Music Life Series Of Cinema Music (Dhegam thazuvum isaikatru) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று - எஸ் வி வேணுகோபாலன் 




உள்ளபடியே இந்த நாட்கள் மழை வாழ்க்கை தான். சென்னை பெருநகரம், மழைக்குத் தன்னை இன்னும் தகவமைத்துக் கொள்ளாத நகரம். மாறாக, ஒவ்வொரு விரிவாக்கமும், நவம்பர் – டிசம்பர் மாதங்களின் வருகை ஒட்டிய நடுக்கத்தையும் சேர்த்தே விரிவாக்கிச் செல்கிறது. வெள்ள நீர் வீட்டின் நிலைக்கதவைத் தட்ட எத்தனிக்கும் நேரத்திற்கும் சற்று முன்னாள் குடும்பத்தோடு குடி பெயர்ந்து எங்கள் மகள் இல்லத்தைச் சென்றடைந்தோம். சொந்தக் கூட்டுக்கு இன்னும் திரும்பாத பறவையின் குரல் தான் இந்த வாரம் உங்களை வந்தடைந்து கொண்டிருப்பது.

இசை மழை போலவே, மழையும் ஓர் இசை தான். ஓரளவு பெய்கையில் அது பெரிதாக கவன ஈர்ப்பாக அமைவதில்லை. தன்னைச் சுற்றியே எல்லோரையும் பேசவைக்கும் பெருமழை, வட்டியும் முதலுமாக வாங்கிக் கொண்டுவிடுகிறது. இசையும், சாதாரண நாளில் ஏற்படுத்தும் சலனத்தை விட, கச்சேரிகள், திருவிழாக்கள், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் கூடுதல் கொண்டாட்டத்தை உருவாக்கிக் கொள்கிறது.

குடி பெயர்ச்சி இந்த மழையால் ஏற்பட்டது, வாய்ப்பு அற்ற மனிதர்கள், குறிப்பாக முதியோர் பட்ட பாடுகள் வேதனைக்குரியது. வேறெங்கும் போக முடியாமலும், நாள் கணக்கில் வெளியே இருந்து யாரும் உதவிக்கு வர முடியாது, வீட்டில் மின்வசதி துண்டிப்பு, தனிமைப்படுத்தி வாட்டி எடுக்கும் தருணங்கள் அவை. கொஞ்சம் இசையாவது கேட்க முடியுமா என்று ஏங்க வைத்த பொழுதுகளும் கூட.

இசையும் அதீத ரசனை கொண்டிருக்கும் மனிதர்களை இப்படி திக்குமுக்காடச் செய்வதைப் பார்க்கிறோம். எப்போதும் இசையால் சூழப்பட்டிருக்கும் அவர்கள் உள்ளம். ஓர் இசையிலிருந்து மற்றொன்றுக்கு, ஒன்றோடு மற்றொன்று, ஒன்றிற்கு மாற்றாகவும், ஒன்றினில் இருந்து வேறாகவும் இசை பொழிந்தபடி இருக்கும் சூழல் அது.

ஒரு சில பகுதிகளில் மட்டும் பெய்யும் மழை போல, காதுகளுக்குள் தனித்துவமாகப் பெய்து கொண்டிருக்கும் இசை. ஓவென்று எல்லோருக்குமாக சாலையோர மேடையில் முழங்கும் இசை. மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் போலவே அன்றாட இசைப்பொழிவு அளக்கும் மானிகளும், நிலையங்களும் இன்னும் உருவாகவில்லை.

திரை இசையோடு நாம் வாட்ஸ் அப் குழு ஒன்றில் அண்மையில் ஒரு பெருமழைப் பொழிவு போல், ஒரு கானத்தைக் கேட்க முடிந்தது. அபார மழைப்பொழிவு அந்த இசை.

விவேக் குமார் பிரஜாபதி என்ற அந்த 33 வயது இளைஞர், புகழ் பெற்ற உஸ்தாத் இக்பால் அகமத் கான் அவர்களது முக்கியமான மாணவர்களில் ஒருவர். சரிகம இசை நிகழ்வில் அவர் நடுவர்களை அதிர வைத்தார். சங்கர் மகாதேவன் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்க சிலிர்க்கக் கொண்டாடி மகிழ்ந்தார். விவேக், பரிசு பெற்றுக் கொண்டதும், சங்கர் மகாதேவனோடு சேர்ந்து பாட விரும்ப, அதில் அந்த இசை மழை இன்னும் அதிரடி வேகத்தில் ரசிகர்களைக் கூத்தாட வைத்துவிட்டது. அந்த ஸ்வர வரிசைகளில் சங்கர் மேற்கொண்ட பயணத்தின் இன்பியல் காட்சி, மயிர்க்கூச்செரியும் ரேஸ் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் அமைந்தது.

மிதமான மழைப் பொழிவு போல இதமாக மனத்தில் ரீங்கரித்துக் கொண்டிருக்கும் இசை உண்டு. திரையிசையில் நிறைய சொல்லிக் கொண்டு போகமுடியும். இந்தியன் வங்கியில் உதவிப் பொது மேலாளராக ஓய்வு பெற்றவர், இந்த மழை வெள்ள நீர்ப் பெருக்கின் என் சக தெருவாசி திரு கிருஷ்ணன், ஒரு சுவாரசியமான குறும்பதிவு ஒன்றைச் சூடாக அனுப்பி இருந்தார்.

தி இந்து நாளிதழில் திரை விமர்சனங்கள் எழுதியவரான பரத்வாஜ் ரங்கன் அவர்கள் தமது வலைப்பூவில் இந்த நவம்பர் பத்தாம் நாள் எழுதியுள்ள குறுங்கட்டுரை, எம் எஸ் வி அவர்களது இதயத்தை வருடும் பாடல்கள் பற்றிப் பேசுகிறது.

Music Notes #1: The unending pleasures of MSV-era melody lines

அதில், ஞான ஒளி படத்தின் தேனிசைப் பாடல் ஒன்றை மிகுந்த ரசனையோடு குறிப்பிடுகிறார் பரத்வாஜ் ரங்கன். ‘ஊர்வசி’ சாரதா – ஸ்ரீகாந்த் காதல் உறவு பற்றிய காட்சிப் படுத்தலான அந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் அத்தனை நேர்த்தியாகப் புனைந்திருப்பார்.

தேவன் மீது அசையாத விசுவாசமும் உள்ள ஒரு பெண், தன்னை அத்தனை நம்பிக்கையோடு ஓர் ஆண் மகனிடம் ஒப்படைக்கும் பரவசமும், கதையோட்டத்தின் அடுத்த கட்டங்களை உணர்த்தும் பாங்கும் பாடல் வரிகளில், மெல்லிசை மன்னர் இசையில், பி சுசீலா குரலில், மாதவன் இயக்கத்தில் உணர்ந்துவிட முடியும்.

இரவின் அமைதியில் எங்கோ தொலைவில் இருந்து மெல்ல மெல்ல நம்மருகே வந்தடைகிறது ஓர் அருமையான ஹம்மிங். பல்லவியை சுசீலா ஹம்மிங் கொடுப்பது ரசிகரை அங்கேயே கட்டிப்போட்டு வைத்து விடுகிறது. பிறகு மணியோசை தொடங்கி பாடல் நெடுக உரிய இடங்களில் ஒலித்துக் கொண்டே இருக்க, இப்போது தேவாலய வளாகத்தில் அல்லது பெத்லகேம் குடிலில் அமர்ந்திருக்கும் உணர்வை எம் எஸ் வி அவர்களது இசைக்கோவை ஏற்படுத்தி விடுகிறது.

தாளக்கட்டு, டிரம்ஸ் வாசிப்பு, வயலின்கள் இழைப்பு, புல்லாங்குழல் வாசிப்பு எல்லாம் ஒரு மழை இரவில் மெல்லொளி பரவும் இடத்தில், இசை சாரல் ஒன்றில் நனைந்தபடியே இதயத்தை மிதக்க வைத்து விடுகிறது.

பரத்வாஜ் ரங்கன் ஆராதிக்கிறார் எம் எஸ் வி அவர்களை! ம – ண – மே – டை என்பது நான்கு பதங்கள், அடுத்த அடியோ, ம – லர் – க – ளு – டன் – தீ – பம் என்று ஏழு பதங்கள், தலைவர் தலைவர் தான் என்கிறார்!

சுசீலா இந்தப் பாடலில் விதவிதமான உணர்வுகளை, உணர்ச்சிகளை எல்லாம் கொண்டுவருவதைக் கேட்கமுடியும். குதூகல தொடக்கம். உறவின் நெருக்கம். வாழ்க்கையின் கிறக்கம். தேவன் அருளில் உருக்கம். தன்னிலை மறக்கும் பெண் மனத்தை, அதைப் பார்ப்பவர் அடையும் பதட்டத்தைக் கவிஞர் எப்படி அசாத்தியமாகக் கொணர்கிறார் என்பது, திரைப்பாடல்களில் ஆழ்ந்து பார்த்து ரசித்துக் கொண்டாட வேண்டிய வரிசையில் முக்கியமானது.

எம் எஸ் வி ரசிகர்களது இணையதளத்தில் மீனாட்சி என்பவர் இந்தப் பாடலில் லயித்து எழுதியிருக்கும் விவரிப்புகள் உள்ளம் தொடுபவை.

http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=2244&sid=d0b00121b45704dc723ed9566fc3381c

பல்லவியின் ஒவ்வோர் அடியும் அழகு என்றாலும், ‘மங்கையர் கூட்டம் மணக்கோலம்’ என்ற வரியை அசாத்திய லயத்தில் இசைப்பார் சுசீலா, அதுவும் அந்தக் ‘கூட்டம்’ என்ற பதத்தில் எத்தனை கிறக்கத்தை நிரப்பி இருப்பார் மெல்லிசை மன்னர்.ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு டியூனில் அமைப்பது அவரது சுவாரசியமான உழைப்பு என்று பரத்வாஜ் ரங்கன் கொண்டாடுவதற்கு ஏற்ற பாடல் இது.

இந்தப் பாடலின் சரணங்கள் அமைக்கப்பட்ட விதமே காதல் போதையின் பிரதிபலிப்பாக அமைந்திருப்பதை, பி சுசீலா பாடுகையில் உணர முடியும். மோன நிலை தூவும் ஹம்மிங் கொடுத்து, ‘நான் இரவில் எரியும் விளக்கு’ என்கிற முதல் சரணத்தின் முதல் அடியின் ஒவ்வொரு சொல்லையும் சுசீலா ஒரு மயக்க நிலையில் இழுத்திழுத்து உதிர்ப்பார், பின்னர் அடுத்த அடியை, நீ என் காதல் மணி மாளிகை என்பது உற்சாக வேகத்தில் தெறிக்கும் !

‘நீ பகலில் தெரியும் நிலவ என்பதில் வட்ட வடிவிலான சுழற்சியில் விழும் சொற்கள். ‘நான் உன் கோயில் பூந்தோரணம்’ என்பது உரிமை கொண்டாடுவதாக மலரும். அங்கே நிறுத்தி, ‘மணியோசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்’ என்று சரணத்தை நிறைவு செய்வார் சுசீலா. அந்த எங்கும் என்ற சொல்லின் ‘ம்’ இருக்கிறதே, அதிலேயே இழைப்பார் அந்தப் பெண்ணின் குதூகலத்தை !

‘என் மடியில் விடியும் இரவு’ என்ற சரணத்தை முன்வைத்து மட்டுமே கண்ணதாசன் திரைப்பாடல் புனைவு குறித்து விரிவாக எழுத முடியும்.இரவுப் பொழுது இங்கே கழியும் என்று சொல்வதைவிடவும், விடியும் இரவு என்ற சொற்பதங்கள் எத்தனை ஆழ்ந்த பொருளும், கவித்துவமும், காதலும் அடர்த்தியாக உரைப்பவை. ‘நம் இடையில் வளரும் உறவு’ என்கிறது அடுத்த அடி. ‘மேகம் தழுவும் குளிர்க் காற்று மோகம் பரவும் பெருமூச்சு’ என்பது சந்தங்களில் அந்த பந்தத்தை விளக்கிவிடுகிறது. கண்ணதாசனின் அந்தக் கற்பனைப் பெருமூச்சை மெல்லிசை மன்னர் பி சுசீலாவைக் கொண்டு விடுவிப்பதை, மீனாட்சி அவர்கள் எத்தனை நுட்பமாகக் கவனித்து எழுதி இருக்கிறார்! ‘நான் பெறுவேன் சுகமே சுகமே…’ என்னமாக இசைப்பார் சுசீலா.

மூன்றாவது சரணம், தாயற்ற ஒரு பெண், உற்ற துணை கிடைத்ததான நம்பிக்கையில் எழுப்பும் விடுதலை கீதம். ‘உன் துணை போல சுகமும் இல்லை’ என்ற வரியை கவிஞர் எப்படி வந்தடைகிறார்! இந்தக் கற்பனை அப்படியே இசையிலும், சுசீலா குரலிலும் மிதக்கும்.

பாடல் முழுவதிலும், சரணங்களை நோக்கிய வழிப்பயணத்திலும் குழலிசையும், வயலினும், தேவாலய மணியோசையும், இதமான டிரம் செட் இசையும் ஆஹா…ஆஹா.. குறிப்பாக, தாளக்கட்டு!

ஒவ்வொரு சரணம் தொடங்கும்போதும், தவழும் பருவத்துக் குழந்தையானது நெருங்கிய உறவைப் பார்க்கவும், வேக வேகமாகத் தரையில் நீந்தி வந்து காலுக்கருகே வந்தடைந்து ஏக்கத்தோடு பார்த்துத் தன்னைத் தூக்கிக் கொள்ள ஓங்கிக் கைகளால் அடித்துக் கொள்ளும் ஓசை போல் பிறந்து பற்றிக் கொள்கிற அந்தத் தாளக்கட்டில், குழந்தையை வாகாகத் தூக்கி வைத்துக்கொண்டு மேலும் கீழுமாக உயர்த்தித் தோளிலும் மார்பிலும் அணைத்து முத்தமாரி செய்து பூஞ்சிரிப்பு பூக்கவைத்துக் குழந்தையை மெல்லப் பிறகு இறக்கி வேடிக்கை காட்டும் தந்தை போல், தாயைப் போல் சரணங்களைப் பாடி முடிக்கிறார் சுசீலா. தேவாலய மணியோசையின் கூர்மையான ஒலிக்கு நிகராகப் பொழியும் சுசீலா அவர்களது அற்புதமான பாடல்களில் ஒன்று தான் ‘மணமேடை மலர்களுடன் தீபம்…’

மூன்றாம் சரணத்தில் மழை பெய்யவே செய்கிறது. எனக்கு, ஜெயகாந்தனின் ‘பருவ மழையாலே வாழ்க்கை பாலை வனமாகியதே’ வரிகள் ஏனோ நினைவில் வந்துபோனது. கதை தெரிந்தவர்களால் கண்ணீர் சிந்தாமல் இந்தப் பாடலைக் கடந்து போக முடியாது. காதல் தாபத்தை, நம்பிக்கையை, இறை விசுவாசத்தை, அன்பை, மகிழ்ச்சியை என பல்வேறு உணர்ச்சிகளை இந்தப் பாடல் வரிகளுக்கேற்ப ‘ஊர்வசி’ சாரதா அபாரமாக வெளிப்படுத்தி இருப்பார், ஸ்ரீகாந்த் மென்மையான உடனிருப்பு.

மழை வெள்ளம் மாநகர மனிதர்களைக் கொஞ்சம் பரந்த சமூக எண்ணங்கள், அரசியல், நாட்டு நடப்பு பற்றி எல்லாம் பேச நிர்பந்திக்கிறது. வெள்ள நீர் வடிந்தாலும், வெளியேற மறுத்துத் தேங்கி நிற்கும் கழிவு நீர் போல், மாற்றங்களுக்கான நம்பிக்கையற்று சபித்துவிட்டுத் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கே நடுத்தர வர்க்கத்தை மீள வைக்கிறது தாராளமய காலம்.

தங்களுக்கான கிருமித் தொற்று குறித்துக் கவலையற்றுக் கழிவுகளை அகற்றிக் கொண்டிருக்கின்றனர் ஏராளமான எளிய தொழிலாளிகள். மழையால் பாதிப்புறும் தங்கள் வாழ்க்கையை மழையை அடுத்தே மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இசை எந்த பேதமுமின்றி எல்லா உயிர்களையும் இரட்சிக்கிறது. தனது அருள் மழையால் ஆசீர்வதிக்கிறது. நம்பிக்கை ஊட்டிக் கொண்டிருக்கிறது.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 50: என்னென்பேன் இசை ஏடென்பேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 51: அதன் பேர் தாளம் அன்றோ! – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன் 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன் ”
  1. வேணுகோபால் அவர்களின் கட்டுரை அபாரம்.. வினோத் கச்சேரியும் சங்கர்மஹாதேவனுடன் இணைந்து அசத்தி விட்டார்கள் .. மணமேடை பாடலுக்குள் இவ்வளவு விஷயங்களா.. மலைத்துப் போனேன் ..பாராட்டுக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *