Music Life Series Of Cinema Music (Pattu Nammai Adimai Endru Vilagavillaiye) Webseries by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே - எஸ் வி வேணுகோபாலன் டிசம்பர் 2019, மாதம் பிறந்தவுடனே அப்பாவை எப்போது போய்ப் பார்த்து ஆசி பெற்று வருவது என்று யோசிக்கத் தொடங்கி இருந்தேன், அறுபது வயது நிறைவு செய்யும் நாள் அந்த மாதம் 24ம் தேதி. விமரிசையாக அதைக் கொண்டாட ஒரு தந்தையின் மனத்திற்குள் எத்தனை ஆசைகள் இருப்பினும், அதற்கெல்லாம் உடன்பட மாட்டாதவனை நேசிக்கும் அளவு அந்த மனம் விசாலமாக இருந்தது. இப்போது இசை வாழ்க்கை என்னும் இந்தத் தொடர் அறுபது அத்தியாயங்கள் நிறைவு செய்கிறது. அதில் ஒரு தற்செயல் ஒற்றுமை உண்டு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பணி நிறைவு நேரத்தை நூல் வெளியீடு மூலம் கொண்டாடுவோம் என்ற முன்மொழிவை ஏற்றுக் கொண்டு, டிசம்பர் 25: கீழ வெண்மணி தினத்தன்று, தேவநேய பாவாணர் மத்திய நூலக அரங்கில் முதல் பிரதி பெற்றுக்கொள்ள எங்கள் அன்புத் தந்தை வந்திருந்தார். அந்த இரண்டு நூல்களில் ஒன்று, உதிர்ந்தும் உதிராத எனும் புகழஞ்சலி கட்டுரைகளின் தொகுப்பு. படைப்புக் குழுமம் அமைப்பின் சிறப்புப் பரிசுக்கு அந்த நூல் தேர்வாகி இருக்கும் செய்தி அண்மையில் வந்ததுதந்தையின் நினைவுகளுக்குப் படைக்கப்படுகிறது, மகாகவி பாரதி பிறந்த நாள் அன்று நடைபெறும் விழாவில் கிடைக்கப்பெற இருக்கும் அன்பு

இசைப் பித்து, ஆரம்பித்துப் பல ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று தான் தோன்றுகிறது. இசைப்பாடல் புனையும் ஆர்வமும்! எண்பதுகளில், சென்னை கலைக்குழு நாடகங்கள் பார்க்க வாய்த்த போது, இசைப்பாடல்கள் மீது மீண்டும் கூடுதல் கவனம் குவிந்தது. வறுமை, வேலையின்மை, ஆலை மூடல், வரதட்சணைக் கொடுமை இன்ன பிற சாதாரண மக்கள் வாழ்வை அதிகம் கவ்விப்பிடித்து வந்த காலமது. அலுவலகம் போய்க் கொண்டிருந்தபோது, புறநகர் ரயில் பயணத்தினூடே மனத்தில் தோன்றிய இந்தப் பாடலை மனத்திற்குள் ஓயாமல் இசைத்துக் கொண்டிருந்த நாட்கள் இப்போது நினைவில் வந்து நிற்கிறது.

ஏனோ தெரியல, கடிதம் எழுதலஎன்பது தான் பல்லவியின் தொடக்கம். காதலிக்கு ஒருவன் வரையும் கடிதம் போல் எழுதப்பட்டது. அதிலேயே அவனது குடும்ப கஷ்ட நஷ்டங்களை அவன் அவளுக்குக் கடத்துகிறான்.

ஏனோ தெரியல
கடிதம் எழுதல
எழுதத் தெரியாமல் அல்ல
ஏதும் விசயம் இல்ல..
                         – ஏனோ தெரியல

ஆலயத் தொறக்கல
அப்பா வேலக்கிப் போகல
அன்னாடம் இருமி இருமி
அம்மா இன்னும் சாகல
                    – ஏனோ தெரியல

சீரு கொறஞ்சதாலே
சின்னவ திரும்பிப் போகல..
சீமெண்ண ஸ்டவ்வுல அக்கா
செத்தத யாரும் மறக்கல

                – ஏனோ தெரியல

மூன்றாவது சரணம் இருந்திருக்க வேண்டும், இந்தச் சூழலை விவரிக்கும் அவன், அவளுக்குச் சொல்ல விரும்பும் சேதியை அது ஏந்தி வரும். அதை யோசித்து அப்படியே விட்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது. இப்போது அதை இப்படி முடிக்கலாம் என்று படுகிறது

பாடுகள் கொறையல
பட்ட துன்பம் மனசுல
ஓடுது வாழ்க்கையின்னும்
ஒன் நெனப்பு உசுருல 

 நிறைவில் பல்லவி கொஞ்சம் மாற வேண்டி இருக்கும், இப்படி:

ஏனோ தெரியல
இனிமே  வருந்தல
எதற்கும் போராட வேண்டும்
என்று நீ தான் சொன்ன!

               – ஏனோ தெரியல

துயரங்கள், சோகங்கள், ஆற்றாமைகள் எப்படி உண்மையோ, மாற்றங்களுக்கான நம்பிக்கையும், போராட்டங்களும் கூட உண்மை தான். குழந்தைப் பருவத்திலிருந்தே எதிர்ப்புணர்ச்சி இயல்பான குணம். குழந்தை நிறைய கேள்விகளோடு உலவுகிறது. வளர்ந்தவர்கள் அந்தத் தீயை ஊதி மேலும் எரியச் செய்ய வேண்டும். பதில் சொல்லும் சாமர்த்தியத்தில் இறங்குகிறோம், பதில் தெரியாதபோது அடக்கி விடுகிறோம். அணைந்து பொசுங்கிவிடுகிறது குழந்தை மனம்.கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் சங்கிலித் தொடரான அடுத்தடுத்த கேள்விகள் தான்அடுக்கடுக்காகக் குழந்தைகள் பெரியவர்களைக் கேள்விகளால் வளைப்பதை, குழந்தைகள் மாநாடு என்ற கட்டுரையில் கொண்டு வந்திருப்பார் எழுத்தாளர் கல்கி.

கேள்விகள், சமூகத்தை நம்பிக்கை நெம்புகோலாக முன்னோக்கி நகர்த்துகின்றனஆயிரத்தில் ஒருவன் (1965) திரைப்படத்தின் பாடல்கள் எல்லாமே சிறப்பானவை என்றாலும், இரண்டு பாடல்கள் காலத்தில் எப்போதும் நிலைத்து நிற்கும் தன்மை பெற்றவை. ஒன்று, விடுதலை கீதம், ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்‘. இன்னொன்று, அதை நோக்கிய தயாரிப்பு, ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை‘.

ஒன்று கண்ணதாசன், மற்றது வாலி. விஸ்வநாதன்ராமமூர்த்தி பிரிவதற்குமுன் இசையமைத்த படம் அது

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லைஎன்பது, ‘கஞ்சி குடிப்பதற்கு இலார், அதன் காரணங்கள் இவை எனும் அறிவும் இலார்என்று நெஞ்சு பொறுக்க முடியாமல் குமுறிய மகாகவியின் ஏக்கத்தைப் போக்கும் உழைப்பாளிகளின் குரல். மிக எளிய மனிதர்கள், தங்களை ஆதிக்கம் செய்வோரைத் தட்டிக் கேட்கும் உணர்வை அவர்களுக்குள் எழுப்ப வேண்டும் என்பதே முக்கியம். அதை ஓர் இசைப்பாடல், அந்தக் கதையோட்டத்திற்காக வழங்கினாலும், அதன் முக்கியத்துவம் அதைக் காலம் கடந்து பேச வைக்கிறது

https://www.youtube.com/watch?v=OKLvOxfBJ1Q

பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்பதனாலேஎன்பதும், ‘உரிமைகளைப் பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலேஎன்பதும் பல்லவியின் தொடர்ச்சியில் முக்கியமான அடிகள். ‘ ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமேஎன்ற வரி, எல்லாக் கொடுமைகளையும் தாங்கிக் கொள்வதைக் குறிப்பிடுவதில்லை, நீடித்த போராட்டங்களிடையே சோர்வு கவ்வ, இடம் தந்துவிடக் கூடாது என்று கூறுவதாகத் தான் படுகிறது. அதுவும், ஓராண்டு விடாப்பிடியான போராட்டத்தில் இன்று முதல் கட்ட வெற்றி பெற்றுள்ள விவசாயிகள் நடத்திய சமர் அதைத் தான் விளக்குகிறது. இடையே இந்தப் போராட்டத்தைப் புரிந்து கொள்ளத் திணறியவர்கள், இதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்காது என்று கடந்து போனவர்கள், ஏன் வீணாக அங்கே போய் உட்கார்ந்து என்ன நடக்கும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஏளனமாகக் கூட விமர்சித்தவர்கள் எல்லோரையும் இப்போது வாயடைத்து அமர வைத்துவிட்டது அல்லவா, இந்த எழுச்சி!

வருங்காலத்திலே நம் தலைமுறைகள் நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமேஎன்கிற வரி, அபாரமானது. சமூக மாற்றத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட உன்னதத் தலைவர்களது நூற்றாண்டுகள் நம்மைக் கடந்து செல்லும் இந்த நேரத்தில், அவர்களுக்கு ஆதர்சமாக விளங்கிய அவர்களது முன்னோடிகளது வாழ்க்கை குறித்த சித்திரத்தையும் கண் முன் கொண்டு நிறுத்துகிறது இந்த வரி!

இரண்டாவது சரணம், ‘நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும் மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்என்பது பருவச் சுழற்சியை வைத்து, காலச் சுழற்சியைச் சுழல வைக்கும் கவிஞரின் திறமையை அனுபவிக்கக் கொடுக்கிறது. ‘நம் தோள்வலியால் அந்த நாள் வரலாம்என்கிற அடுத்த வரியின் அழுத்தம் இதை பளிச்சென்று எடுத்துக் காட்டுகிறது

முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலேஎன்பது, செல்வத்தை உருவாக்குவோர் கார்பொரேட்கள் என்ற இப்போதைய ஆட்சியாளர்களது அபார அபத்த அராஜக தத்துவத்திற்கு நேர் எதிரான உண்மையை இன்னும் காலங்களுக்குப் பேசிக் கொண்டிருக்கும். அதற்கும் அடுத்த வரி இன்னும் அழகானது: ‘கடமையைப் புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலேஎன்பது. தொழிலாளிகள் உழைப்பின் கூலியில், அதையொட்டிய அற்ப மகிழ்ச்சியில் நிறைவு அடையவேண்டும் அல்லது அதன் காரணங்கள் புரியாமல் தவறான தத்துவங்களுக்கு ஆட்பட்டு விதியை நொந்து சாக வேண்டும் என்பதைக் கடந்து, விடுதலைக்கான குரலை எழுப்புவது பாட்டாளிகளின் புரட்சி தத்துவ தரிசனம் என்பதை, ஒரு திரைப்பட வரையறைக்குள் நின்று புனையப்பட்டு இருந்தாலும், இந்தப் பாடல் நின்று பேசுகிறது என்பது சுவாரசியமானது.

டி எம் சவுந்திரராஜன் மொத்தத் கருத்தோட்டத்தையும் உள்வாங்கி இந்தப் பாடலின் வலிமையான தத்துவத்திற்கேற்ற குரலை, முழக்கத்தை, அழுத்தங்களை அத்தனை அசாத்தியமாகக் கொண்டு வந்திருப்பதும், இசையமைப்பாளர்களின் சிறப்பான இசைக்கோவையும் கொண்டாட வேண்டியது.

அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்என்பது ஓர் அதிரடி பல்லவி தொடக்கம். அதற்கு ஏற்ற நிரல் நிரை போல, ஒரே வானிலே ஒரே மண்ணிலே என்று வருகிறது அடுத்த அடி. பறவைக்கு வான் போல, கடல் அலை புரண்டோட மண் போல.

அடிமை என்கிற உணர்வை மனதளவில் உதறித்தள்ளி, சங்கிலிகளை மானசீகமாக நொறுக்கித் தகர்த்துக் குதித்துக் கொண்டாட்டப் பேரெழுச்சியோடு குரலெடுக்கும் உணர்வுகளை மெல்லிசை மன்னர்கள் அப்படியே இசையில் எப்படி பிரதியெடுத்தனரே என்பது தான் அவர்களது இசை வாழ்க்கையின் மகத்துவம்

பீறிடும் உற்சாகக் கும்மாளக் கூக்குரலாக அந்த டிரம்பெட் முழக்கம், கடலின் அலைகளை விடவும் வேகமாக இழையும் வயலின் வில்லிசைப்பு, அடிமைகளையும், அவர்களது கனவுகளையும், காதலையும் தாங்கிப் பயணம் செய்யும் அந்த மிதவை போலவே பாடலின் தொடக்கத்திலிருந்து நிறைவு பெறுவதுவரை பிடிமானம் கொடுக்கும் தாளக்கட்டு. பாடலின் சந்தத்திற்கேற்ப ஒலிக்கும் மெலிதான மணியோசையும், உரத்த கோரஸ் குழுவினரின் அபாரமான ஹம்மிங்கும், சுழன்று சுழன்று கூத்தாட வைக்கும் பாடல் அது

https://www.youtube.com/watch?v=vVGLniSY8Qk

பல்லவி என்ன, சரணங்கள் என்ன, பாடல் வரிகளின் பொருளுக்கேற்ற பாவங்கள் என்ன, இசையமைப்பாளர் பாடத்திற்கேற்ற சங்கதிகள் என்ன, சுவாரசியமான குரலினிமை என்ன, டி எம் சவுந்திரராஜனின் முத்தான பாடல்கள் வரிசையில் முக்கியமான ஒன்றாக அமைந்தது இது

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே, கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையேஎன்ற முதல் சரணத்தின் தெறிப்பு அடுத்த வரிகளில் மேலும் சிறக்கிறது. ‘காலம் நம்மை விட்டுவிட்டு நடப்பதில்லையேஎன்ற இடத்தை வசீகரமாக வளைக்கும் டி எம் எஸ், ‘காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதிலையேஎன்ற அடுத்த வரியை இன்னும் உருக்குவார். ‘தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையேஎன்ற இரண்டாவது சரணத்திலும் கண்ணதாசன் அடிமை ஒருவன் சமூகத்தை நோக்கி எழுப்பும் தப்பமுடியாத கேள்விகளை அடுக்குகிறார். பிறப்பு, பசி, காதல், இன்பம், துன்பம், மரணம் எல்லாம் எல்லா உயிர்க்கும் பொது தானே, என்ன நீ உயர்ந்துவிட்டாய் என்னை ஒடுக்குவதற்கு, என்ன நான் தாழ்ந்துவிட்டேன் உன்னிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கு என்று வெடித்தெழும் கேள்விகளை அத்தனை கவித்துவமாகக் கவிஞர் புனைந்திருந்தார்.

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலைஎன்பது உழைப்பாளி ஒருவரின் இதயத்துடிப்பு. அந்த சரணம் முழுக்கவே எளிமையான வரிகளில் உன்னதமான இலட்சியத்தைப் பேசி இருப்பார் கண்ணதாசன். தனக்காக மட்டுமல்ல, ‘அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலைஎன்பது எப்பேற்பட்ட பிரகடனம்.

டிசம்பர் 6 அன்று அமர்ந்து இந்த வார இசை வாழ்க்கையை எழுதி முடிக்கையில், மாமேதை அம்பேத்கர் நினைவு நாளோடு இந்த இரு பாடல்களும் அத்தனை அருமையாகப் பொருந்துவதை கவனிக்க முடிகிறது

அய்ரோப்பிய கண்டத்தில் இருக்கும் ஓர் ஒடுக்கப்பட்ட இனத்து மக்கள், தங்கள் குடியிருப்புக்கு ஜெய் பீம் பெயரிட்டு இருப்பதை, சில ஆண்டுகளுக்குமுன் பர்தீப் சிங் ஆட்ரி எனும் எழுத்தாளர் நேரில் சென்று பார்த்துவந்து எழுதி இருந்தார். 2009ல் வாசிக்கக்  கிடைத்தஹங்கேரியில் அம்பேத்கர்எனும் அந்தக் கட்டுரை புதிய செய்திகளை வழங்கியது. பாரீஸ் நகர புத்தகக் கடை ஒன்றில் பார்த்த பீம்ராவ் அம்பேத்கர் புத்தகம் ஒன்றை வாங்கி வாசித்த எழுச்சியில் அவர் தான் எங்களுக்கும் நாயகர் என்று கண்டடைந்தோம் என்று சொல்லி இருக்கின்றனர் அந்தக் குழுவினரின் தலைவர்கள்

https://www.thehindu.com/features/magazine/Ambedkar-in-Hungary/article16893578.ece

எல்லா வித ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலைக்கான குரல் தான் பாபாசாகேப் எழுப்பியது. இசைத்தது என்றும் சொல்ல முடியும். கற்பி, கிளர்ச்சி செய், ஒன்று சேர் என்பது ஓர் இசைப்பாடல் உருவாக்கத்திற்கான வழிமுறை என்றும் கொள்ள முடியும். விடுதலைக்கான இசையைச் சேர்ந்திசைப்போம்!

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க:

இசை வாழ்க்கை 52: இசையில் வந்தவர் யாரெனக் கேட்டேன் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 53: பூவிதழ் மேலொரு இசைத்துளி இருக்க – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 54: தென் பொதிகை தென்றல் வந்து ஆரீரோ பாடட்டும் ! – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 55: இப்போதும் எப்போதும் முப்போதும் இசைப் பாட்டு  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 56: இசையே இசையின் ஒலியே  – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 57: மெட்டுக்களோ கண்கள்  – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 2 thoughts on “இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன் ”
  1. அருமை! அருமை! எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடிக்கப் பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி ஆகியோர் பெரும் பங்காற்றியுள்ளனர். நீங்கள் இறுதியில் அம்பேத்காரோடு இணைத்து வைத்துள்ளது அருமையிலும் அருமை. வாழ்த்துகள் வேணு.

  2. //அய்ரோப்பிய கண்டத்தில் இருக்கும் ஓர் ஒடுக்கப்பட்ட இனத்து மக்கள், தங்கள் குடியிருப்புக்கு ஜெய் பீம் பெயரிட்டு இருப்பதை, சில ஆண்டுகளுக்குமுன் பர்தீப் சிங் ஆட்ரி எனும் எழுத்தாளர் நேரில் சென்று பார்த்துவந்து எழுதி இருந்தார்.//
    செய்தி மகிழ்வினையும், வியப்பினையும் ஒரு சேரத் தருகிறது
    டிசம்பர் 24
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *