தோழர் நிவேதிதா லூயிஸ் Nivedita Louis எழுதிய முதல் பெண்கள் நூலைப் படித்ததும் பிரமிப்பு, மகிழ்ச்சி, பெருமையுடன் நிறைய முன்னோடிப் பெண்களை இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேனே என்ற அவமானமும், குற்ற உணர்வும் ஏற்பட்டது.

`அடிமைகளாக வாழ்ந்தவர்களுக்கு அறிவுக் கண்ணைத் திறந்துவிட்டு அவர்களது வலிமையையும், ஆற்றலையும் நினைவுபடுத்திய பிறகு அவர்களுக்கு சமத்துவ சகோதரத்துவ வாழ்வு தர மறுப்பது தற்கொலைக்கு ஒப்பாகும்’ என்று அழுத்தமாக உரைத்த முதல் தலித் தமிழ்ப்பெண் அமைச்சரும், திராவிடக் கட்சிகளின் முதல் பெண் மத்திய அமைச்சருமான சத்தியவாணி முத்து அம்மையாரும், `பெண்களுக்கு கல்வி அளியுங்கள்’ என்று 1937ல் திருநெல்வேலி ஜில்லா ஆதிதிராவிடர் மாநாட்டின் தலைமை உரையில் முழங்கிய கவுரவ நீதிபதி அன்னை மீனாம்பாள் சிவராஜூம், 1938ம் ஆண்டிலேயே `காதலா… கடமையா?’ என்ற நாவலை எழுதி, தன் இயற்பெயர், முகவரி, புகைப்படத்துடன் பதிப்பித்த சித்தி ஜூனைதா பேகமும், ஆணாதிக்க சமுதாயத்தின் சவால்களை தன் கடும் உழைப்பால் எதிர்கொண்டு இந்திய வானியல் ஆய்வுத்துறையின் தூணாக விளங்கிய `இந்திய வெதர்வுமன்’ அன்னா மானியும், `150 ஆண்டுகளுக்கு முன் ஒரு வேளை நான் பிறந்திருந்தால் என் இறந்த கணவரின் சிதையுடன் சேர்ந்து எரிந்து போயிருப்பேன், படிப்புடன் நிறுத்திவிடாமல் பெண் பொறியாளர்கள் பணியிலும் தங்கள் முத்திரையைப் பதிக்க வேண்டும்’ என்று 1964ல் நியூயார்க் மாநாட்டில் குரல் எழுப்பிய இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் ஏ.லலிதாவும், `அரசியல் எப்போதுமே ஆண்களின் ஆதிக்கம் நிறைந்தது, நான் அரசியலில் இருந்த காலத்திலும் கூட தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பொதுக் கணக்கு கமிட்டியில் என்னைத் தவிர வேறு பெண்கள் யாரும் இல்லை’ என்று பதிவு செய்த முதல் படுகர் இனப் பட்டதாரி பெண்ணும், முதல் படுகர் இனப் பெண் நாடாளுமன்ற உறுப்பினருமான அக்கம்மாவும்…. எல்லாரும் நினைவில் வலம் வந்து உரையாடிக் கொண்டே இருக்கிறார்கள்.



`எங்கோ ஒரு வீட்டின் வரவேற்பறையில் மாட்டப்பட்டிருக்கும் அந்தப் பெண்மணி என்னைப் பார்த்துச் சிரிப்பதை உணர்ந்திருக்கிறேன்…’ என்று நிவேதிதா தோழர் முன்னுரையில் அழகாக குறிப்பிடுவதைப் போல, முதல் பெண்கள் எல்லோரும் என்னைச் சுற்றி உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த இந்தப் பெண்கள் தாம் ஈடுபட்ட பல துறைகளில் இந்தியாவிலேயே முதல் பெண்களாக விளங்கியுள்ளனர்.

இந்தியாவின் முதல் பெண் விமானி உஷா சுந்தரம் தான் புளூ கிராஸ் அமைப்பைத் துவக்கியவர்; இந்தியாவின் முதல் பெண் மேயரும், சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயருமான தாரா செரியன் தான் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் என்பவை அறிந்திராத அரிய தகவல்கள்.

பூவுக்கு பெயரளித்த ஒரே இந்தியப் பெண்ணும், இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தின் முதல் பெண் தலைவருமான விஞ்ஞானி ஜானகி அம்மாள், உலகின் முதல் பெண் சர்ஜன் ஜெனரல் மேரி பூனென் லூகோஸ், தமிழகத்தின் முதல் கிறிஸ்துவப் பெண் அமைச்சர் மரிய லூர்தம்மாள் சைமன், நாட்டின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி வி.எஸ்.ரமா தேவி, இந்தியாவின் முதல் பெண் திரைப்பட ஒலிப்பதிவுக் கலைஞர் மீனா நாராயணன், இந்தியாவின் முதல் தொழில்முறை பெண் கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் மார்க்சிய காந்தி, நாட்டின் முதல் பெண் பட்டயக் கணக்காளர் ஆர்.சிவபோகம் அம்மாள் போன்றவர்களைப் பற்றியெல்லாம் இந்த நூலின் வாயிலாகத்தான் தெரிந்து கொண்டேன்.



தோழர் நிவேதிதா, 43 பெண்களைப் பற்றிய அரிய தகவல்களின் தொகுப்பாக மட்டும் இந்த நூலை எழுதவில்லை. பெண்ணியப் பார்வையுடன், அவற்றை கதை போல சுவாரசியமாகவும், கவனமாகவும் தொகுத்துள்ள பாங்கு மிக அருமை ! இவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக கடினமாக உழைத்துள்ளார். அவர்களின் குடும்ப உறுப்பினர்களைத் தேடிப் பிடித்து, அவர்களுடன் உரையாடி வாய்மொழி வரலாற்றையும் நிவேதிதா சேகரித்துள்ளார். அந்த வகையில் அனுபவப் பதிவாகவும் இது திகழ்கிறது. இந்திய, தமிழகப் பெண்கள் வரலாற்றின் மிக முக்கிய ஆவணம் இந்த நூல்.

இந்த நூலுக்கு சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ச.ஆனந்தி அவர்கள் எழுதியுள்ள அணிந்துரையையும் குறிப்பிட வேண்டும். நிவேதிதா இந்த நூலை ஒரு கலைக் களஞ்சியம் போலத் தொகுத்துள்ளார் என்று பாராட்டியுள்ள அவர் பெண்ணிய நோக்கில் எழுதப்படும் வரலாற்றின் முக்கியத்துவத்தை அழகாக எடுத்துரைக்கிறார். ’’தேசிய இயக்கமானது பெண்கள் முன்னேற்றம் குறித்து அக்கறை செலுத்திய போதும், குடும்பத்தில்/ அகவாழ்வில் நிலவி வந்த சாதியம் சார்ந்த ஆணாதிக்க கருத்துக்களையே தேசிய கலாச்சார அடையாளங்களாக அடையாளப்படுத்தியது. இக்கலாச்சார அடையாளங்களைக் கொண்டே பொதுவெளியில் புழங்கிய பெண்களின் நடத்தை நிர்ணயிக்கப்பட்டது, மதிப்பிடப்பட்டது. படிப்பிலும், அறிவிலும், தன்னம்பிக்கையுடன் வெற்றி நடைபோட்ட பெண்கள் பொதுவெளியில் தாய்மைப் பண்புடனும், தாரமாகவும், தமக்கையாகவும், `மானமிகு’ மகளாகவும் அறியப்பட வேண்டும் என்பதில் தேசிய இயக்கம் கவனமாக இருந்தது என்பதை அக்காலத்தில் அவ்வியக்கத்தில் பங்குபெற்ற பெண்களே குறிப்பிட்டுள்ளனர். குடும்பம் குறித்த இந்திய தேசிய ஆணாதிக்கக் கருத்துக்களை, அடையாளங்களை எதிர்த்த தேவதாசிகள், விலைமாதர்கள், திருமணம் மறுத்த பெண்கள், ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் போன்றோருக்கு ஏற்பட்ட இன்னல்கள், இழிநிலை ஆகியன குறித்து மௌனம் சாதித்து, இப்பெண்களின் அரசியல் பங்கை இந்திய தேசியவாதிகள் மறுதலித்தனர். இதிலிருந்தே அவர்களின் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தினை நாம் புரிந்து கொள்ளலாம். இத்தகைய ஆணாதிக்கக் கருத்துக்களை விளிம்பு நிலை பெண்கள் எவ்வாறு எதிர்கொண்டனர், அவர்களின் தேசப்பற்று, பெண்ணியக் கொள்கைகள் ஆகியன இந்தியப் பெண்கள் முன்னேற்றத்திற்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் எவ்வாறு உதவின என்பனவற்றை பெண்ணிய நோக்கில் எழுதப்பட்ட வரலாறுகள் தான் முதலில் பேசின’’ என்ற அவரின் கருத்துக்களை ஆழமாக உள்வாங்க வேண்டும்.



ஓர் ஆண், பெண்ணின் வரலாற்றினை எழுதுவதற்கும், ஒரு பெண் பெண்ணிய நோக்கில் பெண்ணின் வரலாற்றினை எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆணுக்கு முக்கியமாகப் படாத செய்தி, பெண்ணின் பார்வையில் மிக முக்கியமானதாக இருக்கும். மதராஸ் மாகாணத்தின் பட்டதாரியான முதல் இந்துப் பெண், முதல் கைம்பெண் – சகோதரி ஆர்.எஸ்.சுப்புலட்சுமி, கைம்பெண்களுக்கு அடைக்கலம் தந்த சாரதா இல்லத்தை நிறுவியவர். அவரைப் பற்றிய கட்டுரையை இப்படி முடிக்கிறார் நிவேதிதா. இல்லத்தில் இருக்கும் கைம்பெண்களை மணம் செய்து கொள்கிறேன் என்று வருபவர்களைப் பற்றி இப்படி சொல்வாராம் சுப்புலட்சுமி `மூன்று வேளையும் நல்ல உணவு, கல்வி, தூக்கம், விளையாட்டு, கார் ஓட்டுவது என்று சாரதா இல்லத்துப் பெண்கள் எந்தப் பிரச்சனையும் இன்றி நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆணுக்கு காபி தரவும், பிள்ளை பெற்றுத் தரவும் மட்டுமே கைம்பெண்கள் மறுமணம் செய்ய வேண்டுமென்றால், அவர்களுக்கு அது எதற்கு? இரக்கத்தால் வரும் அன்பு அர்த்தமற்றது’

இது தான் பெண் எழுத்து. பெண்ணியப் பார்வை. உங்களுக்கு நிறைய அன்பு நிவேதிதா தோழர் <3 😍

`முதல் பெண்கள்’ நூலை அழகாக அச்சிட்டு வெளியிட்டுள்ள பெண்ணிய பதிப்பகமான மைத்ரி புக்ஸ்-ஸுக்கு நன்றியும், அன்பான வாழ்த்துகளும்

பி.கு : நூலின் விலை ரூ.200/-. மைத்ரி புக்ஸ் முகவரி : 49 பி, ஒமேகா பிளாட்ஸ், 4வது லின்க் சாலை, சதாசிவ நகர், மடிப்பாக்கம், சென்னை 600 091 – தொலைபேசி : 9445575740 – மின்னஞ்சல் : [email protected]



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *