நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: முத்து ஜெயா எழுதிய “தத்து” நாவல் புத்தகம் | Muthu Jeya's Thathu Novel Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் – செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: முத்து ஜெயா எழுதிய “தத்து” நாவல்

சமையல் கலைஞராகவும், மாலை நேர உணவகத்தை நடத்துபவருமான, “தத்து” நாவலாசிரியர், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேயுள்ள தொம்பக்குளம் என்னும் ஊரைச் சார்ந்தவர். தொடர்ந்து பல்வேறு இதழ்களில், சிறுகதைகள், கட்டுரைகள், எழுதி வரும் இவரது முதல் சிறுகதை நூல் ‘கம்பரக்கத்தி’ வைமா இலக்கிய விருதைப் பெற்றுள்ளது. இது இவரது முதல் நாவல்.

தத்து என்றால் கரிசல் வட்டாரத்தில் மண்-நீர் பாதுகாப்புக்காக அமைக்கப்படும் மண் தடுப்பு.
கைக்குள் அடங்கும் தனிமனித வாழ்க்கையை, ஒரு நாவல்தான் தன் கழுகுப் பார்வையால், பேரூலகமாக விரித்துக் காட்டி, சுய விசாரணைக்கு உட்படுத்துகிறது.

மக்களின் சமூகப் பண்பாட்டு வாழ்க்கையை, எளிதாக மிக நுட்பமாக, காட்சிபூர்வமாகக் கடத்த நாவலே ஆகச் சிறந்த தளமாகும். அப்படியான கரிசக்காட்டு மக்களின் வாழ்வியலைக் காட்சிப்படுத்துகிறது இந்நாவல்.

பஞ்சம் காரணமாக, மாமியார் ஊருக்குப் புலம்பெயர்ந்த கனகசபை குடும்பம், வஞ்சிக்கப்பட்டு, மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி, இருப்பை நிலைநிறுத்தும் போராட்டத்தில், கனகுவும், அவன் மனைவி நாச்சியாளும் இறந்து விடுகின்றனர். பிள்ளைகள் பரவதத்தின் பொறுப்பில் பெரியவர்களானபின், சொந்த ஊருக்கு போகும் சூழல் வாய்க்கிறது. அங்கே வரவேற்பா! அவமதிப்பா! இழந்ததை மீட்டார்களா? என்பதே மீதி கதை.

இன்னொருவரது வாழ்வினை, முன்முடிவுகளுடன் அணுகுவது தவறு என்பதும், வாழ்வு நமக்கு வழங்கியிருக்கும் வசதிகளை, கடைநிலை மனிதர்களுடனாவது பகிர்வது தான் மனிதமென கதைகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. என் வாசிப்பனுவத்திற்கேற்ப மூன்றாக பகுக்கிறேன்.

i) கரிசல் வாழ்வியல்
ii) அகவுலகம்
iii) மண்-நீர்-மனிதன்

கரிசல் வாழ்வியல் :
“கடவுள் விடுகின்ற
பெருமூச்சைப் போல
காற்று வீசும் கரிசல்
வெளி” – தேவதச்சன்.

கரிசல் விவசாயி, ஒரு நிலத்தின் வரலாறாகவும், ஒரு சமூகத்தின் குரலாகவும் மிளிர்கிறான்.

மற்ற பிரதேசங்களிலிருந்து எல்லா விதத்திலும் வித்தியாசப்பட்டது கரிசல் நிலம். கரிசல், களிமண்ணாக இருப்பதால் நீரை மிகவும் மெதுவாக உறிஞ்சக் கூடிய தன்மையும். உறிஞ்சிய நீரை நீண்ட காலம் தேக்கி வைக்கும் திறனும் பெற்றிருப்பதால்தான், எத்தனை பெரிய வறட்சியையும் அந்நிலத்தால் தாங்க முடிகிறது. இரும்பு சத்து அதிகம் இருப்பதால் மண்ணின் அடர்த்தியும் அதிகம்.

‘கரிசல்காட்டுல பொழைச்சிக் கிடக்கிறது தான் சம்சாரிப் புள்ள’ எனும் சொலவடைக்கேற்ப நிலத்தை நம்பிய கரிசல் மனிதன், உழைப்பிற்கு முன்னுதாரணம்.

அடிப்படை தேவைகளில் ஒன்றாயிருந்த வீடு, நகர்புறங்களில் இன்று பெருமையின் அடையாளமாக திகழ்கிறது. மாறாக, இம்மக்களின் “வீட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது, நிலம் தானே எல்லாம்” என்ற உரையாடல் விவசாய பண்பாட்டைப் பறைசாற்றுகிறது.

“செம்மண் பூமி மிளகாயை விட கரிசல் மிளகாய் காரம் அதிகமானது”, “இளைத்த பிள்ளைதான் என்றாலும் கருகருவென்று சுத்தமான கரிசல் நிலம்”, “வெம்மையைத் தந்த கரிசல், ருசியும் தந்தது.” என மசக்கையில் விரும்பி உண்ணும் மண்ணைக் கூட சிலாகித்து, கிராமத்தையறியாத வாசகர்களுக்கு நிலத்தின் மீது தாபத்தை ஏற்படுத்தும் வரிகள் நாவல் முழுவதும் விரவியிருக்கின்றன.

அகவுலகம் : வேட்டையாடும் சமூகத்திலிருந்து, உற்பத்தியைச் சேகரிக்கும் வேளாண் சமூகமாக உருமாறிய காலந்தொட்டே, சிக்கல்கள், நெருக்கடிகள், தவிப்புகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாததே, மனித போராட்டத்தின் துவக்கம். அன்று தொட்டு பொதுநலத்தின் எல்லைகள் சுருங்கி, சுயநலத்திற்கான வெளி விரிந்து கொண்டேயிருக்கிறது.

பல்வேறு மனச்சாயல்களையும், குணக்கேடுகளையும், விதவிதமான கதை மாந்தர்களின் வழி நுட்பமாக கோடிடுகிறார், ஆசிரியர். மேகங்களே இல்லாத நீலநிற வானத்தைப் போல, மனமெங்கும் வெறுமை சூழ்ந்தவனாகிய, வைரவேலுவின் அறிமுகத்திலிருந்து தொடங்குகிறது கதை. இவனின் தந்தை கனகு என்கிற கனகசபையோ, தன் உயிர் முதற்கொண்டு, எல்லாவற்றையும் தின்பதற்குத் தந்து வாழ்வை வென்று விட முயற்சிக்கும் ஒரு விவசாயி. வைரவேலுவைப் பற்றி நிகழ் காலத்திலும், அவன் தந்தை கனகுவைப் பற்றி இறந்த காலத்திலுமென மாறி மாறி அத்தியாயங்கள் பயணிக்கிறது. இளமையிலேயே வறுமையாலும், தகப்பனை இழந்த துயரத்தாலும், பாதிக்கப்பட்ட சிறுவர்கள், வளர வளர பேசுவதிலிருந்து விடுபட்டு, விரக்தி, வேதனையால் எப்போதும் கொதிநிலையிலேயே இருப்பதை, வைரவேலுவும் ரத்தினமும் உறுதிபடுத்துகிறார்கள்.

தான் பெற்ற மக்களை எப்படியாவது கரை சேர்த்துவிட வேண்டுமென்று, உள்ளத்தில் பாறாங்கல்லைச் சுமக்கும் பெண்களான லிங்கம்மாள், பரவதம், நாச்சியாள் பாத்திரங்கள், வாழ்வில் மேம்பட முடியாத வலியைச் சுமப்பவர்களாகவே கதை நெடுகிலும் உலா வருகின்றனர். திருமணம், ஓர் ஆணின் தன்மையை மாற்றுகிறதோ இல்லையோ, மகப்பேறு உறுதியாக ஒரு பெண்ணுள் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தி நெகிழச் செய்யுமென்பதற்கு ராஜலட்சுமி சாட்சியாகிறாள்.

அறமற்ற குற்றங்களைக் கண்டுக்கொள்ளாத, தவறுகளை வளர்ச்சியாக எடுத்துக் கொள்கிற அபத்தங்களை, அல்ப விஷயங்களைக் கொண்டாடுகிற வாழ்வைப் பழகிக் கொள்பவராக சக்கரையாவும், ரத்தினமும் இன்றைய பலரின் பிரதிகளாக கதையில் வலம் வருகின்றனர்.

மண்-நீர்-மனிதன் : யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் பொதுமையாக உரைத்தோமாயினும்,

ஒவ்வொரு மக்களும் தங்களை ஊரோடு பிணைத்து அடையாளப்படுத்திக் கொள்வதற்கே ஆசைப்படுவர். பேச்சு, உச்சரிப்பு, பழக்க வழக்கங்கள், உடை, உழைப்பு என ஒவ்வொரு ஊரின் இயல்பும் தோற்றத்திலும் வெளிப்படுவதை கூர் வாசிப்பில் கண்டுணரலாம். மண் அரித்த தடம் போல் தேகச் சுருக்கம், கக்கத்தில் தார்க்குச்சியோட ஒருவரிருந்தால், அவர் கரிசல்காரரே!

தத்து என்பது வெறும் மண் தடுப்பல்ல; மழையைத் தடுத்து நிறுத்தும் நம்பிக்கை. நிலத்தோடு மனிதன் சமைக்கும் உறவு. மண்ணை, மனிதனிடமிருந்துப் பிரித்து பார்த்தறியாத மக்கள். மழை பெய்தும், பொய்த்தும் கெடுப்பதால், பலரும், வயிறும், மனமும் நிறையாத வாழ்வையே மேற்கொள்கின்றனர். நன்மையாகவோ, தீமையாகவோ, பிறந்து வளர்ந்த ஊரின் நினைவுகள், மன ஆழத்தில், சிலந்தி வலை போல பின்னப்பட்டு கொண்டேயிருக்கும். நயவஞ்சகம், துரோகம், களவு, கொலை என திசை மாறி தடம் புரள்வதற்கு ஆணிவேர் எப்படியாவது இந்த மண்ணில் மற்றவர்களுக்கு மேலாக, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மாட்டோமா என்ற ஆணவம்தான்!

சொத்துரிமை நிரம்பிய ஒவ்வொரு புராதனக் குடும்பத்திற்குள்ளும் நிகழும் புறவயச் சிக்கல்களால் பலரின் அகம் கொலை செய்யப்படுகிறது. புறச் சமூகம், குடும்ப உறவுகளின் மையமான பொருளியல் காரணங்களைப் பாதிக்கும் போது, சுயநலம் வேர் விடத் தொடங்கி, உறவுச் சுரண்டல் உருக் கொள்கிறது.

இக்கதையில், பஞ்சம் பிழைக்க மாமியார் ஊருக்கு வந்த கனகு, தினசரி நிகழ்வுகளில் பலமுறை, இது நமக்கான இடமில்லையென உள்ளுக்குள்ளேயே மருகுகிறான். ஊரை நினைத்துக் கொள்வது என்பது வெறும் ஏக்கமல்ல, ஒரு வாழ்க்கை முறையை, தனித்துவத்தை, இயற்கையை இழந்து விட்டதன் வெளிப்பாடு.

மனிதனுக்கு உலகைக் கைக்குள் அடங்க கூடியதாக மாற்றிய, தொழில் நுட்ப யுகத்தில், மாறாதது எது என்பதையும், மாற்ற வேண்டியது எது என்பதையும் பகுத்தறிய வழிவகுத்து, மாற்றங்கள், மனிதர்களிடம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை ஆராய்ந்து, ஆவணப்படுத்துவதே இலக்கியமாகும். நாவல்கள் ஓரே நேரத்தில், அகத்தை உற்று நோக்கும் நுண்ணோக்கியாகவும், புறத்தே விசாலமாக விழியில் சிறை பிடிக்கும் தொலைநோக்கியாகவும் செயல்படுகின்றன. வாசிப்போம்! மனமாசு களைந்து மனிதம் சிறக்க மேம்படுவோம்! நன்றி!

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “தத்து” நாவல் (2025)
ஆசிரியர்: முத்து ஜெயா
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
விலை: ₹.220
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻பா. கெஜலட்சுமி,
சென்னை – 19.

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

  1. நூலைப் பற்றிய ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது தங்களின் அறிமுகம்….

    வாழ்த்துகள் 💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *