சும்மாக் கிடந்த சொல்லை எடுத்து

சூட்சும மந்திரம் சொல்லிக் கொடுத்து

கம்மாக் கரையில் மண்ணைப் பிசைந்து

கவிகளில் அந்த வாசம் பிழிந்து

பாமர ஜாதியின் தமிழ் முகந்து

பட்டறிவை அதில் கொட்டிக் கலந்து

பாட்டு பொறந்திருக்கு – நாடே

கேட்டு மகிழ்ந்திருக்கு – நம்ம

பட்டுக் கோட்டையின் பாட்டு – அது

பதினெட்டு சுவைக் கூட்டு 

நவகவி  

 

சை கடத்திகளுக்கும், கடந்த வாரம் எழுதி இருந்த கட்டுரையைத் தாங்களும் வாசித்து  நிறைய நண்பர்களுக்கு உடனே கடத்தியவர்களுக்கும் அன்பின் நன்றி உரித்தாகிறது. பாரதி புத்தகாலய அன்பர்கள் முந்தைய கட்டுரைகளையும் வாசிக்க அடுத்தடுத்த கட்டுரைகளிலும் இணைப்பு தந்திருப்பதற்கு சிறப்பு நன்றி.

ஏழு கட்டுரைகளும் ஒரு சேர வாசித்து அழைத்து மிகவும் அன்பு பாராட்டிய தமிழ் ஆர்வலர், இந்தியன் வங்கியில் பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கவிஞர் தருமராஜ் அவர்கள்,  பாடல்களைக் கேட்பது வேறு, அந்தக் காலத்தின் நினைவுகளுக்கு ஒரு பின்னோக்கிய பயணம் சென்று திரும்புவது வேறு என்றார்.

‘அன்பில் மலர்ந்த நல் ரோஜா’ புகழ் தோழர் ஜோதிலிங்கம், சிறுவனாக இருந்த காலத்தில் திருவல்லிக்கேணியில் எம் ஜே ஆர் மற்றும் டி எம் சாமி சவுண்ட் சர்வீஸில் தான் போட்ட சர்வீஸ் பற்றி சுவாரசியமாகப் பகிர்ந்து கொண்டார்.

திருமண வீட்டார் வாய் வார்த்தையாகக் கேட்கும் நேயர் விருப்பத்தோடு தமது விருப்பமும் இணைந்த பாடல்களாக மண்டபத்தில் அமர்ந்து இசைத்தட்டுகளை சுழல விடுவாராம் இவர். சிவாஜி, ஜெமினி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் என்று ஓடிக்கொண்டிருக்கும் போது, எங்கிருந்தோ ஒருவர் அங்கே முளைத்து நின்று, இன்னாடா பாட்டு போட்ற, வாத்தியார் பாட்ட போட்றா என்று சத்தம் கொடுத்தாராம். இதெல்லாம் முடிஞ்சதும் அதை அப்புறம் போடுகிறேன் என்று இவர் சொன்னாலும், அவர் கேட்பதாயில்லை, உடனே எம் ஜி ஆர் பாட்டு ஒடத் தொடங்க, உள்ளிருந்து, ஏற்கெனவே விருப்பப் பட்டியல் கொடுத்த கோஷ்டி வெளியே வந்து, ஏண்டா, பாட்ட மாத்தறே, நான் சொன்னதையே போடு என்று மிரட்ட என் கதை எப்படி இருந்திருக்கும் தெரியுமா என்று கேட்காமல் கேட்டார்.

அப்படியே அந்தச் சண்டைக் காட்சியைக் கற்பனை செய்து கொண்டிருக்கையில், இந்த கொரோனா சீக்கிரம் முடியட்டும், ‘வாராதிருப்பாளோ வண்ண மலர்க் கன்னியவள்’ என்று நிம்மதியான வாழ்வுக்குப் பச்சை விளக்கு காட்டுவோம் என்று நம்பிக்கையோடு முடித்தார்.

Uthama Puthiran | Kaththiruppaan song - YouTube

இந்தப் பாட்டு, அந்தப் பாட்டு என்று வீடுகளில் கூட சண்டையும், போட்டியும், விளையாட்டு பந்தயமும் எல்லாம் நடந்த காலங்கள் உண்டு. உத்தம புத்திரன் (1958) படத்தில் ‘காத்திருப்பான் கமலக் கண்ணன்’ பாடலை மிகவும் ரசித்துக் கேட்கும் என் மாமாவிடம், வேண்டுமென்றே என் அண்ணன், ‘ஆஹா, சுசீலான்னா சுசீலா தான், என்ன குரல்’ என்றதுமே பொத்துக்கொண்டு கோபம் வந்துவிடும்   அவருக்கு. லட்ச ரூபாய் பந்தயம், அது பி லீலா பாடினதுடா, யார் கிட்ட பேசுற என்று சத்தம் கொடுக்க நாங்கள் எல்லாம் சூழ்ந்து நின்று சிரித்துத் தணிப்போம் அவரை. மறக்கக் கூடிய குரலா அது (மாமாவின் குரலும் சரி, லீலாவும் குரலும் சரி)….எனை ஆளும் மேரி மாதா, வாராயோ வெண்ணிலாவே (மிஸ்ஸியம்மா) என்று நீண்ட வெற்றிகரமான பாடல் வரிசை அல்லவா அது!

இசை கடத்திகள் என்று கடந்த கட்டுரையில் பார்த்தோம்.  வெப்பம், மின்சாரம் கடத்துவதில் எளிதில் கடத்தி, அரிதில் கடத்தி என்று வேறுபாடுகள் உண்டு. சில உலோகங்கள் எளிதில் கடத்தியதாக இருக்கும். இந்த உலகத்தில் வாழ்க்கையைக் கடத்துவதே அரிதில் கடத்த வேண்டியவர்களாக இருப்போரே அதிகம் உண்டு.

சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி  

சோம்பல் இல்லாம ஏர் நடத்தி 

கம்மா கரையை ஒசத்தி கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு

அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்

என்று நாடோடி மன்னன் பாட்டு எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நாயகனாக்கி, கவிஞர் நவகவி எப்படி பின்னி எடுத்திருக்கிறார் ! பாடலின் நுணுக்கங்களை இங்கே விவாதிக்கலாமே என்று கடந்த வாரம் அனுப்பிய செய்தியில் ஒலித்தது அவரது வேட்கை.

உழைக்கும் வர்க்கத்தின் இருட்டை ...
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஒரு திரைப்பாடல் வெற்றி பெறுவதற்கு என்ன இலக்கணம் என்பதை நவகவி எழுதிய இசைப் பாடலைப் படித்தாலே நிறைய செய்தி இருக்கிறது…’சிக்கல் சிடுக்குள்ள வார்த்தையும் இல்லை, திக்கித் திணறும் சொற்சிலம்பம் இல்லை, கம்பன் எழுதிய செந்தமிழ் இல்லை, காவிய ஓவியத் தமிழும் இல்லை, ஆனால் பண்டிதப் புலவன் எவருக்கும் இதைப் பாட்டில்லை என்கிற தைரியம் இல்லை, சித்தர்களின் தத்துப் பிள்ளை இவன் சேரித் தமிழில் பூத்த முல்லை, அவ்வைப் பாட்டியின் பேரன், இவன் அனுபவப் பள்ளி ஆசான்’  என்று போகிறது பட்டுக்கோட்டை பற்றிய அவரது இசைப்பாடல்.

கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் முதல் எம் எஸ் சுப்புலட்சுமி வரை, ‘பாருங்க நம்ம ஊரு பள்ளிக்கூடம்’ என்பதிலிருந்து ‘கட்டபொம்மனும் சேரனும் சோழனும் முட்டி மோதும் ரோடு’ வரை  எண்ணற்ற இசைப் பாடல்கள் தமிழ் சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருப்பவர் இவர். (நவகவி 1000 பாடல்கள்: பாரதி புத்தகாலயம்). கரிசல் குயில் கிருஷ்ணசாமி போன்ற அற்புத பாடகர்கள் குரலில் தமிழகத்தின் பல மேடைகளிலும் ஒலித்துக் கொண்டே இருப்பவை அவரது பாடல்கள்.

ஒரு பாடலின் எளிமை, அதன் கனமான உள்ளடக்கத்தை மிக சாதாரண மனிதர்க்கும் கொண்டு சேர்க்கும் அதன் சொற்கட்டு, அதைக் காகிதம் போல் சுற்றி எளிமையாகவோ, சில நேரம்  மேலே பளபளக்கும் ஜிகினா தாளும் கூடுதலாகச் சுற்றி இன்னும் அருமையாகவோ இசையின் உயிரோடு  எடுத்துக் கொண்டு வந்து பரிசாகக் கொடுக்கும்போது எந்த இசைப்பாடலும் ரசிகரைக் கவ்விப் பிடித்து விடுகிறது.

முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan ...

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற பழமொழியை இன்னும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டுபோய், காடு விளஞ்சென்ன மச்சான் என்று கேள்வி எழுப்பும் அவளுக்கு, காலம் இருக்குது பின்னே என்கிற அவன் எடுக்கும் பதிலில் இருந்து, சமூகத்தின் ஏற்றத்தாழ்வு, அதற்கான காரணம், தீர்வு இத்தனையையும் எத்தனை அசாத்திய எளிமையில் புட்டுப் புட்டு வைக்கிறது டி எம் எஸ் – பானுமதி குரல்களில் தெறிக்கும் பட்டுக்கோட்டையின்  பாடல்!  பானுமதியின் குரல் மட்டுமல்ல, படத்தில் அவர் வெளிப்படுத்தும் பாவங்களும் அத்தனை அற்புதமாக இருக்கும்.

சில வாரங்களுக்குமுன் அற்புத பாடகர் ஏ எல் ராகவன் அவர்கள் மறைவின்போது எழுதிய அஞ்சலி கட்டுரையை வாசித்த குடும்ப மருத்துவர் – தேர்ச்சியான இலக்கிய வாசகர் டாக்டர் பி வி வெங்கட்ராமன்,  ராகவன் பாடிய முக்கியமான பாடலை விட்டுவிட்டீர்களே என்று கேட்டார். கே சி எஸ் அருணாச்சலம் அவர்களது ‘சின்னச் சின்ன மூக்குத்தியாம், செவப்புக் கல்லு மூக்குத்தியாம்….’ என்ற டி எம் எஸ் பாடலைக் கேட்டிருந்தபோதும், அதே படத்தில் (பாதை தெரியுது பார்) இடம் பெற்றிருக்கும் ‘ராசா மக போல் இருந்தே’ என்ற ராகவன் பாடலை, மருத்துவர் அலைபேசியில் தலையில் குட்டியபிறகே தேடி எடுத்துக் கேட்டு அசந்து போனேன்.

‘இட்டிலியே ஏன் இளைத்துப் போனாய்’ என்பதுதான் அந்தப் பாடலில் திரும்பத் திரும்ப ஒலிக்கும் கேள்வி. கல்லு போல் மாறும் இட்லி, அளவு குறைந்து கொண்டே வரும் இட்லி பற்றிய எத்தனை அற்புதமான பாடல் அது. மொளகாப் பொடி பூசி, எண்ணெயிலே தலை முழுகி  அழகா அரிதாரம் பண்ணினேன் காலம் அப்படியே இருக்குமுன்னு எண்ணினேன் என்று ஓட்டல் இட்லியின் உண்மையான ரசிகன், அந்த இட்லி தேய்ந்து கொண்டே போவது பற்றிய கவலையை நகைச்சுவையாகப் பாடும் அருமையான பாடல் அது. ஓர் ஏழைத் தொழிலாளியின் பாடு அது. பாடலின் நுணுக்கம் எங்கே இருக்கிறது எனில், இட்டிலியே ஏன் இளைத்துப் போனாய் என்ற கேள்விக்கு, கவிஞர் கே சி எஸ், நீ எந்தப் பயல் மீது காதல் ஆனாய் என்று முடிக்கும் இடத்தில் இருக்கிறது, பாடல் முழுக்கவும் பரவுகிறது.

Unmai orunal veliyagum-Movie:Pathai theriyuthu Paar (1960) Singer ...

காஞ்சிபுரத்தில் (பச்சையப்பன் பள்ளியா, கல்லூரியா, நானும் பச்சையப்பன் கல்லூரியில் தான் படித்தேன் என்று கட்டுரையில் லயித்து எழுதி இருக்கும் ஓய்வு பெற்ற பாரத ஸ்டேட் வங்கி தோழர் என் எல் மாதவன் அவர்களுக்கு: அறிஞர் அண்ணா அவர்கள் படித்த பச்சையப்பன் நடுநிலைப் பள்ளி, பின்னர் உயர்நிலைப் பள்ளியில், கல்லூரிப் படிப்பு, மீனம்பாக்கம் ஏ எம் ஜெயின் கல்லூரி !)  பள்ளிப் படிப்பு படிக்கும் காலத்தில், தெற்கு மாட வீதியில் இருக்கும் கிருஷ்ணா பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றிற்கு ஆட்டம் பாட்டம் பார்க்க நாங்களும் போயிருந்தோம். 1972-75 கால கட்டம் அது. ஓட்டல் சர்வர் ஒருவர் பாடும் பாடலாக அங்கே ஓர் இளம் மாணவர் அற்புதமாகப் பாடிய பாடலை  அந்தப் பள்ளியின் ஆசிரியை ஒருவர்தான் எழுதி இருக்க வேண்டும்.   அப்படியான உயிர்ப்பான பாடலை மீண்டும் எப்போது கேட்க முடியும் என்று அடிக்கடி தோன்றும்.

‘இட்டிலி தோசை வடை குருமா, சட்டினி பஜ்ஜி ரவை உப்புமா, லட்டல்வா ஜாங்கிரி ஜிலேபி, இந்த ஓட்டலில் இருந்தும் நான் பட்டினி’ என்பது அதன் பல்லவி (சில மாதங்களுக்குமுன் ஓட்டல் தொழிலாளி ஒருவர் பசி தாங்க மாட்டாமல் டேபிளில் வைக்க எடுத்துச் சென்ற உணவில் கொஞ்சம் எடுத்து உண்டார், ஆனால் முதலாளி அவரை மன்னித்து, இனி யாரும் பசியோடு பரிமாறப் போகக் கூடாது என்று உத்தரவு போட்டார் என்று வாசித்த செய்தி நினைவுக்கு வருகிறது). அந்த மாணவர் குரலில், ‘பொரித்தது அப்பம் பூரி போலே, பட்டா மிராசு தொப்பைகளே, இருக்க இடம் இல்லா ஏழைகளும் இருக்கிறார் அப்பளம் ஓமப்பொடியாய்’ என்ற வரிகள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என்ன சாட்டையடி பாடல் அது.

ஏ எல் ராகவன் அஞ்சலி கட்டுரை வாசித்ததும் வந்த இன்னுமோர் அழைப்பும் முக்கியமானது. ராகவன், ஜானகி பாடி இருக்கும் திங்களுக்கு என்ன இன்று திருமணமோ என்ற அருமையான பாடலைக் கேட்டிருக்கிறீர்களா என்று கேட்டார் ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி திருமலை அவர்கள். ஆமாம், அருமையான பாடல் ஆயிற்றே என்றதும், அது எந்தப் படத்திலும் இடம் பெறவில்லை, அந்த சுவாரசியமான தகவல் தெரியுமா என்று அடுத்த கேள்வி வைத்தார். அதை அடுத்த வாரம் தான் பார்க்கப் போகிறோம்.

Thingalukku Enna Indru Thirumanamo Song Lyrics

அதற்குமுன், வேறோர் அன்பான செய்தி உண்டு. அருவி மகள் அலை ஓசை பாடலைக் கடந்த வாரம் கட்டுரையில் வாசித்ததும், லிங்கராசு அவர்கள் அதைத் தமது குழலில் வாசித்து, அப்படியே  ‘இரவும் நிலவும் வளரட்டுமே‘ (கர்ணன்) பாடல் பல்லவிக்குள் பயணம் செய்து ஆடியோ அனுப்பி வைத்தார். அதை உடனே சங்கரநாராயணன் சார் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அனுப்பியதும் அவருக்கு ஏற்பட்ட சிலிர்ப்பை விவரிக்க முடியாது. ‘உதகை மகன் குழலோசை கோவையில் இருந்து இதழோசை’ என்று அதே மெட்டில் எனது கரகர குரலில் பதில் ஆடியோ அனுப்பி வைத்தேன் எளிதில் கடத்தி லிங்கராசு அவர்களுக்கு!

தரவும் பெறவும் உதவட்டுமே….பாடல்களை இப்படி பெற்றுக் கொள்வதும், உடனே பகிர்ந்து கொள்வதும் தொடரட்டுமே …..

 

(இசைத்தட்டு சுழலும் ….)

கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691

மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected] 

 

தொடர் 1 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – ஐ வாசிக்க…

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – ஐ வாசிக்க…

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/

தொடர் 5 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/

தொடர் 6 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-6-venugopalan-sv/

தொடர் 7 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-7-venugopalan-sv/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *