நூல் அறிமுகம்: பெண்ணியம் – ரேகா ஜெயக்குமார்இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்க வேண்டிய புத்தக பட்டியலில் இடம் பெற்றிருந்த புத்தகம். ஆனால்,சூழ்நிலையின் காரணமாக புத்தக கண்காட்சியில் வாங்க முடியாமல் போயிற்று.

புத்தகம் வாங்காமல் போனது ஒரு வகையில் நல்லது தான் என்று இப்போது தோன்றுகிறது. #பெண்ணியம் வாரத்திற்காக இப்படியொரு அற்புதமான புத்தகத்தை படிக்க வாய்ப்பு நேர்ந்தது.
ஆசிரியர் நிவேதிதா லூயிஸ் அவர்கள் ஒரு வரலாற்று ஆர்வலர்.ஊரடங்கின் ஆரம்பகால நாட்களில் இவரது முதல் பெண்கள் புத்தகம் குறித்தும், வடசென்னை பகுதியின் வரலாறு குறித்தும், ஆதிச்சநல்லூரின் தொல்லியல் ஆய்வுகள் குறித்தும் இவரது பல நிகழ்ச்சிகளை இணையத்தின் வழியாக பார்க்கவும் கேட்கவும் வாய்ப்பினை பெற்றேன்.

அற்புதமான பேச்சாளர்.சொல்ல வருகின்ற கருத்துகளை எந்தவொரு தங்குதடையுமின்றி பார்வையாளர்களுக்கு தொய்வின்றி மிகுந்த ரசனையுடன் கருத்துகளை எடுத்துரைப்பதில் வல்லவர்.நிறைய நிகழ்வுகளில் இவரது ‘முதல் பெண்கள்’ புத்தகம் குறித்து இவர் பகிர்ந்து கொண்ட பெண்மணிகளின் சிறப்புகளை கேட்டறிந்த காரணத்தினாலும், ஏற்கனவே வாங்க வேண்டிய புத்தக பட்டியலில் இருந்த காரணத்தினாலும்,இந்த வார போட்டிக்காகவும் இப்புத்தகத்தை கடந்த மாதம் வாங்கினேன்.

இதுவரை இணையத்தின் வழியாக முதல் பெண்கள் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சில பெண்மணிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிந்திருந்தேன்.

முதன்முறையாக நிவேதிதா லூயிஸ் அவர்களின் எழுத்தில் புத்தகத்தை படிக்க நேர்ந்த போது,அட! இவர் அற்புதமான பேச்சாளர் மட்டுமல்ல,எழுத்து நடையிலும் பின்னி எடுத்துள்ளார் என்று எனக்கு தோன்றியது.

முதல் பெண்கள் - நிவேதிதா லூயிஸ். - மாற்று

வாசிப்பாளர்களுக்கு தான் சொல்ல வந்த கருத்தை சுவை மிகுந்த எழுத்து நடையில் புத்தகத்தை எழுதியுள்ளார்.

ஒவ்வொரு பெண்மணி குறித்து படித்து முடிக்கின்ற வேளையில் நம்மை அறியாமலே அடுத்த அடுத்த பக்கங்களுக்கு நமது கவன ஈர்ப்பை புத்தகத்தின் மீது கடத்தி விடுகிறார்.

புத்தகத்தில் கிட்டத்தட்ட நாற்பத்து மூன்று “முதல் பெண்கள்” தங்களுடைய துறைகளில் #முதல் என்ற முத்திரை பதித்த சாதனைகளை பதிவு செய்துள்ளார்.

தொழில்நுட்பம்,ஓரளவு பெண்களுக்கு பொருளாதார தன்னிறைவு பெற்றுள்ள இந்த காலகட்டத்தில் கூட பெண்களுக்கு எதிராக உடல் மற்றும் மனம் சார்ந்த வன்முறைகள்,பாலியல் சீண்டல்கள் என பல நிகழ்வுகளை அடிக்கடி நாம் கண்டுணர்ந்து வருகிறோம்.இப்போதே இந்த நிலைமை என்றால் ஒரு நூற்றூண்டிற்க்கு முன்பாக பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும்?
இதற்கு முன்பாக இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் 43 பெண்களின் பெயர்களில் நான் அறிந்திருந்த பெயர்களும் அவர்களது சாதனைகளும் சொற்ப அளவே!

அக்கம்மா தொடங்கி ஜோதி வெங்கடாசலம் வரை என #முதல் என்ற முத்திரையை தங்கள் துறையில் பதித்த ஒவ்வொரு பெண்களின் சாதனைகளையும்,வாழ்க்கை வராலாற்றையும் தகுந்த ஆதாரங்களின் வழியாக பதிவு செய்வது என்பது சாதாரண காரியமல்ல!

இதற்கு முன்பு சென்னையில் சி.எஸ்.ஐ கல்யாணி,இப்போது ஈ.வ.கல்யாணி என்ற மருத்துவமனையை கடந்த சென்ற போது தாய்மை மற்றும் மகப்பேறு முதுகலைப் பட்டம் பெற்ற தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான #ஈச்சம்பாடிவரதன்கல்யாணி என்கிற பெண்மணியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்ததில்லை.

முதல் பெண்கள்" | நிவேதிதா லூயிஸ் | Heritager TV - ஹெரிட்டேஜர்

சென்னை அடையாறு பாலத்தை ஒவ்வொரு முறை கடந்து சென்ற போது ஆந்திர மகிளா சபையின் கட்டிடத்தை மட்டுமே பார்த்த எனக்கு அதனை தோற்றுவித்த முதல் மத்திய சமூக நல வாரியத்தின் தோற்றுநராக இருந்த #துர்காபாய்தேஷ்முக் இவரது வராலாற்றை அறிந்ததில்லை.
சென்னை எழும்பூர் பகுதியை கடந்த சென்ற போது ருக்மிணி லட்சுமிபதி சாலையின் பலகையை மட்டுமே பார்த்த எனக்கு மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சர்,முதல் பெண் துணை சபாநாயகர்,உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் இந்தியப் பெண்ணான #ருக்மிணிலட்சுமிபதி அம்மாவின் அயராது உழைப்பினை இதற்கு முன்னர் நான் அறிந்ததில்லை.

ஒவ்வொரு முறை ராயபுரம் துறைமுகத்தை பார்த்த எனக்கு அதனை வடசென்னை பகுதியில் ஏற்படுத்த காரணமாயிருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரும்;தமிழகத்தின் முதல் கிறிஸ்துவ பெண் அமைச்சருமான #மரியலூர்தம்மாள்சைமன் என்ற பெண்மணியின் சாதனைகளை அறிந்ததில்லை.

இந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் துணை இயக்குநர்;இந்திய வெதர்வுமனான #அன்னாமானி,இந்தியாவின் முதல் பெண் மேயர் மற்றும் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயரான #தாராசெரியன்,சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியான #பத்மினி ஜேசுதுரை,மத்திய துணை அமைச்சரான முதல் தமிழ்ப்பெண் மற்றும் தமிழகத்தில் காந்தி கிராமத்தை தோற்றுவித்தவருமான #சௌந்தரம்ராமச்சந்திரன் என எண்ணற்ற முதல் பெண்களின் சாதனைகளை பற்றி இந்த புத்தகத்தில் நாம் அறிந்து கொள்ளலாம்.
புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்களது வாழ்வில் ஒரு ஒற்றுமை உண்டு.அந்த ஒற்றுமையின் பெயர் “கல்வி”.ஒவ்வொரு பெண்ணும் தங்களது வாழ்வில் கல்வி என்னும் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு தங்கள் வாழ்வில் முன்னேறியுள்ளனர்.என்னளவில் இந்த புத்தகத்தை வெறும் புத்தகம் என்ற அளவில் மட்டும் பார்க்க முடியாது.இதுவொரு ஆவணம்!

ஒவ்வொரு வீட்டின் புத்தக அலமாரியிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய முதல் பெண்களின் வரலாற்று ஆவணம் இந்நூல்!

கட்டாயம் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் மட்டுமல்ல. ஒவ்வொரு முதல் பெண்களின் சாதனைகளை உணர்ந்து அவர்களின் சிறப்பை நாம் போற்ற வேண்டும்!

புத்தகம் : முதல் பெண்கள்.
ஆசிரியர் : நிவேதிதா லூயிஸ்.
பக்கங்கள் : 224.
வெளியீடு : மைத்ரி பதிப்பகம்.
₹ : 200/-