காஸெட் எல்லாம் உடனே வித்துருச்சுன்னு அந்தக் காலத்தில் கொண்டாடிய மாதிரி, கடந்த வாரக் கட்டுரை அத்தனை வேகமாக வாசகர்களைச் சென்றடைந்தது. பலரது பதில்களும் அதைவிட வேகமாக வந்தடைந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

“நாயரோட வாட்ச், அதை மறந்துட்டீங்களே ” என்பது எதிர் நீச்சல் படத்தில் நாகேஷ் பேசும் முக்கியமான வசனம்.  அது போல், காஸெட் நம்பர் போட்டீங்களே, C 45 காஸெட்டை விட்டுட்டீங்களே என்று கட்டுரை வாசித்தவுடன் அழைத்து விட்டார், நீண்ட நாள் நண்பரும், வங்கி தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஜி கோபால். நெல்லைச் சீமையில் வாழ்ந்த காலத்தில்,  நீண்ட டேப்புகளில்  திரைப்படப் பாடல்களும், அம்மாவுக்காகச் சுழன்ற பக்தி பாடல்களும், இதெல்லாம் சாத்தியப்படுத்திய பள்ளித் தோழன் சீனிவாசனும் கண்ணெதிரே வந்து போன உணர்வைக் கட்டுரை ஏற்படுத்தி விட்டது என்று பரவசம் பொங்கக் குறிப்பிட்டார். இசை கடத்திகள் நம் வாழ்க்கையில் எத்தனையோ பேர் இருந்திருக்கின்றனர்.

வங்கனூர் ராஜலட்சுமி டாக்கீஸ் பெயரைப் பார்த்ததும், அந்தப் பத்தி முழுவதையும் அப்படியே பிரதி எடுத்து வாழ்த்தி மெசேஜ் அனுப்பினார் நண்பர் ரமேஷ். அதே ஊரில் என்னுடன் அப்போது பணியாற்றிய எஸ் ஆர் சுப்பிரமணியன், பின்னர் அதே கிளையில் பணியில் சேர்ந்த பொற்செழியன், ஊர்க்காரர் பாண்டுரங்கன் எல்லோருக்கும் பரவசம்! அந்த ஊரை முதன்முறை கேள்விப்படுவோரும் தத்தமக்கு அடையாளப்படும் ஊரின் பெயராக அதை ரசித்திருக்கின்றனர் என்பது திரைப்படப் பாடல்கள் பரவி விரவிய நம் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.

Balaji Thiruvaiyaru - crayons fingertip of art

மதுரை மேல மாசி வீதி பற்றி திரு ராகவன் சார் ஏற்கெனவே சொன்னது மாதிரி, இப்போது சங்கரநாராயணன் சார் குறிப்பிட்டு, ராயல் ம்யூசிக் சென்டரில் பழைய பாடல்களை காஸெட்டில் பதிவு செய்து மகிழ்ந்த காலத்திற்குப் போய்விட்டார். அருவி மகள் அலை ஓசை (ஜேசுதாஸ்: ஜீவநாடி) என்ற அருமையான பாடல் எங்குமே  கிடைக்காமல், நெடுநாளைக்குப் பின் இணையதளத்தில் தான் கேட்டு மகிழ்ந்தேன் என்றார்.  அருமையான பாடல் அது.

ஈரோடு அக்கா வீட்டில் காஸெட் கேட்ட கதையில் சொல்லாத செய்தி ஒன்று உண்டு. பழைய காஸெட்டுகளைத் தேடி எடுத்து, அதன் கடைசி கடைசி நிமிடங்களில் பாட்டின் இறுதிப் பகுதியை அப்படியே அழித்து, அதன் மேல் என் சொந்தக்குரலில் பாட்டைப் பாடிப் பதிவு செய்து, யாருக்கும் தெரியாமல் திரும்பக் கேட்டு ரசித்த காலம்!  மெல்ல மெல்ல அந்த ரசிப்பின் துணிவில் இரண்டிரண்டு வரிகள் பாடியதில் எனக்கு நானே பாஸ் போட்டுக்கொண்டு அடுத்த வகுப்புக்கு முன்னேறி முழு சரணத்தைப் பாடி, திடீர் என்று வேறு யாரையாவது கேட்க வைத்து அடைந்த இன்பங்கள்… அழைப்பிதழ், முக்கிய விருந்தினர், விளம்பரம் எதுவும்  இல்லாமல் அவரவர் பாடல் பதிவை  அவரவரே  நிகழ்த்திக் கொண்ட காலங்கள்….இசையின் ஜனநாயகம் அது.

திரைப்படத்தில், வானொலியில் கேட்ட பாடலை, நேரே இசைக் கருவிகளோடு பாடுவதைக் கேட்க நேர்ந்தால், எத்தனை பேரின்பம் அது. 1970களின் தொடக்கத்தில், ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில், டி எம் சவுந்திரராஜன் இசைக் கச்சேரி என்று கேள்விப்பட்டு நேரில் சென்று பார்த்த நினைவு கொஞ்சம் கலங்கலாக இருக்கிறது. ஆனால், கேட்ட பாட்டெல்லாம் தெளிவாக நினைவில் இருக்கிறது. யாரோ அனுப்பிய துண்டுச் சீட்டு பார்த்து, அப்படியா, அந்தப் பாட்டு வேணுமா, பாடிடுவோம் என்று டி எம் எஸ் சிரித்துக் கொண்டே,  ‘ஒரு பக்கம் பாக்குறா, ஒரு கண்ணே சாய்க்கிறா…’ (மாட்டுக்கார வேலன்)  பாடியது உள்பட!  ஒரு காதலியைப் பார்த்த பரவசம், டி எம் எஸ் அவர்களை நேரில் பார்த்தது.

Oru Pakkam Pakkira HD Video Song │Maattukara Velan Movie│V. K. ...

அண்மையில் ஏ எல் ராகவன் அவர்கள் மறைவின் போது, எல் ஆர் ஈஸ்வரி, மலேசியா வாசுதேவன், கே வீரமணி போன்றவர்களைப் பாடவைத்து மேடை கச்சேரிகள் நடத்திய முதல் மனிதர் அவர் என்ற செய்தி வந்திருந்தது. பெரிய வீட்டுத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், கல்லூரி ஆண்டுவிழாக்கள், கோயில் திருவிழாக்கள் இங்கெல்லாம் பாட்டுக் கச்சேரிகள் மெல்ல மெல்ல பரவிக் கொண்டிருந்தன. மணிக்கணக்கில் மக்கள் திரண்டு நின்று ஆரவாரமாகக் கை தட்டி ரசித்த காலங்கள்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் ஆண்டு விழாவிற்கு  காமேஷ் ராஜாமணி இசைக்குழு வருகிறது, ஏ வி ரமணன் பாடுவார் என்ற செய்தியை என் அண்ணன் எஸ் வி ரங்கராஜன் சொன்னபோது, நான் அதே பச்சையப்பனில் தான் படித்துக் கொண்டிருந்தேன், கல்லூரியில் அல்ல, உயர்நிலைப் பள்ளியில்!

எப்படி எப்படியோ நண்பர்கள் சிலரைத் திரட்டிக் கொண்டு சைக்கிளில் டபுள்ஸ், டிரிபிள்ஸ் போட்டுக்கொண்டு ஊருக்கு வெளியே இருந்த அந்தக் கல்லூரி வளாகத்திற்கு அன்று மாலை போய்விட்டோம். நான் எதிர்பாராத ‘லவ் ஈஸ் ஃபைன் டார்லிங்’ (தவப்புதல்வன்) பாட்டை ரமணன் பாடினார். என்ன பாடல், என்ன காட்சி என்பதைவிட அப்படியான பாடலைக் கேட்டே கிறங்கிய காலம்! பாடலின் ஆங்கில வரிகளை ராண்டார் கை எழுத, தமிழ் வரிகளை கவிஞர் வாலி எழுதி இருந்தார். எல் ஆர் ஈஸ்வரியின் அட்டகாசப் பாடல் வரிசையில் ஒன்று, நான் ஒரு காதல் சன்யாசி.

Mehbooba Mehbooba With Lyrics | मेहबूबा मेहबूबा ...

ரமணன், இன்னோர் இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தார், ஆர் டி பர்மனின் அப்போது புகழ் பெற்ற மெஹபூபா, மெஹபூபா  (ஷோலே) பாடலையும் பாடத் தொடங்கவும் அப்படியே ஆனந்தக் கூத்தாடினோம் (தனது பாட்டை அவர் பாடுவது பற்றி, ஆர் டி பர்மன் ஏதோ கமெண்ட் அடித்ததாக பின்னர் வார இதழில் வாசித்த நினைவும் உண்டு. நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா…).

காஞ்சிபுரத்தின் பொற்கால வாழ்க்கையின் இசை வருடலில், காவல் துறைக்கும் பங்கு இருந்தது. இசையில், இலக்கியத்தில், வாழ்வியலில், இயற்கையின் படைப்புகளில் ருசி இருந்தால், நேரிய உள்ளங்கள் அமைந்தால் சாத்தான் குளங்கள் நடக்குமா என்ற வேதனை துடிக்கிறது. பல மாவட்டங்களிலிருந்து பயிற்சிக்காக வந்திருந்தார்கள் என்று சொன்னார்கள், காவல் துறை வேன்கள் குறுக்கும் நெடுக்குமாக அந்த வாரத்தில் காஞ்சிபுரம் முழுக்க ஓடிக்கொண்டிருந்தன. மாலை நேரங்களில் கோயில்கள், பொது இடங்கள் அருகே அரை மணி நேரம், ஒரு மணி நேரம் வண்டியை நிறுத்தித் தங்களது இசைக் கருவிகளை வெளியே எடுத்து வண்டிக்குள் அமர்ந்தவாறே அமர்க்களமாக பிரபல பாடல்களை  இசைத்துவிட்டுச் சென்றார்கள். வடாற்காடு மாவட்டம் எங்கே, தென்னார்க்காடு எங்கே, சிறப்பாக இருக்கிறது என்றார்களே என இங்குமங்கும் தேடித் திரிந்து கேட்ட காலங்கள்…. வடாற்காடு வேன் பெற்ற பாராட்டுக்கு முக்கிய காரணம், என்னடி ராக்கம்மா பாட்டை வாசித்துப் பட்டையைக் கிளப்பியது தான்.

முதுநிலை கல்விக்காக, கோயமுத்தூர் சென்ற போது, கால் பந்தாட்டத்தில் மேற்கு வங்கத்தில் ஈஸ்ட் பெங்கால், மோகன் பேகன் என்ற புகழ் பெற்ற போட்டி அணிகள் மாதிரி சேரன் (போக்குவரத்து), மல்லிசேரி (பீடி) அணிகளுக்கு (பின்னதற்கு மிக அதிகமாக!) ரசிகர்கள் ஆதரவு திரண்டிருந்தது. அப்போது, சங்கராபரணம் ஓர் ஆண்டுக்கு மேலாக ஒடத் தொடங்கிய காலம். ‘சங்கரா…..’, ‘ஓம்கார நாதானு’ பாடல்கள் பாடாவிட்டால், கச்சேரியே வீண் என்கிற அளவுக்கு அந்தப் பாடல்கள் முன்னணியில் இருந்தன. அருமையாகப் பாடிய அந்தந்த நிறுவனங்களின் ஊழியர்கள் இப்போது எங்கே இருக்கின்றனரோ ?

மறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் ...

எழுபதுகளின் போது, சென்னையில் பிரபல துணிக்கடை அதிபர் வீட்டுத் திருமண அழைப்பிதழை, நெருக்கமாக அறிந்த அந்தமான் வர்த்தகர் இல்லத்தில் பார்த்தோம். எம் எஸ் விஸ்வநாதன் இசை கச்சேரி என்று போட்டிருந்தது. அப்புறம் என்ன, நம்ம கடை, நம்மாளுங்க, நம்ம வீட்டு திருமணம் என்று நானும், என் அண்ணனும், வேறு சில நண்பர்களும் முடிவெடுத்து, அந்த மிகப்பெரிய மண்டபத்திற்குப் போய்விட்டோம்.

எம் எஸ் வி அவர்களை மிக அருகே பார்த்த, ‘நாளாம் நாளாம் திருநாளாம்’ அது! அந்தப் பாடலைத் தான் வரவேற்பு நிகழ்ச்சியில் மங்களகரமான இசையாக அவரது குழுவினர் இசைத்தனர். அடுத்த கூடுதல் உற்சாகம், மேடையில் எல் ஆர் ஈஸ்வரி, கோவை சவுந்திரராஜன், ‘பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு’ (அன்பே ஆருயிரே) பாடலை அமர்க்களமாக எடுத்து விட்டார்கள். பெங்களூரு என்பதை, மணப்பெண்ணுக்காக வேறு ஏதோ சொல்லி மாற்றிப் பாடினார் ஈஸ்வரி, புரிந்து கொண்ட பார்வையாளர்கள் மத்தியில் டபிள் அப்ளாஸ், ஆனால், கோவை சவுந்திரராஜன் மாற்றாமல் பெங்களூரு பொண்ணு என்றே பாட, அவரைப் பார்த்து அய்யோ என்று சைகை செய்தது உள்பட நினைவில் நிழலாடுகிறது. நகர மனமே இல்லாமல், இடையே போய், கன ஜோரான விருந்தையும் ருசித்து வந்தோம்.

எல் ஆர் ஈஸ்வரி என்றதும், கடந்த டிசம்பரில் அவரது எண்பதாம் பிறந்த நாள் சமயத்தில் எழுதிய கட்டுரை நினைவுக்கு வருகிறது. தமிழ் இந்து நாளிதழில் வெளியான அந்தக் கட்டுரையை வாசித்த அன்பர் ஒருவர் ஒற்றை வரி மெயில் போட்டிருந்தார்.  ஏற்கெனவே அறிமுகம் இல்லை. அவர் பெயரைக் கேட்டது கூட இல்லை. எழுதிய பாடல்கள் பற்றி அல்ல, கட்டுரையில் குறிப்பிடாது விட்ட பாடலுக்கு நியாயம் கேட்டிருந்த மின்னஞ்சல் அது. மன்னிக்கவும், விடுபட்டு விட்டது என்று எழுதிய பதிலின் நுனியில் உங்களோடு பேச விருப்பம் என்று கேட்டுப் பெற்ற அவரது அலைபேசி எண்ணில், இந்த ஐந்து மாதங்களில் வாட்ஸ் அப்பில் பரிமாறப்பட்ட பாடல்கள், சுவாரசியமான இசை துணுக்குகள், பகிர்ந்து கொண்ட அரிய செய்திகள் எத்தனை எத்தனை….

Megame Megame HD Song - YouTube

அது மட்டுமா, எல் ஆர் ஈஸ்வரி அவர்களது ‘அம்மம்மா கேளடி தோழி’ (கறுப்புப்பணம்) பாடலை மிக அருமையாக புல்லாங்குழலில் இசைத்து எனக்கு ஆடியோ பதிவை, ஓர் அன்புப் பரிசாக அனுப்பி வைத்தார். பின்னர் வாணி ஜெயராம் அவர்களது ‘மேகமே மேகமே’ (பாலைவனச் சோலை) பாடல்.  சங்கர் கணேஷ் இசை அமைப்பில் அமைந்த அற்புதமான பாடல்….மெய்மறக்க வைக்கும் ஆலாபனையோடு தொடங்கும் அந்தப் பாடல் வரிகளும் சிறப்பானவை (இந்தப் பாடல் குறித்த சுவாரசியமான செய்தி பின்னர்!). மாயா பஜார் படத்தின் ஆஹா இன்ப நிலாவினிலே பாடலை குழலில் இசைத்து அனுப்பியவர் அவரே.

இந்தத் தொடரின் நான்காவது கட்டுரையில், பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், விவரங்கள் பிறகு என்று குறிப்பிட்டிருந்தது அவரைத் தான். உதகையில்  மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம் கோவையில் வசித்து வரும் திரு லிங்கராசு அவர்கள், நீலகிரி மலையில் வசித்த காலத்தில் ஹில் ரிதம்ஸ் எனும் குழுவில் பல ஆண்டுகள் புல்லாங்குழல் வாசித்த இசைக் கலைஞர்.

அண்மையில் வாட்ஸ் அப்பில் கேட்டார், அந்த ஒற்றை வரி மெயிலால் தானே எல்லாம்…என்று. ஆம், முதல் அறிமுகம் வாய்த்து, ஐந்தாறு மாதங்களுக்குள் இத்தனை நெருக்கமான நட்பு சாத்தியமானதற்குக் காரணம், அவரது இந்த மின்னஞ்சல் வரி தான்: எலந்த பயத்தை (பணமா பாசமா) மறந்து விட்டீர்களே?

பேசப்பட்ட பாடல்களுக்காக வரும் கடிதங்கள் ஒரு புறம். விட்டுப்போன பாடலுக்கான கேள்வியிலிருந்து, அந்த ஒரு பாடலின் ஒற்றை வரியில் எத்தனை உள்ளன்பு மலரும் நட்பு பூத்து விட்டது. குழலினிது, யாழ் இனிது மட்டும் அல்ல, அவரது பேத்தி கவி நிலாவின் மழலைச் சொல்லும், அதில் கொஞ்சிய ஆயர் பாடி மாளிகையில் பாடலும்  கூட எத்தனை இனிது!

இசை பரவ விரியும் நட்பு வட்டத்தில் பரவும் அன்பும் இன்பமும் பெருகட்டும்……

(இசைத்தட்டு சுழலும் ….)

கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected] 

 

தொடர் 1 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – ஐ வாசிக்க…

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – ஐ வாசிக்க…

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/

தொடர் 5 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/

தொடர் 6 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-6-venugopalan-sv/

 

 

 

3 thoughts on “இசை வாழ்க்கை 7 – இசை கடத்திகள்  – எஸ் வி வேணுகோபாலன்”
  1. இசை வாழ்க்கை -7 கட்டுரையைப் படித்தும் பழைய நினைவுகளில் மூழ்கினேன். 1970களில் நான் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகச் சேர்ந்த நாட்கள். கல்லூரிக்குப் புறப்படும் போது என் மனைவி லன்ச் பாக்ஸ்வுடன் இரண்டு Sony அல்லது TDK- 90 காசட்டுகள் இரண்டும், நான்கு காகிதங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட பாடல்களையும் எழுதிக் கொடுப்பார். என்னுடைய அபார மறதியை நன்கறிந்தவர் என்பதால், “மறந்துடாதீங்க! ராயல் மியூசிக்கல் கடையில் இந்தப் பாடல்களை பதியச் சொல்லிக் கொடுத்துவிட்டு வாருங்கள். நாளைக்கு மறந்திடாமல் திரும்ப வாங்கிட்டு வாங்கள் என்று அன்பு கட்டளை இட்டு அனுப்பிய நாட்கள் நினைவுக்கு வந்தன. என் மனைவியிடம் இரு நூறு காசட்டுகளேனும் இருந்திருக்கும். அவரின் இசை விருப்பத்தை ஈடு செய்ய பிலிப்ஸ் கம்பெனியின் டைனமிக் பாஸ் என்ற காசட் பிளேயர் வாங்கிக் கொடுத்ததும் நினைவில் நிழலாடுகிறது. டிவி வந்ததும் இந்த காசட்டுகள் எல்லாம் மறைந்து போயினவே. என் மனைவி திரைப்படப் பாடல்களில் கொண்டிருந்த காதல் அளவிடமுடியாதது. கட்டுரையின் காத்திரமான பகுதி இதோ! “ இசையில், இலக்கியத்தில், வாழ்வியலில், இயற்கையின் படைப்புகளில் ருசி இருந்தால்,நேரிய உள்ளங்கள் இருந்தால் சாத்தான் குளங்கள் நடக்குமா? என்ற வேதனை துடிக்கிறது. எவ்வளவு அர்த்தமுள்ள, அற்புதமான கேள்வி? உங்களின் இசை வாழ்க்கை கட்டுரைத் தொடரட்டும் எஸ்.வி.வி.! இன்றைய ஊரடங்கு காலத்தில் இசையைவிட வேறென்ன உற்றதுணை இருக்க முடியும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *