Muthal pengal முதல் பெண்கள்

சாதி அமைப்பும் பெண் அடிமைத்தனமும் ஆணாதிக்கமும் பின்னிப் பிணைந்து ஒடுக்கும் நம் இந்திய சமூகக் கட்டமைப்பில் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பையும் செவ்வனே செய்து கொண்டிருக்கும் பெண்கள் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஈடுபட முனைகையில் அவ்வளவு எளிதில் சமூகம் அனுமதி அளிப்பதில்லை.

அன்றைய காலகட்டத்தில் சமூகப் பிரச்சினைகளுக்காகவும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியாக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டும் பெண்கள் அனுபவித்த தடைகளையும் வேதனைகளையும் அவர்கள் கடந்து வந்த வலி நிறைந்த பாதைகளையும் ‘முதல் பெண்கள்’ நூல் சிறப்புற எடுத்துரைக்கிறது. இந்திய வரலாற்றில் ஆணுக்கு நிகர் பெண் என்ற சமத்துவம் நிலவாத காலகட்டத்தில் குடும்பத்தைத் துறந்து சமூகத்திற்காக போராட முன் வரும் பெண்களின் மனநிலையை இந்த நூல் தெளிவாக விவரிக்கிறது.

கட்டமைப்பிலிருந்து வெளியேறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் அவற்றையெல்லாம் புறந்தள்ளி சமூகத்தின் பிரச்சினைகள் மீது தனது மனதிற்குள் எழும் கோபத்தையும் ஆவேசத்தையும் போராட்டத்தின் வழி நின்று தீர்வு காண வேண்டும் என்ற உயரிய நோக்கில் பொதுவெளிக்குப் பயணம் செய்யும் பெண்களின் வலிகளை, துயரங்களை இந்த நூல் நமக்குள் தெளிவாகக் கடத்துகிறது. கிட்டத்தட்ட 45 முதல் பெண்களின் வரலாற்றை கதை கூறும் பாங்கில் நம் முன்னே நடந்த நிகழ்வுகளை நாம் கண்ணுறுவது போல எழுதிச் சென்றிருக்கும் நூலாசிரியருக்கு அவரின் உழைப்பு சிறப்பான வெற்றியை ஈட்டித் தருகிறது.

இதில இடம் பெற்றிருக்கும் இந்திய பெண்கள் பெரும்பாலும் காந்திய சிந்தனையால் ஈர்க்கப்பட்டு அன்றைய காலகட்டத்தில் காந்தியக் கொள்கைகளும் அவரின் சிந்தனைகளும் எப்படி எல்லாம் சமூகத்தை சீர்திருத்தவும் நாட்டை நேர்படுத்தவும் மக்களுக்கு வழிகாட்டவும் சிறப்பாக அமைகிறது என்பதை தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து காட்டியதன் மூலம் நமக்கு உணர்த்துகின்றனர். இன்றும் காந்தியமும் அவரின் கொள்கைகளும் பின்பற்றப்பட வேண்டியவை என்பதை இவர்களின் வாழ்க்கை வரலாற்றின் வழியாக இந்த நூல் நமக்கும் வலியுறுத்துகிறது.

தேசியம், சாதியம், வர்க்கம், பாலினப் பாகுபாடு சார்ந்த குடும்ப வழக்கங்கள்,சக உயிரியாக பெண்ணை மதித்தல் பொருளாதாரப் பின்னணி, தேசத்தின் மீதான பற்று ஆகியன எவ்வாறு ஒவ்வொருவரின் முன்னேற்றத்தையும் சாதனைகளையும் தீர்மானிக்கின்றன என்பதையும் இந்த நூலில் எழுத்தாளர் சிறப்பாக விவரிக்கிறார்.

ஒரு ஆண் சமூகப் பிரச்சினைகளுக்காக போராட்டக் களத்தில் இறங்குவது என்பது அவருடன் மட்டும் தொடர்புடையது. அதே சமயம் ஒரு பெண் சமூகப் பிரச்சினைகளுக்காக வீதிக்கு வருவது என்பது தனது குடும்பத்தை தனது சமூகத்தை என இரண்டையும் சரி செய்து அதற்குப் பிறகு வெளிவர வேண்டிய கட்டாயத்தில் சிக்கவேண்டியிருக்கிறது. இத்தகு பெண்கள் சாதி சமயக் கட்டுப்பாடுகள் தடைகள் மனமுறிவு போன்றவற்றையெல்லாம் கடந்து சமூகத்திற்கான கடமையை ஆற்ற தங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு முதல் பெண்களின் வரலாற்றில் ஒவ்வொரு விதமான வலிகளை வேதனைகளை வாசிக்கும் நமக்கு அறியத் தருகிறது நூல். ஒட்டுமொத்தமாக இந்தப் பெண்களின் சாதனைகளை வாசிக்கும் போது அன்றைய காலகட்டத்தில் அவர்கள் நாட்டின் முன்னேற்றத்தையே பெரிதெனக் கொண்டு செயல்பட்ட பொதுநல நோக்கை நம்மால் உணர முடிகிறது. இந்திய சமூகம் அரசியல் பொருளாதாரம் அறிவியல் ஆராய்ச்சி குடும்ப நலம், அறுவை சிகிச்சை, திரைத்துறை, இசைத்துறை ஆகியவற்றில் இந்த பெண்கள் ஆற்றியுள்ள பங்கு பற்றியும் இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.

இந்தியாவில் நிலவும் பாலினப் பாகுபாடு குடும்பத்திலும் பொது வெளியிலும் நிலவும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு இந்த நூலை எழுதியதன் அவசியத்தை விளக்கும் ஆசிரியரின் தேடலும் முதல் பெண்மணிகளைப் பற்றிய விரிவான வரலாறும் சிறப்பான கட்டமைப்பில் எழுதப்பட்டுள்ளன.

நூலிலிருந்து சில பகுதிகள்;

 •  முதல் படுகரின பட்டதாரி பெண்
  முதல் படுகரின பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆணுக்குச் சமமாக தேயிலை தோட்டங்களில் பணியாற்றிய பெண்களுக்கு கூலி வாங்கித் தந்தவர் என பல்வேறு பெருமைகளுக்குரியவர் அக்கம்மா
 • கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் 122 படங்கள் என் எஸ் கிருஷ்ணன் உடன் ஜோடி சேர்ந்து நடித்த ஒரே நடிகை மதுரம். முதன் முதலில் இரட்டை வேடம் தரித்த நகைச்சுவை நடிகை இவரே. இவர் வேறு நடிகருடன் ஜோடியாக நடித்த ஒரே படம் பைத்தியக்காரன் அவர் எம்ஜிஆர்
 • நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய குழுவில் இடம் பெற்ற ஒரே பெண் . இந்திய திரைப்படச் சங்கங்களின் கூட்டமைப்பின் முதல் பெண் துணைத் தலைவர் அம்மு சுவாமிநாதன்
 • இந்தியாவின் முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி ஆண்களுக்கு நிகராக குதிரை ஏற்றம் துப்பாக்கி சுடுதல் போன்ற கலைகளை கற்றுத் தேர்ந்தவர். வெளிநாட்டுப் பணி வேண்டாம் என மறுத்து குடிமைப் பணியே வேண்டும் என்று போராடிப் பெற்று முதல் பெண் குடிமைப் பணி அதிகாரியாக செயலாற்றியவர் அண்ணா ராஜம் மல்ஹோத்ரா
 • ஒன்பது வயது நிரம்பிய பிறந்தநாள் பரிசாக கிடைத்த வைரத்தோடு வேண்டாம் என்று மறுத்து 10 தொகுதிகள் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா புத்தகங்களை வாங்கித் தரக் கேட்டு அடம் பிடித்து தன் எட்டு வயது முதல் இறுதி நாட்கள் வரை கதர் உடைகளையே அணிந்தவர். இந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் துணை இயக்குனர். இந்திய வெதர் உமன். ஓசோன் பேண்ட் என்ற ஓசோன் சிதைவை அளக்கும் கருவியை உருவாக்கியவர். தும்பா ராக்கெட் தளத்தில் வானியல் ஆய்வுக்கூடம் அமைத்தவர். சூரிய கதிரியக்கத் தகவல்கள் குறித்து இரண்டு புத்தகங்கள் வெளியிட்டவர் என்ற பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்
  அன்னா மானி
 • லண்டனில் இருந்து சென்னைக்கு இலகுரக எஞ்சின் விமானத்தை வெறும் 33 மணி நேரத்தில் ஓட்டி உலக சாதனை செய்தவர் உஷா சுந்தரம்
 • துருக்கியில் இருந்து வந்து சென்னையின் முதல் இஸ்லாமிய பெண் சட்டமன்ற உறுப்பினராகவும் முதல் கௌரவ நீதிபதியாகவும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் மக்கள் தொண்டாட்டியவர் கதீஜா யாகூப் ஹாசன்.
 •  அன்றைய சூழலில் கைம்பெண்ணான பிராமண சமூக சிறுமிகள் மொட்டை அடிக்கப்பட்டு காவி உடுத்தி செக்கு மாடு போல வீட்டு வேலைகளை செய்து வீட்டுக்குள்ளே மட்டுமே முடங்கிக் கிடந்த சூழலில் அத்தகைய நிலைக்கு தானும் ஆளாகாமல் தாய்மை மற்றும் மகப்பேறு முதுகலை மருத்துவ பட்டம் பெற்ற தமிழகத்தின் முதல் பெண் மருத்துவராக சாதனை படைத்தவர் வரதன் கல்யாணி.
 • ஒரு முறை அல்ல ஆறு முறை இறுதித் தேர்வில் படையெடுத்து இறுதியாக மதராஸ் மருத்துவக் கல்லூரியில் எம் எஸ் படித்து முடித்தவர். ஆழ் மூளை சிமுலேஷன் அறுவை சிகிச்சை செய்த இந்தியாவின் முதல் நரம்பியல் நிபுணர் டி எஸ் கனகா.
 •  ஆண் எழுத்தாளர்களே எழுதத் தயங்கிய துப்பறியும் நாவல்கள் எழுதி தமிழின் முதல் பெண் துப்பறியும் நாவல் எழுத்தாளராக உருவானவர். தன் வாழ்நாளில் 100க்கும் மேற்பட்ட பெண்களை எழுதுவதற்கு அறிமுகம் செய்தவர். 110 நாவல்கள் எழுதியவர் புதின அரசி வை மு கோதை நாயகி.
 • அடிமைகளாக வாழ்ந்தவர்களுக்கு அறிவுக்கண்ணைத் திறந்து விட்டு அவர்களது வலிமையையும் ஆற்றலையும் நினைவுபடுத்திய பிறகு அவர்களுக்கு சமத்துவ சகோதரத்துவ வாழ்வு தர மறுப்பது தற்கொலைக்குச் சமமாகும்” என்ற கூற்றுக்கு சொந்தக்காரர் சத்தியவாணி முத்து. முதல் தலித் தமிழ் பெண் அமைச்சர் திராவிட கட்சிகளின் முதல் பெண் மத்திய அமைச்சர் என்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர் இவர்.
 • உழுபவனுக்கு நிலம் சொந்தம், 5 வயது முதல் கட்டாயக் கல்வி, கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல், ஏழை பணக்காரர் வேறுபாட்டை நீக்குதல் என்று அன்றைய காலகட்டத்தில் சமூகப் புரட்சி பேசிய காதலா கடமையா என்ற முதல் நாவலை எழுதிய முதல் இஸ்லாமிய பெண் எழுத்தாளர் கணவரின் மரணத்திற்கு பின் அந்த நாவலை எழுதிய விதவை சித்தி ஜுனைதா பேகம்.
 • லிட்டில் விடோ என்று அறியப்பட்ட கைம்பெண் ஒருவர் கற்ற கல்வி மூலம் தன்னைத் தானே மீட்டெடுத்து அதே கல்வியின் மூலம் ஆயிரக்கணக்கான பெண்களை மீட்கும் கருவியாக செயல்பட்டு இருக்கிறார். தலையை மழுங்க சிதைத்து அழுக்கு வெள்ளைச்சேலை கட்டி தினமும் ஒரு வேளை மட்டுமே கிடைத்த உணவை உண்டு உறவினர் வீடுகளில் அவர்கள் தயவுக் கொண்டு கண்களில் மட்டும் உயிர் தாங்கியபடி எலும்புகள் துருத்திய உடல்களுடன் ஒடுங்கிக் கிடந்த பெண்களாக மாறி விடுவோமோ என்ற நிலையில் அப்படியான வாய்ப்பு இருந்தும் அதை புறம் தள்ளி கைம்பெண்களுக்கு அடைக்கலம் தந்த சாரதா இல்லம், சாரதா வித்யாலயா, வித்யா மந்திர், சாரதா லேடிஸ் யூனியன், மயிலாப்பூர் லேடிஸ் கிளப் போன்ற பல்வேறு நிறுவனங்களை தோற்றுவித்து பெண்களின் வாழ்விற்கு அடித்தளமிட்டவர் ஆர் எஸ் சுப்புலட்சுமி
 • ஒரு பவுன் தங்கத்தின் விலை 10 ரூபாய் என்ற காலகட்டத்தில் ஒரு நாடகத்தில் நடிக்க 300 ரூபாய் வாங்கிய முதல் பெண்மணி. மதுரை மேலமாசி வீதியில் இரண்டு பெரிய வீடுகள் 200 பவுன் தங்க நகைகள் விலை உயர்ந்த நூற்றுக்கணக்கான பட்டுப் புடவைகள் வைத்திருந்த ஒரு பெண்மணி விடுதலைப் போராட்டத்திற்காக தனது அத்தனை சொத்துகளையும் இழந்து வறுமை வாட்டி வீடுகள் நகைகள் புடவைகள் அனைத்தையும் இழந்துவிட்ட ஏழ்மையிலும் தன்னை நாடி வந்த தொண்டர்களுக்கு உணவளிக்கத் தயங்காத உயரிய பெண்மணி. பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட முதல் தென்னிந்திய பெண். தமிழ்நாடு ஜனநாயக மாதர் சங்கத்தின் முதல் தலைவர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் விடுதலைப் போராட்ட வீரர் என்ற அரசு பட்டயத்தையும் ஓய்வூதியத்தையும் வாங்க மறுத்து தன்னை இந்திய குடிமகளாக மட்டுமே அறிவித்துக்கொண்ட போராட்டவாதி
  கே பி ஜானகி அம்மாள்

இப்படிப்பட்ட சுமார் 45க்கும் மேற்பட்ட முதல் பெண்களின் இந்த வரலாற்று நூலில் ஒவ்வொரு பெண்ணும் தேசத்தின் முன்னேற்றத்தையும் பொதுநலனையும் மட்டுமே கருத்தில் கொண்டு தனது உறவுகளைத் துறந்தும் குடும்பத்தை மறந்தும் தேசத்தின் கனவுகளே தனது கனவுகளெனச் சுமந்து கொண்டு பொதுவெளியில் பல்வேறு தடைகளைத் தாண்டி உயர்ந்த இடத்திற்கு அடைந்திருப்பதை நூலாசிரியர் சிறப்பான காட்சிகளின் வழியே நமக்கு அறியத் தருகிறார்.

இன்றைய ஆண் பெண் சமத்துவ காலகட்டத்தில் இந்த பெண்களின் வரலாறு அறியப்படாமல் போகலாம். பெரிதும் கவனத்தை ஈர்க்காமலும் இருக்கலாம். ஆனால் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் தனது குடும்பத்தின் உயர்வுக்கும் பாடுபடும் ஒவ்வொரு பெண்களும் இந்த முதல் பெண்களை தமது லட்சியப் பாதையில் நிச்சயமாக நிலைநிறுத்திக் கொள்வார்கள் என்பது உறுதி. நூலாசிரியர் நிவேதிதா லூயிஸ் அவர்கள் நூலில் குறிப்பிடுவது போல உணர்வுப் பூர்வமாக எழுதினாலும் எழுதுவதில் அறிவார்ந்த சிந்தனை வாசகனுக்கு எழ வேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதில் வெற்றி பெறுகிறது முதல் பெண்கள் நூல்.

 

                  நூலின் தகவல்கள் 

நூல் : முதல் பெண்கள் (கட்டுரைத் தொகுப்பு)

நூலாசிரியர் : நிவேதிதா லூயிஸ்

இரண்டாம் பதிப்பு : செப்டம்பர் 2021

பக்கம்  : 224

விலை :  ரூ.210

வெளியீடு :  மைத்ரி புக்ஸ்

தொடர்புக்கு  : 9940474054

 

       நூலறிமுகம் எழுதியவர் 

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *