கவிதை: இரண்டாவது இருதயம் (என் கைபேசி) – இந்திரன்

 

இரண்டாவது இருதயம்

 

கையளவு இருதயம்போல்
விடாமல் துடிக்கும் என் இரண்டாவது இருதயம்
என் கைபேசி.

கடந்த காலத்தை என் இதயத்திடமும்
நிகழ்காலத்தை
என் கைபேசியிடமும் பறி கொடுத்து விட்டேன்.

என் அந்தரங்கம் அத்தனையும்
பூவுக்குள் சுருண்டிருக்கும் பூநாகம் போல்
என் கைபேசிக்குள் அடக்கம்.

ஆதாம் ஏவாளுக்கு ஆப்பிளைக் கொடுத்த
சாத்தானின் நிழல்
என் கைபேசியின் சுவரில் தோன்றி மறைவதை
யதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது.

இருந்தாலும்
எனது இரண்டாவது இதயமல்லவா அது.?

 

——————————————————————-

– இந்திரன்