக் குறையும் – உன்
கை பட்டால் கால் பட்டால்
எந்தப் பொருள் தேறும்?
பிஞ்சு விரல் தூக்கி என்னை
அடிக்கும் போது வலிக்கும் – நான்
கெஞ்சிடாமல் சிரித்து விட்டால்
கூடக் கொஞ்சம் கிடைக்கும் – அடி
கூடக் கொஞ்சம் கிடைக்கும் (செல்ல நந்தா)
மயிலிறகால் வருடியதாய்
ரகசியமாய் முத்தம் -நீ
தருகையிலே பெறுகையிலே
இருக்குமிடம் சொர்க்கம்
விஷமங்கள் செய்கையிலே
தூங்க வைக்கத் தோன்றும் – நீ
தூங்கிவிட்டால் விழிக்கும்வரை
காத்திருப்பேன் நித்தம்
காத்திருப்பேன் நித்தம்! (செல்ல நந்தா)
நகைச்சுவைப் பாடல் ஒன்று கூட புனைந்ததுண்டு. அது நந்தாவின் நேயர் விருப்பம், ஏதாவது காமெடி பாட்டுப் பாடுப்பா என்றான், மூன்று வயது இருக்கையில். யாரைப் பற்றி காமெடி என்று கேட்கவும், என்னைப் பற்றியே பாடு என்றான்.
அவன் பேரு நந்தா, அவன் பண்ணுவான் பந்தா, அத்தைக் கொண்டா இத்தைக் கொண்டா, கேட்கும் அனகொண்டா…இது தான் பல்லவி. சரணம் இப்படி வரும்:
‘இட்டிலி கொடுத்தால் சப்பாத்தி கேட்பான்,
சப்பாத்தி கொடுத்தால் பரோட்டா கேட்பான்
பரோட்டா கொடுத்தால் சென்னா கேட்பான்
சென்னாவைக் கொடுத்தால் தின்னாமல் சிரிப்பான் (அவன் பேரு)
அப்படி ரசித்து ரசித்து சிரித்துக் கேட்டபடி தூங்குவான்.
சேர்ந்திசைக் குழு ஆசிரியை ராஜராஜேஸ்வரி அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூர் பற்றி ஒரு பாட்டு கேட்டார் என்று, மயிலாப்பூர் அது ஒயிலாப்பூர் என்று ஒன்று எழுதிக் கொடுக்க, அவர் அத்தனை அன்பு பாராட்டி, மறுத்தாலும் விடாது சன்மானமும் வழங்கி சிறப்பித்தார். இதெல்லாம் பழைய புராணங்கள். இசைப்பாடல்கள் என்று ஒருபோதும் உட்கார்ந்து எழுதியதில்லை.
அண்மையில், கல்லூரி மாணவி சிந்துஜா என்பவர், தமது கல்வியின் பகுதியாக ஒரு படைப்பாளி என்ற முறையில் என்னோடு நெடிய உரையாடல்கள் நடத்தி, விவாதங்கள், கேள்விகள் எழுப்பித் தனது படிப்பை நிறைவு செய்ய இருப்பவர். என்னைப் பற்றிய விவரங்கள் தொகுத்துக் கொண்டே வந்தவர், கதை, கவிதை, குறுநாவல் எல்லாம் எழுதுகிறீர்கள், இசைப்பாடல்கள் ஏன் எழுதுவதில்லை என்று கேட்டார். அதெல்லாம் ஞானமில்லை, வாய்ப்பு இல்லை என்று சிரித்தபடி மறுத்துக் கொண்டே இருப்பேன். இசை வாழ்க்கை என்று ஒரு தொடர் எழுத வரும், இசைப்பாடல் எழுத வராதோ, ஏமாத்தாதீங்க அய்யா’ என்று திரும்பத் திரும்ப சண்டை பிடிப்பார். அண்மையில் ஒரு நாள் தீர்த்துச் சொல்லி விட்டார், பாடல் எழுதிக் கொடுத்தால் தான் ஆயிற்று என.
இசைப்பாடல் ஒன்று கேட்கின்ற நெஞ்சம்
இசைப்பேன் நானும் கொஞ்சம் ஓ ஓ
இதற்கா வார்த்தைப் பஞ்சம்?
என்று தொடங்கிய ஒரு பாடலை, உடனே அமர்ந்து எழுதி அவருக்கு அனுப்பி விட்டு, எழுத்தாளர் அழகிய சிங்கர் அவர்களது சொல் புதிது எனும் வாட்ஸ் அப் குழுவிலும் பகிர்ந்து கொண்டேன். ராகவன் மதுவந்தி எனும் நண்பர் (நேரில் பார்த்தறியாதவர்) அதை அவருடைய நண்பர், பாரதி அன்பர் திரு ராம் குமார் அவர்களுக்குப் பகிர்ந்து பேச, அவர் உடனே ராகேஷ் எனும் நண்பருக்கு அனுப்பிக் கேட்க, உடனே ராகேஷ் அவர்கள் இசையமைத்துத் தானே அந்தப் பாடலைப் பாடி, ஆடியோ பதிவை அனுப்ப, அப்படியே எனக்கும் வந்து சேர்ந்துவிட்டது.
கேட்டு அசந்து போனேன். எழுத்து இசையாக உருமாறும்போது ஏற்படும் ரசாயன வித்தைகள், தனக்காக நிகழ்கையில் அதன் ஈர்ப்பு பன்மடங்கு இருப்பதை உணர முடிந்தது. பாடலின் உணர்வுகளுக்குள் பயணம் செய்கிறது ராகேஷ் அவரது குரல். அத்தனை உயிர்ப்போடு முன்பின் அறியாத ஒருவரது வரிகளைத் தமது இசை ஆற்றில் அவர் மிதக்க விடும் கற்பனைத் திறன் வியக்க வைக்கிறது.
பாடலை, இன்னும் சிந்துஜா பார்க்கவில்லை என்பதுதான் இதில் சுவாரசியம். ஆடியோவையும் பின்னர் அனுப்பியாயிற்று. பாடலுக்கான பெருமை அவரைச் சாரும்.
கவிஞர் ஓர் ஓவியர் என்றால், ஓவியத்தை உயிரோடு உலவச் செய்யும் மந்திரவாதியாகிறார் இசையமைப்பாளர். மெட்டுக்குப் பாட்டும், பாட்டுக்கு மெட்டும் என்று எத்தனை ஓவியங்களை உயிர்த்துடிப்பு மிக்க இசைப்பாடல்களாக இசை மேதைகள் வழங்கி வந்துள்ளனர் திரையிசையில்!
அண்மையில் வந்த ‘லேடீஸ் ஸ்பெஷல்’ இதழின் தீபாவளி மலரில், ‘சந்தம் கொஞ்சும் சினிமா’ பாடல்கள் எனும் தலைப்பில் நண்பர் ஆர் கே ராமநாதன் (ஆர்க்கே), ரசனை பொங்கிப் பொங்கி அருமையான பாடல்கள் சிலவற்றை ரசித்து ரசித்து எழுதி இருக்கிறார். அழைத்து வாழ்த்தும்போது, கட்டுரையில் இடம் பெறாத வேறொரு பாடலைச் சொன்னால், ‘கடகட’ என்று பள்ளி மாணவர்கள் பத்தாம் வாய்ப்பாடு சொல்வது மாதிரி இலகுவாகப் பாடல் வரிகளை வேகமாகச் சொல்லிக் கொண்டே செல்கிறார் மனிதர்.
பாடல்களே வாழ்க்கையாக மாறி விட்ட காலம் எல்லோருக்கும் வாய்க்கிறது. சிலர் அதை இழக்காது தக்கவைத்துக் கொள்ளும் வரம் பெற்றிருக்கையில், வாழ்க்கையே இசையாக ஒலிக்கத் தொடங்குகிறது.
ஆர்க்கே கட்டுரையில் அவர் லயித்து எழுதியதில் மெல்லிசை மன்னரின் அமர்க்களமான ‘முத்துக்களோ கண்கள்’ பாடலும் ஒன்று. அதை வெறும் பாடல் என்று எப்படி குறிப்பிடுவது? ‘நெஞ்சிருக்கும் வரை’ மறக்க முடியாத கனவுத் தூரிகையின் காதல் ஓவியம் அல்லவா அது!
காதல் ததும்பும் ஓர் இதயத்தின் துள்ளல் துடிப்பையே தாளக்கட்டு ஆக்கி இருப்பாரோ என்னவோ எம் எஸ் வி! இதயத்தைத் தொட வேண்டுமானால், வீணையும், வயலினும், புல்லாங்குழலும் வருகை தந்து விடுவார்கள், சொல்லவே வேண்டாம்.
பாடல் முழுக்க முத்துக்களின் துளிகள் விழுந்து கொண்டே இருக்கும் ஒரு மெல்லோசை கேட்டுக் கொண்டே இருக்கும், சிறிய மணிகளின் ஓசை அது. க்ளோக்கென்ஸ்பீல் என்று அழைக்கப்படும் இசைக்கருவியை , இலேசாக ஒரு குச்சியால் இசைக்க, அளவான மணிகளின் இசை உள்ளத்தில் துளித்துளியாகக் காதல் ரசம் சேர்த்து நிரம்ப வைக்கிறது. (சைலோஃபோன் என்று போட்டு வரைந்திருப்பதை ஆங்கில அரிச்சுவடி புத்தகத்தில் பார்த்திருப்போம் அப்படியாக இருக்கிறது அது)
மணிகள் ஒலிக்க, பின்னணியில் இலேசாக வயலின் இழைக்க, கிடார் தொடங்கி வைக்க, வீணையின் சுகமான மீட்டலில் இருந்து பிறப்பதுபோல் ஒலிக்கத் தொடங்குகிறது டி எம் சவுந்திரராஜன் அவர்களது குரல். ‘முத்துக்களோ கண்கள்’ என்பது அவரது முதல் கேள்வி. ‘தித்திப்பதோ கன்னம்’, அடுத்தது. பதில் வேண்டாம், நாயகனுக்கு, ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை’ என்பதில் காதல் பரிமாறப்பட்டு விடுகிறது. அந்த வரியில் சந்த ஓசைக்கு ஏற்ற சொல்லடுக்குகள் அருமையாக அமைத்திருப்பார் கவிஞர் கண்ணதாசன்.
அங்கே நுழைகிறார் பி சுசீலா, ‘படித்த பாடம் என்ன’ என்ற வேகமான கணையைத் தொடுத்து, அதே மூச்சில் சட்டென்று குரலைத் தாழ்த்தி, ‘உன் கண்கள்’ என்று எடுத்து, ‘பார்க்கும் பார்வை என்ன’ என்று வளர்த்து, ‘பாலில் ஊறிய ஜாதிப் பூவைச் சூடத் துடிப்பதென்ன’ என்று கொண்டு நிறுத்துவார். பின், பல்லவியை நாயகியின் மொழியில், பதிலாக, ‘முத்துக்களே பெண்கள், தித்திப்பதே கன்னம்’ என்று நிறுவி, ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை’ என்று அதே சந்தங்களில் பல்லவியை நிறைவு செய்வார்.
அதில் அந்த ஜாதிப் பூவில் என்ற இடத்தில் எத்தனை சங்கதிகள் வைக்கிறார் மெல்லிசை மன்னர், ஆஹா! அதே போல், பார்வை என்ன என்ற இடத்தில் ஒரு சின்னஞ்சிறு வளைவு அக்கார்டியன் இசைத் துளியை சிந்த வைக்கிறார், அந்தத் துளி, பாடல் முழுவதும், சரணங்களிலும், அம்மாதிரியான என்ன வரும் இடங்களில் எல்லாம் அழகாக ஒலிக்கவைத்திருப்பார்.
‘கன்னிப் பெண்ணை’ என்ற முதல் சரணத்தில், ‘தென்றல் தாலாட்ட’ என்ற வருடலைத் தென்றல் போலவே வீசவைத்திருப்பார் டி எம் எஸ். ‘கடலில் அலைகள்’ என்று எடுக்கும் பி சுசீலா, அந்த ‘ஓடி வந்து’ என்பதில் அந்த ‘ஓடி’ எனும் சொல்லை, கடல் அலைகள் நம் பாதங்களில் ஓடிவந்து சிலீர் என்று தொட்டுவிட்டு மீள்கிற உணர்வைக் கொணர்வார்.
‘எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன’ என்கிற அடியில், காதல் ஏக்கத்தை என்னமாகப் பரிமாறி விடுவார் டி எம் எஸ். ‘விருந்து கேட்பதென்ன’ என்கிற பதிலடியை சுசீலா சந்தங்களின் விந்தைகளை ஒரு பந்தலிட்டுக் காட்டிவிடுவார்.
‘ஆசை கொஞ்சம்’ என்று பி சுசீலா காதல் சிணுங்கலோடு தொடங்கும் இரண்டாம் சரணத்தில், ‘பின்னிப் பார்ப்பதென்ன’ என்று இழைக்குமிடத்தில், ‘அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன’ என்ற வரியில் காதல் தாபத்தை மேலும் கூட்டுகிறது டி எம் எஸ் குரல்.
‘மலர்ந்த காதல் என்ன, உன் கைகள், மாலை ஆவதென்ன’ என்று காதல் விசாரணை நடத்தும் சுசீலாவின் கேள்விக்கு, ஒயிலான பதிலை, ‘வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன; என்று முடிக்கிறார் டி எம் எஸ்; தொடக்கத்தில் ஒலித்த அதே இசைத் துணுக்குகளோடு பல்லவியிலிருந்து சுசீலாவின் இதமான ஹம்மிங் ஒழித்து நிறைவு பெறுகிறது பாடல்.
பாடல் முடிந்தபிறகும், அந்த முத்துக்கள் சிந்தும் ஓசையும், காதல் இதயத்திற்கான துடிப்பின் லயத்தில் மிதக்கவைக்கும் தாளக்கட்டும் உள்ளே ஒலித்துக்கொண்டே இருக்க வைத்துவிடுகிறார் எம் எஸ் வி.
இந்தப் பாடலை அத்தனை ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கையில், தற்செயலாக, இப்போதைய பின்னணி பாடகி பத்மலதா அவர்கள், இந்தப் பாடலின் அழகை, இந்துஸ்தானி ராகத்தின் எழிலில் எப்படி அசாத்தியமாக இசை அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர் என்று ரசித்து விளக்கும் ஒரு பதிவைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. ராகங்கள், ஸ்வரங்கள் இவை எதுவும் அறியாதவன், ரசிக்கக் கிடைத்த வாய்ப்பைக் கொண்டாடுபவன் தான் என்றாலும், இந்த இசைக்கலைஞர் அத்தனை அழகாக அந்தப் பாடலின் வரிகளை அதன் அழகியல் நுட்பங்களோடு இசைத்து விளக்குவதில் ஆழ்ந்து போகத்தான் செய்தேன்.
சொற்களில் இருந்து இசையை உணர்ந்து கொள்கிறேன் என்று அடிக்கடி சொல்வார் எம் எஸ் வி. இசையிலிருந்து சொர்க்கத்தை உணர்ந்து கொள்கிறார்கள் ரசிகர்கள். மிக எளிய மனிதர்களை அவர்களது அன்றாடப்பாடுகளின் கனத்த ஓசையை வாங்கிக்கொண்டு மெல்லிய காற்றை அவர்கள் உழைப்பின் களைப்பின் மீது பரவவிடுகிறது இசை. அவர்களைக் கனவில் ஆழ்த்தி விட அல்ல, உயிர்ப்போடு அடுத்த நாள் தங்கள் விடியலைத் தேடி விழிப்பு கொள்ளவும் வைக்கிறது இசை.
(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]
முந்தைய தொடரை வாசிக்க:
இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே – எஸ் வி வேணுகோபாலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமையான ரசனைமிக்க பதிவு
அற்புதமான பதிவு. இசையை இதயத்தில் தவழவிட்டுத் தாலாட்டும் தன்னிகரற்ற பதிவு. நாம் எழுதிய பாடலை வேறொருவர் இசையமைத்துப் பின்னணி இசையுடன் பாடிப் பதிவு செய்து நமக்கு அனுப்பி அதை நாம் கேட்கும் பாக்கியம் மிக அரிது. நான் ஏங்கி நிற்கும் அந்த பாக்யம் உங்களுக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. இறுதிப் பகுதியில்’முத்துக்களோ கண்கள்’ அருமை. முத்தான சத்தான பாடலின் இசை என் கற்பனையில் மனதை நிறைத்தது. மிக்க மகிழ்ச்சி. நன்றி !