டந்த வாரம், பாடலைக் கடக்கும் நேரத்து மன ஓட்டங்கள் குறித்து இலேசாக எழுதி இருந்ததை வாசித்த மொழிபெயர்ப்பாளர் கி ரமேஷ், ‘என் பாட்டி இறந்த போது எங்கோ வான் நிலா நிலா நிலா அல்ல பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன், ரொம்ப வருடங்கள் அந்தப் பாட்டை வெறுத்து வந்தேன்’ என்று எழுதி இருந்தார்.

பட்டின பிரவேசம் படத்திற்காக  இந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் எப்படி அனாயாசமாக எழுதிக் கொடுத்தார் என்பதை எம் எஸ் வி சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டே இருக்க முடியும்.  சில பாடல்களை முதலாவதாக எப்போது கேட்டாலும், பின்னர் கவனித்துக் கேட்டு ரசித்த காலங்களும் யாருக்கும் மறக்காது.

காவல்காரன் படத்தின் பாடல்கள் இசைத்தட்டில் ஒலிக்க ஒரு மாலை நேரம் முழுவதும் திரும்பத்திரும்பக் கேட்டு ரசித்தது ஒருபோதும் மறக்காது. சென்னை மேற்கு மாம்பலத்தில் அந்தமான் வர்த்தகக் குடும்பம் என்று பரவலாக அறியப்பட்ட அவர்களது பெரிய இல்லத்தின் வாசல் திண்ணையில் கிராமஃபோன் இசைத்தட்டுகள் சுழல்வதை பேரார்வத்தோடு அருகே சென்று அமர்ந்து ரசித்துக் கேட்ட நாட்கள்.  ‘நினைத்தேன் வந்தாய்’ பாடலின் இசை எப்படி புறப்படும், பின் எப்படி பரவும், எந்தக் கட்டத்தில் பாடகர் குரல் வந்து சேரும், அவர் குரல் வந்து இணையும் அதே கதியில் தாளக்கட்டு என்ன ஜோராய்க் கலக்கும் என்பது இன்னும் உள்ளே ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்படியே, ‘மெல்லப் மெல்லப் போ’ பாடலும்….

Kaavalkaaran | Kaathu Koduthukketten song - YouTube

சுற்று வட்டாரத்தில் அவர்கள் வீட்டில் தான் முதன்முதல் கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி வந்து இறங்கியது. ஏதோ, அவசர பொதுக்குழு கூட்டம் போல அருகே இருக்கும் அறிந்தவர், தெரிந்தவர் எல்லாம் வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் பார்க்க ஆஜர் ஆகி விடுவார்கள். (ஆகி விடுவோம் என்று வாசிக்கவும்!) அதில் ஒருமுறை, பாடல் ஒன்று  தொடங்கியதுமே, என்ன படம், என்ன படம் என்று குரல்கள் அலைமோதிக்கொண்டிருந்தன. ஆர்மோனியப்  பெட்டியின் பக்கம், காமிரா ஒரு குளோஸ் அப் ஷாட் காட்டுகிறது, படத்தின் பெயர் குயில் என்று குரல் எழுப்புகிறார் ஒருவர், சிலர் ஓசைப்படாமல் சிரித்துக் கொண்டிருக்கிறோம். மடை திறந்து பாடும் நதி அலை நான் என்ற வாகை சந்திரசேகரின் குதூகலம், நிழல்கள் அப்புறம் பிடிபட்டது எல்லோருக்கும்.

இது பரவாயில்லை, சித்ரஹார் முழுக்க முழுக்க இந்தி பாடல்கள் என்று அதைத் தவிர்த்துவிட்டு, சித்ரமாலா நிகழ்ச்சிக்கு ஒரு கூட்டம் காத்திருக்கும். அது லாட்டரி குலுக்கல் மாதிரி. பிராந்திய மொழி பாடல்களில் என்றைக்கு தமிழ்ப்பாட்டு வரும் என்று கடைசி பாட்டு வரை தெரியாது காத்திருந்துவிட்டு உச்சு கொட்டிவிட்டு எழுந்து போகும்.

Poongathave - 1 Lyrics - Nizhalgal - Only on JioSaavn

இப்போதெல்லாம், பேருந்தில் ஏறியவுடன் டிக்கெட் கூட வாங்கக் காத்திராமல் அல்லது ரயில் பயணத்தில் உள்ளே நுழைந்த அடுத்த நொடி ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டதும், சில்லென்று நமது விருப்பப்பாடல்கள் காதுகள் வழி நேரே உள்ளிறங்கிவிடுகின்றன…. அரிசிச் சோற்றுக்குப் பொங்கல் வரை காத்திருந்த காலமும், ஸ்விக்கியில் உணவை வரவழைக்கும் காலமும் வெவ்வேறு தானே….

சைத்தட்டுகள் பெரும்பாலும், மிக வசதியானவர்கள் வீடுகளில் இருக்கும். அல்லது, நிகழ்வுகளுக்கு வந்து பாட்டு, ஒலிச்சித்திரம் போட்டுவிட்டுப் போகும்  மைக் செட் கடைக்காரர்கள் பத்திரமாக வைத்து பராமரித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் வசதியான கோயில்களில் வைத்திருப்பார்கள்.

மார்கழி மாதங்களில், எம் எல் வசந்தகுமாரி அவர்கள் குரலில் ஒலித்த திருப்பாவை பாசுரங்கள், பிள்ளையார் கோயில்களில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது விநாயகனே  வெவ்வினையை  வேரறுக்க வல்லான் என்று கணீர் குரலில் எடுத்தது, டி எம் எஸ் அவர்களது உள்ளம் உருகுதையா…. பி சுசீலாவின் தேனினிமையிலும் இயேசுவின் நாமம், நாகூர் ஹனீஃபாவின்  இறைவனிடம் கையேந்துங்கள்….அப்புறம், திருமண பந்தல்களில் திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் , டொராயிங் …சத்தத்தோடு காட்சி மாற்றத்தை மக்களுக்குப் புரிய வைத்த ஒலிச்சித்திரங்கள்…K. Rani (singer) - WikiVisually

திருத்தணி அருகே வங்கனூர் எனும் சிற்றூரில் பணியில் சேர்ந்த 1980களில், மாலை நேரத்தில் ஊருக்குப் புறத்தே இருக்கும் மிகச் சிறு பாலத்தின் கரையில் அமர்ந்திருக்கும் போது, வறண்ட புழுதிக் காற்று இலேசாகிக் கருணை சுரந்து கொஞ்சம் சில்லென்று முகத்தில் வீசத் தொடங்கும் போது, ‘ஆடும் மயிலே ஆட்டம் எங்கே’ (துளசி மாடம்) என்று டி எம் எஸ் குரல் அதில் இழைந்து சேர்ந்து வரும், ராஜலட்சுமி டாக்கீசில் டிக்கெட் கொடுக்கப் போகிறார்கள் என்று அர்த்தம்.  இப்படி எத்தனை எத்தனையோ ஊர்களில், ஆறுகளின் குறுக்கே, பாலங்களின் அடுத்த கரையில் திரைப்படக் காட்சி தொடக்கத்தை, இந்த இசைத்தட்டுகளே காற்றில் வரும் கீதமாகச் சென்று தண்டோரா போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தன.

ப்புறம் இந்த இசைத்தட்டுகளைப் பிழிந்து ரசம் அன்பினொடு வீடுகளுக்குக் கொண்டு வந்த காலம் பிறந்தது!  பாடல்களை நாம் விரும்பியபோதெல்லாம் கேட்க வந்து இறங்கின காஸெட்டுகள்…..டூ இன் ஒன் என்ற புதிய சொல்லும், பொருளும் இல்லங்களுக்கும், உள்ளங்களுக்கும் மெல்ல மெல்ல வந்து சேர்ந்தது….சிந்து பைரவி படத்தின்  எந்தப் பாடலைக் கேட்கும் போதும், முதல் மரியாதை பாடல்கள் கேட்கும் போதும் ஈரோடு நகரில் அப்போது இருந்த அக்கா வீடு நினைவுக்கு வந்துவிடும். அக்கா இல்லை இப்போது, ஆனால், திரும்பத் திரும்ப அந்த டேப் தேய்கிறவரை கேட்ட காலங்கள் நினைவுக்கு வரும்.

சிந்து பைரவி திரைப்படம் | Sindhu Bhairavi ...

அண்மையில், ஒளிப்பதிவாளர் பி கண்ணன் மறைந்தபோது, ‘படப்பிடிப்புக்குச் செல்லும்போது நான் காமிராவைக் கொண்டு செல்வதில்லை, என் கண்ணனின் இரண்டு கண்களைத் தான் கொண்டு செல்வேன், அவற்றுக்குத் தான் ஆகாயத்தின் அடுத்த பக்கத்தையும் பார்க்கத் தெரியும்’ என்று, முதல் மரியாதை பாடல் காஸெட்டில் பாரதிராஜா உணர்ச்சிகர குரலில் கொண்டாடிச் சொன்ன சொற்கள் எத்தனையோ பேர்க்கு நினைவில் வந்து போயிருக்கும், கொஞ்சம் கண்ணீருடன்.

காஸெட்டுகள் வாங்குபவருக்கு மட்டுமா அவை உரிமையாக இருந்தன? அதை ஓயாமல் பிரதி எடுத்த காலங்கள்…ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து ஒளியை அடுத்தடுத்துப் பரவ விட்டுக்கொண்டிருந்த நாட்கள்….டேப்புகள் உள்ளே ஓடி ஓடி ஓய்ந்து வெளியே இழுபட்டு ஓய்வெடுக்க வந்தாலும், யாராவது கோபத்தில் வெளியே இழுத்து சிதைக்கப் பார்த்துத் தூக்கிப் போட்டிருந்தாலும், பரிவோடு எடுத்து, குறுக்கு முறுக்கலை நிதானமாக சரி செய்து,  ஒரு பென்சிலைக் கொண்டு சக்கரங்களில் சுழற்றி, இசையை மீட்டெடுத்த சுகமான தருணங்கள்….

Mudhal mariyadhai tamil movie download

C 60 என்ன,  C 90 என்ன….(அந்தப் பாட்டு A பக்கத்தில் கிடையாதுன்னு சொன்னேன் இல்ல, B பக்கம் திருப்பிப் போடு).. காஸெட்  உறை, அதில் பலவண்ணத்தில் திரைப்படக் காட்சி, சில போது உள்ளே பாட்டு புத்தகமும்….அப்புறம் அலமாரி முழுக்க ஒவ்வொரு தட்டிலும் காஸெட்டுகள் உறையோடும், இல்லாமலும், வெள்ளை, கருப்பு என்று வித விதமாக நிறைந்து கிடந்த பாடல் உலகம்.

மரோ சரித்ரா படத்தில் காஸெட்டில் பதிவாகி இருக்கும் கமல் குரலைக் கேட்டுக் கொண்டிருப்பார், சரிதா. கோபத்தோடு அந்த டேப்பை உருவி எடுக்கும் அவருடைய தாய், அதை அடுப்பில் போட்டு சாம்பல் ஆக்குவார். அதை அள்ளி எடுக்கும் சரிதா, தேநீர்க் கோப்பையில் கலந்து குடித்துவிட்டு, இப்போ என்ன செய்வே என்கிற மாதிரி தன் அம்மாவைப் பார்ப்பார். ஏ டீக பூவனு ஏ கொம்ம தேட்டினு கலிப்பிந்தி ஏவிந்த அனுபந்தமு பாடல் ஒலிக்கும் போதெல்லாம்….காசெட்டுகளைக் கரைத்துக் குடித்த மாதிரி, சரியாக எடுத்துக் கொடுக்கும் நண்பர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

கொஞ்சம் வசதியான மனிதர்கள் வீடுகளில் பெரிய டேப் வைத்துப் பாடல்கள் கேட்டு மகிழ்ந்த கதையின் ஒரு கவிதை, வெள்ளி விழா படத்தில் இடம் பெற்றிருக்கும்  ‘காதோடு தான் நான் பாடுவேன்’ பாடல்.  உரத்துப் பாடும் பாடல்களுக்குப் பேர் போன எல் ஆர் ஈஸ்வரியை, இசை அமைப்பாளர் வி குமார் இந்தப் பாடல் பாட வைத்துப் பெரும்புகழ் சேர வைத்தார் (‘நான் சத்தம் போட்டுத் தான் பாடுவேன்’ என்ற பாடலை அதே படத்திற்காக பி சுசீலாவைப் பாட வைத்ததும் அவர்தான்). தமது மனைவியின் ஒரே நினைவாக ஜெமினி கணேசன் அந்த டேப்பை பாதுகாத்து வைக்கப் படாத பாடு படுவார்.

Velli Vizha

திரைக்கலைஞர் எம் சிவகுமார் (ஏழாவது மனிதன் படத்தில் ஹரிஹரனோடு இணைந்து பணியாற்றியவர்) அவர்களை பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி எனும் மாத இதழுக்காக நேர்காணல் செய்யும்போது, வேதனையான ஒரு செய்தியைச் சொன்னார். இந்தியாவின் திரை வானில் முக்கிய தாரகையான சத்யஜித் ராய், கோடர்ட் போன்ற உலகப் புகழ் பெற்ற இயக்குனர்கள் கலந்துரையாடல் ஒன்றை தூர்தர்ஷன் ஒளிபரப்பு செய்திருந்ததாம். ஆனால், அதே டேப்பின் மீது அடுத்தடுத்து வேறு நிகழ்ச்சிகளை அழித்தழித்துப் பதிவு செய்து விட்டனர், ஆவணப் படுத்தி வைக்கும் ஞானம் நம்மவர்களுக்கு மிகவும் குறைவு என்றார் அவர். பிரிட்டிஷ் ஜாக் கொடியை இறக்கி, இந்திய தேசியக் கொடி வானில் சுதந்திரமாகப் பட்டொளி வீசிப் பறக்கும் சுதந்திர நாளின் பதிவே, ஒரு வெள்ளைக்காரர் எடுத்து வைத்தது தான் என்றும் செய்திகள் உண்டு.

ஆனால், நடமாடும் ஆவணக் காப்பகங்களாகத் திகழ்கிறது மனிதர்களது நினைவின் அடுக்குகள் அல்லது மூளையின் மடிப்புகள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சட்டென்று ஓர் எளிய சிறகசைப்பில், தவிர்க்க மாட்டாது தூசு தட்டி எடுத்துக் கொடுத்து விடுகிறது. பாட்டு புத்தகங்கள் பற்றிய பதிவை வாசித்த நண்பர் ராஜசேகர் அப்படி எடுத்து அனுப்பியது, பாச மலர் பாட்டு புத்தகத்தில் அச்சிட்டிருந்த இந்த வரிகளை: வண்ணமலர், வாசனை மலர் என்றெல்லாம் மலரைப் பற்றி பலவிதமாகக்  கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால்,  பாசமலர் என்று தாங்கள் கேள்விப்படுவது இது தான் முதன் முறையாக இருக்கும். 

நினைவாலே சிலை செய்து வைத்திருக்கும் பாடல்களை, அவற்றிலிருந்து இன்றும் பொழிந்து கொண்டிருக்கும் நமக்கான ரசனை அருவிகளை, இன்ப நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருப்போம்……

(இசைத்தட்டு சுழலும் ….)

கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected] 

தொடர் 1 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – ஐ வாசிக்க…

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – ஐ வாசிக்க…

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/

தொடர் 5 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/

One thought on “இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன் ”
  1. அருமையான நினைவுகள் …அழகான பதிவு …எளிமையான நடை ..எனது உயரிய பாராட்டுதல்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *