Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: முசோலினி முதல் மோடி வரை – பெரணமல்லூர் சேகரன்

 

 

 

 

காலத்தின் தேவை

நாடறிந்த எழுத்தாளர் பேராசிரியர் அருணன் சரியான காலத்தில் சரியான நூலை வெளியிட்டுள்ளார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் துன்ப துயரங்களை அனுபவித்து வருகின்றனர் இந்திய நாட்டு மக்கள்.

“நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்பாடு வாய்ப்பச் செயல்”
எனும் திருக்குறளுக்கேற்ப துன்ப துயரங்களுக்கான காரணகர்த்தாவான மோடி அரசு ஏன் இத்தகைய மக்கள் விரோத அரசாக இருக்கிறது என்பதை ஆழ்ந்து பார்க்க வேண்டியுள்ளது. அவ்வாறு ஆழ்ந்து பார்த்து வரலாற்றுப் பூர்வமாக பாசிச வடிவமாக பா.ஜ.க அரசு உள்ளதை ஏராளமான சான்றுகளுடன் நிறுவும் நூலே இந்நூல்.

இந்நூலில் இடம் பெற்றுள்ள 36 கட்டுரைகளும் சிறிய சிறிய கட்டுரைகளாக தலைப்புகளுக்கேற்ப முக்கிய விவரங்களைச் சாறாகப் பிழிந்து தருகிறது.

சோஷலிஸ்டாகத் தோற்றமளித்து அத்தகைய தத்துவப் பத்திரிகை ஒன்றினை ‘வர்க்கப் போராட்டம்’ என்ற பெயரில் வாரப் பத்திரிகையாக ஆரம்பித்து பின்னாளில் ‘அவந்தி’ எனும் பெயரிலான நாளேட்டின் இயக்குனராகி கட்சியின் செல்வாக்கான நிலையைப் பெற்றவன் முசோலினி. முதலாம் உலகப் போரின் போது போரில் இறங்க இத்தாலியைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்று கிளம்பிய இளைஞர்கள் கூட்டத்தின் தலைவனாக பரிணமிக்கிறான் முசோலினி.

1917ல் ரஷ்யப் புரட்சி வரலாறு படைத்தது. அதன் தாக்கம் இத்தாலியில் வராமல் பார்த்துக் கொள்ளும் வகையில் தன்னைக் கம்யூனிஸ்ட் எதிரியாக்கிக் கொண்டான் முசோலினி. இத்தாலியர்கள் மத்தியில் தேசிய வெறியை விசிறி விட்டான். போரில் கொடூரமாகப் பாதிக்கப்பட்டு ‘வேண்டாம் இன்னொரு போர்’ என்று குமுறிய மக்களை மீண்டும் ஒரு போரில் இழுத்து விடவும் முசோலினி தேசிய வெறியெனும் ஆயுதத்தை எடுத்தான். அதற்காக சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்த ஆசைப்பட்டான். அதற்காக அவன் துவக்கியதே பாசிஸ்ட் படை அமைப்பு என்பதை இந்நூல் உணர்த்துகிறது. மேலும் “பலாத்காரத்தின் மூலமாகவே தியாகம் மற்றும் ரத்தத்தின மூலமாகவே நினைத்ததை நடத்தி வேண்டியிருந்தது” எனும் முசோலினியின் கூற்றுப்படியே இத்தாலியப் பெருமுதலாளிகளின் உதவியுடன் மூன்றே ஆண்டுகளில் நடத்திக் காண்பித்துள்ளான் என்பது புலனாகிறது.

முதலில் இத்தாலிய அரசியல் சாசனப்படி ஆட்சி நடத்தியவன் விரைவில் சர்வாதிகாரத்தின் பக்கம் திரும்பியதை நூலாசிரியர் விவரிக்கிறார்.எதிர்ப்பாளர்களைப் படுகொலை செய்வதை சர்வசாதாரணமாக நிறைவேற்றியுள்ளான் முசோலினி.
அன்டோனியோ கிராம்சி உள்ளிட்ட கம்யூனிஸ்டுகளை சிறையில் தள்ளியும் தொலைதூரத் தீவுகளுக்கு அனுப்பியும் எச்சரிக்கையாக இருந்து கொண்டான். தனது சுயசரிதையில் முசோலினி குறிப்பிடுவதை
“எனது தீர்மானம் இதுதான். கட்சிகள் சாகட்டும். நாடு காப்பாற்றப்படட்டும்” எனச் சுட்டிக்காட்டும் அருணன், ஜனநாயகத்தை நாட்டுக்கு எதிராகக் கருதுவதே, நிறுத்துவதே பாசிசம் என விளக்குகிறார்.

முசோலினியின் கல்விக் கொள்கையும் இன்றைய நாடாளும் பா.ஜ.க. அரசின் கல்விக் கொள்கையும் ஒன்றே என்பதை அன்றைய முசோலினியின் வார்த்தைகள் மெய்ப்பிக்கின்றன பாருங்கள்:” தகுதி உடையவர்க்கே அரசானது பள்ளிக்கல்வி வழங்கும். அரசு பள்ளிகளில் சேரத் தகுதி இல்லாதவர்கள் வேறு வாய்ப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரே கூடையில் செல்வத்தையும் குப்பையையும் போடுகிற, அனைவருக்கும் ஆனது ஓர் அரசுப் பள்ளி என்கிற ஜனநாயகக் கருத்தை இது குப்பைக் கூடையில் வீசியது.”

1926ல் முசோலினியால் ‘பலில்லா தேசிய அமைப்பு’ எனும் இளைஞர் அமைப்பை உருவாக்கி ஆயுதப் பயிற்சியோடு பாசிச கருத்தியல் போதையும் ஏற்றப்பட்டது என்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. இது பா.ஜக.வின் சங்கப் பரிவார அமைப்புகளை நினைவூட்டுகிறது.
பாசிசம் தனது சர்வாதிகாரத்திற்கு மத உணர்வைப் பயன்படுத்தும் என்பது பாசிச முசோலினி காலத்திலும் இன்றைய நவீன பாசிவாதிகள் காலத்திலும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யப் புரட்சியின் அக்காலகட்டத்தில் இத்தாலியும் புரட்சிக்கு இலக்காகுமோ என்ற அச்சத்தில் இத்தாலி சோஷலிஸ்டுகள் வசம் செல்வதைத் தடுக்கக் கூடியவனாக போப்பிற்கு முசோலினியே தோன்றினான் என்னும் அருணன் கருத்து சரியானதே. அதே போன்றுதான் இந்தியாவின் மதவாதிகள் இந்தியா இடதுசாரிக் பாதையில் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சனாதன பா.ஜ.க.வைத் தேர்ந்தெடுத்துப் பேராதரவு நல்கி வருகின்றனர்.

ஆனால் கடைசியில் முசோலினி யூத எதிர்ப்பில் ஹிட்லரும் சேர்ந்து கொண்டதையும், இன்னொரு உலகப் போருக்கு இருவரும் திட்டம் தீட்டுவதையும் கண்டு நொந்துபோன போப், அவனைக் கண்டிக்க முடிவெடுத்தபோது அதற்கு முதல்நாள் போப் இறந்து போனார். இம்மரணத்திலும் முசோலியின் கரங்கள் இருந்திருக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது உற்று நோக்கத்தக்கது.

முசோலினியின் பாசிச ஆட்சியில் 10 கடும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தனது நாட்டின் குடிமக்களை இனத்தின் அல்லது மதத்தின் அடிப்படையில் பாகுபடுத்தும் கொடூரத்தை பாசிசம் செய்தது. இன்றைக்கும் இந்தியாவில் அது நடைபெறுகிறது எனில் இவர்களுக்கு வாத்தியார் முசோலினிதானே!

இவ்வாறு இத்தாலியில் முசோலினி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது ஜெர்மனியில் ஆட்சியைப் பிடித்திருந்தான் என்பதை இந்நூல் மூலம் அறிய முடிகிறது.

ஹிட்லர் பிறப்பின் அடிப்படையில் குணத்தை நிர்ணயித்த பிற்போக்கு வாதி. அதே ஜெர்மனியில் பிறந்த கார்ல் மார்க்ஸை யூதன் என வரையறை செய்து அவரையும் அவரது தத்துவத்தையும் வெறுத்தான்.

“ஜெர்மானியர்கள் ஆரியர்கள், பிற மதத்தினரை ஆளப் பிறந்தவர்கள். அப்படி ஆளாவிட்டால் நாகரிகம் அழிந்துபோகும். எனவே யூதர்கள், ஸ்லாவ்கள் போன்ற இனத்தவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். அடங்க மறுத்தால் அடக்க வேண்டும். இந்த செய்முறையில் தங்கள் ரத்தம் மாசுபடாமல் ஜெர்மானியர் கவனமாக இருக்க வேண்டும். இதற்காகத்தான் நாஜிக் கட்சி” என்று ஹிட்லர் தமது நூலில் குறிப்பிடுகிறார் என்கிறார் பேராசிரியர் அருணன்.

முசோலினியைப் போலவே ஹிட்லரும் பாதுகாப்புப் படையை வைத்திருந்தான்‌. ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவும் கம்யூனிஸ்டுகளை ஒழிப்பதற்காகவும் என்றே இப்படியொரு குண்டர் படையை ஏற்படுத்தியிருந்தான் ஹிட்லர் என்கிறார் நூலாசிரியர்.

27.1.1932ல் தொழிலதிபர் கிளப்பில் ஹிட்லர் பேசியது ஜெர்மனியின் மிக சக்திவாய்ந்த தொழிலதிபர்களின் ஆதரவை அவனுக்குப் பெற்றுத் தந்தது. விமானத்தில் பறந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைச் செய்தான். அரசியல் காரணங்களுக்காக விமானத்தைப் பயன்படுத்திய முதல் சில அரசியல்வாதிகளில் ஹிட்லரும் ஒருவன். பெருமுதலாளிகளின் ஆதரவோடு தான் ஹிட்லர் அரசியலில் வளர்ந்தான் எனக்குறிப்பிடும்போதே இந்தியாவில் நமது நினைவுகளில் மோடி வந்து நிற்கிறார்.

27.3.1933 அன்று ஜெர்மன் நாடாளுமன்ற கட்டிடம் நாஜிக்களால் தீப்பற்றி எரிந்தபோது அதைக் கம்யூனிஸ்டுகள்மீது பழியாக்கினான் ஹிட்லர். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. பின்னர் நடந்த வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்ட பல்கேரியா கம்யூனிஸ்ட் தலைவர் ஜார்ஜ் டிமிட்ரோவ் நீதிமன்றத்தில் வாதிட்டது வரலாறானது. அவர் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

1943 ஜுன் 30 முதல் ஜூலை 2 வரையில் ஹிட்லர் தமது அரசியல் எதிரிகளைக் கைது செய்து சுட்டுக் தள்ளினான். இத்தகைய கொடூர மனம் படைத்தவன் சைவ ஆசாமி என்பதும் மது, புகை பழக்கமில்லாதவன் என்பதும் ‘உணவானது உடலை அமைக்கலாம் குணத்தை அல்ல’ என்பதும் இந்நூல் தரும் அரிய தகவல்கள்.

நாஜி ஆட்சியின் வெறுப்பு அரசியல் சுமார் ஒன்றரை லட்சம் யூதர்களைப் படுகொலை செய்தது என்பதும் இவனைப் பார்த்துத்தான் தானும் யூத எதிர்ப்பில் இறங்கினான் முசோலினி என்பதும், குருவை மிஞ்சிய தகப்பன் சுவாமி ஆனான் ஹிட்லர் என்பதும் இந்நூல் தரும் முக்கியச் செய்தி.

நாஜி அரசே உலகை ஆளும் என்று கனவு கண்ட ஹிட்லர், முதலில் ஐரோப்பாவைப் பிடிக்க ஸ்லாவிக் மக்களை ஆரியர் அல்லாத தாழ்ந்த மரபினத்தவர், அவர்களை ஆளும் உரிமை ஜெர்மானியர்களுக்கு உண்டு என்று பேசி வந்தான். அதன்படி இரண்டாம் உலகப் போருக்கு வழி வகுத்தான்.
1941ல் 30லட்சம் வீரர்களை சோவியத் மீது ஏவினான். 1943ல் ஸ்டாலின்கிராட் யுத்தத்தில் நாஜிப் படைகள் படுதோல்வி கண்டன.

தான் தாழ்ந்த மரபினத்தவர் எனக் கருதுபவர் கையிலா சிக்க வேண்டுமென நினைத்துத் தற்கொலை செய்து கொண்டான் ஹிட்லர். அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு முசோலினி சொந்த நாட்டு மக்களால் சுட்டுக் கொல்லப்பட்டு, அவன் ஜம்பமாயத் திரிந்த மிலன் நகரில் அவனது பிணம் தலைகீழாய் தொங்க விடப்பட்டு போவோர் வருவோர் எல்லாம் கல்லெறிந்தார்கள். இதையும் தெரிந்திருந்ததாலும் ஹிட்லர் அந்த முடிவுக்குப் போனான் என்கிறார் அருணன்.

ஹிட்லர், முசோலினி பிடியிலிருந்து உலகைக் காத்த பெருமை சோவியத் நாட்டுக்கும் அதன் செஞ்சேனைக்கும், செஞ்சேனை வீரர்களின் உயிர்த் தியாகத்திற்கும் தலைமை தாங்கிய ஜோசப் ஸ்டாலினுக்குமே உண்டு. மேலும் உலகப் போரில் பாசிஸ்டுகள் சோவியத் படையால் முறியடிக்கப்பட்டதால்தான் இந்தியா போன்ற காலனி நாடுகளுக்கு விடுதலை கிடைத்தது எனக் குறிப்பிடும் நூலாசிரியரின் கூற்று பொருத்தமானது.

உலகின் பாசிச நாசிசத் தலைவர்கள் காலத்திலேயே இந்தியாவில் சனாதனக் கூட்டம் உருவானதைப் படிப்படியாக விவரிக்கிறார் அருணன்.

இந்திய நாட்டின் இன்றைய மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிறந்த மூஞ்சே 1927லேயே இந்து மகாசபையின் அகில இந்தியத் தலைவராகப் பணியாற்றத் தொடங்கினார் என்பது தெரிய வருகிறது. 1931ல் லண்டன் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டு இத்தாலிக்குச் சென்று முசோலினியைச் சந்தித்து வந்ததைப் பதிவு செய்துள்ளார் அருணன். முசோலினி அமைத்திருந்த ‘பலில்லா’ எனும் இளைஞர் குண்டர் படையைப் பார்த்து வந்ததன் தாக்கமே இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்‌ அமைப்பை அதன் வழியே வளர்த்து வந்தது என்பதை இந்நூல் மூலம் உணர முடிகிறது.

வி.டி. சாவர்க்கர் துப்பாக்கிகளை வினியோகிக்கும் வேலையைச் செய்து வந்தார் என்பதும் அதை காந்தி எதிர்த்து வந்தார் என்பதும் அது முதலே காந்தியை சாவர்க்கருக்குப் பிடிப்பதில்லை என்பதும் தெளிவாகிறது. நாசிக் கலெக்டரைக் கொலை செய்யத் தூண்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு பிரிட்டிஷ் அரசால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார் சாவர்க்கர். ஆனால் அடுத்தடுத்து ஆங்கிலேயர்க்கு மன்னிப்புக் கடிதங்களை எழுதி வந்தும் ஆங்கிலேய அரசுக்குத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டதால் 13 ஆண்டுகளிலேயே விடுதலை செய்தது அரசு. தனி பங்களாவும் 1947 வரை பென்சனும் கொடுத்தது என்பது பலர் அறியாத செய்தி. அத்தகைய நபரின் பிறந்த நாளான மே 28ல்தான் இந்தியாவின் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

சாவர்க்கர் முஸ்லீம்களையும் கிறிஸ்தவர்களையும் இந்து தேசத்திற்குள் சேர்க்க முடியாது என்று கறாராக அறிவித்தார். இந்நிலையில் மூஞ்சேயின் சீடர் ஹெட்கேவார் சாவர்க்கரின் ஆசியுடன் 1925 விஜயதசமி அன்று
நாக்பூரில் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்’ எனும் ஆர்.எஸ்.எஸ்.சை ஆரம்பித்தார். இந்து மகாசபையும் ஆர்.எஸ்.எஸ்.சும் ஒரே விஷ மரத்தின் இரு கிளைகள் என்று வர்ணிக்கிறார் நூலாசிரியர். அப்போதைய ஊர்வலத்தை மசூதி வாசலில் நிறுத்தி மேளம் அடித்து வெற்றிகரமாக வம்பு செய்துள்ளார் ஹெக்டேவர். அன்று அவர் தொடங்கியதைத்தான் இன்றும் விநாயகர் ஊர்வலத்தில் செய்கிறார்கள் சங் பரிவாரத்தினர்.

ஹெட்கேவர் 1940ல் காலமானதும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில இந்திய தலைவராக கோல்வால்கர் நியமிக்கப்படுகிறார். இவரைத்தான் குருஜி எனப் போற்றுகின்றனர் சங்பரிவாரத்தினர் . ஹிட்லரும் முசோலினியும் யூதர்களையும் கம்யூனிஸ்டுகளையும் உள்நாட்டில் எதிரிகளாகக் கட்டமைத்தனர். அவ்வாறே இந்தியாவில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுளை எதிரிகளாகக் கட்டமைத்தார் கோல்வால்கர். 1942-வெள்ளையனே வெளியேறு இயக்கம், 1946-கப்பற்படை எழுச்சி ஆகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்காததோடு பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இருந்தது ஆர்.எஸ்.எஸ்‌ என்பதே வரலாற்று உண்மை என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகின்றது.

கோல்வால்கர் தமது சிந்தனைக் கொத்துக்கள்’ மூலம் மக்களின் இந்து மத உணர்வுகளை வெறியாக மாற்றினார். ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கம் ஆரிய ஆதிக்கத்தை, பிராமணியக் கட்டமைப்பை நிலைநிறுத்தும். அதன்மூலம் பிற மதத்தவரை மட்டுமல்ல. இந்து மதத்தில் உள்ள சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் பெண்களையும் ஒடுக்குவது, இந்து மதத்தின் பன்மைத்தன்மையை ஒழித்து அதை வேத மதமாக மாற்றுவது என நூலாசிரியர் குறிப்பிடுவது சரியெனவே நிரூபிக்கப்பட்டு வருகிறது. “ஒரு தேசத்தில் சிறுபான்மையினர் இருக்க முடியாது. அவர்கள் பெரும்பான்மையோரோடு கலந்துவிட வேண்டும். அல்லது வெளியேறிவிட வேண்டும்” என்னும் கோல்வால்கரின் கூற்றைத்தான் தலைமேற் கொண்டு அதற்கேற்ப காய் நகர்த்தி வருகிறார்கள் ஆட்சியாளர்கள்.

1947ல் நடைபெற்ற தேசப் பிரிவினையின் போது பிரிவினையை முதலில் ஆதரித்த படேலை விட்டுவிட்டு பழியைத் தூக்கி காந்தியின் மேல் போட்டது ஆர்.எஸ்.எஸ். மத நல்லிணக்கத்திற்காக ஒரு மனித ராணுவமாய் காந்தி சுற்றிச் சுழன்று வந்ததை விரும்பாத ஆர்.எஸ்.எஸ். கூட்டம் காந்தி மீதான வன்மத்தை காந்தி மீது விதைத்து வந்தார்கள் என்பதை இந்நூல் மூலம் உணர முடிகிறது.

ஆர்.எஸ்.எஸ்‌. இந்து மகாசபையைச் சேர்ந்த, பிராமண குலத்தில் பிறந்த நாதுராம் கோட்சே எனும் கொடூரன் 30.01.1948ல் மகாத்மாவைச் சுட்டுக் கொன்றான். “மாமிசம் சாப்பிடாதவன் மனித மிருகமாய் காந்தியைக் கடித்துச் சாப்பிட்டான். உணவுக்கும் குணத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை ஹிட்லரைப் போல இவரும் நிரூபித்தான்” என்கிறார் நூலாசிரியர். உண்மைதானே!

இந்தியச் சுதந்திரத்துக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். எவ்வாறு படிப்படியாக அரசியல் களமாடி பா.ஜ.க.வாக இன்று வளர்ந்து வந்தது என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார் அருணன்.

1951-52ல் ஜனசங்கம் என்ற பெயரில் உருவான அரசியல் கட்சி 1980ல் பாரதிய ஜனதா கட்சி எனும் பெயரோடு வளர்ந்து 2014ல் தனிப்பெரும்பான்மையோடு இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தது.

முதல் பொதுத் தேர்தலிலேயே “ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு கலாச்சாரம்” என அறிக்கை வைத்துப் பேசியுள்ளது ஜனசங்கம். ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து ரத்து, பசுவதைத் தடைச் சட்டம் ஆகியவை குறித்தெல்லாம் அப்போதே பேசியுள்ளது ஜனசங்கம். 1952ல் பெற்றதைத் காட்டிலும் 1967ல் மூன்று மடங்கு அதாவது 9சதவீத வாக்குகளைப் பெற்று 35 இடங்களில் வென்றது ஜனசங்கம். இத்தனைக்கும் விவாகரத்து, பெண்களும் வாரிசு போன்றவற்றை ஒழித்துக் கட்டுவோம் என்று கூறியதோடு ஒற்றை அரசமைப்பு குறித்தும் கூறியிருந்தது என்கிறார் அருணன்.

1966லேயே ஜனசங்கம் மதக் கலவரத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார் நூலாசிரியர். 1966ல் சாமியார்களைத் திரட்டிப் பசுப்பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் ஒரு வெறியாட்டத்தை அரங்கேற்றி அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்றக் கட்டிடத்தைத் தாக்கி அக்கலவவரத்தில் எட்டுப் பேர் மாண்ட செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இக்கலவரத்தில் காமராஜர் தப்பிப் பிழைத்தது குறிப்பிடத்தக்கது.

1974ல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் துவக்கிய இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்தவர்களும் இணையலாம் என்று அனுமதித்தது தவறான முடிவு எனத் தெரிகிறது. 1975ல் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலைப் பிரகடனமும் அதையொட்டி சிறையில் தள்ளப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றுபட்டு ஜனதா கட்சியைத் தோற்றுவிக்க வழி பிறந்தது. அக்கட்சிக்குள் ஐக்கியமானது ஜனசங்கம். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மற்றும் ஜனதா கட்சி ஆகியவற்றின் இரட்டை உறுப்பினர் குறித்து துவக்கத்திலேயே கறாரான முடிவெடுக்காமல் இரட்டை உறுப்பினரை அனுமதித்தது. அதன் விளைவு ஜனதா அரசு அற்பாயுசில் கவிழ்ந்தது. “சங்கிகள் சங்கிகளாகவே இருப்பதைக் கண்டு கண்ணாரக் கண்டு மனம் ஒடிந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் 1979 அக்டோபரில் காலமானார்” என்கிறார் அருணன்.

1984ல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னணியில் ராஜீவ் காந்தி பிரதமரானார். அயோத்தியில் பூட்டப்பட்டிருந்த மசூதியை வழிபாட்டுக்கென திறந்துவிட்டு செய்த பிழையால் கள்ளத்தனமாக வைக்கப்பட்டிருந்த ராமர் சிலையை தரிசிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புக்கு வெற்றியாக அமைந்தது. அதன் விளைவாக மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் கட்டவேண்டும் எனும் கோரிக்கை வலுத்தது.

1989ல் வி.பி.பிங் அரசமைய இடதுசாரிகளும் பா.ஜ.க
வும் வெளியிலிருந்து ஆதரவளித்தனர். அடுத்த ஆண்டே அயோத்தி விவகாரத்தைக் கையிலெடுத்து அரசியல் செய்தது பா.ஜ.க. இந்நிலையில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்த முனைந்தது வி.பி.சிங் அரசு. டில்லியில் கலவரத்தைத் தூண்டியது பா.ஜ.க.
அத்வானியின் மதவெறி ரத யாத்திரை லல்லு பிரசாத் யாதவ் மூலம் பீகாரில் தடுக்கப்பட்டு அத்வானி கைது செய்யப்பட்டார். இதுதான் சாக்கென பா.ஜ.க. வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது.

1991தேர்தலின்போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னணியில் நரசிம்ம ராவ் தலைமையில் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். பிரதமர் ராவ் கொண்டு வந்த வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1947 ஆகஸ்ட் 15ல் வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்றது. ஆனால் அயோத்திக்கு மட்டும் விலக்கு கொடுத்தது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரதமருக்கு வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தாததால் 1992-டிசம்பர் ஆறில் சங் பரிவாரத்தினர் பாபர் மசூதியை இடித்து இந்தியா வெட்கித் தலைகுனிந்தது.

1995ல் ஜனவரி 31 அன்று கூடிய அலகாபாத் கும்பமேளாவையொட்டி சாமியார்கள் அடுத்த இலக்கு காசி, மதுரா எனக் கொக்கரித்தனர்.

1996 நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தொங்கு பாராளுமன்றத்துக்குக் காபந்து அரசமைத்தார் வாஜ்பாய். 13 நாட்கள் மட்டுமே நீடித்தது அவ்வரசு. 1997ல் காங்கிரஸ் ஆதரவுடன் ஐக்கிய முன்னணி அரசு இரண்டு பிரதமர்களைக் கண்டபோதும் 1998ல் அரசு கவிழ்ந்தது.

1998ல் பா.ஜ.க. 182 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. பா.ஜ.க. கூட்டணி உள்முரண்பாடுகளால் 1999 ஏப்ரலில் ஆட்சி கவிழ்ந்தது. இக்காலத்தில்தான் வாஜ்பாய் கார்கில் வீரர்(?) ஆனார். பாக்கிஸ்தானுடனான கார்கில் போர் மக்கள் நெஞ்சில் தேசப்பற்றுக் கனலை எழுப்பியிருந்தது. அதன் விளைவாக வாஜ்பாய் தலைமையில் அமைந்த ஆட்சி ஐந்தாண்டுக்காலம் கோலோச்சியது.

‘குஜராத் கொடூரமும் பிபிசி ஆவணமும்’ எனும் கட்டுரையில் 2002ல் மோடி தலையிலான அரசு 20க்கும் மேற்பட்ட போலி என்கவுண்டர் கொலைகள் மூலம் முஸ்லிம் எதிர்ப்பு நெருப்பு தொடர்ந்து விசிறிவிட்டது. 2014 வரை மோடி குஜராத் முதல்வராக இருந்தார். தேர்தல்களை வெல்லும் அவரின் திறமையால் பா.ஜ.க.வின் பிரிய நாயகரானார். ‘குஜராத் மாடல்’ வளர்ச்சி என்பதும் பொதுவெளியில் கவர்ச்சி வாசகமானது‌. டில்லியை அடுத்த இலக்கானது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சரியானதே. ‘இந்தியா: மோடி எனும் கேள்வி’ என்னும் இரு பாகங்களைக் கொண்ட ஆவணப்படம் குஜராத் கொடூரம் குறித்துப் பேசியது. குஜராத் கலவரத்தில் இறந்தவர்கள் குறைந்தது 2000 முஸ்லிம்கள். வல்லுறவுக்கு உள்ளான இஸ்லாமியப் பெண்கள் ஏராளம். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான கொடூரங்கள் குறித்து துணிச்சலாக குஜராத்துக்கே சென்று தரவுகளைச் சேகரித்து ‘குஜராத் கோப்புகள்’ என்ற பெயரில் ராணா அயூப் எழுதிய நூல் குறித்து இந்நூலில் ஏதும் இடம் பெறாதது ஒரு குறையே.

“2002 ஏப்ரல் 4ல் வாஜ்பாய்”இங்கே இவ்வளவும் நடந்த பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடுகளுக்குப் போவேன் என்று எனக்குத் தெரியவில்லை, இந்தப் பைத்தியக்காரத்தனம் நிறுத்தப்பட வேண்டும்.” என்று அகமதாபாத் ஷா ஆலம் நிவாரண முகாமிலிருந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட எட்டாயிரம் முஸ்லிம்களிடம் பேசியது வரலாற்று ஆவணம்தானே! ஆனால் அதைப்பற்றி எல்லாம் மோடி-அமீத்ஷா வகையறாக்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

2004 ஆம் ஆண்டு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்த காலத்தில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய வாஜ்பாய் கட்சியின் ராம் லட்சுமணர்களாக அத்வானியும் பிரமோத் மகாஜனும் இருப்பார்கள் என்று அறிவித்தார் என்பது பலர் அறியாத செய்தி. இதன் நோக்கம் மோடி தனது இடத்திற்கு வரக்கூடாது என்பது வாஜ்பாயின் எண்ணம். ஆனால் “குருபீடம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் எண்ணம் வேறாகப் போனது. அதற்கு குஜராத் கொடூர நாயகனே மிகவும் பிடித்துப் போயிருந்தது” என அருணன் முடித்திருப்பது உண்மையான பதிவுகள்.

2009ல் மன்மோகன் சிங்கின் இரண்டாம் பாக அரசில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள இயலாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் எதிர்ப்பையும் உருவாக்க அன்னா ஹசாரே என்பவரை ஆர்.எஸ்.எஸ்.தான் களமிறக்கியது என்பது உண்மை. இது பா.ஜ.க.வின் மக்கள் விரோத ஆட்சியில் அன்னா ஹசாரேவின் கும்பகர்ண உறக்கம் மூலம் நிரூபணமாகிறது.

“2005 மத்தியில் ஒரு நாள் பா.ஜ.க.வின் தலைவர் பதவியிலிருந்து நான் வெளியேற வேண்டும் என்று சொல்லப்பட்டேன்” என்கிறார் அத்வானி தமது சுயசரிதையில். பா.ஜ.க.வை. இதிலிருந்து இயக்குவது ஆர்.எஸ்
எஸ். என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

1987ல் குஜராத் பா.ஜ.க.வின் அமைப்புச் செயலாளராக மோடியை ஆர்.எஸ்.எஸ்‌ நியமித்ததில் இருந்து படிப்படியாக முன்னேறி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரானார்.

பாசிச முசோலினிக்கும் நாசிச ஹிட்லருக்கும் எப்படிப் பெருமுதலாளிகள் துணை நின்றார்களோ அதேபோல் மோடிக்குக் குஜராத் பெருமுதலாளிகளான அம்பானி அதானி துணை நின்றார்கள்.

“கோட்சேயின் துப்பாக்கிக்கு நான்கு முற்போக்காளர்கள் பலி” எனும் கட்டுரையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் நரேந்திர தபோல்கர், கம்யூனிஸ்ட் கோவிந்த் பன்சாரே, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இலக்கிய ஆளுமை கல்புர்கி, எழுத்தாளர் கௌரி லங்கேஷ் ஆகியோரை பா.ஜ.கவின் சங்பரிவாரத்தினர் எப்படிக் கொலை செய்தனர் என்பதை விளக்கியுள்ளார்.

அடுத்த இரு கட்டுரைகளில் மோடி ஒன்பதாண்டுகளாய் புரிந்து வரும் மக்கள் விரோத ஆட்சியைப் படம்பிடித்துக் காட்டுகிறார் அருணன். முசோலினி, ஹிட்லர் ஆகிய சர்வாதிகாரிகளிடம் கற்ற உத்திகளைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்தி வருவதை அழகாக விவரிக்கிறார் அருணன்.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரிக்கொடுமை, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்பது, உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு, சிறுதொழில் நசிவு, பசுக்குண்டர்கள் நிகழ்த்தும் படுகொலை, அரசு நிறுவனங்கள் மற்றும் நீதித்துறையைக் கைப்பாவையாக்கி வருவது, வெறுப்பு அரசியலை வளர்த்து வருவது, அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்துவது, கருத்துச் சுதந்திரத்தைக் காலில் போட்டு மிதிப்பது, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என பன்மைத்துவத்தைக் குழி தோண்டிப் புதைப்பது, அறிவியலைப் புறந்தள்ளி சனாதனத்தை முன்னுக்குக் கொண்டு வருவது என வேகமெடுத்து வரும் பாசிச ஆட்சியாக விளங்கி வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

இத்தகைய பாசிச அரசு அமைவதற்கு அறிவு ஜீவிகளும் காரணமாகிறார்கள் என அருணன் முடித்திருப்பது நூலின் முதல் பகுதியில் முசோலினியும் ஹிட்லரும் ஆட்சியைக் கைப்பற்ற அறிவு ஜீவிகள் துணை நின்றது குறித்துக் குறிப்பிடடிருந்த பகுதிகள் நினைவுக்கு வருகிறது.

வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கி நகர்த்தும் பாசிச ஆட்சியை வீழ்த்த இந்நூல் களத்திலுள்ள முற்போக்காளர்களுக்குத் தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை. நூலை வாங்கிப் படிப்பது அவசர அவசியமானது.

 பெரணமல்லூர் சேகரன்

 

நூலின் பெயர் : முசோலினி முதல் மோடி வரை
ஆசிரியர் : அருணன்
பக்கங்கள் : 144
விலை : ₹120
பதிப்பகம் : வசந்தம் வெளியீட்டகம்

 

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

 

 

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்?...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here