Music Life Series Of Cinema Music (Sinthai Mayakkum Vinthai Isai) Webseries 64 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 64: சிந்தை மயக்கும் விந்தை இசை - எஸ் வி வேணுகோபாலன் சிந்தை மயக்கும் விந்தை இசை
எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 14ம் கட்டுரையில், ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ (தவப்புதல்வன் ) பற்றிய பத்தி ஒன்று இடம் பெற்றிருந்தது. அதன் முதல் சரணத்தில் இரண்டாம் அடியில், ‘என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்’ என்பது கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான கவிதைத் துளி. அண்மையில் தி இந்து ஆங்கில நாளேட்டில், ‘புற்று நோய் அறுவை சிகிச்சை நேரத்தில், கேளடி கண்மணி படத்தின் பாடலால் இதம் பெற்ற நோயாளி’ என்ற செய்தி வந்திருந்தது.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/music-helps-woman-remain-calm-during-mastectomy/article38341547.ece

திருமதி சீதாலட்சுமி, கர்நாடக இசை முறையாகப் பயின்று, இசை வகுப்புகள் நடத்தி வருபவரும் கூட. மார்பகப் புற்று நோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தவருக்கு, ஒரு கட்டத்தில், தவிர்க்க முடியாமல், அறுவை சிகிச்சை தேவைப்பட்டிருக்கிறது.

உண்மையில் உளவியல் போராட்டம் அது, இருப்பினும் அதையும் எதிர்கொண்டு தியேட்டருக்குள் செல்கையில், நுரையீரல் நிலைமை, வழக்கமாக நோயாளியைத் தூங்காமல் தூங்கி, வலி உணராதிருக்கச் செய்யும் பொது மயக்க நிலைக்கு உட்படுத்த அனுமதிக்கவில்லை. இலேசான மயக்கத்தில் இருத்தி, சிகிச்சையைத் தொடங்கி , உள்ளே அவருக்கு மிகவும் விருப்பமான ‘கற்பூர பொம்மை ஒன்று’ பாடலை மென்மையாகச் சுழலவிட்டிருந்தனர்.

இலேசான மயக்க நிலையிலிருந்தும் விடுபட்டுவிட்ட இந்தப் பெண்மணி, விழி திறந்து பார்த்து பேச்சு கொடுத்திருக்கிறார் மருத்துவரிடம். பின்னர் அவர்கள் ஊக்கப்படுத்த, பி சுசீலா குரலோடு இணைந்தும் இயைந்தும் அறுவை சிகிச்சைப் படுக்கையில் இருந்தபடியே பல்லவி முழுக்க அவரால் பாட முடிந்திருக்கிறது. அத்தனை நம்பிக்கையாய் உணர்ந்திருக்கிறார் அந்த நேரத்திலும் – அதற்குப் பிறகும். அனஸ்தீசியா கொடுக்காமல் முக்கிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட நிகழ்வில், சீதாலட்சுமி விளக்கிய இசை குறித்த நுட்பமான செய்தி உடலியல் தொடர்புடையது.

பல்லவியில், ‘கலந்தாடக் கை கோர்க்கும் நேரம்’ என்ற வரியை, ஒரே மூச்சில் பாட முடிந்திருக்கிறது அவரால். இதற்குச் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு செயலி வைத்து அவ்வப்பொழுது பாடிப் பாடிப் பதிவு செய்து பின்னர் கேட்டு ஒப்பிட்டுத் தமது நுரையீரல் வலுப்பெற்று வருகிறதா என்று பார்த்திருக்கிறார்.

அப்போதெல்லாம், ‘கலந்தாட’ பாடி, கொஞ்சம் மூச்சு எடுத்துக் கொண்டு, ‘கை கோர்க்கும்’ பாடி விட்டு மூச்செடுத்து ‘நேரம்’ என்று தான் பாட முடிந்திருக்கிறதாம். அறுவை சிகிச்சை நடக்கும் தருணத்தில் தன்னால் முழு வரியை தாள லயத்தில் ஒரே மூச்சில் பாட முடிந்தது உளவியல் நிறைவையும் அவருக்கு வழங்கி இருக்கிறது. அந்த நிகழ்வில் பல்லவி முழுவதும் சீதாலட்சுமி பாடவும் செய்திருக்கிறார், பார்க்கையில் வியப்பாகவும் உவப்பாகவும் இருந்தது.

இளையராஜா இசையில் மலர்ந்த மு மேத்தா அவர்களது அருமையான பாடல் அது. ஒரு மென்மையான ஹம்மிங்கில் தொடங்குகிறார் சுசீலா (சீதாலட்சுமியும் அந்த ஹம்மிங் அருமையாக இசைத்தே பாட்டைத் தொடங்குகிறார்).

‘கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று’ என்று தொடங்கும் பல்லவியில், ‘கலந்தாடக் கைகோர்க்கும் நேரம்’ என்ற அடிக்குப் பின், சிதார் இசை ஒரு கொஞ்சு கொஞ்சுகிறது. ‘கண்ணோரம் ஆனந்த ஈரம்’ என்ற அடுத்த அடியின் பிறகும் சிதாரின் அதே செல்லச் சிணுங்கல்.

அங்கிருந்து, பி சுசீலா தொடுக்கும் ‘முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல், நீ பாடம்மா’என்கிற இடம், இதயத்தை வருடுவது. காற்றில் பரவும் வாசனைப் புகை போன்ற சுழற்சியில் அமைந்திருக்கும் பகுதி அது. பாடலுக்கான மெட்டில், பல்லவியின் நிறைவுப் பகுதி போலவே அமைந்துவிடும் சரணங்களின் நிறைவுப் பகுதியிலும் இதே வரிகளைப் பயன்படுத்தி இருப்பார் ராஜா.

சிதார் உருக்கமும், புல்லாங்குழல் மயக்கமும், வயலின்களின் கலக்கமும் கொண்டு சேர்க்கும் இடத்தில் தொடங்கும் முதல் சரணத்தின் வரிகளில் தாயன்பு சிந்துகிறது சுசீலாவின் குரல். சரணத்தினூடே, ‘மானே உன் வார்த்தை ரீங்காரம்’ என்பதில் ‘மானே’ என்பதையும் ‘ரீங்காரம்’ என்பதையும் அத்தனை கற்பனையோடு இழைத்திருப்பார் சுசீலா. அதற்கு இயைபான அடுத்த அடியில், ‘மலரே என் நெஞ்சில் நின்றாடும்’ வந்து தெறிக்கும். நின்றாடும் என்ற சொல் முடியவும் தபலா தாளக்கட்டு சுவாரசியமான ஒரு முடிச்சு போட்டு, ‘முத்தே என் முத்தாரமே’ வரியை ஏந்திச் செல்லும் அழகில் மனம் கரைந்துபோகும்.

இரண்டாம் சரணத்தை, கதைக்களத்தில் குழந்தை தனது தாயோடு செலவிட்ட இன்பத் தருணங்கள் நினைவில் கொண்டுவர ஏற்றதான வேக கதியில் வயலின் இசையை அபார முறையில் சொற்களும், இழைய விட்டிருப்பார் ராஜா. குதூகலத்தைக் குழல் பின்னர் பற்றிக் கொண்டு ஓட, இரண்டாம் சரணத்தில், தன்னைக் குழந்தை இழக்கப்போவதை சூசகமாக உணர்த்தும் வரிகள், உள்ளம் தொட்டுக் கண்ணீர் பெருக்கும். மீண்டும் தபலா தாளக்கட்டின் சுவாரசியமான முடிச்சு, ‘முத்தே என் முத்தாரமே’. ‘கற்பூர பொம்மை ஒன்று’ எனும் அந்தப் பல்லவி பாடல் முழுக்க ரீங்காரமிடுவது, பாடல் முடிந்தபின் ரசிகருக்குள் இடம் பெயர்ந்துவிடுகிறது.

நோயுற்ற பிறகு, எங்கே தனது பாடல்களை, இசையை இழந்து விட்டோமோ என்ற உள்ளத்தின் பரிதவிப்பு விடைபெற்றுத் தனது இசைக்குரலை மீட்டெடுத்துக் கொண்ட உணர்வை சீதாலட்சுமி வெளிப்படுத்தும் போதே, பழைய நிலைக்கு இன்னும் தூரம் போகவேண்டி இருக்கும், ஆனால், ஒரு தெம்போடு அதையும் கடப்பேன் என்று குறிப்பிட்டார்.

தான்சேன் பற்றிய குறிப்பில் தொடங்கியது ஒரு தற்செயல் ஒற்றுமைதான். தி இந்து ஆங்கில ஏட்டின் கடந்த வெள்ளிக்கிழமை இணைப்பிதழில், கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக, மத்திய பிரதேசத்தில் குவாலியர் அருகே பெஹத் எனும் சிற்றூரில், தான்சேன் சமாதி அருகே, ஆண்டு தோறும் டிசம்பரில் நடைபெறும் இசையோற்சவம் ஒன்றைப் பற்றிய சிறப்புக் கட்டுரை பல சுவாரசியமான தகவல்களை ஏந்தி வந்துள்ளது.

https://www.thehindu.com/entertainment/music/singing-at-tansens-tomb/article38334604.ece

97வது ஆண்டு சிறப்பு இசை சங்கமத்தில் தமிழகத்தில் இருந்து பிரபல கட வித்வான் விக்கு விநாயகம் அவர்கள் இந்த முதுமையிலும் அங்கே சென்று அற்புதமான நிகழ்ச்சி நடத்தி வந்திருக்கிறார். ராம்தனு என்பது தான் இயற்பெயர், இசையில் அவர் வேகமாக எட்டிய புலமையைப் பாராட்டி, அவரது குருவான சுவாமி ஹரிதாஸ் வைத்த பெயர் தான் தான்சேன் (தான் என்பது சங்கீதத்தில் தானம் என்பதைக் குறிக்கும், சிறப்பான முறையில் தானங்கள் இசைத்து, இனிமையாகப் பாடுபவர் என்பதால் கிடைத்த பெருமையது).

Music Life Series Of Cinema Music (Sinthai Mayakkum Vinthai Isai) Webseries 64 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 64: சிந்தை மயக்கும் விந்தை இசை - எஸ் வி வேணுகோபாலன் 

புகழ் பெற்ற தீபக் ராகம் (இசையால் விளக்குகளை ஒளிரவைத்தது என்று சொல்லப்படும் அந்த ராகம், இப்போது அதன் மூல வடிவில் முழுமையாக இல்லையாம்), மேக மல்ஹார் (மழை பொழியச் செய்வது) இவற்றுக்கெல்லாம் பெயர் போன தான்சேன் புகழை, குவாலியர் மகாராஜா 1924ல் இப்படியான பல்லிசை சங்கம நிகழ்வாக நடத்தத் தொடங்கிச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு, பல்வேறு இசை வித்தகர்களோடு, ஓவியக் கலைஞர்களும் வந்துபோயிருக்கின்றனர். எதற்காக….. விதவிதமான ராகங்களைக் குறிக்கும் விதவிதமான வண்ணக் கலவைகளில் புகழ்பெற்ற மதுபானி ஓவியங்கள் வைத்திருந்தனர் என்றும் பேசுகிறது கட்டுரை.

திறமையான ஓவியர்கள் இசையைக் கேட்டபடி மேடைகளில் சிறப்பான ஓவியங்கள் தீட்டுவதை – பாடலின் ஏற்ற இறக்கங்கள், ராக பாவங்கள் இவற்றுக்கேற்ப வண்ணங்களைக் குழைப்பதை வியந்து பார்த்திருப்போர் இருப்பீர்கள்.

சில ஆண்டுகளுக்குமுன், லயோலா கல்லூரி பண்பாட்டுத் துறையோடு இணைந்து ஓவியர் சந்த்ரு தலைமையில் ஏராளமான ஓவியக் கலைஞர்கள் இளையராஜாவுக்கு ஓவியங்களினூடே தங்களது சிறப்பு மரியாதை செய்த நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி வைக்க பா ரஞ்சித், பொன் வண்ணன்போன்ற பலரும் பங்கேற்ற அந்த நிகழ்வின் காணொளிப் பதிவு யூ டியூபில் உள்ளது.

மற்றுமொன்று, தென்றல் வந்து தீண்டும்போது பாடலுக்கான ஓவியத்தையே தீட்டி இசை ஞானிக்கு மரியாதை செய்திருக்கும் அற்புதமான ஓவியர்.

அந்தக் காணொளியும் நெகிழ வைத்தது.

இரண்டுமே கண்ணில் நீரை வரவழைப்பது. முதலாவதில், அற்புதமான இயக்குநர் எஸ் பி ஜனநாதன் அவர்களது உற்சாக முகமும் குரலும். இரண்டாவதில், ‘வண்ணங்கள் அறியா எண்ணங்கள்’ என்று எழுதிக் கையெழுத்து போட்டிருக்கும் அபார ஓவியர் இளையராஜா, கண்ணெதிரே பார்க்கும் உருவை அப்படியே கலையாக்கி நிறைவு செய்யும் இடத்தில் உறைந்து போகிறது மனம்! அர்ப்பணிப்பு மிக்க இருவரையும் இந்தக் கொடுந்தொற்று காலத்தில் பறிகொடுத்தோம்.

அர்ப்பணிப்பு எனும் சொல், பழைய நினைவுகளுக்கு இட்டுச் செல்கிறது. இசையும் ஓவியமும் எனில், அருமையான இசையமைப்பாளர் டி ஜி லிங்கப்பா இசையில் டி எம் சவுந்திரராஜன் அவர்களது அசாத்திய காதல் தேனிசைக் குரலில் ஒலிக்கும் புகழ் பெற்ற பாடலாசிரியர் கு மா பாலசுப்பிரமணியன் அவர்களது பாடல் தான் சட்டென்று நினைவுக்கு வரும், சித்திரம் பேசுதடி….ஆஹா என்ன எழிலானதொரு பல்லவி.

காதல் பாடல்களுக்கான பூக்களை எந்த நந்தவனத்தில் இருந்து பறித்துச் சொற்களாக வடிப்பார் கு.மா.பா என்பது எப்போதும் வியக்க வைப்பது! இதயத்திற்குள் இசைக்கும் பாடலை அத்தனை மென்மையாக அமைத்திருப்பார் லிங்கப்பா.

அடுத்தவர் அறியாத வண்ணம் காதலன் தனது உள்ளத்தைத் திறந்து தீட்டும் ஓவியமும், அதன் மீதான காதல் காவியமும் சபாஷ் மீனா படத்தில் அற்புதமாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும். இல்லாதப்பட்டவர்களுக்கு இடையே காதல் இல்லாமல் எப்படி போய்விடும்! காதலில் ஏழ்மை இல்லை, வள்ளன்மை தான்!

தந்திக் கருவிகளும், காதல் பூங்குழலும் ஓர் ஓடையைப் போல் இதம் பதமாக ஓடி இதயம் நனைக்கும் இடத்தில், பளிச் என்று எடுக்கிறார் பல்லவியை சவுந்திரராஜன். ‘சித்திரம் பேசுதடி’ என்று தொடங்கி, ஒரு சிறு நிறுத்தம் கொடுத்து, ‘உன் சித்திரம் பேசுதடி’ என்று வளர்த்து ‘எந்தன் சிந்தை மயங்குதடி’ என்று கொண்டு நிறுத்திக் காதலை வரைவார் டி எம் எஸ், சங்கதிகள் இழைத்து!

பல்லவியை முடிக்கவும், ஒரு மயில் பீலி, பாடகரையும் ரசிகரையும் ஒரு சேர வருடிக் கொடுப்பது போன்ற இசையை (வயலின்?) மென் அலைகளாகப் பரவ விடுகிறார் லிங்கப்பா. இதே இசையை, சரணங்கள் ஒவ்வொன்றிலும் மேல் தளங்களுக்குக் குரலெடுக்கையில் விசைப்பலகையாய் வழங்கி இருப்பார்.

பல்லவியை அடுத்துப் பிறக்கும் அனுபல்லவி, பாடலின் மொத்த ருசிக்கும் ஒரு முன்னோட்டமாக அருள்கிறது. ‘முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி’ என்பது அந்த வரி, ஆனால், அதைச் சரம் சரமாகத் தொடுத்துக், கையில் எடுத்துக் கொஞ்சி முத்தமிட்டு மேற்கொண்டு தொடுத்து முடித்துப் பின்னி இருப்பார் டி எம் எஸ். அதிலும், அந்த ‘போல்’ என்ற சொல்லையடுத்து எடுக்கும் ஆலாபனை, மோகனப் புன்னகையை விதம் விதமாகச் சிதற விடும் காதல் ஆராதனை எல்லாம் சொல்லி மாளாது.

‘தாவும் கொடி மேலே’ என்ற முதல் சரணத்தின் முதலடியில் முதல் எழுத்துக்கே மந்திரம் போட்டிசைத்துப் பின்னர் முதலடியின் நிறைவை நீட்டித்து, ‘ஒளிர் தங்கக் குடம் போலே’ என்று தரையிறக்கிக் கொண்டுவந்து கொஞ்சுமிடமும், பின்னர் குழந்தையை மெல்ல மெல்ல உயர்த்தித் தோளில் நிறுத்திப் பின்னர் கழுத்தில் அமர்த்திக் கூத்தாடுவது போல் காதலைக் கிறுகிறுக்க வைத்து விடும் அடுத்த வரிகளும்…. ஆஹா! ‘பேரெழிலே’ என்ற சொல்லுக்கு அதற்கு மேலும் அழகூட்டி விடும் அவரது குரல்.

இரண்டாம் சரணம், மித கதியில் தொடங்கினாலும், உள்ளூரப் பொங்கும் காதலை மென் சீண்டலாக, ஊடலாகக் கோப்பையில் ஊற்றி வேகமாக ஆற்றி ஆற்றித் தானே நம்பிக்கையோடு சமாதானப் படுத்திக் கொண்டு நிறைவு பெறுகிறது. அதிலும், ‘இன்னமும் ஊமையைப் போல் மௌனம்’ என்ற எடுப்பு, ஒரு பாசாங்கு கோபமாக வரைகிறார் டி எம் எஸ். ‘ஏனடி தேன்மொழியே’ என்று நியாயம் கேட்குமிடத்தில் பதில் ஏற்கெனவே தெரிந்த இன்பம் மிதக்கிறது குரலில்!

சித்திரம் பேசுதடி என்ற பல்லவியின் முதலடியில் பாடல் நம்மை நிலை நிறுத்தி விடை பெறுகிறது. தொடக்கத்திலிருந்து அந்த நிறைவுப் பகுதி வரை, குரலை மிகாது வயலின் இழைப்பு நிழல் போல் தொடர்தலின் சுகம், இரவுகளில் கேட்கும்போது நெஞ்சம் நிறைக்கிறது.

பாடல் காட்சியில், காதலி (மாலினி) உள்ளே நுழைதல் அறியாது, காதலன் பாடிக் கொண்டிருக்க, அந்தக் காதலை அவள் ரசித்து வெளிப்படுத்தும் பாவங்களும் சிறப்பாக அமைந்திருக்கும். டி எம் எஸ் குரலின்பம் அப்படியே வாங்கி, அள்ளியள்ளி உடலில் இறக்கித் ததும்பி ஒரு குதூகல புன்னகையைப் பரவவிட்டபடி நடித்திருப்பார் சிவாஜி கணேசன் !

ஏக்கம், துயரம், இன்பம், தேடல், இலட்சியம் என மிகப் பரந்துவிரிந்த வாழ்க்கை அனுபவங்களை இசை தனது மொழியில் கடத்துகிறது. தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் தடுப்பூசி போலவே, துயர நேரத்தில் ஒலிக்கும் சோக கீதம், தாங்கும் சக்தியை வலுப்படுத்தி இதப்படுத்தி உள்ளத்தை நிம்மதி பெறச் செய்துவிடுகிறது. இசையின் மருத்துவம், இசையின் மகத்துவம்.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய தொடர்களை வாசிக்க:

இசை வாழ்க்கை 58: தேகம் தழுவும் இசைக் காற்று – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 59: இது வசந்த காலமோ என் இசையின் கோலமோ – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 60: பாட்டு நம்மை அடிமை என்று விலகவில்லையே – எஸ். வி. வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 61: இசையும் அழுத ஒரு மழை இரவு – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 63: இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே – எஸ். வி. வேணுகோபாலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். One thought on “இசை வாழ்க்கை 64: சிந்தை மயக்கும் விந்தை இசை – எஸ். வி. வேணுகோபாலன்”
 1. இசை வாழ்க்கை 64
  இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்ற திரைப்பாடல் வரிகளோடு ஆரம்பமாகும் இசை வாழ்க்கை கட்டுரை உண்மையிலேயே இதயத்தை அசைத்துப்பார்த்து விட்டுத்தான் ஒய்கிறது.
  கவியரசர் எவ்வளவு பெரிய தீர்க்க தாிசி என்பதை அவா் அன்று பாடி வைத்த ‘’என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம் ‘’என்ற வரிகளை எடுத்துச் சொல்லி அதன் நீட்சியாக அண்மையில் தி இந்து ஆங்கில நாளேட்டில், ‘புற்று நோய் அறுவை சிகிச்சை நேரத்தில், கேளடி கண்மணி படத்தின் பாடலால் இதம் பெற்ற நோயாளி திருமதி சீதாலட்சுமி, அவா்களின் செய்தியை எடுத்துக்காட்டி இசையின் மகத்துவத்தை நன்கு அறியச் செய்திருக்கிறிர்கள்.
  நான் ஆச்சரியப்படுவது என்னவென்றால் திரையிசைப்பாடல்களில் தாங்கள் ஆழ்ந்து அனுபவித்ததை இசை வாசகர்களுக்கு எளிமையாக அற்புதமாக எடுத்துரைக்கும் பாங்கு தான்.
  உண்மையில் ‘கற்பூர பொம்மை ஒன்று’ பாடலை மென்மையாக “ மிக மென்மையாக வாசிப்பவர்களின் மனதிற்குள் நீங்கள் சுழலவிட்டிருக்கின்றீர்கள். ‘கலந்தாடக் கை கோர்க்கும் நேரம்’ என்ற வரியை நீங்கள் எடுத்துக்கொண்டு அதை ஆலாபனை செய்வது போல மீட்டிப்பார்த்திருக்கிறீர்கள்.
  இது போலவே ஒவ்வொரு சரணத்திலும் ஒவ்வொரு வரியாக எடுத்து நீங்கள் மீட்டிப்பார்க்கிற அழகு வாசிப்பவர்களை வசியப்படுத்தி விடும் ஒரு அற்புத இசைக்கோர்வை போலவே அமைந்துள்ளது.
  தாங்கள் ஒரு அபார இசை ரசனை கொண்டவர் என்பதற்கு இந்தப்பாடலை வரி வரியாக அசை அசையாக எடுத்துக்கொண்டு உருகிக் கரைகிற கீழ் கண்ட இடங்களே சான்றாகும்
  “கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று’ என்று தொடங்கும் பல்லவியில், ‘கலந்தாடக் கைகோர்க்கும் நேரம்’ என்ற அடிக்குப் பின், சிதார் இசை ஒரு கொஞ்சு கொஞ்சுகிறது. ‘கண்ணோரம் ஆனந்த ஈரம்’ என்ற அடுத்த அடியின் பிறகும் சிதாரின் அதே செல்லச் சிணுங்கல்.
  அங்கிருந்து, பி சுசீலா தொடுக்கும் ‘முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல், நீ பாடம்மா’என்கிற இடம், இதயத்தை வருடுவது. காற்றில் பரவும் வாசனைப் புகை போன்ற சுழற்சியில் அமைந்திருக்கும் பகுதி அது. பாடலுக்கான மெட்டில், பல்லவியின் நிறைவுப் பகுதி போலவே அமைந்துவிடும் சரணங்களின் நிறைவுப் பகுதியிலும் இதே வரிகளைப் பயன்படுத்தி இருப்பார் ராஜா.
  சிதார் உருக்கமும், புல்லாங்குழல் மயக்கமும், வயலின்களின் கலக்கமும் கொண்டு சேர்க்கும் இடத்தில் தொடங்கும் முதல் சரணத்தின் வரிகளில் தாயன்பு சிந்துகிறது சுசீலாவின் குரல். சரணத்தினூடே, ‘மானே உன் வார்த்தை ரீங்காரம்’ என்பதில் ‘மானே’ என்பதையும் ‘ரீங்காரம்’ என்பதையும் அத்தனை கற்பனையோடு இழைத்திருப்பார் சுசீலா. அதற்கு இயைபான அடுத்த அடியில், ‘மலரே என் நெஞ்சில் நின்றாடும்’ வந்து தெறிக்கும். நின்றாடும் என்ற சொல் முடியவும் தபலா தாளக்கட்டு சுவாரசியமான ஒரு முடிச்சு போட்டு, ‘முத்தே என் முத்தாரமே’ வரியை ஏந்திச் செல்லும் அழகில் மனம் கரைந்துபோகும்..“
  “இரண்டாம் சரணத்தை, கதைக்களத்தில் குழந்தை தனது தாயோடு செலவிட்ட இன்பத் தருணங்கள் நினைவில் கொண்டுவர ஏற்றதான வேக கதியில் வயலின் இசையை அபார முறையில் சொற்களும், இழைய விட்டிருப்பார் ராஜா. குதூகலத்தைக் குழல் பின்னர் பற்றிக் கொண்டு ஓட, இரண்டாம் சரணத்தில், தன்னைக் குழந்தை இழக்கப்போவதை சூசகமாக உணர்த்தும் வரிகள், உள்ளம் தொட்டுக் கண்ணீர் பெருக்கும். மீண்டும் தபலா தாளக்கட்டின் சுவாரசியமான முடிச்சு, ‘முத்தே என் முத்தாரமே’. ‘கற்பூர பொம்மை ஒன்று’ எனும் அந்தப் பல்லவி பாடல் முழுக்க ரீங்காரமிடுவது, பாடல் முடிந்தபின் ரசிகருக்குள் இடம் பெயர்ந்துவிடுகிறது.“
  என்ன ஆச்சரியம் இந்த அதிசயம் இந்த அதிசயம் இசைஞானியின் காதுகளையும் எட்டியிருக்கிறது. ஆதலால்தான் அவாின் இசை ரசிகையான திருமதி சீதாலட்சுமி அவர்களை அவருடைய அறுவை சிகிச்சை வெற்றி கரமாக முடிந்ததும் தன்னை சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். இசையின் மகத்துவம் தான் என்ன! அதன் பேரன்புதான் என்ன ?
  தான்சேன் பற்றிய குறிப்புகளும் அவரது புகழ் பெற்ற ராகங்களான தீபக் ராகம் (இசையால் விளக்குகளை ஒளிரவைத்தது என்று சொல்லப்படும் அந்த ராகம், இப்போது அதன் மூல வடிவில் முழுமையாக இல்லையாம்), மேக மல்ஹார் (மழை பொழியச் செய்வது) ஆகியவைகள் பற்றிய குறிப்புகளும் வாசிப்பவர்களை ஆச்சரியம் கொள்ள வைக்கின்றன.
  லயோலா கல்லூரி பண்பாட்டுத் துறையோடு இணைந்து ஓவியர் சந்த்ரு தலைமையில் ஏராளமான ஓவியக் கலைஞர்கள் இளையராஜாவுக்கு ஓவியங்களினூடே தங்களது சிறப்பு மரியாதை செய்த நிகழ்வு மனதை நெகிழ்சியுறச் செய்வதாக இருக்கிறது.
  எத்தனை எத்தனை ஆளுமைகள் இசைஞாினியின் இசையில் தங்கள் இதயத்தை கரைத்திருக்கிறாா்கள் என்பது எவ்வளவு நெகிழ்ச்சி தருகிறது.
  அடுத்ததாக தாங்கள் எடுத்து ஆலாபனை செய்திருக்கும் காலத்தால் மறக்க முடியாத காதல் பாடலான சித்திரம் பேசுதடி பாடல் அற்புதமான இசை சித்திரத்தையே தீட்டியிருக்கிறது. அதை உங்கள் வார்த்தைகளிலேயே அப்படியே கேட்கும் இன்னும் கூடுதல் சுகம் கண்களுக்குள் வந்து ஒற்றிக்கொள்கிறது.
  “அர்ப்பணிப்பு எனும் சொல், பழைய நினைவுகளுக்கு இட்டுச் செல்கிறது. இசையும் ஓவியமும் எனில், அருமையான இசையமைப்பாளர் டி ஜி லிங்கப்பா இசையில் டி எம் சவுந்திரராஜன் அவர்களது அசாத்திய காதல் தேனிசைக் குரலில் ஒலிக்கும் புகழ் பெற்ற பாடலாசிரியர் கு மா பாலசுப்பிரமணியன் அவர்களது பாடல் தான் சட்டென்று நினைவுக்கு வரும், சித்திரம் பேசுதடி….ஆஹா என்ன எழிலானதொரு பல்லவி.“
  “காதல் பாடல்களுக்கான பூக்களை எந்த நந்தவனத்தில் இருந்து பறித்துச் சொற்களாக வடிப்பார் கு.மா.பா என்பது எப்போதும் வியக்க வைப்பது! இதயத்திற்குள் இசைக்கும் பாடலை அத்தனை மென்மையாக அமைத்திருப்பார் லிங்கப்பா.‘
  உங்களுடைய ரசனை இசையையும் இசையோடு இயைந்த பாடல் வரிகளையும் தலையில் வைத்து கொண்டாடி உச்சி முகா்ந்து உன்மத்தம் கொண்டாடுகிறது. வாசிக்கிற நெஞ்சத்திற்குள் வண்ணத்துப் பூச்சிகள் பறக்கின்றன.
  இன்னும் எழுதிக் கொண்டே போகலாம் தான். அத்தனையும் வியப்பாகத்தான் மாறுமே தவிர தங்களைப்போல தேர்ந்த ரசனையின் இசைசித்திரமாக இராது.
  இந்த வாழ்த்து மடலை என் வாா்த்தைகளில் முடிப்பதை விட தங்கள் வார்த்தைகளிலேயே முடிப்பது தான் சிறந்ததாக இருக்கும்.
  “ஏக்கம், துயரம், இன்பம், தேடல், இலட்சியம் என மிகப் பரந்துவிரிந்த வாழ்க்கை அனுபவங்களை இசை தனது மொழியில் கடத்துகிறது. தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் தடுப்பூசி போலவே, துயர நேரத்தில் ஒலிக்கும் சோக கீதம், தாங்கும் சக்தியை வலுப்படுத்தி இதப்படுத்தி உள்ளத்தை நிம்மதி பெறச் செய்துவிடுகிறது. இசையின் மருத்துவம், இசையின் மகத்துவம்.“
  தங்கள் எழுத்தின் மகத்துவமும் அது தான் ஐயா
  தங்களுக்கு என் நெஞ்சாா்ந்த வாழ்த்துக்கள்!
  உங்களின் இசை வாழ்க்கை குறித்த அத்தனை கட்டுரைகளையும் வாசிப்பது தான் ஓரு வாசகனின் மனதா்ாந்த மகத்துவம் என்றால் மிகையில்லை
  மிக்க நன்றி
  அன்புடன்
  தங்கேஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *