.புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமம் அகரப்பட்டியைச் சேர்ந்த தீ.திருப்பதி என்ற இயற்பெயர் கொண்டவர். பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடம் சொல்லிக்கொடுத்த தமது ஆசிரியரின் பெயரையே ‘சோலச்சி’ புனைபெயராக வைத்துக்கொண்டார். சமூக செயல்பாட்டில் இயங்கிக்கொண்டே கவிதை, சிறுகதை என இலக்கிய உலகில் தொடர்ந்து பயணிக்கிறார்.
இவர் படைப்புகள்
1.முதல் பரிசு,
2. காட்டு நெறிஞ்சி,
3.கருப்புச்சட்டையும் கத்திக் கம்புகளும்,
4. விரிசல்,
5. அட்டணக்கால்,
6. தொவரக்காடு ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
ராஜபாளையம் மணிமேகலை மன்றம் விருது, பொதிகை மின்னல் விருது, புதுச்சேரி தமிழ்ச்சங்கம் விருது, கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது என பல்வேறு தமிழ் அமைப்புகள் இவரது நூல்களைப் பாராட்டி விருது பெற்றுள்ளார்.
இவருடைய முதல் புதினமாக முட்டிக்குறிச்சி ஸீரோ டிகிரி இலக்கிய விருந்து 2023 பெற்று வெளிவந்துள்ளது.
கடந்த காலங்களில் இவருடைய அட்டணக்கால், துவரக்காடு இரு சிறு சிறுகதை தொகுப்புகளும் பரவலாக வரவேற்பு பெற்று எல்லோராலும் சிலாகிக்கப்பட்டது. எளியய மனிதர்களின் கதைக்களமாகவும், விளிம்பு நிலை மக்களின் சமூகப்பாடுகளை அழகியலோடு நமக்கு வழங்கிய சோழச்சி அவர்களின் நாவல் வடிவமும் பரவலான பாராட்டை பெறும்.
அவர் வாழ்ந்த பகுதியில் கதை மாந்தர்களை அவர்களின் வாழ்வில் போக்குகளை இயற்கையோடு, மனிதர்களோடு சமூக வாழ்வோடு பின்னிப் பிணைந்த தனது சொந்த சமூக பண்பாட்டு, உளவியலின் நீட்சியாக மிக எதார்த்தமாக பாத்திரப்படைப்புகள் இதில் இடம் பெறுகின்றன. 50க்கும் மேற்பட்ட பாத்திரப்படைப்பு அதனுடைய வயது அனுபவம் அதன் வழியாக அது பயன்படுத்தும் சொலவாடை என கச்சிதமான பொருத்தப்பாடு எழுத்தாளர் பயன்படுத்திருப்பது ஒரு அழகியல்.
மேலும் அவர் சார்ந்த பகுதிகளில் மலைகள் ஊரணிகள் மரங்கள் பறவைகள் விலங்குகள் செடி கொடிகள் பூச்சிகள் தாவரங்கள் பயிர்கள் என அத்தனையும் நான் கண் முன்னே காட்சிப்படுத்துகிறார். ஒருவேளை நாம் அங்கு இருந்தோம் என்றால் நமக்கு அழகிய காட்சி படிமமாக விரிந்து செல்லும். நமது கிராமங்களில் மலைகள் குளங்கள் ஏரிகள் கண்மாய்கள் குறிப்பிட்ட பகுதிகளின் பெயர்கள் என அவ்வளவும் வரலாற்றால் மாற்ற முடியாத பழமையான பெயர்கள் இன்று நிலைத்திருக்கின்றன அதை கதை மாந்தர்களாக அணி சேர்த்திருக்கிறார் எழுத்தாளர்.
50க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் 10 பெயர்கள் மட்டும்தான் இன்று நடப்பில் வைக்க முடியும் மீதி உள்ள அனைத்து கதை மாந்தர்களின் பெயர்கள் பழைய பெயர்கள். நமது கிராமப்புற பண்பாட்டில் சமூக படிநிலைப் பண்பாட்டில் ஊறி திளைத்திருக்கும் இந்த புதினத்தில் கதை மாந்தர்களின் பெயர்கள் அவர்களின் சமூக பின்னணியை குறிக்கும், எதார்த்தமாக புனையப்பட்டுள்ளது.
27 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நாவலில் 12 அத்தியாயங்கள் வரை அவர் சார்ந்த பகுதியின் வர்ணனை முழு இயல்பாக நாம் ரசிக்க முடியும். பிறகு மெதுவாக கதையில் உள்ளே நுழைந்து 20வது அத்தியாயத்தில் தான் கதையின் தலைப்பை நாம் புரிந்து கொள்ள முடியும். இதுவரை நமது இலக்கிய உலகம் பெண்களின் மூன்று நாள் பாடுகளை பற்றி எழுதிய போதிலும் அவை இன்றைய நகர்ப்புற உளவியலில் பின்புலத்தில் எழுதப்பட்டதாக இருக்கும். ஆனால் முட்டிக்குறிச்சி கிராமப்புற பெண் பாடுகளை புறக்கணிப்பின் வலியை மிக இயல்பாக உரிமைக்குரலை பேச துவங்குகிறது.
நம்மில் பலருக்கும் ஒரு அனுபவம் உண்டு ரயில் நிலையத்தில் பக்கத்தில் வசிப்பவர் சத்தத்தில் தூங்கும் இயல்பை பெறுவதும், கூவத்திற்கு பக்கத்தில் வசிப்பவர் அதன் வாசனையை வாழ்க்கையில் பகுதியாய் மாறிவிடுவதும் போல் முட்டுக்குறிச்சி பெண்கள் மூன்று நாள் பாடுகளை அதன் பொருட்டு ஊருக்கு வெளியே தனியாக எதிர்கொள்ளும் இடர்பாடுகளை, வெளியூரிலிருந்து வாக்கப்படும் பொன்னழகியின் எதிர்மறை சிந்தனை எல்லோருக்கும் விடிவாய் அமைகிறது. இப்படி சமூக சிக்கல்களை, கிராமத்தின் படிநிலை பண்பாட்டை உடைத்து ஜனநாயகப்படுத்தும் கதை மாந்தர்களும் புனைவும் சிறப்பான ஒரு எதார்த்தம்.
அந்த வகையில் இந்த நாவலை நாம் கொண்டாடுவதும், வாசிப்பதும் இயற்கையோடு அழகியலில் துய்ப்பதும் அவசியமாகிறது.
சில மாந்தர்கள்:- பொன்னழகி, அழகப்பன், கார்வேந்தன், தனஞ்செய்வேலன், நாகவல்லி, உலகநாயகி, அடைக்கி, வெள்ளாளச்சி, மருதாயி, கீதாரி, வள்ளியம்மை, ரெங்கனார், சேனையார், சனக்கட்டன், பூரணத்தம்மாள், வீரையன், குட்டிமணி, பூச்சிப்பிள்ளை, வெள்ளைத்தேவி, காராளவேந்தன், பெரியதனம், மொச்சிக்காளை, சொக்காயி, பெத்தாயி, நாரங்கி, மலையக்கோன், கண்டவனார், பிச்சாயி, பூச்சியப்பன், மூக்காயி. செம்பியனார். சுருட்டையன், பம்பைன், நொண்டிகருப்பையா. சின்னச்சாமி, பாலாயி, தீத்தான், வளனார், பணிக்கன், குமரேசன், கூழையன்… இப்படியாக கதை மாந்தர்களின் பெயர்கள் அதற்குரிய வயது அவர்கள் பயன்படுத்தும் சொலவாடை என நம்மை வசீகரிக்கிறது. ஒவ்வொரு சமூகத்துக்குரிய பண்பாட்டு நிகழ்ச்சி போக்குகள், சொல்லாடல்கள் பொறுப்புடன் கையாளப்பட்டிருக்கிறது.
சில இயற்கை பெயர்கள் :- தொரட்டிப்பழம், நாகறிஞ்சி செடி, காளைக்கோழி, தேன்மலை, சிலை வெட்டி சித்தர், செம்பொட்டல், ஒல்லைநாடு, தேன் வகைகள் தாழம்பூ, மஞ்சி கத்தாழை, வரகு முறுக்கு, மயில், செங்காய், தப்புக்கொட்டி ஊரணி, தீர்த்தான் ஊரணி, பொறப்பட்டா ஊரணி, மேகாட்டு மக்கள், காட்டுமலம் பூண்டு செடி, காக்கை நெருஞ்சி, பனங்காடைகள், வெடத்தலான் மரம், பனை, நாக்கனத்தான் குருவி, கெவுளி, வால்கறிவாள், கரட்டாண், கடகாப்பொட்டி, இட்றை, தோப்பறை… இது போன்ற அருகிவிட்ட வழக்கொழிந்த இடப்பெயர்கள் விலங்கு, பறவை, மலை, செடி பெயர்களும் கதை மாந்தர்களாக நம்மை ஆக்கிரமிக்கிறது. அத்தோடு வட்டார வழக்கு சொற்கள் நிறைய விறகு கிடைக்கிறது நான் இதில் பட்டியலிடவில்லை. வாசிப்பதன் மூலம் நமது வட்டார மொழி வளமையை அறியலாம்.
எழுத்து சமூகத்தையும் மனநிலையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். இந்நூலில் கல்வியின் அவசியத்தை வலியுருத்துகிறார். இன்றைய காலகட்டத்தில் மருத்துவ படிப்பு என்பது இப்போதுவரை எட்டாக்கனியாக இருக்கிறது. பெண்கள் அனைவரும் அடிப்படை மருத்துவ அறிவினை பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்தும் எழுத்தாளர் சோலச்சி அவர்கள் மூலிகளைகளின் பெயர்களையும் அதைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் போகிற போக்கில் கற்றுத் தருகிறார்.
அந்த வகையில் சமூகப் பொறுப்புடன் சமூகத்தின் பின்தங்கிய உளவியலை இலக்கிய நயத்துடன் புனைவு செய்திருக்கும் சோலச்சியின் முதல் நாவல் முட்டிக்குறிச்சி சிறந்த தொடக்கம். ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல். பெண்களால் கொண்டாடப்பட வேண்டிய நூல்.
260 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 320 ரூபாய் விலையில் எழுத்து பிரசுரம் முகவரியில் கிடைக்கும்.
ஸீரோ டிகிரி பதிப்பகத்தார் : +91 89250 61999
நூலாசிரியர் அலைபேசி : 9788210863
அறிமுகம்
பாலச்சந்திரன்
[email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
எனது முட்டிக்குறிச்சி நாவல் குறித்த விமர்சனம் வெளியாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பேரன்பு நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.