“முதல் ஆசிரியர்”உலக புகழ்பெற்ற நாவல்.ஒரு சிறுமியின் வாழ்க்கையை வளப்படுத்திய அவளுடைய முதல் ஆசிரியரைப்பற்றியும், அந்த ஆசிரியர் முறையாகக் கல்வி பயிலவில்லையென்றாலும் அவருக்குத் தெரிந்த அளவுக்குத் தெரிந்த வழியில், “குர்க்குறீ” கிராமத்திற்கு கல்வி கற்பிக்கவந்தவர். அந்தக்கதையைப் பற்றிய இந்நாவலைப் பார்ப்போம்.
‘சோவியத் யூனியன்’ லெனின் ஆட்சியின் கீழ் வந்தபின்பு அதனுடைய ஒரு பகுதியான கிர்கிஸ்தான் என்ற பகுதி கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் உள்ளது. அப்போது குர்க்குறீ ஊரைச் சேர்ந்தவர் தூய்ஷன். இவர் தன் ராணுவசேவையை முடித்துக்கொண்டு தனது ஊருக்கு ஆசிரியராக வருகிறார். ஆனால் தூய்சன் பல ஆண்டுகள் கழித்து தன் சொந்த ஊருக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.அந்தக் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்க அவருக்கு அரசின் அனுமதி கிடைக்கிறது. ஆனால் சிலர் அந்த ஊரில் பள்ளி நிறுவ கடுமையான எதிர்ப்பு வருகிறது.இருந்தாலும் தன் முயற்சி வீண் போகாமல் இருக்க மிகவும் போராடி ஒரு குதிரைக் கொட்டகையில் பள்ளியை நிறுவுகிறார். அவருக்கு ஊரில் யாரும் எந்த உதவியும் வழங்காத நிலையிலும் தனியொருவனாக செய்துமுடிக்கிறார். ஒரு ஊர் என்றால் தாய் ,தந்தையற்ற சிறுமி,சிறுவர் இருக்கத்தான் செய்வார்கள் அதுபோல அங்கும் ஒரு அனாதை சிறுமி அல்டினாய் தன் சித்தப்பா வீட்டில் வாழ்ந்துவருகிறாள்.
தூய்ஷன் ஊருக்குள் இருக்கும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பச்சொல்லி பெற்றோர்களிடமும், ஊர்ப் பெரியோர்களிடமும் வேண்டுகிறார். பலர் தன் பிள்ளைகளை அனுப்ப வில்லை, சிலர் வேண்டா வெறுப்பாக பள்ளிக்கு அனுப்புகின்றனர். பள்ளிக்குச் சென்ற ஒரு சிறுமியாக அல்டினோயும் செல்கிறாள். ஆசிரியரின் அன்பினால் அவளுடைய எதிர்காலத்தை வெளிச்சமாக்க முயல்கிறாள். மற்ற மாணவர்களைக்காட்டிலும் சிறந்தவளாக,ஆர்வம் மிகுந்தவளாக இருக்கிறாள்.
ஒரு நாள் பள்ளிச் சிறுவர்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சமைக்கும் அடுப்பிற்கும்,குளிர் காய்வதற்கு நெருப்பு மூட்டுவதற்கும் எரு பொறுக்கச் சென்றார்கள்.எரு மற்றும் விறகு சேர்த்து விட்டு தூய்ஷனின் பள்ளிக்கு வருவார்கள். தூய்ஷன் தாமதமாக வரும் சிறுவர்கள் மீது கோபம் கொள்ளாமல் அன்போடு அவர்களை வரவேற்று அன்பாய்ப் பேசுவார். அல்டினாவின் மனம் ஆசிரியரின் பேச்சைக் கேட்டு மகிழ்சி அடைவாள்.கொஞ்ச நேரம் பாடம் கவனித்த பிறகு பொறுக்கிய எருவை பள்ளியில் இருந்து எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு செல்கிறாள். வீட்டிற்கு வரக் கால தாமதம் ஆனதால் அவளின் சித்தியிடம் வசவு பெறுகிறாள்.
ஆசிரியர் தூய்ஷன் அந்தச் சிறுமியின் ஆர்வத்தைக் கண்டு இவள் வரும்காலத்தில் சிறந்தவளாக,நல்ல கல்வியாளர் ஆக ஆசைப்பட்டு, அல்டினா நல்ல மேற்படிப்புப் படிக்க நகரத்திற்கு அனுப்ப எண்ணுகிறார் ஆசிரியர்.அதற்கு இடையில் அந்தச் சிறுமியின் சித்தியால் இவளுக்கு ஆபத்து வருகிறது. அந்தச் சிறுமியின் சித்தி,சித்தப்பா மற்றும் சிலர் ஒருநாள் தூய்ஷனை அடித்து விட்டு அல்டினாவை அங்கிருந்து கடத்துகிறார்கள்.பின்பு அவள் இருக்கும் இடம் கண்டு தூய்சன் ராணுவ வீரர்களின் உதவியில் அல்டினாவை மீட்டு நகரத்திற்கு அனுப்புகிறார்.
படித்துமுடித்து உயர்ந்தவேலைக்குச் செல்லும் அல்டினா தூஷ்யனைத் தேடுகிறாள்.தன் சொந்த கிராமத்தில் வந்து தேடுகிறாள். தூய்ஷன் அங்கு இல்லை என்று தெரிந்ததும் மனம் முழுக்க வருத்தத்துடன் அவளின் முதல் ஆசிரியர்தான் நிரம்பியுள்ளார்.
பல ஆண்டுகளுக்குப்பின் சிறந்த பெண்ணாக அல்டினா அதே கிராமத்திற்குப் பள்ளிக்கட்டடத் திறப்புவிழாவிற்குச் சிறப்பு விருந்தினராகச் செல்கிறாள். அப்போது அங்கு வயதான, திருமணமே செய்யாமல் இருக்கிற தூய்ஷன் அதே ஊரில் போஸ்ட்மேனாக இருப்பதைக் கேள்விபடுகிறாள். ஆனால் அவள் மனம் நிரம்பிய அவளின் முதல் ஆசிரியனை ஏதோ ஒரு காரணத்தினால் சந்திக்காமலேயே திரும்புகின்றாள். தூய்ஷனும் அல்டினாவும் நட்டு வைத்து வளர்த்த *இரண்டு பாப்ளார் மரங்கள்* மட்டும் அந்தக் குன்றுப் பகுதியில் அவர்களின் நினைவுகளைச் சுமந்து நிற்கிறது.
தூய்சனுக்கும், அல்டினாவுக்கும் இடையில் இருந்த உறவு உன்னதமானது. ஆசிரியர் பல எதிர்ப்புகளையும்,தடைகளையும் தாண்டி அல்டினாவை மேல் படிப்புக்கு நகரத்திற்கு அனுப்பும்போது அவள் மீது உள்ள அன்பால் அந்த ரயிலுடனே ஓடிவந்து ஏதோ சொல்ல நினைப்பார் ஆனால் சொல்லவில்லை. தனக்கு வயதான பின்பும் தன் இறுதிக்காலம் வரை அந்த ஊருக்கு, ஊரில் உள்ள மக்களுக்கு சேவை செய்வேன் என்ற நல்ல எண்ணத்தோடு திருமணம் முடிக்காமல் அதே ஊரில் வாழும் தூய்ஷன், உலகில் அல்டினாவால் மிகவும் நேசிக்கப்பட்ட அந்த தூய்ஷனை கண்டும் ஏன் சந்திக்காமலே,அவரிடம் பேசாமலே சென்றாள் என்பது கொஞ்சம் வருத்தம் உண்டாக்கும். சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்த தூய்சன் ஒரு புனிதர் ஆனார்.
இறுதியில் தூய்சனின் எண்ணம் நிறைவேறியது. அங்குள்ள ஏழைக்குழந்தைகள் படிப்பும்,அவர்கள் படிக்கும் கட்டடத்தின் தரமும் உயர்ந்துள்ளது. அவரின் முதல் மாணவி அல்டினா உலகில் சிறந்த கல்வியாளராகவும், சிறந்தவராகவும் உருவாகிய விஷயம் அந்த ஆசிரியருக்கு தெரியவில்லை என்றாலும் அதன் பெருமை அவருக்கே சேரும்.
புத்தகத்தின் பெயர்: முதல் ஆசிரியர்
ஆசிரியர்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 2008
பக்கங்கள்:80
விலை:80
தி. தாஜ்தீன்
முதுகலை ஆசிரியர்
தி கிரசண்ட் மேல்நிலைப் பள்ளி
ஆவணியாபுரம்