புத்தகக் கண்காட்சியில் என் அனுபவம் – மருதன்

My experience at the book fair - Maruthan புத்தகக் கண்காட்சியில் என் அனுபவம் - மருதன்

புத்தகத்துக்கு அப்பால்
– மருதன்

இளங்குளிர் விலகி, சூடு தொடங்கும்போது சென்னைப் புத்தகக் கண்காட்சி ஆரம்பமாகியிருக்கிறது. புத்தக எடிட்டிங் பணி பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென்று கண்கட்சி ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு அநேகமாக நடக்காது என்று நான் நினைத்துக்கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு நாள் தேதி குறித்துவிட்டார்கள்.

புத்தகக் கண்காட்சி என்பது எப்போதுமே எனக்கு அரங்குக்கு வெளியிலிருந்துதான் ஆரம்பமாகிறது. சென்ற ஆண்டு இதே நடைபாதையில், ‘எதையெடுத்தாலும் ஐம்பது அரங்கில்’ அர்னால்ட் டாய்ன்பீயின் A Study of History சுருக்கப்பட்ட பதிப்பு (இரு பாகங்களில்) கிடைத்தது. அழகிய கையளவு கறுப்பு அட்டைப்பெட்டியில் இரண்டும் உறங்கிக்கொண்டிருந்தன. ‘ஒன்று அம்பது ரூபா. ஆனா, பெட்டிக்குள் இரண்டு புக் இருக்கு பார்த்துக்கிடுங்க’ என்றார் கடைக்காரர். ராய் போர்ட்டர் எழுதிய கேம்பிரிட்ஜ் மருத்துவ வரலாறு நூலையும் அவரிடம்தான் வாங்கினேன். ‘இதுல பாருங்க. அளவு இரண்டு மடங்கா இருக்கு. இது இரண்டு புக்குக்குச் சமம், பார்த்துக்கிடுங்க.’

இந்தமுறை பெரியசாமித் தூரனின் பாரதியும் உலகம் (வானதி பதிப்பகம், 1979), அசோகமித்திரனின் ஒரு பார்வையில் சென்னை நகரம் (கவிதா) ஆகியவற்றோடு ஹெச்.ஜி. வெல்ஸின் The Invisible Man, தி மாடர்ன் லைப்ரரி பதிப்பு கிடைத்தது. ஆர்தர் சி. கிளார்க் நூலை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஒரு நூலின் உள்ளடக்கம் போலவே அதனை யார் வெளியிடுகிறார்கள் என்பதும் முக்கியமானது என்பதை உணர்ந்துகொண்ட காலம்முதல் எனக்குப் பிடித்த பதிப்பகங்களில் ஒன்றாக தி மாடர்ன் லைப்ரரி இருந்து வருகிறது. செம்பு வண்ணத்தை அவர்களைப் போல் வேறு யாரும் இவ்வளவு அழகாகப் பயன்படுத்திப் பார்த்ததில்லை. பெங்குவினுக்கு காவி எப்படியோ அவர்களுக்கு செம்பு.

உள்ளே நழைந்ததும் முதலில் பிரிட்டிஷ் கவுன்சில் அரங்குக்குள் நுழைந்தேன். அண்ணா சாலையிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் ஒரு காலத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறேன். தேவநேயப் பாவாணர் நூலகத்துக்குப் பின்னால் சத்தம் போடாமல் ஒளிந்துகொண்டிருக்கும் அந்த நூலகம். முதல் முறை போனபோது நிறைய முறை சுற்றிச் சுற்றி வந்த பிறகே கண்டுபிடிக்கமுடிந்தது. குளிரூட்டப்பட்ட அறை, அயல் இதழ்கள், டிவிடி, கணிப்பொறி, இணைய வசதி, புத்தகங்கள் என்று ஒரே மிதப்பாக இருக்கும்.

வளாகத்துக்குள் சிறிய உணவகமொன்று இருக்கிறது. இயந்திரத் தேநீர், காபியோடு பிஸ்கெட், கட்லட், சமோசா மூன்றும் கிடைக்கும். ஒரு காபியை எடுத்துக்கொண்டு வெளியிலுள்ள படிக்கட்டில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது பிரிட்டனுக்கே போய்விட்டது போல் தோன்றும். தோலில் ஒட்டிக்கொண்டிருக்கும் குளிர் மறைந்து வெயில் சீண்டும்போது உள்ளே நுழைந்தால் மாலைவரை இருக்கலாம்.

அப்போது சேகர் என்றொரு ரயில் நண்பர் எனக்கிருந்தார். பட்டாபிராம் சைடிங்கிலிருந்து கிளம்பும் அவர் ரயிலில் ஆவடியில் நான் ஏறிக்கொள்வேன். மாலை சென்ட்ரலில் சந்தித்து ஒன்றாக வீடு திரும்புவோம். நார்மன் லூயிஸின் பர்மா பயண நூலை ஒருமுறை எனக்குப் படிக்கக் கொடுத்தார். பிகோ ஐயரின் Tropical Classical நூலைப் படிக்காவிட்டால் உயிர் வாழ்வதில் பொருளே இல்லை என்பதுபோல் ஒருமுறை அவர் சொல்லப்போக (அவர் படித்துவிட்டு மற்றவர்கள் படிக்காத எந்தப் புத்தகத்தையும் அவர் இப்படித்தான் சொல்வார்), மறுவாரமே பிரிட்டிஷ் நூலகத்தில் அதைக் கண்டுபிடித்தேன். கிரஹாம் கிரீன், பீட்டர் மாத்தைஸன், கிம் ஃபில்பி, எமர்சென், தொரோ என்று பலரை முதல்முறையாக அல்லது நெருக்கமாக அறிந்துகொண்டது அந்நூலில்தான். காற்புள்ளியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அவருடைய எல்லா நூல்களையும் அதன்பின் தேடிப் படித்துவிட்டேன் என்றாலும் இன்றுவரை டிராபிகல் கிளாசிக்கல் மட்டும் என் கண்ணில் இதுவரை படவில்லை.

நார்மன் லூயிஸ் ஆம்னிபஸ் பதிப்பையும் அதே நூலகத்தில் ஒரு நாள் கண்டுபிடித்தபோது பிரிட்டிஷ் கவுன்சில் எனக்கு நெருக்கமான இடமாக மாறிவிட்டது. அந்தப் பெரிய கெட்டி அட்டைப் புத்தகத்தை எடுத்து வந்து நான் படிக்கும் முன்பே சேகரிடம் கொடுத்து, ‘பத்து நாளில் தந்துவிடுங்கள், இல்லாவிட்டால் ஃபைன் போட்டுவிடுவார்கள் அண்ணா’ என்று சொன்னது நினைவிலிருக்கிறது. அதன் பிறகுதான் அவர் வேர்கடலை பொட்டலத்தை என்னோடு இயல்பாகப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். ஜன்னல் இருக்கையையும் அவ்வப்போது எனக்கு விட்டுக்கொடுத்துவிடுவார். ‘Les Miserables’ படிக்காத அனைவரும் நடைபிணங்கள்’ என்றொருநாள் அவர் சொன்னபோது, ‘அடுத்தது அதுதான்’ என்று சத்தியம் செய்தேன். உயிரே போனாலும் சுருக்கப்பட்ட எந்தப் பதிப்பையும் படிக்காதே என்று இன்னொரு நாள் அறிவுறுத்தினார். மீறி படிப்பவர்களின் ரத்தத்தை டிராகுலா வந்து உறிஞ்சும் என்று மட்டும்தான் சொல்லவில்லை.

அலமாரியிலிருந்து அகற்றப்பட்ட பழுதடைந்த புத்தகங்களை மிகவும் விலை குறைத்து விற்பனைக்கு வைக்கும் வழக்கம் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு இருந்தது. ஆண்டுக்கொருமுறையோ இருமுறையோ இவ்வாறு நடக்கும். வெயில் வந்து விழும் தாழ்வாரம் போலிருக்கும் இடத்தில் இந்தப் புத்தகங்களை வைத்திருப்பார்கள்.

தாக்கரே, பைரன், விட்மேன், டிக்கன்ஸ் என்று பல நூல்கள் வாங்கினேன். ஆர்.கே. நாராயணின் Writerly life புத்தகம் இங்கே வாங்கியதுதான். இன்றுவரை இதை முழுமையாகப் படித்து முடிக்கவில்லை. எரிக் ஹாப்ஸ்பாமின் சுயசரிதையை 100 அல்லது 150 ரூபாய்க்குப் பார்த்தபோது கிட்டத்தட்ட அழுகையே வந்துவிட்டது. அதற்கு முந்தைய வாரம்தான் அந்நூலை முழுக்க நகலெடுத்து, ஸ்பைரல் பைண்டிங் செய்து வைத்திருந்தேன். வாங்குவதா, வேண்டாமா என்று மாபெரும் விவாதமொன்றை அங்கேயே நிகழ்த்திவிட்டு, வேண்டாம் என்று வந்துவிட்டேன். அதன்பின் ஏதோ ஒரு நாள் அந்தப் புத்தகம் கனவில் வந்தது என்று நினைக்கிறேன். வாழ்நாளில் இனி ஸ்பைரல் பைண்டிங் புத்தகம் படிக்கக்கூடாது என்றொரு முடிவை அன்று எடுத்து, குறைந்தது ஒரு மாதம் கடைபிடித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

ஒருமுறை கிரஹாம் கிரீனின் ஆறேழு கெட்டி அட்டைப் புத்தகங்களை (பாட்லி ஹெட்) மொத்தமாக வீட்டுக்குத் தூக்கமுடியாமல் தூக்கி வந்தேன். என்னென்ன தலைப்புகள் என்று நினைவில் வைத்திருந்து மறுநாள் சேகரிடம் சொன்னபோது, அமைதியாக ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொன்னார். ‘கிரஹாம் கிரீன் என்றால் ‘The Quite American’. அதை விட்டுவிட்டு என்னென்னவோ வாங்கியிருக்கிறாயே!’

பிரிட்டிஷ் கவுன்சில் நூலக அரங்கில் பழுதடைந்த நூல்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். தங்கை ஆஸ்கர் வைல்ட் தொகுப்பொன்று வாங்கிக்கொண்டார். In Their Own Words : British Women Writers and India 1740-1857, ஜேன் மோரிஸின் Hong Kong, தீர்த்தங்கர் ராயின் The Economic History of India உள்ளிட்ட நூல்கள் வாங்கினேன். பயண நூல்களில் இன்றுவரை நான் திளைத்துக்கொண்டிருப்பதற்குக் காரணமான சேகரை நினைத்துக்கொண்டே அரங்கிலிருந்து வெளியில் வந்தேன். ஒரு நல்ல நூலை அதைப் பரிந்துரைத்தவரோடு சேர்த்தே நாம் நினைவில் வைத்துக்கொள்கிறோம்.

கி. ராஜநாரயணனின் கரிசல் காட்டுக் கடுதாசியை மிகச் சமீபத்தில்தான் படித்தேன் என்று சொல்வதற்குக் கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது. கி.ரா. தலைமைத் தொகுப்பாளராக இருந்து சாகித்திய அகாதெமியில் வெளியிட்ட ‘நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்’ நூலின் ஒரேயொரு அட்டைச் சிறிதளவு தளர்ந்திருக்கும் பிரதியை அவர்கள் ஒட்டி வைத்திருக்கும் குறைவான விலையைவிடவும் விலை குறைத்துக் கொடுத்தார்கள். ஒரே பிரதிதான் பாக்கி இருந்தது. அதைத் தூக்கி முதுகுப்பையில் போட்டுக்கொண்டபோது, கி.ராவைப் படிக்காத உலகின் கடைசி மனிதனின் பிரதி என்று அது சொல்வதுபோல் இருந்தது.

புதிய, பழைய ஆங்கில நூல்களை மலை, மலையாகக் குவித்து வைத்திருக்கும் (பெயரை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத) அரங்கங்கள் சிலவற்றுக்குச் சென்று வந்தேன். The Inner Life of Empires (ஒரு குடும்பத்தின் கதையாகத் தொடங்கி 18ஆம் நூற்றாண்டு வரலாறாக வளரும் விருதுபெற்ற நூல்), Classics of Western Philosophy (Edited by Steven M. Cahn, ஆயிரம் பக்கங்களைக் கடந்த பெரிய தொகுப்பு), Modernity of Slavery (காலனிய காலத்து கேரளாவும் தலித் மக்களும்) உள்ளிட்ட புத்தகங்களைப் புதினா, கொத்துமல்லி போல் ‘மூன்றெடுத்தால் 200’, ‘நான்கெடுத்தால் 400’ என்று கூறு போட்டு வைத்திருந்தார்கள்.

நான் சமீபத்தில் கன்னிமாராவிலிருந்து எடுத்துப் படித்த Beyond the Englightenment (சில முக்கிய சமூகக் கோட்பாட்டாளர்களை அறிமுகப்படுத்தும் நூல்), லத்தீன் அமெரிக்கப் புரட்சிகளின் வரலாற்றைக் கலையின் மூலம் விவரிக்கும் பெரிய, அழகிய படங்கள் கொண்ட ஒரு நூல் (Art and Revolution in Latin America 1910-1990, David Craven) இரண்டையும் இதே போன்ற வேறொரு அரங்கில் சேகரித்தேன்.

ஒவ்வொரு பிடிஎஃப் கோப்பும் ஓர் அச்சுப் புத்தகமாக மாறும் கனவைத் தனக்குள் தேக்கி வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அசோகர் நூலுக்காக வாசித்துக்கொண்டிருந்தபோது ஹிரியண்ணாவின் இந்தியத் தத்துவத்தின் தமிழாக்கத்தை இணையத்தில் தேடியெடுத்தேன். சில ஆங்கில, சமஸ்கிருதப் பதங்களைத் தமிழில் எவ்வாறு எழுதியிருக்கிறார்கள் என்று சரி பார்க்க விரும்பினேன். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் அரங்கில் ஹிரியண்ணாவின் இந்தியத் தத்துவத்தைக் கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. நீலகண்ட சாஸ்திரி, வின்சென்ட் ஸ்மித், மார்டிமர் வீலர் என்று பலருடைய நூல்களை மலிவு விலையில் மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். தயாரிப்பும் நன்றாக இருக்கிறது. வரலாறு போக, வ.உ.சி., தொ.மு.சி. ரகுநாதன், திருக்குறள், கால்டுவெல் என்று புதிய பதிப்புகள் நிறைந்திருக்கின்றன.

ஒரு பார்வையில் சென்னை நகரம் நூலில் ‘மிக்க அன்புடன், அசோகமித்திரன். சென்னை, 27.05.2003’ என்று ஆசிரியர் கையெழுத்திட்டிருந்ததை வீட்டுக்கு வந்து பிரித்த பிறகே கவனித்தேன். எதிர்பாராத வியப்புகளைப் பழைய புத்தகங்கள் மட்டுமே ஏற்படுத்துகின்றன.

எப்போது வேண்டுமானாலும் எளிதில் வாங்கிவிடக்கூடிய புதிய நூல்களை நான் பொதுவாக புத்தகக் கண்காட்சியில் வாங்குவதில்லை. சுமை கூடிவிடும். தவிரவும், புதிய நூல்களை வேண்டியபொழுது வரவழைத்துக்கொள்வது சுலபமாகிவிட்டது.

ரா.அ. பத்மநாபன் தொகுத்த பாரதி புதையல் பெருந் திரட்டு நூலின் பழைய பிரதி வானதியில் கிடைத்தது. 45 ரூபாய் விலையுள்ள 584 பக்க நூலை ஐந்து ரூபாய் கழித்துக்கொண்டு ரசீது போடுகிறார்கள்.

இரு ஆண்டுகளாக உலகைக் நிலைகுலையச் செய்துவிட்ட கிருமி குறித்து நான் பார்த்தவரையில் எங்கும் எந்தப் பதிவும் இல்லை. உடல், உள்ளம் இரண்டையும் பாதித்த பெருந்தொற்றின் கதைகள் இன்னும் எழுதப்படவில்லையா? தனித்தலைப்பில் இல்லாவிட்டாலும் கவிதைத் தொகுப்புகளிலோ சிறுகதைத் தொகுப்புகளிலோ நிச்சயம் இந்தக் கொடுமையான காலகட்டத்தின் நிழல் படிந்திருக்கும் என்று நம்புகிறேன். தமிழ் இலக்கியம் சமகாலத்து நிகழ்வுகளிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறதோ? இமையத்தின் செல்லாத பணம் போன்ற படைப்புகள் குறைவாகவே வெளிவருகின்றன.

பதிப்பகம் ஆரம்பிப்பது இப்போது சுலபமாகிவிட்டது. கைவிரல்கள் எண்ணிக்கையில் பிரதிகள் அச்சிடுவது சாத்தியம் என்பதால் பலர் நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்திருப்பதைப் பார்க்கிறேன். அச்சில் இல்லாத பல நூல்களை இவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள். பரிசல் ஓர் உதாரணம். சென்றமுறையைவிட மொழிபெயர்ப்பு நூல்கள் கணிசமாகப் பெருகியிருக்கின்றன. கவிதைத் தொகுப்புகளும். சுகுமாரன், ஸ்ரீவள்ளி, பெருந்தேவி, மனுஷ்ய புத்திரன், இசை, வெய்யில் என்று பலருடைய படைப்புகள் காணக்கிடைக்கின்றன. நாவல்களை இனிதான் பார்வையிடவேண்டும். இரு முறைதான் சென்றிருக்கிறேன். சில மணி நேரங்களுக்கு மேல் சுற்றிவரமுடியவில்லை.

சேகரை அதன்பின் சந்திக்கவேயில்லை. வருமான வரித்துறையில் பெரிய பொறுப்பொன்றை வகிக்கிறார் என்று பிற நண்பர்கள்மூலம் தெரிந்துகொண்டேன். பிரிட்டிஷ் நூலகம் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த மூலையில் எந்தப் புத்தகம் இருக்கும் என்பதுவரை கிட்டத்தட்ட மனப்பாடம் ஆகிவிட்ட பிறகு அந்நூலகம் சட்டென்று சிறுத்துப்போய்விட்டதுபோல் ஓர் உணர்வு. அதன்பின் உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட அதே வேளையில் தேவநேயப் பாவாணரிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டுவிட்டேன். இரட்டைக் காப்பியங்கள் இல்லையென்றாகிவிட்ட பிறகு கன்னிமாராவே ஒரே புகலிடமாக மாறியது. இன்றுவரை நூலகம் என்றால் அது மட்டும்தான் எனக்கு.

ஆவடி காமராஜ் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் தலைமை ஆசிரியர் எட்வர்ட் செல்லதுறையின் அறைக்குள் நுழைந்து கன்னிமாரா நூலக விண்ணப்பத்தைத் தயக்கத்தோடு நீட்டினேன். என்னது என்று வாங்கிப் பார்த்துவிட்டு ஒரு புன்னகையோடு கையெழுத்திட்டுக் கொடுத்தார். அவர் அரிதாகவே புன்னகைக்கக்கூடியவர். நூலகத்தில் சிறிய நீல வண்ண அட்டையில் முத்தான கையெழுத்தில் என் பெயரும் உறுப்பினர் எண்ணும் எழுதிக்கொடுத்தார்கள். பரணில் எங்காவது போட்டு வைத்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

காயிதே மில்லத் கல்லூரியில் இருந்த காலத்திலிருந்து புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். இருந்த இடத்திலேயே புத்தகங்களை வரவழைத்துக்கொள்ள முடிகிறது என்பதால் முன்பு போல் நிறைய புத்தகங்களும்கூட இப்போதெல்லாம் இங்கிருந்து வாங்குவதில்லை. ஒரு நாள் விடாமல் சென்ற காலமெல்லாம் இருந்தது. இப்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று முறை சென்றாலே அதிகம். அப்போதும்கூடப் பெரும்பாலும் நண்பர்களைச் சந்திக்கவே செல்கிறேன். சில சமயம், அப்படியொரு காரணத்தை எனக்கே சொல்லிக்கொண்டும் சொல்கிறேன்.

கண்ணுக்குப் புலப்படாத மரபொன்றை என்னையுமறியாமல் பின்பற்றிக்கொண்டிருக்கிறேனா? ஒரு தொடர்ச்சி அறுபட்டுவிடக்கூடாது என்பதற்காக கவனத்தோடு ஒவ்வோராண்டும் வந்துகொண்டிருக்கிறேனா? இருக்கலாம். ஒருவேளை புத்தகங்களைக் குவித்து வைக்கும் இடமாக மட்டும் இருந்திருந்தால் எப்போதோ கண்காட்சி அலுத்துப் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.