பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் நடத்திய ”என் ஊரின் கதை” கட்டுரைப்போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட முதல் 10 கதைகளுள் இக்கதையும்  ஒன்று.

போட்டி முடிவுகளை காண கிளிக் செய்க : ”என் ஊரின் கதை” கட்டுரைப்போட்டி முடிவுகள்

சமீபத்தில் நான் என்னுடைய பிறந்த ஊரான முகவூர் என்ற கிராமத்திற்கு சென்றிருந்தேன். எனது ஊர் விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் தாலுகாவில் உள்ள சிற்றூர் ஆகும். 50 ஆண்டுகளுக்கு முன்பு நான் பள்ளிப்படிப்பு படித்த போது இருந்த நிலைக்கும் தற்போது இருக்கும் நிலைக்கும் மிகப் பெரிய வேறுபாட்டை என்னால் பார்க்க முடிந்தது. 50 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றம். அன்றைய காலங்களில் பெரும்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வந்தனர். எனவே விவசாயிகளும் விவசாயக் கூலிகளும் பெரும்பகுதி வசித்து வந்த ஊர். முக்கியமான விவசாய உற்பத்தி நெல், பருத்தி, கரும்பு. இவை நஞ்செய் நில விளைபொருட்கள். கேழ்வரகு, கம்பு, சோளம் போன்றவை புஞ்செய் நில விளைபொருட்கள். விவசாயத்தை பகுதி நேர வேலையாகக் கொண்டிருந்த ஒரு பகுதி மக்கள் பனை ஏறுவதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர்

பகுதி நேர விவசாயத்தில் ஈடுபட்டவர்களும், சிறு துண்டு துக்காணி நிலத்தை உடைமாயாகப் பெற்றவர்களும் விளைச்சல் பொய்த்த போது அல்லது வறட்சி நிலவியபோது ஏழ்மையின் பிடியில் சிக்கி அவதியுற்று வந்த காலம். இத்தகைய ஒரு பகுதியினர் நிலத்தை விட்டு வெளியேறி கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொண்டு பிழைப்பை ஓட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். இப்படியாக விவசாயத்தில் இருந்து கணிசமாக வெளியேறிய விளிம்பு நிலை மக்களை அன்றைக்கு சிறு மூலதனத்தில் சிறு சிறு தொழிற்கூடங்களில் கைத்தறிகளைச் சொந்தமாக வைத்திருந்த முதலாளிகள் ஈர்க்க ஆரம்பித்தனர். அதுமுதல் இழப்பதற்கு ஏதுமின்றி உழைப்பை மட்டுமே நம்பி இருந்த பாட்டாளி வர்க்கம் ஒன்று எங்கள் ஊரில் உருவாக ஆரம்பித்தது. கைத்தறித் தொழிலாளர்களாகவும், பாவு புனையும் தொழிலாளர்களாகவும், தார் சுற்றும் தொழிலாளார்களாகவும் அவர்கள் மாறினர். கைத்தறிச் சேலைதான் இவர்களின் உற்பத்திப் பொருள். விவசாயம் பொய்த்தாலும், அன்றாடப் பசியை ஆற்றுவதற்கு இந்த கைத்தொழில் அவர்களுக்கு மிகவும் உதவியது. அன்றைய மக்கள் தொகையில் 20 விழுக்காடாக இவர்களின் ஜனத்தொகை உயர்ந்தது

இவர்களை வேலைக்கு அமர்த்திய சிறு முதலாளிகள், பக்கத்து ஊரான தளவாய்புரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இதற்கு முன்பு வியாபாரிகளாக இருந்தவர்கள், அல்லது கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து பணம் சேர்த்தவர்கள். ஒரு சிலர் பெரும் நிலவுடைமையாளர்களாகவும் இருந்தனர். இத்தகைய சிறு முதலாளிகள்,  விவசாயத்தையும் மற்றும்  பனை ஏறும் தொழிலையும் விட்டு வெளியேறி வக்கற்ற நிலையில் இருந்தவர்களை பலன் வீதக் கூலி ( Piece wages ) கொடுத்து மிகக் கடுமையான சுரண்டலுக்கு உள்ளாக்கினர். ஏறக்குறைய 100 விழுக்காடு உபரி மதிப்பைப் பெற்றனர். மூலதன உற்பத்தி பெருகப் பெருக தொழிற்கூடங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக ஆரம்பித்தன. மிகக் குறைந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்த இயலாத குடும்பத்தலைவர் தன் மனைவியையும் கைத்தறித் தொழிலில் ஈடுபடுத்தினார். இதுவரை களை எடுத்து, நாற்று நட்டு பழகிய பெண்கள் தற்போது பெருவாரியாக தொழிற்கூடங்களுக்கு இழுக்கப் பட்டனர். இது போதாதென்று பிள்ளைகளை படிக்க வைக்க இயலாத குடும்பத்தினர் தங்கள் வருமானத்தைப் பெருக்க குழந்தைகளையும் இத்தொழிலில் ஈடுபடுத்தினர். ஆக குடும்பமே உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகியது. அப்படியும் ஏழ்மை ஒழிந்தபாடில்லை. என்னைப் போன்ற ஒரு சிலர் வறுமையின் பிடியிலும் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பை தொடர்ந்த முதல் தலைமுறைப் பட்டதாரிகள்.

Sshnhrsec, School muhavoor, muhavoor, Rajapalayam (2020)

அன்றைய நிலை:-

அன்று பெரும் விவசாயிகள், நிலவுடைமையாளர்கள் தவிர்த்து விவசாயக் கூலிகள், கைத்தொழில் செய்வோர், கைத்தறிக் கூலித் தொழிலாளர்கள் அனைவரின் வீடுகளும் பனை ஓலை வேய்ந்த குடிசை வீடுகளே. கழிப்பறை வசதி கிடையாது. குளிப்பதற்கு குளம் அல்லது கிணறுகள்தான். ஒருவேளைதான் நெல்லுச் சோறு, அதுவும் இரவில்தான். அரை வயிறுதான் நிறையும். காலையும், மதியமும் கேழ்வரகுக் கூழ் அல்லது சோளக் கஞ்சிதான். காலில் அணிய செருப்பு கிடையாது. இரண்டு சட்டைக்கு மேல் இருந்தது கிடையாது. அனைத்து தொழிலாளர்கள் வீடுகளிலும் மின்சார இணைப்பு கிடையாது. அரிக்கேன் விளக்குத்தான் இருட்டை விலக்குவதற்கு. சைக்கிள் சொந்தமாக வைத்திருப்பதே மிகப் பெரிய அந்தஸ்தாக இருந்த காலம். கல்யாண மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் புது ஹெர்குலிஸ் அல்லது ராலி பிராண்டு புது சைக்கிளை வரதட்சணையாகக் கொடுத்த காலம். ஒரு நாள் கார்த்திகை தினத்தன்று மட்டும் நெசவுத்தொழிலாளர்களுக்கு விடுமுறை. அன்று ஒரு நாள்தான் அனைவருடைய வீடுகளிலும் இட்லி, தோசை காலை உணவில் இடம் பெறும். இந்நாள் குழந்தைகளுக்குத் திருநாள். இந்நாளை நினைத்து ஏங்கிய காலம் கண்முன்னே விரிவடைகிறது

குழந்தைகள் 5 வயதுக்கு மேல்தான் பள்ளியில் சேர்க்கப் பட்டார்கள். குழந்தைகளின் பள்ளிப் படிப்பில் அக்கறை செலுத்தாத பெற்றோர்கள். பெரும்பாலான குழந்தைகள் நெசவுத்தொழிலில் பகுதி நேர வேலையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டே படிப்பைத் தொடர்ந்தனர். இப்படி வறுமையில் வாடுபவர்களாக இருந்தாலும் இவர்களுக்கென்று சேவை செய்ய வண்ணார்களும், நாவிதர்களும் இருந்தனர். இந்தத் தொழிலாளர் குடும்பங்களின் துணிகளை வண்ணார்கள் பரம்பரை பரம்பரையாக வெள்ளாவி வைத்து சலவை செய்து கொடுத்து வந்தனர். கல்யாணம், சடங்கு போன்ற சுப காரியங்களுக்கு வீட்டை வண்ண வண்ண சேலைகளால் அலங்கரிப்பதும் இவர்களே. குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களுக்கு முடி வெட்டுதல், முகச் சவரம் செய்வதற்கு என்று நாவிதர் சமுதாயம் இருந்தது. இவர்கள் செய்யும் பரம்பரைத் தொழிலுக்கு கூலி என்று எதுவும் கிடையாது. தானியமாக அவ்வப்போது கொடுப்பார்கள். அல்லது நில வருமானம் இல்லாத தொழிலாளர்கள் இரவுச் சோறு கொடுப்பது வழக்கமாக இருந்தது. எடுப்புச் சோற்றிற்காக அவர்கள் இரவில் வந்து நிற்கும் போது, அவர்களை ஏளனத்தோடும், தினமும் கொடுக்க இயலாத அவலத்தோடும் பார்க்கும் பார்வை பயங்கரமானது. ஏழ்மையின் கீழ் படி நிலையில் உள்ள பாட்டாளி வர்க்கத்தை வண்ணார்களும், நாவிதர்களும்முதலாளிஎன்றுதான் அழைப்பார்கள். வக்கற்ற தொழிலாளி இன்னொருவருக்கு முதலாளி. நினைத்துப் பார்க்கவே சிரிப்புத்தான் வருகிறது. நிலப்புரத்துவ சமுதாயத்தின் எச்சங்களாக இருந்த இந்தப் பரம்பரைப் பழக்கங்கள் அன்றைக்கும் நீடித்தன. விவசாயத்தை விட்டு வெளியேறி பாட்டாளி வர்க்கமாக உருமாறிய பின்பும் இந்தப் பழக்கம் தொடர்ந்தது. சாதி ஆதிக்கத்தை அவர்களால் விடமுடியவில்லை

இன்றைய நிலை

ஆனால் இன்றோ நிலைமை முற்றிலும் மாறி விட்டது. பெரும்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி இருந்த நிலை முற்றிலும் மாறி, பல்வேறு தொழில்களில் தங்களை ஈடுபடுத்தி வாழும் வாழ்க்கை முறையைத் தேர்வு செய்துள்ளனர். மக்களின் பொதுவான வாழ்க்கைத்தரம் உயர்ந்து காணப்படுகிறது. கூரை வீடுகளாகக் காட்சி அளித்த வீடுகள் அனைத்தும் கல் வீடுகளாக மாறி விட்டன. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கே தாளம் போட்ட ஊர் இன்று இரண்டாம் தலைமுறைப் பட்டதாரிகளை உருவாக்கி மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுநர்களாகவும் உலகம் முழுவதும் உலா வர விட்டுள்ளது. ஒரு வேளை நெல்லுச் சோற்றுக்கு ஆலாய் பறந்த நெசவாளர் குடும்பத்தினர் இன்று உருமாறி பன்முகத் தொழிலில் தங்களை ஈடுபடுத்தி ஏழ்மையின் விளிம்பு நிலையிலிருந்து ஓரளவு வெளியேறியுள்ளனர். அனைவர் கையிலும் கைபேசி. அனைத்து வீடுகளிலும் டிவி, கேஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், இரு சக்கர வாகனம் இன்ன பிற., இது திராவிட அரசுகள் மாறி மாறி வழங்கிய இலவசங்களின் காரணமாகக் கூட இருக்கலாம். ஆனாலும் இவர்களின் வாங்கும் சக்தி கூடி இருக்கிறது என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது

பெண்களின் நிலையில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது கணவனை இழந்த விதவைப் பெண் வெள்ளைச் சேலை மட்டுமே அணியும் வழக்கம் முற்றிலுமாக ஒழிந்து விட்டது. பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எழுத்தறிவு விகிதம் பிரமிக்க வைக்கிறது. பள்ளிக்கு மாணவர்கள் பலமைல் தூரம் நடந்து சென்ற நிலை மாறி சைக்கிளில் செல்லும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது. அனைத்து வீடுகளிலும் மின்சார வசதி. நுகர்வுக் கலாச்சாரம் பெருகி விட்டது. தேவைகள் பெருகி விட்டன.. நர்சரி பள்ளிகள் பெருகி விட்டன. கல்வி வியாபாரம் ஆக்கப் பட்டு விட்டது. அன்றைக்கு பள்ளிக்கு அனுப்புவதற்கே முடியாத ஏழ்மை நிலையில் இருந்த தொழிலாளர் வர்க்க குடும்ப சந்ததியினர் இன்று தங்களது பிள்ளைகளை வருடத்திற்கு ரூ 15000 கொடுத்து நர்சரி பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். பிஞ்சுகளின் ஆங்கில ரைம் உச்சரிப்பில் மனதைப் பறி கொடுக்கின்றனர். பஞ்சாயத்து மூலம் குடி நீர் விநியோகம் நடைபெற்ற போதும் கேன் வாட்டர் ( Can Water ) வாங்கிப் பருகும் கலாச்சாரம் பரவலாகி உள்ளது. மொத்தத்தில் நகரத்திற்கும், கிராமப் புறத்திற்கும் உள்ள இடைவெளி வெகுவாகக் குறைந்துள்ளது

முகவூர் கண்மாய் - இனிது

தொழிலாளர் குடும்பங்களுக்கு பரம்பரை பரம்பரையாக தொண்டூழியம் செய்து வந்த வண்ணார்களும், நாவிதர்களும் மறைந்து விட்டனர் அல்லது சாதிய அடுக்கிலிருந்து விடுபட்டு விட்டனர். இந்த சாதிய அடுக்கு முறை எப்படி தகர்ந்தது. எப்படி வந்தது இந்த மாற்றம். இந்த மாற்றத்தை கொண்டு வந்தது யார் ? பெரும்பகுதி விவசாயத் தொழிலாளர்களைக் கொண்டிருந்த ஊரில் தற்போது விவசாயத்திற்கு ஆட்களைத் தேடிப் பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது. விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் நகரத்தை நோக்கி குடி பெயர்ந்துள்ளனர் அல்லது தொழிற்துறை பாட்டாளி வர்க்கமாக உருமாறி விட்டனர். இன்று விவசாயத் தொழிலாளர்கள் செய்து வந்த வேலைகளை டிராக்டர்களும், இயந்திரங்களும் செய்து வருகின்றன. கதிர் அறுக்கும் இயந்திரம் வந்த பின்பு நெற்கதிர்கள் களத்து மேட்டுக்கு வருவது நின்று போய்விட்டது. போரடிக்கும் எருமை மாடுகள் காணாமல் போய் விட்டன

மாறிய சூழ்நிலையை நாம் மார்க்ஸிய வழிகாட்டலில் அணுகும்போது, இந்த மாற்றங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. சமூக அமைப்புகள் மாறியே தீரும் என்கிற முடிவிற்கு வரலாற்று வழியிலும், பொருள் முதல்வாத அடிப்படையிலும், தர்க்க ரீதியிலும் வந்தடைந்த மார்க்ஸ் ஒரு தீர்க்கதரிசி. இந்த நகர்ப்புற மாற்றம் நமக்கு எதை உணர்த்துகிறது. முதலாளித்துவ வளர்ச்சி நகரத்தை மட்டுமல்ல, நகர்ப்புறத்தையும் புரட்டிப் போடுகிறது. தனது சந்தையை கிராமத்தை நோக்கியும் விரிவடையச் செய்கிறது. மக்களிடையே நுகர்வுக் கலாச்சாரத்தை திட்டமிட்டு பெருக்குகிறது. உழைப்புச் சுரண்டலை பரவலாக்குகிறது. உழைப்புச் சக்தியை வளர்க்கிறது. உழைப்பாளர்களின் உற்பத்தித் திறன் வெகுவாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியின் பயனாக உபரி மதிப்பின் ( முதலாளிகளின் லாபம் ) உயர்ந்த விகிதாச்சாரத்தில் இல்லையென்றாலும் ஒப்பளவில் ஓரளவு குறைந்தபட்சக் கூலியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

நெசவுத்தொழிலாளர்களின் பரிமாண வளர்ச்சியை எடுத்துக் கொள்வோம். 1960-களில் பலன் வீதக் கூலி அடிப்படையில் 6 கெஜ நீளமுள்ள சேலை நெய்தால் 2 ரூபாய் மட்டும் கூலி பெற்றவர்கள் குடும்பம் வறுமையில் வாடியது. ஆனால் தறி முதலாளிகள் கொழுத்த லாபம் அடைந்தனர். 100 விழுக்காடு உபரி மதிப்பைப் பெற்று மூலதனத் திரட்டலில் ஈடுபட்டனர். நாளடைவில் கைத்தறி, விசைத்தறியோடு போட்டியிடமுடியாமல் திணறியபோது இந்தச் சிறு முதலாளிகள் தங்களின் உற்பத்திக் கூடங்களை விசைத்தறிக் கூடங்களாக மாற்றியமைத்தனர். கூலி உழைப்பையே அடிப்படையாகக் கொண்ட இந்த கைத்தறித் தொழிலாளர்கள் வேறு வழியின்றி புதிய தொழில் நுட்பத்தைக் கையாளுவதில் தேர்ச்சி பெற்றனர். வேலைத் திறன் ( Efficiency of Labour ) உயர்ந்தது. வேலைப் பிரிவினையிலும் மாற்றம் நிகழ்ந்தது. உழைப்பின் மும்முரம் ( Intensity of Labour ) கடுமையாக்கப் பட்டது. உழைப்பாளர்கள் முன்னிலும் அதிகமாகச் சுரண்டப்பட்டார்கள்.

காலம் செல்லச் செல்ல விசைத்தறிச் சேலை, கைலி உற்பத்தியும் மில் உற்பத்தியுடன் போட்டியிட முடியாமல் நசியத் தொடங்கியது. ஆனாலும் உள்ளூர் முதலாளிகள் தங்களை தகவமைத்துக் கொண்டனர். விசைத்தறிக் கூடங்களை மாற்றியமைத்தும், விரி திற மூலதனப் பெருக்கத்தின் மூலம் கிடைத்த மூலதனப் பெருக்கத்தை வைத்தும் புதிய நவீன தொழில்கூடங்களை நிறுவினர். ஆனால் கச்சாப் பொருளான நூலுக்குப் பதில் மில்லில் உற்பத்தி செய்யபட்ட துணிகள் கச்சாப் பொருளாக மாறின. உற்பத்திப் பண்டம் சேலை/கைலிக்குப் பதில் நைட்டி, பாவாடை, சட்டை என்று மாறியது. இத்தகைய ஆயத்த ஆடைத் தொழிலையும் தொழிலாளி வர்க்கம் கற்றுத் தேர்ந்தது. இல்லையென்றால் பிழைப்புக்கு வழி? தற்போது முன்னிலும் அதிகமான வேலைப் பிரிவினை. துணிகளை வெட்டுதல், தைத்தல், எம்ப்ராய்டரி, காசா, பட்டன் போடுதல் என்று பல்வேறு வேலைப் பிரிவினை உருவாகியது. உற்பத்திப் பண்டம் எப்படி மாறினாலும் பலன் வீதக் கூலி முறையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. பலன் வீதக் கூலிதான் நேர வீதக் கூலியை விட அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் வடிவம். இதை எப்பாடு பட்டும் இந்த முதலாளிகள் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. உழைக்கும் வர்க்கமும் தனது மிகை உழைப்பைச் செலுத்தி இரவும் பகலும் வேலை செய்து சொற்பக் கூடுதல் கூலியைப் பெறும் நோக்கில் தங்களின் உடலை வருத்திக் கொண்டுள்ளனர். மார்க்ஸின் வார்த்தையில் சொல்வதானால் – “பலன் வீதக் கூலி தரப்படுகையில், தன் உழைப்புச் சக்தியை முடிந்தவரை கடுமையாக வருத்திக் கொள்வதில் தொழிலாளிக்குத் தனிப்பட்ட அக்கறை இருப்பது இயல்பே; உழைப்பின் இயல்பான மும்முரத்தை முதலாளி எளிதாகவே மேலும் உயர்த்துவதற்கு இது வகை செய்கிறது. தவிரவும், வேலைநாளை நீட்டுவதில் தொழிலாளிக்கு இப்போது தனிப்பட்ட அக்கறையுள்ளது; ஏனெனில், இப்படி நீட்டுவதால் அவரது தின அல்லது வாரக் கூலியும் உயர்கிறது” ( மார்க்ஸின் மூலதனம் புத்தகம்-1 அத்தியாயம் 21) 

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் Archives - Tnpanchayat

வீடு தோறும் மின் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள். முதலீடு செய்வது முதலாளி. ஆக வீட்டுப் பெண்கள் தொழிற்கூடத்திற்குப் போகாமலேயே உற்பத்தியில் ஈடுபட்டனர். எனவே தொழிற்கூடத்திலும், தொழிற்கூடத்திற்கு அப்பாலும் உழைப்புச் சுரண்டல் மிகக் கடுமையாக அரங்கேறி வருகிறது. முன்னிலும் அதிகமான ஒப்பீட்டு உபரி மதிப்பு ( Relative Surplus Value ) முதலாளிகளின் கைகளில் குவிந்தது. ஒரு காலத்தில் கைத்தறி/விசைத்தறி சேலை மற்றும் கைலிகளை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விநியோகம் செய்த முதலாளிகள் தற்போது மில்லில் உற்பத்தியாகும் துணிகளை பேல் கணக்கில் குஜராத்தில் இருந்து வரவழைக்கின்றனர். துணி ஆலை முதலாளிகளும் எங்கள் ஊருக்கு நேரடியாக வந்து துணிகளுக்கு ஆர்டர் எடுத்துச் செல்கின்றனர்

முன்பு கைத்தறியில் புடவை நெய்து பலன் வீதக் கூலி பெற்ற தொழிலாளி வர்க்்கம் வறுமையில் வாடிய போதும், பலன் வீதக் கூலியில் மாற்றம் கோரி அமைப்பு ரீதியில் திரண்டு போராடி கூலியில் மாற்றத்தைப் பெற்றனர். ஆனால் அதே தொழிலாளி வரக்கச் சந்ததியினர் சுரண்டல் முறை பரவலாக்கப் பட்டிருப்பதாலும், வேலைத் திறனை வளர்த்துக்கொண்டதாலும், அத்தியாவசியப் பண்டங்களின் உற்பத்தி நேரம் குறைந்து விட்டதாலும், ஒப்பீட்டளவில் ஓரளவு கூடுதலாக கூலி பெற்றதாலும் ( பகலும் இரவில் உடலை வருத்தி வேலை செய்து ), அடிப்படையில் முன்னிலும் அதிகமான உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும், பலன் வீதக் கூலியில் மாற்றம் கோரியும் சக்தி வாய்ந்த போராட்டங்களை நடத்தத் தவறியதுடன், தங்களின் போராட்ட உணர்வுகளையே மழுங்கடித்துள்ளனர்

இந்த மாற்றத்திற்குக் காரணம் முதலாளித்துவம் திட்டமிட்டு வளர்க்கும் நுகர்வுக் கலாச்சாரமே. தேவைகளை ஊதிப் பெருக்கி விட்டது. 50 ஆண்டுகளில்  முதலாளித்துவ உற்பத்திமுறை எனது கிராமத்தில் வியத்தகு மாற்றத்தைச் செய்த அதே வேளையில் அது விவசாயத்தை அளித்துள்ளது. விவசாயத் தொழிலாளர்களை நிலத்தை விட்டு வெளியேற்றியுள்ளது. பனை ஏறும் தொழில், மண்பாண்டம் செய்யும் குயவர் தொழில், மர, இரும்புக் கொல்லர் தொழில்களை முற்றிலும் ஒழித்து விட்டது. சமூக வேலைப்பிரிவினையை ஒழித்துள்ளது. 20 விழுக்காடாக இருந்த தொழிலாளர்களை 50 விழுக்காடு அளவுக்கு வளர்த்துள்ளது. அவர்களை கூலிக்கு மாரடிக்கும் தொழிலுக்கு இழுத்து விட்டது. ஆனாலும் முதலாளித்துவம் கிராமத்திற்குச் செய்த சில நல்ல காரியங்களையும் மறப்பதிற்கில்லை. சாதிய அடுக்கு முறைகளை அது தகர்க்க ஆரம்பித்துள்ளது. சாதிய அடிப்படையில் மேலடுக்கு சாதி இந்துக்களுக்கு தொண்டூழியம் செய்து வந்த பரம்பரை கீழ் அடுக்கு சாதியினரான வண்ணார், நாவிதர்களை அவர்களின் பிடியில் இருந்து விடுவித்து அவர்கள் சுதந்திரமாக தங்கள் தொழிலை கவுரமான முறையில் செய்யப் பழக்கி உள்ளது. ஆனாலும் சாதிய அடுக்கு முறையின் மிச்ச சொச்சம் ஆதி திராவிடர் இனத்தின் மீது இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

 

த. ஜீவானந்தம்,

எண் 90/861 10வது கிழக்குக் குறுக்குத் தெரு,

மகாகவி பாரதி நகர்,

சென்னை 600 039

மின்னஞ்சல் :- [email protected]     

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *