ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – முழுநிலவும் சில விண்மீன்களும் (கவிதைகள்) – மா. காளிதாஸ்
முழுநிலவும் சில விண்மீன்களும்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – முழுநிலவும் சில விண்மீன்களும் (கவிதைகள்) – மா. காளிதாஸ்

 

 

 

பிடித்த கரத்தால் துவட்டப்படுவதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் மழையில் நனையலாம்.

கொஞ்சம் மழையள்ளி முகத்தில் தெளித்தேன். வெட்கமும் கோபமும் கலந்த மழை என்னை விரட்டுகிறது.

புத்தகம் படித்தபடி, தெருவிளக்கில் சொட்டும் மழையை ரசிக்கும் போது, சில நாட்களுக்கு முன் பறந்த ஈசல்களை இழுத்துப் போகிறது நினைவெறும்பு.

இன்று, இப்பொழுதில், மறுபடி காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களைக் கையிலேந்தி வருகிறது சித்தார்த்தன் பாரதியின் இக்கவிதை:

“மழை நின்ற நாளில்
வெயில் பூத்து வருகிறது ஊரெங்கும்.
கூடடங்கிக் கிடந்த குருவிகள்
வெளியே வந்து பாடத் தொடங்கிவிட்டன.
ஊரே
குருவிகளின் பாடலில் மயங்கிக் கிடக்கிறது.
நின்று போன மழை
மீண்டும் திரும்புகிறது
குருவிகளின் பாடலில் நனைய.”

இந்த மழைப்பொழுதில் சூடாக ஒரு கோப்பைத் தேநீர் அருந்திய இதம் தருகிறது இக்கவிதை.

எந்த மனமும் பொக்கு விதையல்ல. அதற்கென்று தனியான நிலமுண்டு, நீருண்டு, அசைத்துப் பார்க்கும் காற்றுண்டு.

துளிர்த்து வந்தபின் ஒன்றுமில்லாமல் ஆ(க்)கும் சூழல்கள் ஒரு பக்கத்தில் மட்டும் எழுத அனுமதிக்கப்படும் ரெக்கார்டு நோட்டு போன்றது.

இதைத் தனக்கே உரிய பாணியில்,

“கிளர்ந்து மேலெழ முடியாமல்
அப்படியே கிடக்கிறது
மனதின் அடியாழத்தில்
எல்லோருக்குள்ளும் சிறு விதையளவு
யார் மீதோ தீராத காதல்.
தனித்த அவர்களின் பயணங்களில்
துணையாக வந்தும்
கருத்த அவர்களின் இரவில்
ஒளியாக வந்தும்
அவர்களோடே உண்டுறங்கி
குளித்து முடித்து வெளியே கிளம்புமதை
வேறு யாருக்கும் காட்ட விரும்புவதில்லை அவர்கள்.”

என சித்தார்த் விளிக்கும் போது, ஒரு மெல்லிய கேவலும் கூடவே ஒலிக்கிறது.

இக்கவிதையின் கனமும் கணமும் ‘தனித்த பயணங்களில்’, ‘கருத்த இரவில்’ ஒளிந்து கிடப்பது இக்கவிதையை மேலும் மெருகேற்றும் அதே சமயம், ‘வேறு யாருக்கும் காட்ட விரும்பாத்’ தன்மைக்குள், பெண்ணின் பெரும்பான்மை முகம் தோன்றும்படிச் செய்ததும் கவிஞரின் தனித்துவமே.

அமைதி கேள்விக்குள்ளாக்கப்படுதல் தொன்றுதொட்டு வரும் தொடர்கதையே. எந்தவொரு பிரச்சினையும் ஒன்றுமே நடவாத மாதிரி அமுக்கப்படுதலும் அமைதியின் ஒருவகை மாதிரியே.

“………………………………….
…………………………………..
அறத்தைச் சொன்னதால்
அன்பைப் போதித்ததால்
ஏரிக்கரை ஒதுங்கிய
புத்தரின் வாழ்வு தெரியாத
சிறுமிகளும் சிறுவர்களும்
சிலைக்குப் பொட்டிட்டுப் பூ வைத்து
மரக்கிளை ஒடித்து வேல் நட்டு
அவர் கண்பொத்தித்
தங்கள் விளையாட்டைத் தொடர்கின்றனர்.”

என்ற கவிதையில், முந்தைய தலைவர்களின் வரலாறுகளை ஒழுங்காகப் படிக்காமல் அல்லது வேண்டுமென்றே தங்களுக்கு உகந்த மாதிரித் திரித்துச் ‘சொல்லாடல்’ புரியும் கத்துக்குட்டி அரசியல்வாதிகளை அடையாளப்படுத்துகிறது ‘புத்தரின் வாழ்வு தெரியாத சிறுமிகளும் சிறுவர்களும்’ என்ற வரிகள்.

இரண்டாண்டுகளுக்கு முன், சென்னை புத்தகக் கண்காட்சியில் கையளித்த “முழுநிலவும் சில விண்மீன்களும்” கவிதைத் தொகுப்பு குறித்து, இவ்வளவு காலம் கடந்து கருத்துத் தெரிவிப்பதற்காக மன்னிப்பாயா நண்பா – சித்தார்த்தன் பாரதி?

– மா. காளிதாஸ்

 

நூலின் பெயர் : முழுநிலவும் சில விண்மீன்களும் (கவிதைகள்)
ஆசிரியர் : சித்தார்த்தன் பாரதி
வெளியீடு: நம் நதி பதிப்பகம்
விலை : ரூ.110

 

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *