பாரதிபுத்தகாலயத்தின் மிகச்சிறந்தவெளியீடுகளில் இந்த புத்தகமும் ஒன்று என்றால் மிகையாகாது. சிங்கிஸ்ஜத் மாத்தவ் எழுதிய இந்த நூல் கோடிக்கணக்கான உள்ளங்களை கொள்ளையிட்டு மௌனத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் ஆச்சர்யம் இல்லை. ஒவ்வொரு ஆசிரியரும் இந்த சமூகத்தில் என்ன செய்ய வேண்டும் யாருக்காக நாம் நிற்க வேண்டும் என்பதை நமக்கு கோடிட்டு காட்டுகிறது.

சோவியத் நாட்டில் உள்ள கடைக்கோடி கிராமமான குர்க்குரியில் அன்று ஒரு பள்ளி திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த பள்ளிக்கு சிறப்பு கல்வி அதிகாரியாக வருகை தரும் அல்டினாய் என்கின்ற கல்வியாளர் விழாவின் இடையில் எழுந்து சென்றுவிடுகிறார். விழாக்கள் முடிந்து சிறிது நாட்கள் கழித்து அந்த விழாவில் கலந்துகொண்ட ஒரு ஒவியர் கல்வியாளர் அல்டினாய்யிடம் தாங்கள் விழாவின்இடையில் எழுந்து சென்றதற்கான காரணம் என்ன என்பதை வினவுகிறார். அவருக்கு பதில் சொல்லும் விதமாக இந்த நாவல் தொடங்குகிறது. யார் இந்த அல்டினாய் இவர் எப்படி மிகச்சிறந்த கல்வியாளராக உருவானர் என்பதே இந்த குறுநாவல்.

இந்த நாவலில் நாயகனாக வலம்வரும் தூய்ஷன் ஒரு தபால்காரர். அவர் உள்வாங்கிய சித்தாந்தத்தின் விளைவாக ஒடுக்கப்பட்டு கல்வி மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளை தனி ஒருவனாக. பழைமையில் புரையோடிக் கிடந்த சமூகத்தை எதிர்த்து குழந்தைகளுக்கு எப்படி கல்வி கற்றுக்கொடுத்தார் என்பதே நாவலின் மையம். சித்தி கொடுமைக்கு ஆளான ஒரு பெண் குழந்தை கல்வி கற்க விரும்பி பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அந்த கிராமத்தை விட்டே வெளியேறுகிறாள்.அப்படி வெளியே சென்றவள்தான் இன்றைக்கு கல்வியாளராக வருகைதந்திருக்கும் அல்டினாய். நாவல் படிக்க படிக்க கண்களில் ஈரமாவதை என்னால் உணரமுடிந்தது. கல்விக்கான போராட்டத்தை முன்னெடுத்த துய்ஷன் அந்த ஊரில் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதே அல்டி னாயின் வருத்தம்.

அதற்காகவே அவர் அந்த விழாவை புறக்கணித்தார் என்பதை நாவலை வாசிக்கும் போது நமக்கு விளங்குகிறது. ஆனால் அந்த கிராமத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய துய்ஷன் சாதரணமாகவே தன்னை கருதிக் கொள்கிறார். எத்தனை சோதனை வந்தாலும், மகிழ்வு வந்தாலும் தங்களின் இலட்சியம்தான் குறிக்கோளாக வாழ்ந்த துய்ஷன் போன்ற கம்யூனிஸ்ட்டுகள் இருக்கின்றவரை ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி ஆண்டாண்டுகாலம் இருக்கும் என்பதை இந்த குறுநாவல் மூலம் சிங்கிஸ் ஐத்மாத்தவ் விளக்கி இருக்கிறார். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒரு முதல் ஆசிரியன் இடம்பெற்று இருப்பான். அது அவனுடைய அப்பாவாகவோ, அம்மாவாகவோ, உறவினர்களகவோ, சமூக போராளியாகவோ இருக்கலாம்.
சமூகத்தை மாற்றி அமைக்க நினைக்கும் ஒவ்வொருத்தரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகம்: முதல் ஆசிரியர்

ஆசிரியர்: சிங்கிஸ் ஐத் மாத்தவ்

விலை: ரூ.50

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/muthal-aasiriyar-3221/

மதிப்புரை
கு.காந்தி
அரச நகரி,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *