சென்ற தலைமுறைகளின் வாழ்க்கையை கதைகளாக, நாவல்களாக படிப்பதில் தனி சுவாரஸ்யம் தான். சாதாரணமாக அரசர்கள், அவர்களின் சாம்ராஜ்யம், வீரதீர சாகசங்கள், இவர்களின் கட்டு கதைகளே நமக்கு வரலாறாக சொல்லபட்டு வந்துள்ளன..
இந்த அரசர்களின் கீழ் வாழ்ந்த சாதாரண மக்களின் வாழ்க்கை மறைக்கபட்ட வரலாறாகவே இருந்துள்ளது..
சாதாரண விளிம்பு நிலை மக்கள் தலைமுறை தலைமுறையாக அவர்களின் வாழ்நிலையை, வாழ்வியல் முறைகளை, மாற்றங்களை ரத்தமும், சதையுமாக விவரிக்கும் சுயசரிதைகளை படிப்பதில் தனி சுவாரஸ்யம் இருக்கும்.
அதில் அலெக்ஸ் ஹேலேவின் உலக பிரசித்து பெற்ற நாவலான “ The Roots” ( தமிழில்- ஏழு தலைமுறைகள்) ல் குண்டாகிண்டே என்கிற கதாப்பாத்திரம் தொடங்கி ஏழு தலைமுறைகளின் வாழ்க்கை முறையையும் அவர்கள் ஆப்பிரிக்காவின் கானா நாட்டு காடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு அடிமைகளாக சென்று அங்கு நடக்கும் அடிமை வாழ்க்கையை, வலிகளை படிக்கும் பொழுது பல நாள் தூக்கம் மறந்துப் போகும்.
Y.B. Satyanarayana
அதே போல்  பேராசிரியர்.சத்தியநாராயண அவர்களின் சுயசரிதை “ My father Baliah”
ஆந்திரபிரதேசத்தில், இன்றைய தெலுங்கானவில் தலித் மாதிகா சமூகத்தை சேர்ந்த மூன்று தலைமுறைகளின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கிறது இந்த நாவல்.
ஆசிரியரின் முப்பாட்டனார் நரசய்யாவின் வாழ்க்கை பயணம் தெலுங்கானா மாநிலத்தின், வங்கபள்ளி என்ற சிறிய கிராமத்திலிருந்து தொடங்குகிறது.  நரசய்யாவின் தந்தை நிஜாம் மகாராஜவிற்கு தைத்து தந்த அழகிய செருப்பு ஜோடிக்கு 50 ஏக்கர் நிலத்தை சன்மானமாக பெறுகிறார். அவ்வளவு பெரிய பரிசை சன்மானமாக பெற்றும் அன்றைய சாதிய  சமூக ஒடுக்கு முறையால் அதை அவரால் அனுபவிக்க முடியாமல் போகிறது.
நம் பழைய எம்ஜியார்  படங்களில் வரும் லோக்கல் பண்ணையார்  அவர் நிலத்தை பிடுங்கி கொண்டு, போனால் போகிறது என்று வெறும் இரண்டு ஏக்கரை தருகிறார். அதுவரை அடிமை கூலியாக இருந்தவர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறார். அன்றைய பொருளாதார, சமூக கட்டமைப்பில் பல தடைகளைத் தாண்டி விவசாயத்தை தொடர முடியவில்லை.
தனக்கு பின் வரும் சந்ததியினர் இந்த கூலி அடிமை முறையிலிருந்து காப்பாற்ற அந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். ஆங்கிலேயர் ஆட்சியில் ரயில்வே துறையில் கூலி வேலையாளாக சேர்கிறார். அதுவரை கல்வியறிவு பெற வாய்ப்பே இல்லாத சூழ்நிலையில், அவரது மகன் பாலய்யா ( இந்த கதையின் நாயகன்) அந்த ஸ்டேசனில் பணி புரிந்த கிருஸ்த்துவ அதிகாரியிடமும், அருகிலிருந்த மசூதியின் மத தலைவிரிடமும் எழுத படிக்க கற்றுக் கொள்கிறார். படிக்க ஆர்வம் இருந்தும் சாதி இந்துக்களால் பள்ளி கல்வி மறுக்க படுகிறது.
நரசய்யாவை தொடர்ந்து பாலய்யாவும் ரயில்வே துறையில் கூலியாக வேலைக்கு சேர்கிறார். கல்வி மட்டுமே அடுத்த தலைமுறையை இந்த தீண்டாமை கொடுமையிலிருந்து வெளியேற்ற முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறார். இந்நூலின் ஆசிரியர் உள்பட அனைத்து பிள்ளைகளையும் பள்ளி கல்வியிலிருந்து ஆராய்ச்சி படிப்பு வரை படிக்க வைக்கிறார்.
My Father Baliah by Y.B. Satyanarayana in Rajini’s Kabali Movie
இதை கேட்கும் பொழுது நம்ம ரஜினி ஒரே பாடலில் பணக்காரர் ஆவது போல தெரியும் (  கபாலி படத்தில் ரஜினி அறிமுக சீனில்  இந்த புத்தகத்தை படிப்பது போல் இருக்கும் என்பது கூடுதல் தகவல்). ஆனால் பாலய்யா தனக்கு பிறந்த 13 குழந்தைகளில் நான்கு குழந்தைகள் இறந்துப் போக, மற்ற அனைத்து மகன்களையும் படிக்க வைக்க, எந்த சமரசமும் இல்லாமல் போராடுவது உண்மையில் சவாலான விஷயம். முறையான பள்ளி கல்வி, அம்பேத்கரியம், சமூக சீர்திருத்தம் போன்ற  சிந்தனையோ, விழிப்புணர்வோ இல்லாவிட்டாலும் அவர் முதல் பட்டதாரிகளை உருவாக்கியது, கலப்பு திருமணங்களை  ஊக்கிவித்தது என ஆச்சரியங்களை நிகழ்த்தி இருப்பார்.
இந்த புத்தகத்தை படிக்கும் போது, இதே அனுபவங்களை பேசும், ஓம்  பிரகாஷ் வால்மிகி எழுதிய “Joothan” ( தமிழில் ” எச்சில்”) புக்கர் பரிசு பெற்ற அரவிந் அடிகாவின்,  “ The White tiger”, நாவல்கள்  நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியாது.
நமது சமூகத்தில் புரையோடி போயிருக்கும் சாதி அழுக்குகளையும் , அதை கலைந்தெரிய தனிபட்ட, சாமான்ய மக்களின் போராட்டங்களை அறிய பயன்படும்.
இக்கதை படித்து முடித்தவுடன் நம் மூதாதையர்களின் வாழ்க்கையை தேடி போக ஆசை ஏற்படுவதில் ஆச்சரியமில்லை.
– A.Venmani
One thought on “என் தந்தை பாலய்யா | மதிப்புரை வெண்மணி”
  1. என்று மடியும் இந்த சாதிய இழிநிலை? இன்னும் எத்தனை நரசய்யாக்களை வாழ்க்கையை அனுபவிக்க விடாமல் வஞ்சிக்கும்? என்று கிடைக்கும் இந்த இழிநிலை இல்லாததொரு பொன்னுலகம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *