நானும் என் துணைவியாரும் ஒவ்வொரு ஆண்டும் மதுரை புத்தகத்திருவிழாவிற்கு நாள்தோறும் செல்லுவது வழக்கம். 2005ம் ஆண்டு முதல் செல்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் சில ஆயிரங்களுக்கு புத்தகம் வாங்குவொம். 2024ம் ஆண்டு இந்த ஆண்டும் வழக்கம் போல கண்காட்சியை சுற்றி பார்த்த போது என் துணைவியார் நாடு விட்டு நாடு என்ற இந்த புத்தகத்தை பார்த்ததும் வாங்க வேண்டும் என்று சொன்னார்.
அப்போது அவர் சொன்னது ஒரு புலம் பெயர்ந்த தமிழரின் வாழ்வை நாம் அறிந்து கொள்ள முடியும் என்று சொன்னார். நானும் அப்படித்தான் யோசித்தேன். குறிப்பாக ஈழத்தமிழர் ஒருவர் இதனை எழுதியிருக்க கூடும் என்றுதான் யோசித்தேன். ஆனால் இது முற்றிலும் வேறாக இருக்கிறது.
ஒரு கொங்கு நாட்டில் வாழந்த ஒரு குடும்பம் புலம் பெயர்ந்து எவ்வாறான வாழக்கை சவால்களை சந்தித்து நீந்தி முன்னேறியது என்பதற்கான ஒரு ஆவணமாக நாடு விட்டு நாடு முத்தம்மாள் பழனிசாமியின் சுய சரிதை இருக்கிறது என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது. இது ஒரு பெண்ணின் நேரடி அனுபவ ஆவணம்.
புத்தகத்தின் முதல் பக்க கவிதையே மனசை அதிரவைக்கிறது.
எண்ணாது எண்ணி எண்ணி
ஏட்டிலே நான் எழுதி வைத்தேன். என்பதற்கு முந்தைய வரிகளே இந்த புத்தகத்தில் புதைந்துகிடக்கும் பாடுகள்.
ஒருத்தரின் எழுத்தின் வீரியம் தினந்றோறும் எழுதி குமிக்கும் எழுத்துகளில் வருவது இல்லை. அதன் வீரியம் அதன் உணர்வுகளிலிருந்தும், வாழ்வின் அனுபவத்திலிருந்து கிடைப்பதுதான். தன்னுடைய 70வது வயதில் தன் வரலாற்றை தன்னுடைய 4 வயதில் நடந்ததிலிருந்து ஞாபகப்படுத்தி ஞாகத்தில் இருக்கும் அத்தனையும் ஒரு வீரியமிக்க எழுத்தில் கொண்டுவந்துள்ளதே மிகச் சிறந்த உழைப்பாகும். அவர்கள் மலாயாவில் பட்ட பாடுகளுக்கு இணையானது அனைத்தையும் ஞாபகப்படுத்தி எழுத்தில் கொண்டுவந்தது.
அவர்கள் குறிப்பிட்ட அந்த காலத்தில் பஞ்சமும், பட்டினியும் பலரையும் வாட்டி வதக்கியதை பல்வேறு ஆவணங்களிலிருந்தும் நாம் அறிய முடிகிறது.
ஒரு கவுண்டர் இனம் என்பது மிகுந்த சாதிய கட்டுப்பாட்டை இருக்கி வைத்துள்ள இனம் அதில் ஒரு முற்போக்கு சிந்தனையுடன் செயல்படும் ஒருவர் அந்த சமூகத்தில் தன்னை விடுவித்துக் கொள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் அவர்கள் வாழ்த காலத்தில் வாய்ப்பே இல்லை. தன்னுடைய முதல் மனைவிதாலிகட்டியவர் இரண்டாவது மனைவி தாலிக் கட்டிக்கொள்ளாதவர். ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில் தன் மனைவியின் தாலியை கழற்றி எடுக்க பதறிய பஞ்சாயத்து. அப்பப்பா உண்மையிலேயே ஒரு வித உணர்வு ஏற்படுகிறது. அந்த துணிச்சல் தான் பல்வேறு இடற்பாடுகளிலும் அந்த குடும்பத்தை வளர்தெடுக்க முடிந்திருக்கிறது பழனிச்சாமிக்கு.
பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகள் போல துணிச்சலாக வளரத்தெடுத்துள்ளார். குறிப்பாக புத்தக ஆசிரியரின் கூற்பு படி வீரமாளின் துணிச்சல் அபாரம்.
இங்கிருந்த சமூக மக்களின் முன்னேற்றத்திற்கும். அங்கே இருந்த இந்திய தொழிலாளர்களுக்கும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாதுகாப்பையும் , அரவணைப்பையும் கொடுத்த பழனிச்சாமியின் மனசு எவ்வளவு பெரியது என்பதை நாம் அறிய முடிகிறது.
புத்தகத்தில் உள்ள அத்தனையும் இந்த அறிமுகத்தில் சொல்ல முடியாது என்றாலும் நானும் ஆசிரியர் என்ற முறையில் சில விசயங்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.
குழந்தைகள் எந்த காலத்திலும் ஒன்று போலவே இருந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. முத்தம்மாள் சிறுமியாக இருக்கும் போது கொசு வலையில் தீப்பற்றவைத்து பார்த்தது போலவே, அவருடைய பேரன் பாம்பின் வயிற்றுக்குள் குட்டியிருக்கிபுறதா என்பதை பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார். எங்கள் வீட்டிலும் கத்தியை எடுத்து மர சோபா கைபிடிகளை வெட்டிப்பார்த்தவர்களும் உண்டு.
முத்தம்மாள் எனது மண வாழ்க்கை பகுதியில் பெரும் பகுதிய அவருடைய ஆசிரியர் பணியும், அவருடைய மாணவர்கள், பள்ளி, உடன் பணி செய்த ஆசிரியர்கள் பற்றியே இருப்பதை நாம் பார்க்க முடியும். அது தான் உண்மை. பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு வாழ்க்கை என்பதே பள்ளியும் மாணவர்களும் தான். தற்போது கூடு தன் மாணவர்கள் எங்கு பார்த்தாலும் தனக்கு உதவுவதாக குறிப்பிடுகிறார். அவருக்கு ஏற்பட்டுள்ள அத்தனை அனுபங்களும் பள்ளி சார்ந்து இயங்கும் ஆசிரியர்களுக்கு இப்போதும் ஏற்படுகிறது.
இந்த புத்தகத்தின் வழியாக மலயாவிற்கு புலம் பெயர்ந்து சென்ற மக்களின் பாடுகளையும், வாழ்க்கையையும், துன்பங்களையும், துயரங்களையும், அறிந்து கொள்ள முடியும். அதே சமயத்தில் சீனமக்கள், இந்திய மக்கள், மலயா மக்கள் எவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.
போர் எப்போதும் மனித குலத்திற்கு எதிரானது என்பதை அறிந்து கொள்ள இந்த புத்தகம் உதவும். எந்த ஒரு அரசும் அது ஜப்பான் அரசாகட்டும், சீன அரசாகட்டும், பிரிட்டானியா அரசாகட்டும் அது எளியமக்களை அடிமையாக நடத்த மட்டுமே செய்துள்ளது என்பதை நாம் அனுபவழி அறிந்து கொள்ள இந்த புத்தகம் உங்களு உதவும்.
ஐஎன்ஏ வில் சேருவதற்காக சென்ற இளைஞர்களை ஜப்பான் அரசு நடத்திய விதத்தை அறிந்த போது நம் இளைஞர்கள் எவ்வாறெல்லாம் அரசுகளால் ஏமாற்றபட்டு வேலையாட்களாக வேலை செய்தே மாய்ந்து போயிருக்கிறார்கள் என்பதையும் அறியமுடிகிறது.
இதில் தன்வரலாறு என்றாலும் கூட இதில் பல கிளை கதைகள் வழியாக அந்த நாட்களின் அரசியல், சமூக, பொருளாதாரத்தையும் நமக்கு விளக்குகிறது. இதை ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.
வருமையும் துன்பமும் சாதிய அடையாளங்களை அழிக்கின்றன என்ற முத்தம்மாளின் கூற்றை அவரின் இந்த நூலின் மூலம் உண்மை என்பதை அறிந்து கொள்ள முடியும்
எழுத்தின் ஓட்டம் எளிமையாக எந்தவித ஆடம்பரமற்ற சொல்லாடல் இல்லாமல் அதன் போக்கில் செயல்கிறது. ஒப்பாரி பாடல்களும், மற்ற பாடல்களும் கல்வி அறிவற்றவர்களால் எவ்வாறு பாடப்படுகிறது என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் இவரும் கூட சில பாடல்களை எழுதியும் உள்ளார். தொடக்கப்பாடல் உட்பட. ஒப்பாரி பாடல்கள் அருமை. புத்தகத்தில் ஒரே விஷயத்தை இரண்டு மூன்று முறை பதிவு செய்கிறார். அது சொன்னதையே திரும்ப சொன்னது போல இருக்கிறது. மேலும் எழுத்துப்பிழைகளும் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.
நூலின் விவரம்:
புத்தகத்தலைப்பு: நாடு விட்டு நாடு
வெளியீடு: யாவரும் பதிப்பகம்
பக்கங்கள்: 352
விலை: ரூ.450
9042461472
நூல் அறிமுகம் எழுதியவர்:
மொ. பாண்டியராஜன்
மதுரை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
