கொரோனா காலத்தில் அயல் மொழி படங்கள் சிலவும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ‘தம் லகா கே ஹைஷா’ என்ற இந்தி திரைப்படம் (2005) பார்த்தோம். கதையை இங்கே பேசப் போவதில்லை, நல்ல படம். காஸெட்டில் பாடல் பதிவு செய்து தரும் கடை நடத்தி வருகிற கதாநாயகன். குடும்பத்தின் நிர்பந்தத்தில் தனக்கு விருப்பம் இல்லாத பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். அவள் தனக்குப் பிடித்த பாடல்களைக் கடையில் இருந்து வரும்போது பதிவு செய்து வருமாறு கேட்டுக் கொள்கிறாள். அந்தப் பட்டியலை எந்த ஆர்வமும் இன்றி எங்கோ வைக்கிறான் அவன். ஆனால், நிகழ்ச்சிப் போக்குகளின் மாற்றத்தில், ஒரு கட்டத்தில், அந்தச் சீட்டைத் தேடி எடுத்து, அவள் கேட்ட பாடல்களை எல்லாம் பதிவு செய்து கொண்டுபோய்க் கொடுக்கிறான்.

இசையில் விருப்பம் உள்ள வாழ்க்கை இணையின் இப்படியான ஆசையை நிறைவேற்றுவதன் இன்பத்திற்கு எல்லை உண்டோ…. இந்தத் தொடரின் ஏழாவது கட்டுரை வாசித்த பேராசிரியர் விஜயகுமார், 1970களில் ஆங்கில ஆசிரியராகச் சேர்ந்த நாட்களில், கல்லூரிக்குப் புறப்படும் போது தனது மனைவி லஞ்ச் பாக்ஸ் கொடுக்கும்போது, இரண்டு சோனி அல்லது TDK- 90 காசட்டுகள் இரண்டும், நான்கு காகிதங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட பாடல்களும் எழுதி, மறக்காமல் ராயல் மியூஸிகல் கடையில் பதியச் சொல்லிக் கொடுத்து, அடுத்த நாள் வாங்கி வந்துவிடுமாறு சொல்லி அனுப்புவார் என்று உற்சாகமாக 50 ஆண்டுகளுக்கு முந்தைய செய்தியை நினைவு கூர்ந்தார். இரு நூறு காஸெட் வைத்திருந்தாராம் அவர் மனைவி, பிலிப்ஸ் கம்பெனியின் டைனமிக் பாஸ் என்ற காஸெட் பிளேயர் வாங்கி பரிசளித்து மகிழ்ந்த கதையெல்லாம் இப்போது பேராசிரியருக்கு நினைவிற்கு வந்து விட்டது. இன்றைய ஊரடங்கு காலத்தில் இசையைவிட வேறென்ன உற்றதுணை இருக்க முடியும் என்று முடிகிறது அவரது செய்தி.

கடந்த வாரம் பட்டுக்கோட்டை அவர்களது பாடல் குறித்த விவாதம் பலரையும் ஈர்த்திருக்கிறது. இருபத்திரெண்டரை வயதில் திரைப்பாடல் எழுத வந்து, அடுத்த ஆறரை ஆண்டுகளில் அற்புத வரலாறு படைத்து, 29வது வயதில் மரித்துப் போன மக்கள் கவி அவர். பாடல் எழுத வருமுன் இட்லி, முறுக்கு விற்பதில் இருந்து மாடு பிடித்துக் கொடுப்பது, உப்பளத்தில் வேலை, தேங்காய் விற்பனை, மாம்பழ விற்பனை என்று பதினெட்டு விதமான தொழிலில் ஈடுபட்டிருக்கிறார் அத்தனை இளவயதில். ‘சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு, தீ ஏதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு’ என்ற வரிகள் இல்லாமல் எந்த தீபாவளியும் நம்மைக் கடப்பதில்லை, கல்யாணப் பரிசு படத்தின் அத்தனை பாடல்களும் அவர் எழுதியவை தான். எத்தனை விதமான ரசங்கள் அவற்றில்…..அவ்வை சண்முகி படத்தில் நடிக்கும்போதும் ஜெமினி கணேசன் சோகத்தை வெளிப்படுத்த, கறுப்பு வெள்ளையில் ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன் ‘ தானே நின்று பேசியது!

அந்தப் படத்திற்கு இசை அமைத்து அருமையான பாடல்களைத் தாமும் பாடிய ஏ எம் ராஜா அவர்களது பிறந்த நாளும் அண்மையில் கடந்து சென்றது. குழுவினரோடு பயணம் செல்கையில், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தண்ணீர் பிடித்து வரச் சென்ற நண்பரைத் தேடியோ அல்லது தானே தண்ணீர் எடுத்து வரவோ சென்று திரும்புகையில் ரயில் புறப்பட்டு விடவே வேகமாக ஓடிச் சென்று ஏறும்போது தவறி தண்டவாளத்தில் விழுந்து மரித்துப் போனார் ராஜா. இப்போதும் ரயில் பயணத்தில் தண்ணீர் பாட்டில்களோடு யாராவது வேகமாக வந்து ஏறும்போது அவர் நினைவு வந்துவிடுகிறது. நெஞ்சு விம்மி அடங்குகிறது.

வழக்கம் போலவே, கடந்த வாரம், அன்பில் மலர்ந்த நல் ரோஜாவை குழலில் வாசித்து லிங்கராசு அனுப்பி இருந்தார். அந்த ஒரு தாய் மட்டுமல்ல எத்தனையோ தாய்மார்களது தாலாட்டில் மலர்ந்த ரோஜா அது என்று சொல்லும் மூத்த பத்திரிகையாளரும், நேரில் அதிகம் சந்திக்காமலே நெருக்கமான நட்புறவு கொண்டிருப்பவருமான வ.ரங்காசாரி அவர்கள், “எங்கள் தாயாரும் குழந்தைகளைத் தாலாட்ட என்றே அன்பில் மலர்ந்த நல் ரோஜா தொடங்கி, பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு (ராமு), பூவாகிக் காயாகிக் கனிந்த மரம் ஒன்று (அன்னை), மண்ணுக்கு மரம் பாரமா (தை பிறந்தால் வழி பிறக்கும்) என்று பத்து பாடல்கள் பாடுவார் சார், அண்மையில் ஒரு தொலைகாட்சி சானலில் அதே வரிசையில் தாலாட்டுப் பாடல்கள் என்று இந்த பத்துப் பாடல்களும் அப்படியே ஒளிபரப்பப் பட்டது, அப்படி ஒரு சிலிர்ப்பு” என்றார். கொரோனாவுக்கு ரெம்டீஸிவிர் மாதிரி இருக்கிறது இந்தத் தொடர் என்று வேறு எழுதி இருந்தார், சாரி சார், ‘குத்தலாக’ச் சொல்லவில்லையே!

பி சுசீலா, பி பானுமதி, எம் எஸ் ராஜேஸ்வரி குரல்கள் எல்லாம் மறக்கக் கூடிய குரல்களா….. குழந்தைப் பேறு குறித்த இன்பமும், அது மறுக்கப்பட்ட வாழ்க்கையில் சமூகத்தின் கல்லடியும் உள்ளத்தை உலுக்கி எடுக்கும் வரிகளில் வார்த்தெடுத்த கவிஞர்கள் மறக்கக் கூடியவர்களா…

பேர் போன கவிஞர்கள் மட்டுமல்ல, தான் எழுதிய பாடலுக்குத் தனது பெயர் இல்லாமல் போன கவிஞர்களும் உண்டு. அண்மையில் நூற்றாண்டு கண்ட மருதகாசி அவர்களைக் குறித்த கட்டுரை ஒன்றை தி இந்து நாளிதழில் எழுத, அதை வாசித்த கவிஞர் எஸ் வைதீஸ்வரன், நாடகம் ஒன்றிற்கு அவர் எழுதிய பாடலைப் பாடி நடித்த பெருமை எனக்கு உண்டு, எஸ் வி சகஸ்ரநாமம் அவர்களது சேவா ஸ்டேஜ் குழுவில் என்று சொன்னவர், ஒரு கேள்வியும் முன்வைத்தார்: திருவிளையாடல் படத்தில் இடம் பெற்ற ‘பாட்டும் நானே பாவமும் நானே’ எழுதியது யார் தெரியுமா?

நான் உடனே, ‘அந்தப் பாடலை யார் எழுதவில்லை என்று சொல்லட்டுமா, அது கண்ணதாசன் பாட்டு அல்ல’ என்றேன். அவர் வியந்து போனார். ‘அது உங்களுக்கு எப்போது தெரியும்?’ என்றார். சில ஆண்டுகளுக்குமுன்பு எங்கோ வாசித்தேன் என்றேன். அவர், மிக அண்மையில் தான் கேள்விப்பட்டேன் என்றார். ‘அசையும் உலகில் இசையும் நானே ஆடும் கலையின் நாயகன் நானே எதிலும் இயங்கும் இயக்கம் நானே என்னிசை நின்றால் அடங்கும் உலகே’ என்று பிரபஞ்சத்தையே உலுக்கி நிறுத்தி, விழிகளை சிவாஜி உருட்டி உருட்டிப் பார்த்து அசத்திய காட்சியில் கலக்கிய அந்தப் பாட்டை எழுதியவர் அருமையான பாடலாசிரியர் கா மு ஷெரீப். ‘நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே’ என்று இப்போது ஆடத்தொடங்குகிறதா எல்லாம் ஒவ்வொன்றாக!

வேறு ஒரு படத்திற்கு எழுதிப் பயன்படுத்தாத இந்தப் பாடலை, ஏ பி நாகராஜன் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று கேட்டதாகவும், இதற்கு என்று தனியே சன்மானம் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் கூட சொல்லப்படுகிறது. கா மு ஷெரீபை மிகவும் நேசித்த எழுத்தாளர் ஜெயகாந்தன், ஓர் இலக்கியவாதியின் கலை உலக அனுபவங்கள் எனும் தமது நூலில், எப்படி தனது பாடலை வேறொருவர் பெயரில் வந்ததை சகித்துக் கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ‘தனது பாடல் ஒரு பிரபல பாடலாசிரியர் பெயரில் மக்களைச் சென்றடைந்தால் மகிழ்ச்சி தானே’ என்று கவிஞர் ஷெரீப் சொன்னதாகக் குறிப்பிட்டு விட்டு, அப்படியான பெருந்தன்மை எல்லாம் தனக்கு வராது என்றும் எழுதி இருக்கிறார். ஆனால், அது வேறு ஒரு காழ்ப்பில் சொல்லப்பட்டது, பாடல் கண்ணதாசன் எழுதியது தான் என்று வாதிடுவோரும் உண்டு.

‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா, என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல’ (டவுன் பஸ்) என்ற வரிகளை எழுதிய விரல்கள் கா மு ஷெரீப் அவர்களுடையவை அல்லவா…. முதலாளி படத்தின் முத்திரைப் பாடலாக டி எம் எஸ் அவர்களுடைய அசாத்திய குரலில் இன்றும் இன்பம் பெருக்கும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே’, சிவகாமி படத்தில் இடம் பெற்ற ‘வானில் முழு மதியைக் கண்டேன் (எம் கே தியாகராஜ பாகவதர் அவர்களது கடைசி படம் என்று சொல்லப்படுவது) எல்லாம் கா மு ஷெரீப் அவர்கள் ஆக்கங்கங்கள் தான். நிச்சயம் விரிவாகப் பேச வேண்டிய இந்த அற்புதக் கவியின் பாடல்கள் இன்னும் இன்னும் உண்டு.

கடந்த வாரம், பாதை தெரியுது பார் படத்தின் பாடலைப் பேசவே, பி பி ஸ்ரீனிவாஸ் குரலில், எஸ் ஜானகி அவர்களது அமர்க்களமான ஹம்மிங் சேர, தென்னங்கீற்று ஊஞ்சலிலே பாட்டை நினைவூட்டி இருந்தார்கள் சில அன்பர்கள். ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய பாடல் அது. மிகவும் இதமான பாடல்கள் இடம் பெற்ற அந்தப் படத்தில், கே சி எஸ் எழுதிய இன்னொரு பாடலான, சின்னச் சின்ன மூக்குத்தியாம் (டி எம் எஸ்) பாடலும் அருமையானது.

இட்டிலியும்,அப்பமும், அப்பளமும், ஓமப்பொடியும் மட்டும் இன்றி, பட்டுகோட்டையின் பாட்டு பதினெட்டு சுவை கூட்டு என்று வேறு வந்துவிடவே, கட்டுரை வாசித்ததும் பசிக்கிறது என்றார் ஒருவர். ஓட்டலுக்குப் புறப்படத் தோன்றியது என்று எழுதினார் மற்றொருவர். கட்டுரை எப்போது வரும் என்று காத்திருந்து படிக்கும் நுட்பமான வாசகர் வாசு குமார், ‘ஒவ்வொரு வாரமும் இடம் பெறும் பாடல்கள் முழுவதும் ஒரு முறை கேட்டுவிட்டுத் தான் என் கருத்துக்களை உங்களுக்கு எழுதுகிறேன்’ என்று அசர வைத்தார். ‘இப்பதிவுகளை நூலாகத் தொகுத்து வெளியிடுக, பயன் பரவலாகும், நேர்த்தியான அணுகுமுறை, நிழல் தொடாத ஒளிநடை’ என்று அன்போடு பதில் போட்டிருக்கும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல!

வங்கி அதிகாரி திருமலை அவர்கள், ‘திங்களுக்கு என்ன இன்று திருமணமோ பாடல் கேட்டிருக்கிறீர்களா’ என்று கேட்டதைக் குறிப்பிட்டதை வாசித்திருப்பீர்கள். அந்தப் பாடல் பதிவு முடிந்ததும், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி, இதே டியூனில் வேறொரு பாடல் பதிவு செய்து விட்டோம், இது எப்படியோ நிகழ்ந்து விட்டது, அது நியாயமில்லை, எனவே இதைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்தப் பாடலை, இந்தத் தொடரின் நான்காவது கட்டுரையில் பார்த்தோம், நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் ‘அழகுக்கும் மலருக்கும் சாதி இல்லை’ பாடல் தான் அது!

ஆனால், எப்படியோ அந்த சவுண்ட் டிராக் பதிவு, பூஜைக்கு வந்த மலர் படத்தின் இசைத்தட்டில் பதிவாகிப் போய் விட்டிருக்கிறது. ஆகவே வெளியுலகில் ரசிகர்களைச் சென்றடைந்தும் விட்டது. கொடுக்க வேண்டாம் என்று கிழித்துப் போடச் சொன்ன கடிதங்கள் சில நேரம் தப்பிக் கைமாறிப் போய் விடுவதில்லையா, இன்னாருக்குச் சொல்லி விடாதே என்ற விஷயம் முதலில் அந்த மனிதர் காதுகளுக்கே போய்விடுவதில்லையா அப்படி நேர்ந்து விட்டிருக்கிறது.

ஒரே மெட்டில் பாடல் கேட்டு ஏமாந்த அனுபவம் எனக்கு ஐந்தாவது வகுப்பு படிக்கும் போது நேர்ந்தது. வேலூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவனாக, வேறு ஒரு பள்ளி நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றனர். அங்கே முருகரைப் பற்றிய அருமையான பாடலை ஆசிரியை தமது மாணவர்க்கு பாடக் கற்றுக் கொடுத்து இருந்ததை அப்படியே நானும் காதில் வாங்கிக் கொண்டேன். அதற்குச் சில ஆண்டுகள் கழித்து, கைதி கண்ணாயிரம் படத்தின் புகழ் பெற்ற ‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்’ பாடலை வானொலியில் கேட்டேன். உடனே என் அண்ணனை அழைத்து, ‘வேலூர் பள்ளி டீச்சர் எழுதின முருகர் பாட்டை காப்பி அடிச்சு சினிமாவுல போட்டுட்டாங்க’ என்றேன். என் ரசனை உலகத்தின் ஆதாரப் புள்ளி, என் வாசிப்பு பழக்கத்தின் காரண கர்த்தா இன்ன பிற அடைமொழிகளுக்கு உரிய என் அண்ணன் எஸ் வி ரங்கராஜன் சிரித்துக் கொண்டே, எந்தப் பாட்டு என்று கேட்டார். நானும் அப்பாவியாக, ‘சின்னச் சின்ன பாலன் சிவபாலன், வண்ண மயிலேறும் வடிவேலன்’ என்று பாடினேன். ‘சரி தான், சினிமா பாட்டு மெட்டுல தான்பா முருகர் பாட்டு போட்டிருக்கு’ என்று தெளிவித்தார். அந்த வயதில் வெகு நாட்கள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

பிறகு திரைப்பட மெட்டுக்களில் கவனம் அதிகம் பதிய, எத்தனை எத்தனை புதிய அனுபவங்கள்….. சங்கீத ஞானம் இல்லாவிட்டாலும், இந்தப் பாட்டும் அந்தப் பாட்டும் ஒரே ராகமா என்று தேடல் தொடங்கிய காலங்கள்…’பாடல்கள் பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்’ அல்லவா, இசைப் பறவைகளே!

(இசைத்தட்டு சுழலும் ….)

தொடர் 1 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/

தொடர் 2 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/

தொடர் 3 – ஐ வாசிக்க…

https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/

தொடர் 4 – ஐ வாசிக்க…

https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/

தொடர் 5 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/

தொடர் 6 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-6-venugopalan-sv/

தொடர் 7 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-7-venugopalan-sv/

தொடர் 8 – ஐ வாசிக்க..

https://bookday.in/music-life-series-8-venugopalan-sv/

4 thoughts on “இசை வாழ்க்கை 9 :சிட்டு மெட்டு ஊஞ்சலிலே – எஸ் வி வேணுகோபாலன்”
  1. இன்றைய தினம் காணக் கிடைக்காத ரசனையுணர்வோடு எழுதப்பட்டிப்பதை திரும்பத் திரும்ப வாசித்தேன்.

    ஆயின் எழுதியவர் எஸ்விவி என்கையில் வேறு கோணத்தில் அமைந்திருக்க வேண்டாமா என்று எண்ணவும்

    வைக்கிறது,

  2. இசை வாழ்க்கை தொடரில் இத்தனை திரைப்பட பாடல்களை நினைவில் கொண்டு எழுதுவது பிரமிக்க வைக்கிறது. வண்ணதாசனினன் சிறுகதை (கதையின் பெயர் ஞாபகம் இல்லை. ஆனந்த விகடனில் வெளிவந்ததது) ஒன்றில் (கதை சொல்லியின் சித்தி) திருமணம் செய்து கொள்ளாத ஒரு பெண்மணியின் பொழுதுபோக்கு திரைப்படப் பாடல்களைக் கேட்பது மட்டுமே. உலகில் இப்படியாக இசையோடு மட்டுமே வாழ்நாட்களைக் கடந்திடும் இசையால் நிறைந்த உள்ளங்கள் இருப்பது உண்மையே! இசையால் நிறைந்த உங்கள் உள்ளத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் தோழர் வேணுகோபால்.

  3. இந்த வாரத் தகவல்கள் அருமை.நான் அனுப்பும் இந்த லிங்க் ஒரிஜினல் ..தமிழில் இதே பாடல் வரிகளும், இசையும் .. கேட்டால் தெரிந்து கொள்ளலாம்.
    அடுத்த வாரம் கூட நீங்கள் விரும்பினால் எழுதலாம்.
    https://youtu.be/xZbKHDPPrrc
    que sera sera

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *