எழுதவில்லையே தவிர இரண்டு வாரங்களுக்கு மேலாக இரண்டு பழைய பாடல்கள் உள்ளே ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன. இரண்டும் பெண் குரல். இரண்டுமே மெல்லிசை மன்னர் வழங்கியவை. இரண்டுமே துயர கீதங்கள்.
இரட்டையர் பிரிந்து தனியே எம் எஸ் வி இசையமைக்கத் தொடங்கிய காலத்தில் வெளியான கலங்கரை விளக்கத்தின் பாடல்கள் யாவுமே சிறப்பானவை. இப்போது பேசும் இந்தப் பாடல் கொஞ்சம் தனித்துவச் சுவை கொண்டது. பாடலின் தொடக்க ஹம்மிங் கேட்கும்போதே கதாபாத்திரத்தின் பதைபதைப்பு தொற்றிக் கொள்கிறது. பாடல் நெடுக அந்தத் துயரச் சாலையில் பாடலைக் கேட்பவரும் உடன் நடந்து சென்றே தீர வேண்டி அமைக்கப்பட்டிருக்கும் இசை அற்புதமானது.
இல்லாத ஒரு பழங்கதையை வரித்துக் கொண்டுவிடும் நாயகியின் பரிதாப கீதம் ஒன்று. தொலைந்து போன கனவோடு தன்னையும் தொலைத்துக் கொண்டிருக்கும் அபலை ஒருத்தியின் உள்ளக் குமுறல் மற்றது. முன்னது பஞ்சு அருணாசலம் எழுதியது. பின்னது அவரது உற்ற அன்பர் கண்ணதாசன் படைத்தது.
கலங்கரை விளக்கம் படத்தின் பொன்னெழில் பூத்தது என்ற அருமையான பாடலும் பஞ்சு அருணாசலம் எழுதியது தான். அதன் தொடக்க ஹம்மிங் போலவே இழைக்கும் ஹம்மிங் சற்று மாறி எடுக்கிறார் நாம் பேசும் இந்தப் பாடலில் பி சுசீலா. ஒரு பாடலில் இருந்து மற்றொரு பாடல், ஒரு சொல்லில் இருந்து அடுத்தற்கான இசை, ஒரு சொற்பதத்தில் இருந்து அடுத்த சொற்பதத்திற்கானது டியூன் எப்படி உள் தூண்டுதலாக அமையும் என்பதை பல ஆண்டுகள் உடனிருந்து அறிந்த அனந்து, மெல்லிசை மன்னரின் இந்தப் பாடலைக் கொண்டாடிப் பேசுவதையும் இணையத்தில் தற்செயலாகக் கண்டெடுத்துக் கேட்டேன். மனிதர் அப்படி லயித்து ரசித்துப் பருகுகிறார் எம் எஸ் வி அவர்களது மெல்லிசை இன்பத் தேனை.
‘என்னை மறந்ததேன்’ என்பது தான் இசைப்பாடலின் ஒற்றைச் செய்தி. அந்த சொற்களில் தொடங்கி அலைபாய்ந்து கொதித்துத் தணிந்து விம்மலாக அங்கேயே வந்து நிறைவு பெறுகிறது பாடல். ஆனால், அந்த வழி நடை சாதாரணமானது அன்று. காலங்களில் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் செல்லும் ஒரு மனத்தின் வலியும் வேதனையும் பரிதவிப்பும் சேர்ந்த நடை.
மறைந்த சத்யன் அவர்களது ஷெனாய் வாசிப்புகள் மட்டுமே தொகுத்துப் பகிர்ந்த ஒரு பதிவில் ஒன்றிரண்டு வாசிப்புகள் இன்ன பாடல் என்று உடனே கண்டு பிடிக்க இயலாமல் தவித்ததில், இந்தப் பாடலில் ஒன்று பிடிபட்டது. என்னமாக வாசித்திருக்கிறார் சத்யன்! வயலின்களும், ஷெனாய் கருவியுமாக சோகத்தின் பிழிவை வழங்க வைத்திருக்கிறார் எம் எஸ் வி.
‘என்னை மறந்ததேன்’ என்ற சொற்களை அவள் முகவரி கொடுத்து அனுப்பி வைப்பது தென்றல் காற்றிடம். ‘தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா’ என்பது பல்லவியின் அடுத்த பகுதி. அத்தனை சந்தச் சுவையில் எழுதப்பட்டிருக்கும் சொற்கள். எளிமையானவையும் கூட. அனந்து சொல்வது போல், எப்போதுமே எம் எஸ் வி இசையில் பல்லவியின் வரி இரண்டாம் முறை பாடும்போது வயலின்களை மென்மையாக உடன் சேர்த்து இழைத்துக் கேட்க வைப்பார். அதன் போக்கு அடுத்த வரி மேல் நோக்கிப் போகிறதா, கீழ் நோக்கி இறங்குகிறதா என்கிற தன்மைக்கேற்ப பக்குவமாக அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடலில் அது பளிச் என்று தெரியும்.
அடுத்த வரி, ‘காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும்’ என்பது ‘கண்ணோடு மலரும் அன்பு கவியாக மலராதோ’ என்பதில் மாற்றத்தை உணர்த்தி வெளிப்படுகிறது. அதில் ‘காற்றோடு’ முதல் முறை எப்படி வருகிறது, இரண்டாம் முறை எத்தனை சங்கதிகளோடு அதே சொல்லை இசைத்துத் தத்தளிப்பு உணர்வை வெளிப்படுத்துகிறார் சுசீலா என்பதை அனந்து அருமையாக விளக்கி இருப்பார். அதிலும் மன்னவா என்ற தனிச் சொல், அந்த அழைப்பு, ஒரு தீனக்குரல் எப்படி காற்றில் சிதறி ஒலிக்கிறது! கவியாக மலராதோ என்று விரித்தெடுப்பது சுசீலாவின் முத்திரை இடம். அதைச் சரணத்தின் முடிவில் வரும் சொற்களிலும் அதேபோன்ற முத்திரையோடு அபாரமாகக் கொண்டு வந்திருப்பார் அவர்.
பல்லவியின் முடிவில் சரணத்தை நோக்கிய முள் பாதை நடையை ஷெனாய் கவனித்துக் கொள்கிறது. வயலின் சரணத்தை ஒரு சிறிய இழைப்பில் எடுத்துக் கொடுக்கிறது. அங்கே தாளக்கட்டின் ஒலியும் உளவியல் பதட்டத்தை பிரதிபலிக்கும். ‘கலையாத காதல் நிலையாகவென்று அழியாத சிலைகள் செய்தாயோ’ என்ற வரியின் ஒவ்வொரு பதத்திலும் சிற்பம் செதுக்கும் ஒலியதிர்வுகள் கேட்பது போலவே தோன்றும். ‘ஒன்றும் அறியாத பெண்ணின் மனவாசல் தொட்டுத் திறவாமல் எங்கே சென்றாயோ’ என்ற வரியில் தாபம் மேலெழுந்து படர்கிறது. அதே மெட்டு மேலும் தொடர, ‘நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில் நீயாடும் நாளும் வருமோ…’ என்ற அடியை அத்தனை வலியோடு இசைக்கிறார் சுசீலா. ‘இந்த நிலமாளும் மன்னன் நீயான போதும் நானாள சொந்தம் இல்லையோ’ என்பது வலியை மேலும் கூட்டுகிறது.
அங்கிருந்து பல்லவியின் காற்றோடு வளரும் சொந்தம் மெட்டை எடுத்துக் கொள்கிறார் எம் எஸ் வி. ‘வந்தோடும் அலைகள் என்றும் என் காதல் பாடும்’ என்று கொண்டுபோய், மன்னவா என்று பல்லவியில் எடுத்த பதத்திற்கு ஈடாக, ‘இல்லையோ’ என்ற சொல்லை ஏற்றத்தோடு ஒலித்து, ‘எந்நாளும் எனது நெஞ்சம் உனைத் தேடி வாராதோ’ என்று நிறைவு செய்ய வைக்கிறார். கவியாக மலராதோ என்பதில் கிடைத்த அதே வலுவான உணர்ச்சிகளை, உனைத்தேடி வாராதோ’ என்பதில் பிழிந்தெடுக்கிறார் சுசீலா.
பல்லவிக்கு மீளும் சுசீலாவின் குரல், நிறைவாக, ‘என்னை மறந்ததேன்’ என்று தாளக்கட்டு இன்றி துன்பியல் கீதமாக நெஞ்சில் உறைகிறது. மாமல்லபுரத்து சிற்பங்களின் பின்னணியில் அபிநய சரஸ்வதி சரோஜா தேவியின் நடிப்பில் படத்தில் இடம் பெறுகிறது பாடல்.
‘அவளுக்கென்று ஒரு மனம்’ திரைக்கதை, அந்நாட்களில் வித்தியாசமான கதை. நிறைவேறாத ஒரு தலைக்காதல் வேதனையோடு, தான் நேசித்தவனின் மனைவியைப் பாதுகாக்கத் தன்னையே ஒரு கயவனின் தொல்லைகளுக்கு ஒப்புக்கொடுத்துத் தனது வாழ்க்கையை கருக்கிக் கொள்ளும் பெண்ணின் கதை அது. மது அருந்திப் பாடும் பெண்ணின் பாடல் (மனோரமாவின் உன் ராதையைப் பார் போதையிலே கண்ணா தவிர) அதிகம் கேள்விப்பட்டதில்லை தமிழ்த் திரையில். இது நெறியற்ற ஒருவனின் சாட்டையில் சுழலும் பம்பரத்தின் பாடல்.
எல் ஆர் ஈஸ்வரியைத் தவிர வேறு யார் வழங்கி இருக்கக் கூடும் மனப்பாரத்தைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திண்டாடும் பெண் மனத்தின் புலம்பலை.
‘எல்லோரும் பார்க்க இந்த உல்லாச வாழ்க்கை’ என்கிற பல்லவியை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக மெருகேற்றிக் கொண்டே போகிறார் ஈஸ்வரி. ‘சரிதான் போ’ என்ற அலட்சியம், ‘எல்லாம் முடிய இருக்கிறது…இன்னும் என்ன’ என்கிற விரக்தியின் வெளிப்பாடு. ‘இனி ஏன் நாணம்’ என்பது அதன் அடியொற்று. ‘கண்ணீரில் என்னை ஆடச் சொல்லுங்கள் எல்லோரின் முன்னே’ என்பது பார்ப்பவர்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் வெறுப்பின் விளாசல். சரி தான் போ என்பதில் விழும் சங்கதிகள் அந்தப் பெண் சொல்லத் துடிக்கும் சங்கதிகளாக மெட்டு அமைத்திருப்பார் எம் எஸ் வி. ‘இனி ஏன் நாணம்’ என்பது ஒரு குவளையைச் சுழற்றும் கிறக்கத்தின் அரைவட்டமாக இருப்பதை கவனிக்க முடியும். என்ன மேதைமை!
பாடலின் தொடக்கத்தில் இருந்து டிரம்பெட் ஒரு பக்கமும் மற்ற இசைக்கருவிகள் இன்னும் கூட்டாகவும் பாடலின் கிண்ணத்தில் போதைக்கான திரவத்தை நிரப்பிக் கொண்டே இருக்கின்றன. நாயகியின் தொண்டைக்குள்ளே சொட்டுச் சொட்டாய் இறங்கிக் கொண்டிருப்பது மது என்பதற்கேற்ப பாடலினூடே போதை கூடிக் கொண்டே போவதை மட்டுமின்றி அவளைப் பந்தாடும் கொடியவனின் நஞ்சு சொட்டுச் சொட்டாய் அவளது வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பதையும் ஒரு சேர, கேட்பவர் உணர வைக்கும் குரல் அது.
‘பூச்சூடும் கூந்தல் கண்டேன், பூமாலை மணமும் கண்டேன்’ என்ற வரிகளில் ஒலிக்கும் சுயகழிவிரக்கம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. ‘கல்யாணப் பெண்ணைப் போலே’ என்பதில் அந்தப் போலே எனும் சொல்லில் எத்தனை சோகங்களை உருட்டுகிறார் ஈஸ்வரி, ‘கனவொன்று நானும் கண்டேன்’ என்பதில் அந்த ‘நானும்’ என்பதை இழிவு சிறப்பு உம்மை என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது!
அங்கிருந்து பாடல் வேறு ஒரு தளத்தில் பரவுகிறது, ‘கை தொட்ட துணையைக் கண்டு கண்ணா நீ யாரோ என்றேன், விதியென்னும் தேவன் விளையாட வந்தேன் என்றான்’…இதை கண்ணதாசன் தவிர வேறு யார் எழுதக் கூடும்! இந்தச் சொற்கள் ஒவ்வொன்றிலும் அத்தனை அழுத்தமும், உளைச்சலும் கொணர்ந்திருப்பார் எல் ஆர் ஈஸ்வரி.
‘விதியோடு செல்லும் வெள்ளம்’ என்ற இரண்டாம் சரணத்தில் இன்னும் மிஞ்சிய போதையை வெளிப்படுத்தி இருப்பார் ஈஸ்வரி. ‘விளையாட்டுப் பொம்மை உள்ளம்’ என்கிற வரியை ஆயிரம் முறை கேட்க வேண்டும், எத்தனை பரிதவிப்பு அதில்! ‘நதி போலப் போகும் வேகம் நடைபோடும் சோக கீதம்’ என்கிற வரி, நீர் வழிப் படூஉம் புணை போல் ஆருயிர்’ என்கிற (யாதும் ஊரே யாவரும் கேளிர்) கணியன் பூங்குன்றன் அவர்களது இறவாப் புகழ் பெற்ற கவிதையை நினைவூட்டுகிறது. ‘நானாடும் ஆட்டம் இல்லை, நான் பாடும் நிலையில் இல்லை’ என்பது அடுத்த முக்கியமான அறிவிப்பு. ‘ஆனாலும் இங்கே ஆடாமல் ஆடுகின்றேன்; என்பது முத்தாய்ப்பு.
பாடலின் மொத்த அமைப்புமே கேட்பவரையும் சேர்த்துச் சுழற்றும் தாளக்கட்டில் வட்டமடித்து வட்டமடித்துப் பாடும் வண்ணம் இசையமைக்கப்பட்டு இருப்பது. மிக மிக தனித்துவமான குரலில் அபாரமாக இசைத்திருப்பார் பாடல் முழுவதையும் எல் ஆர் ஈஸ்வரி.
துயரமான பாடல்கள் வெறும் துன்பியல் உணர்வுகளை மட்டும் கிளர்த்திவிட்டு ஓய்ந்துவிடுவதில்லை. பரஸ்பரம் நேயத்தைத் தூண்டவும் செய்கின்றன. அடுத்தவருக்கான ஒரு சொட்டுக் கண்ணீர், அவரவர் மனிதத்தின் வேருக்கு வார்க்கும் நீர். அது தனது துன்பத்திலும் மனத்தை இலேசாக ஆக்கிக் கொள்ளும் பக்குவத்திற்குமான பயிற்சியாகிறது. மாற்றத்தை சிந்திக்கவும், மலர்ச்சியான வாழ்க்கையை நோக்கி உந்தித் தள்ளவும் வலுவுள்ளது தான் இசை.
(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]
இசை வாழ்க்கையில் ஒவ்வொரு பாடலையும் அக்கு வேறு ஆணி வேராக பிரித்து மேய்வது என்று பாடலை சிறப்பாக சொல்லியது லயம். மகிழ்ச்சி🎄