நூல் மதிப்புரை: ஜோசப் ராஜாவின் ‘முற்றுகை’ – பெரணமல்லூர் சேகரன்
காற்றைப் போலக் கடத்திச் செல்லவேண்டிய கவிதைகள்
இடதுசாரி எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படித்துக்கொண்டிருப்பதில் இயல்பாகவே திருப்தி தழுவிக்கொள்கிறது. ஏனெனில் கவிதையாகட்டும்,
சிறுகதையாகட்டும், நாவலாகட்டும், கட்டுரையாகட்டும் அப்படைப்பில் மனிதநேயம் இழைந்தோடுவதைக் காணமுடியும். வாசிக்கையில் நம்பிக்கை
ஊற்றெடுத்து உள்ளத்தைக் குளிர்விக்கும். அவ்வகையில் தான் இடதுசாரி எழுத்தாளரான  ஜோசப் ராஜாவின் நூல்களையும் படைப்புகளையும் வாசிப்பதில்  அலாதியான திருப்தி இயல்பாய் ஏற்படுகிறது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் இந்தியாவின் தலைநகரான தில்லியில்  துவங்கி விவசாயிகள் போர் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றது. உலகம்
முழுவதும் பேசப்பட்ட இப்போராட்டம் குறித்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த தில்லியில் கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு உலகம் சுற்றாமல்
உள்நாட்டில் முடங்கிக் கிடந்தபோதிலும் போராடும் விவசாயிகளைக் கண்டு உரையாடவோ போர்க்களத்தில் பலியான விவசாயிகளுக்காகத் தமது கட்டுரையில்
ஒருவார்த்தைகூட இரங்கல் தெரிவிக்கவோ விரும்பாத பிரதமர்தான், ரோம் பற்றி எரிந்தபோதே பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னன் போன்ற நரேந்திர
மோடி. இவரோ மயிலுக்கு இரைகொடுத்து இறகைவருடிக் கொண்டிருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறைந்த அவையில்
விவசாயத்தைப் பெரு நிறுவனங்களுக்குப் பலி கொடுக்காமலிருக்க விவசாயிகள் போராடி வருவது குறித்து எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. மாறாக
‘மனதின் குரல்’ என்ற பெயரில் வளர்ந்த தாடியுடன் ‘உலகமகா நடிப்பை’ நடித்துக்கொண்டிருந்தார் நரேந்திர மோடி. விவசாயிகள் மழையில், குளிரில், பனியில்,
வெயிலில் எனப் பருவ நிலை மாறிக்கொண்டிருந்த போதிலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளும், உலக
நாடுகளின் குரலும், அரசியல் கட்சிகளின் குரலும், பஞ்சாபைச் சேர்ந்த ஒன்றிய பெண் அமைச்சரின் ராஜினாமாவும் பிரதமராலும் அமித்ஷாவாலும் அலட்சியம்
செய்யப்பட்டன.

‘அந்தோலன்ஜீவி’ என்விவசாயிகள் கேவலப்படுத்தப்பட்டதோடுஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களில் எந்த மாற்றத்தையும் செய்யமாட்டோம், ரத்து
செய்யும் பேச்சுக்கே இடமில்லை எனகர்ஜித்தனர் மோடி அமித்ஷா இரட்டையர். வர்க்கப் போராட்டமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்த விவசாயிகளின்
போராட்டத்துக்குத் தொழிலாளி வர்க்கம் நாடு முழுவதும் கிளர்ச்சிப்பிரச்சாரம் செய்து தில்லியிலும் போர்க்களத்தில் உடனிருந்தது நம்பிக்கையை விதைத்தது.

இந்நிலையில் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என எழுத்தாலும் பேச்சாலும் வரலாற்றுக் கடமையாற்றினார். அதன் ஒரு பகுதியாக எழுத்தாளர் ஜோசப் ராஜாவின்  கவிதைகள் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 முதல் 2021 டிசம்பர் 14 வரை ஓராண்டாக வலம்வந்தன. இவரது எழுத்துக்கள் களத்தில் நின்று விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி போர்த்தீயைவளர்த்தன.

“எழுந்து நிற்பது எவ்வளவு அழகு
அதிலும் எதிர்த்து நிற்பது எவ்வளவு அழகு
சேர்ந்திருப்பது எவ்வளவு அழகு
அதிலும் ஒன்றாய்ப் பத்தாய் நூறாய் ஆயிரமாய்
லட்சமாய்க் கோடியாய் சேர்ந்திருப்பதெல்லாம்
உண்மையிலேயே பேரழகல்லவா”
என வர்ணிக்கும் நூலாசிரியர்..

“ஏ புரட்சிக்காரர்களே
ஒவ்வொரு புரட்சியின்
ஒவ்வொரு வெற்றியிலும்
உங்களுடைய ஆன்மா
எப்படியெல்லாம் மகிழ்ந்திருக்கும்
அந்த மகிழ்ச்சியைக்
கொஞ்சமாக உணரத்தாருங்களேன்”

என புரட்சி ருசிக்காண விழைகிறார் ஜோசப் ராஜா.

இந்தியாவின் சுதந்திரப் போரில் பங்குபெறாத ஆளும் வர்க்கம் தங்களைமட்டுமே ‘தேசபக்தர்கள்’ எனவும் தங்களை விமர்சிப் போரை ‘தேச  விரோதிகள்’ எனவும்
கதைத்துவரும் காலத்தில் போராடும் விவசாயிகளை ..

“இந்த தேசத்தின்
உறுதியான தேசபக்தர்கள்
இந்த தேசத்தின் உண்மையான தேசபக்தர்கள்”
என்கிறார்.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மட்டும் விரோதமானவையல்ல. மாறாக ஒட்டுமொத்த இந்தியர்களுக்கே விரோதமானவை. இதைப் புரிந்து கொள்ளாதவர்களைக் கேள்விக்குட்படுத்துகிறார் நூலாசிரியர்.

சரியான கேள்விதானே.”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்” என்னும் மகத்தான குறளை மனதின் குரலில் கொச்சைப்படுத்தும் பிரதமர் போலவே தமிழ் மக்கள். பிரதமர் மோடியின் கட்சியைப் பாராளுமன்றத் தேர்தலில் மாற்றாக நிராகரித்தவர்கள் அல்லவா தமிழக வாக்காளர்கள்! எனின் விவசாயிகள் போராட்டத்தை வேடிக்கைபார்ப்பதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் கேள்விக்கலகளை காளால்துளைக்கிறார் கவிஞர்.
போராட்டக் காரர்கள் அழகானவர்களாகத் தெரிகிறார்கள் நூலாசிரியருக்கு‌. போராட்டக்காரர்கள் மட்டுமல்ல. போராட்டத்திற்குத் துணைநிற்பவர்கள் கூடத்தான்.

“மனிதகுல வரலாறு நெடுகிலும்
போராடும் மானுடமே பேரழகாய்
ஒளிவீசிக் கொண்டிருக்கிறது”
எனக் கவிதைக்கு அழகுசேர்க்கிறார் கவிஞர்.

“அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும்
போராடிக்கொண்டிருக்கும்
விவசாயப் பிரதிநிதிகளுக்கும்
நடக்கும் பேச்சுவார்த்தையில்
நம்பிக்கைக்குப் பதிலாக
நல்ல பதிலுக்குப் பதிலாகக்
கொடுக்கப்பட்ட உணவை
வேண்டாமென்று ஒதுக்கி
தாங்கள் கொண்டுவந்த
எளிய உணவிலும்
தங்கள் எதிர்ப்பை
பதிவு செய்கிறார்கள்”

ஊடகங்கள் மறைத்ததை வெளிச்சம்போட்டுக் காட்டி விவசாயிகள் சங்கத்தின் மேன்மைக்கு மெருகு சேர்க்கிறார் நூலாசிரியர்.
ஒரு பானைச் சோற்றுக் குஒருசோறு பதம் போலப் பெண் விவசாய போராளியைத் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் ஜோசப் ராஜா.

ஒரு வயதான பெண்மணி சொல்கிறார்:
“எல்லாவற்றையும் இழந்துவிட்ட நாங்கள்
கடைசியாக எங்கள் கைகளில் இருக்கும்
நிலத்தையும் இழந்துவிட விரும்பவில்லை
எங்கள் நிலத்திற்காக எங்கள் சந்ததிகளுக்காக
இந்த உயிரே போனாலும்  பரவாயில்லை” யென்று
கம்பீரமாகக்
காளியைப் போலக் கம்பீரமாக
எல்லையை நோக்கி நடந்து செல்கிறாள்.

“விவசாயிகளின் வளர்ச்சிக்காகத்தான்
இந்தச் சட்டங்கள்
என்ற ஆட்சியாளர்களின் வாக்குறுதிகளை
இதற்கு முன்னால் கேட்ட
எண்ணிலடங்கா வாக்குறுதிகளைப் போலவே
அர்த்தமற்ற ஒன்றாகத்தான்
புரிந்துகொள்கிறார்கள்”

என ஆட்சியாளர்களின் பொய் முகத்தைக் கிழித்துத் தொங்கவிடுகிறார் ஜோசப் ராஜா.
குடியரசு தினம் வழக்கமாக உழைக்கும் வர்க்கத்தின் பங்கேற்பில்லாமல் களையின்றி காட்சிப்படுத்தப்படும். ஆனால் 2021 குடியரசு தினத்தன்று

“முதல் முறையாகக்
குடியரசு தின அணிவகுப்பைச்
சீருடை அணியாத
எளிய மனிதர்கள் சிறப்பிக்கிறார்கள்”
எனப் போராளிகளுக்கு மகுடம் சூட்டுவது சிறப்பு.

ஆனால் அதிகார வர்க்கமோ..

“வாழ்விற்காகப் போராடும்
உழைப்பாளிகளை
இந்த உலகத்தின் கண்களுக்குக்
கெட்டவர்களாகவும் மோசமானவர்களாகவும்
காட்டுவதற்காக எடுத்த முயற்சிகள்
தோல்வியடைந்து போகின்றன”
எனும் நூலாசிரியர்…
“எல்லைகளுக்குத் திரும்பி
நங்கூரத்தை இன்னும் ஆழமாகப்
பாய்ச்சிக் கொள்கிறார்கள்
இப்போது
அவர்களின் மேலே
இன்னும் பிரகாசமாக
ஒளிரத் தொடங்குகிறது சூரியன்”

எனும் கவிதை சிறப்பு.

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் செங்குருதி சிந்தி இன்னுயிர் நீத்த விவசாயிகள் ஏராளம். அவர்களுள் ஒருவருடன் தமது கவிதையால் உரையாடுகிறார் நூலாசிரியர்.

“என்னால் மறக்கமுடியாத
ஒருசில முகங்களில்
இரத்தம் சொட்டச் சொட்டக் காட்சிதரும்
உன்னுடைய முகமும்
நிலைத்திருக்கும் என்றென்றும்
எனக்குத் தெரியும் தோழா
உனக்குள் ஒளித்துவைத்திருந்த புயலை
எனக்கு நன்றாகத் தெரியும் தோழனே
இன்னும் அடங்கியிருக்கும் நெருப்பை
நான் நன்றாக அறிவேன் தோழனே
உண்மையைச் சொன்னால்
நான் காத்திருப்பதுகூட
புயலைப் பற்றிய கவிதைகளையும்
நெருப்பைப்பற்றிய கவிதைகளையும்
எழுதிக் கொடுப்பதற்காகத்தான்”

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகள் போராட்டத்தை நசுக்க மேற்கொண்ட அரக்கத்தனமான முயற்சிகளை முறியடித்து முன்னேறிய விவசாயிகளின் வீரத்தை வர்ணிக்கும் நூலாசிரியர் அதேநேரத்தில்..

“அதிகாரத்தின் கரங்களால்
அழுத்தி அறையப்பட்ட
ஆணிகளுக்கு முன்னால்
அன்பின் மலர்ச் செடியை
நட்டுக்கொண்டிருக்கிறார்
வயதான ஒரு விவசாயி
எண்ணிலடங்கா விதைகளை
தன் வாழ்நாளெல்லாம் விதைத்திருந்த
அந்த வயதான கைகளின் பக்குவம்
ஒற்றைச் செடி நடுகையிலும் கூட
ஒளிர்ந்துகொண்டிருப்பதை
வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்”
எனப் புகழ்மாலை சூட்டுகிறார் கவிஞர்.

முதலாளிகள் ஆட்சியாளர்களையும், ஆட்சியாளர்கள் காவல்துறையையும் நம்பினாலும் மக்கள் தங்களைத் தாங்களே நம்பத் தொடங்கிவிட்டார்கள் என்பதைக் கிராமங்களின் மகாபஞ்சாயத்துகள் நிரூபிக்கின்றன. இத்தகைய மகாபஞ்சாயத்துகள் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் தீயாய்ப்பரவி விவசாயிகளின் ஒற்றுமையைப் பறைசாற்றினால் ஆயிரம் மோடி அமித்ஷா அதிகாரத்துக்கு வந்தாலும் துடைத்தெறியப்படுவார்கள்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு அடிபணிந்த பா.ஜ.க. அரசு விவசாயச் சங்கங்களின் தலைவர்களை அழைத்துப் பேசாமல் தாமாகவே வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தது. வெறும் அறிவிப்பை மட்டுமே நம்பத்தயாராக இல்லை விவசாயிகள். எனவேதான் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற சட்ட மசோதா நிறைவேறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தது.

“கோரிக்கைகள் நிறைவேறியபின்னும்
இந்தப் போராட்டம் தொடரவேண்டும்
மிகப்பெரிய மாற்றத்திற்காகவும்
புத்தம் புதிய வாழ்விற்காகவும்
புத்தம் புதிய விடியலுக்காகவும்
போராடும் தேவையிருக்கிறது என்பதை
எப்போதும் மறந்து விடாதீர்கள்”

என்னும் ஜோசப் ராஜாவின் விழைவுதானே நம் விழைவும். இந்திய விவசாயிகளின் புரட்சியாக இப்போர் இந்திய வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் நிலையில் அடுத்தகட்ட நகர்வுக்கு இட்டுச்செல்லும் வண்ணம் இலக்கியங்கள் பல பூக்கவேண்டியது போர்க்கள தட்ப வெப்பநிலையின் கட்டாயம். அத்தகைய இலக்கியங்களுள் ‘முற்றுகை’ எனும் ஜோசப் ராஜாவின் கவிதைத் தொகுப்பு நன்முத்தாய் மிளிர்கிறது எனின் மிகையன்று.

கவிதைகளுக்கு இணையாக ‘போராட்டமும் கவிதையும்’ என்னும் முன்னுரை அமைந்துள்ளது. அதன் உள்ளடக்கத்தை, கவித்துவத்தை, உணர்வுப் பொழிவைத் தவறவிடாமல் இந்நூலை வாங்கிப்படிக்கப் பரிந்துரை செய்கிறேன். ஏனெனில் முன்னுரையும் முத்தான கவிதைகளும் வாசிக்க  வாசிக்கத்தான் மானுடத்தை இன்னும் இன்னும் நேசிக்கவைக்கும்.

நூல்: முற்றுகை
பக்கங்கள் 72
விலை ₹ 75
வெளியீடு: தமிழ்அலை
3 சொக்கலிங்கம் காலனி
தேனாம்பேட்டை
சென்னை 600 086
தொடர்புக்கு:044-24340200
                              7708597419

– பெரணமல்லூர்சேகரன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.