Music Life Series Of Cinema Music (Kadhal Isaiyai Sollamal Sonnanadi) Webseries 66 by Writer S.V. Venugopalan. இசை வாழ்க்கை 66: காதல் இசையைச் சொல்லாமல் சொன்னானடி - எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 66: காதல் இசையைச் சொல்லாமல் சொன்னானடி ! – எஸ். வி. வேணுகோபாலன்

காதல் இசையைச் சொல்லாமல் சொன்னானடி !
எஸ் வி வேணுகோபாலன்

இசை
மனதுக்கு நெருக்கமான
கவிஞனைப் போலத் தெரிகிறாய்
இன்னும் கொஞ்சம் நெருங்குகிறேன்
ஓவியனாகி விட்டாய்

இன்னும் சற்று அருகில் நான்
இசையானாய்

– இலங்கை மலையகக் கவிஞர் எஸ்தர்
(பெருவெடிப்பு மலைகள் தொகுதியில் இருந்து…)

கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு இந்தக் கட்டுரைகள் வந்தாலும், இடையில் இசையிராத இடைவெளிகள் இருக்கவே வாய்ப்பில்லை. அண்மையில் வாசிக்கக் கிடைத்துப் பாராட்டி முந்தைய கட்டுரைகள் தேடியெடுத்து வாசித்து விடுவேன் என்று வாட்ஸ் அப்பில் தெரிவித்த திருமதி மீனாட்சி பாலகணேஷ் ஆகட்டும், என்ன ஆச்சு, அடுத்த கட்டுரை எங்கே என்று கேட்கும் கோவை பாரதியார் பல்கலைக் கழகப் பணி நிறைவு செய்திருக்கும் மனோகர் அவர்களாகட்டும் எண்ணற்ற அன்பர்களது தொடர் மறுமொழி ஆகட்டும், இசை வாழ்க்கையின் நீட்சிக்கு ஊக்கம் வழங்குபவர்களாக இருக்கின்றனர்.

உள்ளபடியே இடைவெளிகளை நிரப்புகிறது இசை. இடைவெளியைக் குறைக்கவும் செய்கிறது, சமயங்களில். கேட்கப் படாத கேள்விகளுக்குப் பதிலாக வந்து சேரும் இசை, பதில்கள் பெற இயலாத கேள்விகளையும் தொடுக்கிறது. இன்னார் இன்னின்ன விரும்புவார் என்று பழங்கள், இனிப்புகள், துணிமணிகள் தேர்வு செய்து கொண்டு வந்து கொடுக்கும் நெருக்கமான உறவுகளைப் போலவே, இன்னாரது இதயத்தைத் தொடும் இது என்று பார்த்துப் பார்த்துக் கேட்டுக் கேட்டு அன்பர்கள் சிலர் அனுப்பிவைக்கும் இசை, தொடர்பு எல்லைக்கு அப்பால் எங்கோ இருப்பவரோடும் பாலம் அமைந்துவிடுகிறது.

அருகே இருந்தும் பார்த்துக் கொள்ள இயலாமல் போகும் இந்தக் கொரோனா கொடுந்தொற்றுக் காலவெளியில் அன்பின் தூது, இசை வழி உரையாடலைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.

அப்படியான ஓர் அருமையான பாடலை அனுப்பி வைத்தார் வங்கி முன்னாள் உதவிப் பொது மேலாளர் கிருஷ்ணன். கதைக்கான இசைப்பாடல் தான் அது என்றாலும், வாலியின் பாடல் வரிகளும், மெல்லிசை மன்னர்களது அபார மேதைமை இசைக்கோவையும் இன்னும் பல்லாண்டுகளுக்குப் பேச வைக்கும் வலிமை நிறைந்தது அது. ஒற்றைக் குழந்தைக்கான இரட்டைத் தாலாட்டு அது.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரும் குழந்தைக்கான உருக்கமான கீதம் அது. உறவு நிலைக்க எண்ணி, குழந்தையைப் பெற்றவளே வேறு பெற்றோரிடம் ஒப்படைக்கும் குழந்தை அங்கே உறங்க, இங்கே வெறுமையின் தூளி மட்டும் காற்றில் ஆடிக்கொண்டிருக்க, விஷயமறிந்து கோபமும் ஆத்திரமும் அடைந்து தணிந்து குமுறும் தந்தையின் குரலில் இருந்து புறப்படும் கேள்விகளும், தாயின் விளக்கங்களுமாக அமைந்திருக்கும் பாடல், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பது, உறக்கம் வராத எத்தனையோ உள்ளங்களில் புகுந்து கண்ணீர் பெருக்க வல்லது.

எல் ஆர் ஈஸ்வரியின் ‘ஆரீராரிராரோ….’ என்றஅசாத்திய ஹம்மிங் குரலினிமையில் புறப்படுகிறது பாடல், அதற்கான தாளக்கட்டு பாடல் நெடுகக் கம்பீர லயத்தில் நடைபோட்டு வருகிறது. ஹம்மிங் ஏற்படுத்தும் உணர்வுகளில் நேயர் தன்னை ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்திற்கு உட்படுத்திக் கொள்ளத் தயாராகும்போதே, இசைத்துணுக்குகள் பல்லவியை நோக்கி அழைத்துச் செல்லவும், டி எம் சவுந்திரராஜன் என்ற அந்த அசுரனைத் தவிர வேறு யார் அத்தனை காத்திரமான குரலில், ‘மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க….’ என்று எடுத்திருக்கக் கூடும்! அடுத்த வரி, ‘மன்னவன் மட்டும் அங்கிருக்க’ என்று வேறுபடுத்தி ஒலிக்க, ‘காணிக்கையாக யார் கொடுத்தார்’ என்ற கேள்வியும், ‘அவள் தாயென்று ஏன் தான் பேரெடுத்தாள்’ என்ற தீர்ப்பும் நெஞ்சை உலுக்கி எடுப்பது. ஒரு சின்ன இடைவெளியில், பி சுசீலாவின் அபார குரலெடுப்பில் பல்லவியின் வரிகள் தொடங்கி, ‘காணிக்கையாக ஏன் கொடுத்தேன், அது கடமையென்றே நான் கொடுத்தேன்’ என்ற பதிலை உள்ளத்தைத் தொடும் வண்ணம் இசைத்திருப்பார்.

பல்லவியைத் தொடர்ந்தும், சரணத்திற்கு முன்புமாக பாடல் நெடுக எல் ஆர் ஈஸ்வரியின் ஹம்மிங் பாடலின் உயிரான அம்சமாகத் தொடரும். ஹம்மிங், குழந்தை இருக்குமிடத்தில் இன்பத்தை வெளிப்படுத்தவும், வெற்றுத்தூளி ஆடுமிடத்திற்கான தாலாட்டு துயரத்தைச் சுமக்கவுமாக எப்படி இப்படியோர் இசைக்கோவையை வந்தடைந்தனர் மெல்லிசை மன்னர்கள் என்பது நினைக்க நினைக்க மலைக்க வைப்பது.

‘கொடியில் பிறந்த மலரைக் கொடி புயலின் கைகளில் தருமோ’ என்ற முதல் சரணத்தின் முதல் வரியை இசைக்கையில், ‘தருமோ’ வில் வரும் ‘மோ’வை, டி எம் எஸ் என்னமா இழைத்திருப்பார், இரண்டாம் சரணத்தின் முதல் வரியில், ‘இமையில் வளர்ந்த விழியை இமை எரியும் நெருப்பில் விடுமோ’ என வரும்போதும், அந்த மோ வைக் கவனிக்க முடியும்.

இரண்டு சரணங்களிலும் முதலிரண்டு வரிகளை ஆண் பாடுவதாகவும், அவன் படும் பாடுகளைப் பேசுவதாகவும் அமைய, டி எம் எஸ் அந்த உணர்வுகளை, பாடலைக் கேட்போருக்கும் கடத்துவார்.
தனது குமுறலையே ஆறுதலாக மாற்றிக்கொண்டு இசைக்கும் குரலை, சுசீலா அமுதமாகப் பொழிவார் இரண்டு சரணங்களிலும்.

மூன்றாவது குரலாக ஒலிக்காமல், காலத்தின் குரலாக இழையோடும் ஈஸ்வரியின் ஹம்மிங், குழந்தையைத் தோளில் கதகதப்பாக அணைத்துக் கொண்டு செல்வதுபோலவே பாடலை முன்னெடுத்துச் செல்கிறது. ஹம்மிங் தொடக்கத்தை அடுத்து எடுக்கும் ஆர்கெஸ்ட்ரா தாள லயம் அபாரம், அதையடுத்து உருக்கத்தின் நெருக்கத்திற்கு ஷெனாய் உள்ளிட்ட இசைக் கருவிகள் இழைக்க, மீண்டும் ஈஸ்வரியின் ஹம்மிங் தொடுத்துக் கொடுத்துக் குழலிசையின் இதத்தில் சரணத்தைத் தொடங்குமாறு அமைத்திருக்கின்றனர் மெல்லிசை மன்னர்கள்.

சரணத்தில் தபலா தாளக்கட்டு, பெற்றோரின் இதயத் துடிப்புகளாகவே மாறி ஒலிக்கிறது. எதுகையும் மோனையும் சந்தமும் கொஞ்ச, மிக எளிமையான சொற்களில் கருத்துகளைக் கொணரும் வாலியின் திறம் அபாரமானது.

இரண்டு வாரங்களாக வீதியில் வராதிருக்கும் இளநீர்காரர் செல்வம் அவர்களை அலைபேசியில் அழைக்கும்போது, எதிர்பாராத ஒரு பழைய பாடலை அவர் ரிங் டோனாக வைத்திருந்தது காதில் விழுந்தது. ‘எல்லாமே என் மகன் வேலை அய்யா, இந்த விஷயமெல்லாம் நமக்கு என்ன தெரியும்!’ என்று முன்பே ஒரு முறை அலைபேசி பற்றிக் கேட்டதற்குச் சொல்லி இருந்தார்.

மிக மிகப் பழைய பாடல். ரிங் டோன் ஈர்த்ததற்கு முக்கிய காரணம், தொடக்க இசையின்றி, பல்லவி வரியில் இருந்து ஒலித்ததும், அந்த சொற்கட்டு சந்தத்திற்கேற்ப பளீர் என்று மெட்டு கட்டும் தபலா தாளக்கட்டு காற்றில் வந்து நெஞ்சைத் தழுவிக் கொண்டதும் தான்!

நிர்பந்தத்தில் மணமுடிக்கும் நாயகன், மணமகள் கண் பார்வையற்றவள் என்று அறிந்ததும் கோபத்தில் வெளியேறி, தொலைதூரத்தில் இராணுவப் பணியில் இருக்கும் நீண்ட பிரிவில், நாயகி அவனுக்கு எழுதும் கடிதம் தான் அந்தப் பாடல்.

சாந்தி படத்தின் பாடல்கள் யாவும், விஸ்வநாதன் – இராமமூர்த்தி இசையில் பெரிதும் பேசப்பட்டவை. இந்தப் பாடல், பி சுசீலாவின் நெகிழவைக்கும் குரலினிமையும், கடைசி சரணத்தில் வந்து இணையும் பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களது மென் குரல் கதகதப்பும் பாடலை வழிநடத்தும் குழலிசையும், வயலின் இசையும், கண்ணதாசனின் கவித்துவமிக்க பாடல் வரிகளுமாக இன்றும் பல்லாயிரம் பேர் கேட்டுக் கொண்டிருக்க வைத்திருக்கிறது.

தன் னா னனனே தா னனனே ….என்ற தத்தகாரத்தை மட்டுமல்ல கதைக்கான காட்சியையும் மனத்தில் ஏந்தியவாறே பாடலை எழுத வேண்டும். ‘செந்தூர் முருகன் கோயிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன்’ என்று எப்படி வந்து விழுகிறது பல்லவி! ‘சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன்’ என்ற அடுத்த வரியை அப்படியே கடந்து விட முடியாது, கண் பார்வையற்றவள் விடியலை ஒரு சேவலின் கூவலில் உணர்வதும், பாடலில் கலப்பதும் எத்தனை கவித்துவ வரிகள்! இங்கே முடியவில்லை, கவிஞரின் அபார ஆற்றல்…சரணங்களிலும் தொடர்கிறது.

‘கண்கள் இரண்டை வேலென எடுத்துக் கையோடு கொண்டானடி’ என்ற வரியில் எத்தனை அசாத்திய செய்தி…’கன்னி என் மனதில் காதல் கவிதை சொல்லாமல் சொன்னானடி’ என்பது அடுத்த வரி. ‘கொண்டானடி’ என்ற நீட்டலில் இருக்கும் அழுத்தம் ஒன்றாகவும்,’சொன்னானடி’ என்ற சமாதானத்தில் நிலவும் அழுத்தம் வேறாகவும் ஒலிக்கிறது அவரது குரலில். கண்கள் இரண்டை என்கிற சொற்களில் ஒரு துள்ளல், வேலென எடுத்து சம தளத்தில், பின்னர் கையோடு கொண்டானடி என்கிற சொற்களுக்குத் தான் எத்தனை கூடுதல் உயிர்ப்பு, இரண்டாம் அடியில் வரும் காதல் கவிதை என்கிற சொற்களில், நாயகன் இருக்கும் தொலைதூரத்திற்கு நீட்டி ஒலிக்கிறது அந்தக் காதல் ! ‘சொல்லாமல் சொன்னானடி’ என்பது உளவியல் பாடுகளின் இசையியல் மொழிபெயர்ப்பு அன்றி வேறென்ன….

இரண்டாவது சரணம், கவிஞர் இன்னும் அசாத்திய மொழித்திறனை வெளிப்படுத்தும் இடம். ‘ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம் வாராமல் நின்றானடி, வாராமல் வந்தவன் பாவை உடலைச் சேராமல் சென்றானடி’ என்பது, மணமுடித்த பெண் இல்வாழ்க்கையைத் தொடங்க இயலாத பரிதவிப்பை என்னமாகப் பரிமாறுகிறது! பாவை உடலை என்கிற சொற்களையும், சேராமல் சென்றானடி என்பதையும் சுசீலா குரல் உள்ளே ஒலிக்க எண்ணற்ற அப்பாவிப் பெண்களின் பரிதவிப்பாகவே எதிரொலிக்கிறது.

உள்ளக் கொதிப்பை, உடலின் தவிப்பை, உணர்வுகளின் ஏமாற்றத்தை, உணர்ச்சிகளின் கொந்தளிப்பை பி சுசீலா சொல்லுக்குச் சொல், அப்படியே பற்ற வைப்பதைப் பாடல் முழுவதும் அனுபவிக்க முடியும். எம் எஸ் வி அவர்களது ரசிகை மீனாட்சி என்பவர் (அமெரிக்காவில் இருந்து), பாடலை எப்படியெல்லாம் ரசிக்கிறார் என்பதை இணையத்தில் வாசிக்க முடியும். http://msvtimes.com/forum/viewtopic.php?t=1541&sid=1036d5ad804a2d5dfd24a65fd9247dd0

கடைசி சரணத்தில், நாயகியின் உணர்வுகளின் எழுத்தை நாயகன் வாசிப்பில் பிபி ஸ்ரீனிவாஸ் குரலில், ‘நாளை வருவான் நாயகன் என்று நல்லோர்கள் சொன்னாரடி’ என்று எடுக்குமிடம், காயத்திற்கு மருந்து பூசுவதாக ஒலிக்கும். அபூர்வமான அந்தக் குரலின் தனித்துவத்தில் பாடல் இன்னும் ஒரு படி கூடுதலாக்கும் ரசனையை.

இந்தப் பாடலை யூ டியூபில் கேட்கையில், நேயர்கள் பலரது பரவசமிக்க கருத்துகளும் அங்கே வாசிக்க முடிந்தது. ஆனால், ஒரு ரசிகரது எழுத்துகள் உற்று வாசிக்க வைத்தது: ‘திருச்செந்தூர் ஶ்ரீ முருகன் என் மகன், மகள் திருமணங்கள் இரண்டும் நடக்க அருள வேண்டுகிறேன்’ என்று எழுதத் தொடங்கி, ‘தற்சமயம் என்னைக் குறை சொல்கிறார்கள்’ என்று முடித்திருக்கும் இடத்தில், பெற்றோர் என்ற முறையில் தனது பதைபதைப்பை ஓர் இசைப்பாடல் வழி பதிவு செய்திருப்பது, உள்ளத்தைத் திறந்து பேச வைக்கும் சக்தி இசைக்கு இருப்பதை உணர்த்தியது. அந்த அன்பரது மனக்குறை விரைவில் தீரட்டும்.

இந்தப் பாடலை யூ டியூபில் கேட்கையில், நேயர்கள் பலரது பரவசமிக்க கருத்துகளும் அங்கே வாசிக்க முடிந்தது. ஆனால், ஒரு ரசிகரது எழுத்துகள் உற்று வாசிக்க வைத்தது: ‘திருச்செந்தூர் ஶ்ரீ முருகன் என் மகன் மகள் திருமணம் நடக்க அருள வேண்டுகிறேன்’ என்று எழுதத் தொடங்கி, ‘தற்சமயம் என்னைக் குறை சொல்கிறார்கள்’ என்று முடித்திருக்கும் இடத்தில், பெற்றோர் என்ற முறையில் தனது பதைபதைப்பை ஓர் இசைப்பாடல் வழி பதிவு செய்திருப்பது, உள்ளத்தைத் திறந்து பேச வைக்கும் சக்தி இசைக்கு இருப்பதை உணர்த்தியது. அந்த அன்பரது மனக்குறை விரைவில் தீரட்டும்.

ரிங் டோன் ஓய்ந்ததே தவிர, இளநீர்க்காரர் அலைபேசி அழைப்பை ஏற்கவில்லை, இன்னும் வீதியில் அவர் குரல் கேட்கவில்லை. ஓரிரு நாளில் வரத்தான் செய்வார். ஆனாலுமென்ன, உள்ளத்தைக் குளிர்விக்கும் இசையை அலைபேசியில் சீவி, ஓர் உறிஞ்சி வைத்து அனுப்பி விட்டதற்காக நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

இந்தக் கட்டுரையின் முகப்பில் உள்ள ‘இசை’ என்ற தலைப்பிலான கவிதை, எஸ்தர் என்ற இலங்கைக் கவிஞர் தொகுப்பில் வாசித்தது. அண்மையில் சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு பெறும் நாளன்று மிகவும் தற்செயலாக ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கடக்கையில், ‘என் புத்தகம் ஒன்றை உங்களால் வாங்கிக் கொள்ள முடியுமா?’ என்ற குரல் கேட்கத் திரும்பினால், அறிமுகமற்ற நம்பிக்கை முகமாக இவர் தென்பட்டார். ‘இப்படி ஓர் எழுத்தாளர் கேட்கும்போது எப்படி வாங்கிக் கொள்ளாமல் செல்ல முடியும்?’ என்ற பதிலோடு, ‘எத்தனை புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள்?’ என்றும் கேட்க, இரண்டு கவிதை தொகுப்புகளை மிகுந்த மலர்ச்சியோடு எடுத்துக் கொடுத்தார்.

வீடு திரும்பி வாசிக்கத் தொடங்கிய போது, அதிலிருந்து இசை ஒலிக்கத் தொடங்கி இருந்தது, அந்த மண்ணின் குரல், மனிதர்களின் குரல், இதயங்களின் குரல் விதவிதமான உணர்வுகளின் இசையாகவே!

கவிதையில் சொற்கள் மட்டுமே இருப்பதாக யார் சொன்னது, இசையில் ஊறியும் இசையில் மிதந்தும் இசையோடு இழைந்தும் இசையாகவே ஒலிப்பதாகவும் இருக்கின்றன சொற்கள்! பேச்சில், முணுமுணுப்பில், ஆவேசத்தில், சிரிப்பில், அழுகையில், மௌனத்திலும் இசை, தேவைக்கேற்ற அளவில் கூடியும் குறைத்துமாக ஒலிக்கிறது. வாழ்க்கையே இசை.

(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

முந்தைய தொடர்களை வாசிக்க:

இசை வாழ்க்கை 62: உள்ளம் இசைத்தது மெல்ல – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 63: இசை கேளாது நாம் இன்று நாம் இல்லையே – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 64: சிந்தை மயக்கும் விந்தை இசை – எஸ். வி. வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 65: கொட்டட்டும் மேளம் தான் பாடல் தேரோட்டம் – எஸ். வி. வேணுகோபாலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. S UMAMAHESWARAN

    இசையைப் பற்றி எழுதும் போது உங்கள் மொழிநடையும் சொல்லாடலும் துள்ளி ஓடும் இனிய இசையாகவே ஆகிவிடுகின்றன. அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *