‘பின்னால் வருபவனின் கண்
தன் முதுகைப் பார்ப்பதை விட
முன்னால் செல்பவனின் முதுகைப் பார்ப்பதை’யே விரும்புமொருவன் “இங்கே” என்றவூரில் வாழ்ந்து வந்தான்!!

அவன் பார்த்த முதுகுகளெல்லாவற்றிற்கும் அவனிடம் ஒரு முகமுண்டு. ஆனால், அந்த முகம் அந்த முதுகுக்கு சொந்தமானவரின் முகமில்லை.

அது இவனே யோசித்த முகம். அந்த முகத்துக்கு ஓர் பெயரும் வைத்துக் கொள்வான். அந்த பெயர் அந்த முகத்துக்கும் முதுகிற்கும் சொந்தமான பெயரில்லை, அதுவும் இவன் சொந்த கற்பனையே.

பலமுறை, முதுகுக்கு சொந்தமானவர்கள், அவர்களின் முதுகில் இவனின் பார்வை ஊர்வதை கண்டுபிடித்து விடுவார்கள். அப்போது, சட்டென்று அவர்கள் திரும்பினால், இவன் வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொள்வான். அதற்கு ஒரே காரணம், அவன் கற்பனை‌ செய்த முகம் அந்த முதுகுக்கு சொந்தக்காரனிடம் இல்லையென்றால், அவனால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கி கொள்ளவே முடியாது.

ஒரு முறை, இப்படித்தான் அவன் பார்த்துக் கொண்டிருந்த முதுகுக்கு சொந்தக்காரன், சட்டென்றுத் திரும்பியதும், இவனும் திரும்பி கொண்டான்.

“டேய்!! ஏன்டா என் முதுகையேப் பார்க்கிறாய்?” என்ற அவனின் கேள்விக்குத் தன் முகத்தை மூடியபடி பதில் சொன்னான். “நீங்க என்‌ முன்னாடிதானே போறீங்க? அப்போ உங்க முதுகுதான எனக்குத் தெரியும்?” என்று சொன்னதும், “அதுக்கு ஏன்டா மூஞ்சை மூடுற? கையை மூஞ்சியில் இருந்து எடுடா” என்று கோபமாய் சொன்னவனின் அறிவுறுத்தலை மீறியும் கையை இவன் முகத்திலிருந்து எடுக்கவில்லை.

“என்னடா சொல்லிக்கிட்டே இருக்கேன், அப்படியே நிக்குற?‌ நீ என்ன‌ பைத்தியமா?”

“நான் பைத்தியம்லாம் இல்லைங்க. நான் முகத்துலேயிருந்து கையை எடுத்தா எனக்கும் ஆபத்து உங்களுக்கும் ஆபத்து” என்று பதிலுரைத்தான்.

இந்த பதிலால் இன்னும் கொஞ்சம் சினமுற்றவன், ” டேய்!! மூஞ்சிலேருந்து கையை எடுடா‌!! எனக்கு கோபம் அதிகமாயிட்டே இருக்கு…” என்று அவனின் கைகளை அவனின் முகத்திலிருந்து தன்‌ முழு வலுவையும் கொண்டு‌ விலக்கிவிட்டான்.

அப்போதும், அவன் கண்களை இறுக்கி மூடியிருக்கவே, “டேய்!!!! கண்ணைத் திறடா” என்று கத்துகிறான், ஆனால் இவனோ கேட்பதாயில்லை. “கண்ணைத் திறக்குறியா இல்ல மூஞ்சுல குத்தவா?”

“அண்ணே!! நான் அமைதியாதானே இருக்கிறேன் ஏன்‌ணே கத்துறீங்க?”

இதற்குள் “இங்கே” ஊர் மக்கள் ஒன்று கூடிவிட்டனர். அப்போதைக்கு என்ன பிரச்சனை என்றே யாருக்கும் புரியவில்லை!!

“என் இரண்டு விரலாலேயும் உன் இரண்டு கண்ணையும் நோண்டிடுறேன் இரு” என்றபடி அவனை நெருங்கியவனைப் பார்த்த மக்கள். “டேய் அந்தாளுக்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடிடு. அவன் கொலைவெறியில இருக்கான்” என்று அவனுக்கு அறிவுரை கூறினர்.

“ஏங்க நான் அப்படி என்னதாங்க தப்பு பண்ணேன்? அவரு என்‌ முன்னாடி நடந்து போனாரு, அப்போ அவரோட முதுகுதானேங்க என் கண்ணுக்குத் தெரியும்? அதைப் பார்த்ததற்கு என்னை அடிக்க வாராரு?”

கூட்டத்திலிருந்த இந்த பிரச்சனை புரிந்த ஒருவன், “ஏம்பா! அவன் சொல்லுறதுல என்னத் தப்பு? விட்டுட்டு போவியா…” என்று அடிக்க வந்தவனுக்கு அறிவுரை‌ சொன்னான்.

“யோவ் முட்டாள்!! அவன்‌ சும்மா பார்த்தான்னா அப்புறம் ஏன் யா இப்படி கண்ணை இறுக்கி மூடியிருக்கான்?”

“ஆமாம்ல? யோவ் கண்ணைத் திறந்து தொலையேன்யா? ஏன் கண்ணை‌ மூடுற? அதான் அந்தாளு சந்தேகப்படுறாரு” என்றார் பஞ்சாயத்து செய்ய வந்த ஆள்.

இந்த பிரச்சனை முடிய ஒன்று அவன் கிளம்பியாகனும் இல்லையென்றால் இவன் கண் திறந்தாக வேண்டும். இவனின் கற்பனை முகமும் பெயரும் ஒத்துப் போகுமா‌ என்ற குழப்பம் இப்போது இன்னும் அதிகமாகிவிட்டது. மூளைக்குட்டையைக்குழப்பியதில் ஒரே ஒரு வழி இருந்தது.

“அண்ணே!! உங்க பேரு என்னண்ணே?”

“இப்ப எதுக்குடா பேரைக் கேட்குற” என்று குழம்பியபடி‌ கேட்டான் அடிக்க வந்தவன்.

“சும்மா சொல்லுங்கண்ணே! சொன்னா கண்ணைத் திறந்துடுறேன்.”

“என் பேரு ஸ்டீபன்”

அவரின் முதுகை வைத்து இவன் யோசித்து வைத்திருந்த பெயரான “ஞான”த்துக்கும் “ஸ்டீபனு”க்கும் துளியும் சம்பந்தமில்லை. முகமும் அதே போல் ஒத்துப் போகவில்லையென்றால்?!!?!?!

இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் ஒன்றுமாகாது, மக்கள் வேறு கடுப்பாகத் துவங்கினார்கள்.

“ஏய்!! அவருதான் பேர் சொல்லிட்டாரே, இப்ப கண்ணைத் திறடா” என்று குரலெழுப்பினான் பஞ்சாயத்து பண்ண வந்தவன்.

‘நல்லா சிக்குனோம்டா இன்று’ என்றெண்ணியவன். “நான் கண்ணைத் திறந்ததும் என்ன நடந்தாலும் என்னை அடிக்கக் கூடாது, திட்டக் கூடாது? அப்படின்னா இப்பவே கண்ணைக் திறக்கிறேன்” என்றான்.

எல்லோரும் அடிக்க வந்தவனைப் பார்த்தார்கள். அவன், எதோ பெரிய சாதனைக்கு மிக அருகிலிருப்பதைப் போல் தீவிரமாய் யோசித்து கொண்டிருந்தான்.

“ஏ!! என்னாப்பா யோசனை. எதுவும் பண்ண மாட்டேன்னு சொல்லு. அவன் கண்ணைத் திறக்கட்டும். நாங்களும் வேலையைப் பார்க்க போவோம்” என்றார் கூட்டத்திலிருந்தவொரு பெரியவர்.

“சோலி கிடந்தா போயி பார்க்க வேண்டிதானே? இங்க வந்து ஏன் நாயம் பேசுகிறாய்!! சரி!! சரி!! நான் ஒன்னும் பண்ண மாட்டேன் கண்ணைத் திறக்க சொல்லு”
என்று ஸ்டீபன் சொன்ன மறு கணம் அவன் கண்ணைத் திறந்தான்!!

வெகுநேரமாக கண் மூடியபடியிருந்ததால், சற்று கலங்கிய ஒளியாகத் துவங்கித் தெளிவான பல முகங்கள் அவன் கண் முன்னால் தெரிந்தன. அதில் யார் அவனை அடிக்க வந்ததென்று அவனுக்குத் தெரியவில்லை.

“அதான் கண்ணைத் திறந்துட்டேன்ல, எல்லாரும் வேலையைப் பார்க்க போங்க” என்றான். அவனுக்கு இப்போதும் ஒரு வாய்ப்பு, அந்த முகத்தைப் பார்க்காமலேத் தப்பிவிடலாமென்று.

அவன் கூறியதைக் கேட்டு அனைவரும் முனகத் துவங்கினார்கள். இவ்வளவு நேரமாய் அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஊதிய பலூன் சட்டென்று வெடித்ததைப் போன்று உணர்ந்தனர் ஊர் மக்கள்.

“அப்புறம் என்னப்பா அதான் கண்ணைத் திறந்துட்டாருல்ல, எல்லாம் வேலையைப் பார்க்க போங்க” என்றான் கூட்டத்தில் ஒருவன்.

“நீ என்னாப்பா சொல்லுற? சரிதானே?” என்று ஸ்டீபனைப் பார்த்து கேட்டான் பஞ்சாயத்து பண்ண வந்தவன்.

“சரிதான்” என்று குழப்பமாக சொன்னான் ஸ்டீபன்.

அவன் கண்களைத் திறந்ததும், ஸ்டீபனின் கோபமெல்லாம் என்ன ஆகிப் போனதென்று சுத்தமாய் புரியவில்லை.

“இவருதான் என் கண்ணைத் திறக்க சொன்னாரா?” என்று கேட்டவனிடம் “ஆமாம் யா!! நான்தான்” என்று ஸ்டீபன் பதிலளித்ததும், ஸ்டீபனின் முகத்தை உற்று கவனித்தான், தான் கற்பனை செய்த முதுகின் முகத்துக்கும் உண்மையான முதுகின் முகத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று தெரிந்த அடுத்த நொடி “வெடித்துச் சிரிக்க”த் துவங்கியவனை அப்படியே விட்டுவிட்டு அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க சென்றுவிட்டனர். நன்றி.

குமரகுரு
9840921017

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *