பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் நடத்திய ”என் ஊரின் கதை” கட்டுரைப்போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட முதல் 10 கதைகளுள் இக்கதையும் ஒன்று.
போட்டி முடிவுகளை காண கிளிக் செய்க : ”என் ஊரின் கதை” கட்டுரைப்போட்டி முடிவுகள்
எனது ஊர் பண்ணாகம் என்ற சிறிய கிராமம். மூர்த்தி சிறிதாயினும் அதன் கீர்த்தி பெரிது எனத் தனக்கெனச் சில தனித்துவங்களைக் கொண்டு விளங்கும் இந்த ஊர் இன்று வரையும் சில இயல்புகளைப் பற்றிப் பிடித்துள்ளது.
“கனி பெறவென்றொரு குறத்தி காதணியை வீசக்
கடுவனதைக் கைப்படித்துக் காதலிதன் காதில்
நனியழுத்தக் கண்ணில் நின்று நீர்வடியும் வாயில்
நகைவருமக் குரங்கிருக்கும் ஈழமெங்கள் தேயம்…”
என்று ஈழநாட்டுக் குறத்திலே ஈழத்தின் வளம் கூறப்பட்டுள்ளதற்கேற்ப இயற்கை எழில் கொஞ்சும் ஈழத்திருநாட்டில் அமைந்துள்ள, யாழ் பாடிப் பரிசு பெற்ற யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகர் போகும் வழியில் 15வது கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது பண்ணாகம் என்ற அழகிய சிறிய ஊர். பண்புடையோர் வாழும் ஊர் என்பதால் பண்ணாகம் என்ற பெயர் பெற்றுள்ளது. ஊர்ப் பெயர் அங்கு வாழும் மக்கள் பற்றிய விளக்கத்தைத் தருகிறது என்று கூறுவர். இந்த ஊரில் உள்ளவர்களை இலகுவாக இனங்காண முடியும். காரணம், எல்லாரும் உறவினர்களாக இருப்பதால் ஒத்த உருவையும், முகத்தோற்றத்தையும் உடையவர்களாக இருப்பார்கள். சொத்து வெளியே போகக்கூடாது என்பதற்காக உறவுகளுக்குள்ளேதான் திருமணங்களை வைத்துக்கொண்டார்கள். இந்த ஊரிலே வேற்று ஊரார்கள் நிலம் வாங்க முடியாது. இவர்கள் இனம், மொழி, மதம், உறவு என்ற பாரம்பரியத்தைப் பேணுபவர்கள். ஒற்றுமைக்கும் பண்பாட்டுக்கும் தமக்கென முத்திரை பதித்தவர்கள். இந்த ஊருக்குள் வேற்று ஊரவர் அல்லது கள்வர் பிரவேசிக்க முடியாது. ஊருக்குப் புதியவர்கள் வரும்போது விசாரணைகளுடன்தான் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதனால் இங்கு களவுகள் இடம்பெறுவது அரிது. அவ்வாறு களவெடுக்க வந்தவர்கள் அகப்பட்டுத் தண்டனை பெறுவார்கள்.
ஆண்களும் பெண்களும் கல்வியறிவில் சிறந்து விளங்கினார்கள். ஊர்ப் பாடசாலையில் ஊரவர்களே அதிபராகவும், ஆசிரியர்களாகவும், ஆசிரியைகளாகவும் பணிபுரிந்து ஊரவரின் கல்வி முன்னேற்றத்திற்குப் பெரும்பணியாற்றிய பொற்கால வரலாற்றைக் கொண்டது இவ்வூர். பண்ணாகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் அந்தக் காலங்களிலேயே மலேசியாவுக்குச் சென்று தொழில் புரிந்து திரும்பி வந்து ‘மலேயன் பென்சனியராக இருந்தவர்களாகவும், இன்று வரை அங்கேயே பரம்பரையாக வாழ்பவர்களாகவும் விளங்குகின்றார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் ஊரவர்கள் ஒன்று சேர்ந்து மிகவும் சிறப்பாக எதுவித செலவுமின்றி எல்லாக் காரியங்களையும் நடத்துவார்கள். இவர்கள் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டு வளம் பெருக்கியது மட்டுமன்றி, மாடு, ஆடு, கோழி போன்றவற்றின் பண்ணைகளையும் வைத்திருந்தார்கள். மரணவீடு என்றால் உள் ஊரிலும் வெளியூரிலும் இழவு சொல்லும் பழக்கம் இன்றுவரையும் பேணப்பட்டு வருகின்றது. பண்ணாகத்தில் பிறந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் என்பவர் தமிழரசுக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வட்டுக்கோட்டைத் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர்தான் எதிர்க்கட்சித் தலைவராகப் பாராளுமன்றத்திற்குச் சென்ற முதலாவது தமிழ்மகன் என்ற பெருமையை இந்த மண்ணுக்கு தந்துள்ளார். அதுமட்டுமன்றி தமிழர்களின் தனியுரிமைக் கோரிக்கையை முதன் முதலாக முன்வைத்து “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” என்ற பெயரில் அதனை நிறைவேற்றிய இடம் பண்ணாகமேயாகும். எனவே இத்தகைய சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட பண்ணாகத்தின் தனித்துவத்தைப் பற்றி எடுத்துரைப்பதே இக் கதையின் நோக்கமாகும்.
ஊர் பற்றிய அறிமுகம்
பண்ணாகம் என்பதை பண் + ஆகம் எனப் பிரித்தால் இசையின் இருப்பிடம் எனப் பொருள் கொள்ளலாம். கோயில்களில் பண்ணிசை பாடுதல், இசைக்கருவிகள் முழக்குதல், திருவெம்பாவைக் காலத்தில் ஊர் வீதிவழியே பாடிச் செல்லுதல் போன்றன இங்கு நடைபெற்றன. அதனால் பண்பாடுவோர் வாழும் இடம் பண்ணாகம் என அழைத்திருக்கலாம். ஆரம்பத்தில் ஆலங்காடு என்ற பெயரால் வழங்கப் பெற்றுப் பின்னரே பண்ணாகம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. ஊரில் உள்ள சில குறிச்சிகள் காணி உறுதிகளில் திவுவாலங்காடு எனக் குறிக்கப்பட்டுள்ளது. எனவே காரைக்காலம்மையார் வாழ்ந்த திருவாலங்காட்டிலிருந்து வந்து குடியேறிய மக்கள் தமது ஊர்ப்பெயரை இதற்குச் சூட்டியதாகவும் கூறுவர். ‘பலவாம் உலகும் நொடிப்பொழுதில் படைத்த பிரமன் சிந்தித்துப் பன்னாள் முயன்று பண்ணியதால் பண்ணாகம் பேர்பெறுபதி” எனப் பண்டிதர் அ. ஆறுமுகம் இந்த ஊரின் சிறப்பைப் பாடியுள்ளார். சிறிய பரப்பளவையுடைய கிராமமான பண்ணாகத்தில் ஆரம்பத்தில் 350 குடும்பங்கள் வாழ்ந்துள்ளார்கள். போர், இடப்பெயர்வு, தொழில் காரணமாகப் பலர் ஊரை விட்டு வெளியேறி வேறு இடங்களிலும், நாடுகளிலும் இப்பொழுது வாழ்கின்றார்கள். அதனால் இன்று 200 குடும்பத்தவர்கள் மட்டுமே இந்தக் கிராமத்தில் வாழ்கின்றனர். இங்கு விசுவத்தனை, மின்னியத்தனை, தேரியத்தனை, கோணாசிட்டி, கொத்தியாவத்தை ஆகிய நிலப்பிரிவுகள் அமைந்துள்ளன. ஊருக்குள் இருக்கும் வீதிகளுக்கு விசவத்தனை வீதி, 2ஆம் ஒழுங்கை, 4ஆம் ஒழுங்கை, 6ஆம் ஒழுங்கை, மெய்கண்டான் வீதி, வடலியடைப்பு வீதி, வடக்கம்பரை வீதி, சட்டப்புலம் வீதி எனப் பெயரிட்டுள்ளனர்.
காரைநகர் போகும் பிரதான வீதியில் இருக்கும் விசுவத்தனை வீதி வழியாக வந்தால் முருகன் கோயில் தென்படும். இவ் ஊரவரின் குலதெய்வம் விசுவத்தனை முருகனாகும். பண்ணாகத்தவர் என்று சொன்னால் அயல் ஊரவர் அவர்களைக் கிழங்குகள் என்று அழைப்பார்கள். ஏனெனில் ஆரம்ப காலங்களில் பண்ணாகத்தில் மரவள்ளிதான் அதிகமாகப் பயிரிடப்பட்டது. நல்லாய் அவியக்கூடியதாகவும் சுவையானதாகவும் இருந்ததினால் பண்ணாகத்துக் கிழங்குக்கு மிகவும் வரவேற்பு இருந்தது. பிற்காலத்தில் தான் செம்பாட்டுக் கிழங்கு அறிமுகமானது. ஊரில் இரத்த உறவுடையவர்கள் பரம்பரை முதல்வரின் பெயரைக் கொண்டு அழைக்கப்படுவர். விசுவர் கூட்டம், சோமர் கூட்டம், தாமர் கூட்டம் எனப் பரம்பரைகள் இருந்தன. திருவிழாக்கள், துடக்குக்காத்தல் போன்றவற்றில் இவர்களின் பரம்பரை அடையாளப்படுத்தல் வெளிப்படும்.
பனைமரம்
‘பூலோகத்துக் கற்பகதரு‘ என வர்ணிக்கப்படும் பனை மரங்கள் நிரம்பிய ஊராகப் பண்ணாகம் உள்ளது. பனையின் சகல பொருட்களும் இங்கே பயன்படுத்தப்பட்டன. ஊரில் எல்லை வேலிகளும், வீட்டுக் கூரைகளும் பனையோலைகளால் ஆனவை. இத்தோடு பாய், கடகம், பெட்டி, நீத்துப்பெட்டி, விளக்குமாறு போன்றவையும் பனையோலையால் செய்யப்பட்டன. பனையில் காய் காய்த்து நுங்காகவும், பனம்பழமாகவும் பயன் கொடுத்தது. பனம் பழத்தில் களி எடுத்துப் பனாட்டுச் செய்வார்கள். அதை வெட்டிப் பானைகளில் பத்திரப்படுத்தி வைத்தால் மாரிகாலத்துப் பசிக்கு அது உணவாகும். பனைகள் மரம் ஏறுபவர்களுக்குக் குத்தகையாக விடப்படும். அவர்கள் கள்ளு, பதநீர் என்பவற்றை எடுத்து விற்பார்கள்.
பனம்பழக் கொட்டைகளை மண்மேடைகளில் அடுக்கிப் பனம்பாத்திகள் போடப்படும். அதில் பனங்கிழங்கு விளையும். பனங்கிழங்கைப் பச்சையாகக் காயவிட்டால் ‘ஒடியல்‘ எனப்படும். அதை மாவாக்கி ஒடியல் கூழ், ஒடியல்புட்டு என்பன செய்வார்கள். இவை உடலுக்கு ஆரோக்கியமானவை. பனங்கிழங்கை அவித்துக் காயவிட்டால் ‘புழுக்கொடியல்‘ எனப்படும். அதையும் உணவாக எடுத்துக்கொள்ள முடியும். இவ்வாறு பல்வேறு வகையாகவும் பனை பயன்பட்டு ஊருக்கும், மக்களுக்கும் வளம் கொடுத்தது.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் தமிழ்ப்பணியும்
பண்ணாகத்தைச் சேர்ந்த அப்பாப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியினருக்கு 26.08.1927 இல் அமிர்தலிங்கம் பிறந்தார். பண்ணாகம் மெய்கண்டானில் ஆரம்பக்கல்வியை முடித்த இவர், தனது உயர் கல்வியைத் தொடர்ந்து கற்று, பின்னர் 1951இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணியாகப் பட்டப் படிப்பை முடித்து வெளியேறினார். 1949இல் தமிழரசுக் கட்சியை நிறுவிச் செயற்படத் தொடங்கியிருந்த வேளையில் தந்தை செல்வா அவர்கள் அமிர்தலிங்கத்தைக் கடிதம் எழுதி வரும்படி அழைத்தார்கள். அதன் பின் அமிர்தலிங்கம் அவர்கள் தமிழரசுக் கட்சியில் மத்திய செயற்குழு உறுப்பினராக அங்கத்துவம் பெற்று இணைந்துகொண்டார். 1960 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாகப் பாராளுமன்றத்திற்குச் சென்றார். சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்த இவர், இனம் மொழி சார்ந்த செயற்பாடுகளைப் போராட்டங்களாகவும், பிரகடனங்களாகவும், மகா நாடுகளாகவும் பல்வேறு வடிவங்களில் முன்னெடுத்தார். அமிர்தலிங்கம் அவர்கள் தமிழ் மாநாடுகள் சிறப்புற நடப்பதற்காகப் பாடுபட்டவர். 1966இல் இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு மலேசியாவிலும், 1974இல் நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றபோது, அவை வெற்றிகரமாக நடந்தேறுவதற்குத் தனது அயரா உழைப்பை நல்கியவர். தனது நான்கு தசாப்த கால வாழ்வை அரசியலிற்காக அர்ப்பணித்துப் பாடுபட்டவராவார். 20 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
- 1956 – 1970 வரை வட்டுக்கோட்டைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர்
- 1977 – 1983 காங்கேசன்துறை ஐக்கிய விடுதலைக் கூட்டணி உறுப்பினர்
- 1977 – 1983 எதிர்க்கட்சித் தலைவர்.
- 13-08-1989இல் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசியும் கணவனோடு இணைபிரியாத வராய் அரசியல் பணிகளில் ஈடுபட்டார். ‘பிரான்ஸ் ‘நாட்டிற்கு இருவரும் சென்ற போது, ஒரு கூட்டத்தில் வாலிபன் ஒருவன் “ஏன் நீங்கள் போகும் இடமெல்லாம் மனைவியையும் அழைத்துச் செல்கிறீர்கள்?” எனக் கேட்டான். அதற்கு அவர் சொன்ன பதில் “எனது சொந்த மனைவியைக் கூட்டிக்கொண்டு செல்வதில் என்ன தப்பு இருக்கிறது? வேறொரு பெண்ணுடன் திரிவதுதான் தவறு. எனது மனைவி பரிஸ் போன்ற இடங்களுக்கு மட்டுமல்ல ‘பணாகொட‘ சிறையிலும் என்னோடு கூட வந்தவர்” என்றார். 1961இல் இடம்பெற்ற சத்தியாக்கிரகத்தின் போது தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த 74 பேர் பனாகொட இராணுவ முகாமில் ஆறு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் மங்கையற்கரசி ஒருவர் மட்டுமே பெண்ணாக இருந்தார். அம்மையார் அழகு, அறிவு, துணிச்சல் கொண்ட வீரப்பெண்ணாக விளங்கியவர். அரசியல் மேடைகளில் பெண்களின் விழிப்புணர்வின் அவசியம் பற்றி வீர முழக்கமிட்டவர். அவரது இனிமையான குரல் வளத்தினால் பாடி அரசியல் மேடை அலுப்புத்தராத வகையில் உற்சாகப்படுத்துவார். இவ்வாறு தமிழின் எழுச்சிக்கும், தமிழின் வளர்ச்சிக்கும் குடும்பத்தோடு பாடுபட்டது மட்டுமன்றித், தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அதற்காகவே அர்ப்பணித்த செயல் வீரர் அமிர்தலிங்கம் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் மறந்து விடமுடியாது. இத்தகைய வீரம் செறிந்த தமிழ் மகனைப் பெற்றெடுத்த பெருமை பண்ணாகத்திற்குச் சிறப்பைத் தருவதாக உள்ளது.
பண்ணாகமும் வட்டுக்கோட்டைத் தீர்மானமும்
வரலாற்றில் தமிழ் இனத்தால் மறக்க முடியாத தீர்மானம் வட்டுக்கோட்டைத் தீர்மானம்‘ ஆகும். அதுவே தமிழ் இனவிடுதலைக்கு வித்திட்டது எனலாம். எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் பிறந்த இடமான பண்ணாகம் என்ற இந்த ஊரிலே தான் அத்தீர்மானம் எடுக்கப்பட்டது என்பது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் உரிமைப் போராட்டம் நடத்தியபோது உயிர்க்கொலைகளைப் பதிலாக வெளிப்படுத்திய பேரினவாத அரசை எதிர்த்து, “எங்களுக்கான வழியினை நாங்களே வகுத்துக்கொள்கிறோம்” என்ற தீர்மானத்தை வெளிப்படுத்தியதாக வட்டுக் கோட்டைத் தீர்மானம் அமைந்தது. இங்கு அத்திவாரம் இடப்பட்ட தீர்மானத்தின் விளைவுதான் தாயகம், தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி போன்ற மந்திர வாசகங்களாகப் பின்னாளில் முகிழ்த்தெழுந்தன. 1976 மே 14ஆம் திகதி பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்களின் தலைமையில் தமிழ் ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாடு நடைபெற்றது. இங்கு தமிழ் ஐக்கிய முன்னணி‘ என்ற அமைப்பின் பெயர் ‘தமிழீழ விடுதலை முன்னணி‘யாக மாற்றம் பெற்றது. அன்று தான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் பிரகடனம் செய்தனர். இதனைத் தந்தை செல்வா முன்மொழிய, மு.சிவசிதம்பரம் அவர்களினால் வழிமொழியப்பட்டது. தமிழர்களுக்கான உரிமை மறுப்பும், இன அழிப்பும் காலங்காலமாக இடம்பெறுவதைத் தடுக்கும் குரலாக தமிழீழமொன்றே தமிழர்களின் தாகமென்பதை கருப்பொருளாகக் கொண்டு வெளியிடப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழர்களின் இலக்கு நோக்கிய பயணத்தின் ஆரம்பம் எனலாம். அதைப்பற்றிய சாதக பாதகமான கருத்தாடல்கள் இருந்த போதிலும் விடுதலை வேட்கைக்கு வித்திட்ட மண் பண்ணாகம் என்ற பெருமையைத் தன்னகத்தே தாங்கியுள்ளது இச்சிறிய ஊர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குலதெய்வம் விசவத்தனை முருகன்
ஊரின் இரண்டு கண்களாகத் திகழ்பவைகளில் ஒன்று பண்ணாகம் விசுவத்தனை முருகன் கோயில். மற்றையது பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலை ஆகும்.
முருகன் ஆலயம் ஆரம்பத்தில், ஊரவரான கதிர்காமரின் காணியில் வைரவசூலம் வைத்து வழிபட்ட இடமாக இருந்தது. அது வானளவு உயர்ந்த வண்ணக்கோபுரம் கொண்ட முருகன் ஆலயமாக இன்று மிளிர்கின்றது. இங்கு தொடக்க காலத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமை விளக்கு வைத்து, இரண்டாவது செவ்வாயில் ஊரில் உள்ளோர் எல்லோரும் கூடிப் பொங்கலிட்டு, பழங்களால் மடை வைத்து வழிபட்டனர். அந்த வேளையில் தான் பிராமணக் குருக்கள் பூசை செய்வதற்குத் தொடங்கினார். பண்ணாகம் விவசாயக் கிராமம் என்பதால் வயல் செய்கையும், மாடு ஆடுகளின் பட்டியும் வயலோடு அண்டிக் காணப்பட்டது. பயிர்கள் விலங்குகள் என்பவற்றைக் களவு எடுத்துச் செல்லாமல் காப்பதற்கு ஊர் மக்கள் வயலிலே காவல் இருப்பார்கள். வைரவர் ஊர் மக்களுக்குக் காவல் தெய்வமாக விளங்கியிருக்கிறார் என்பதற்கு பல செவிவழிக் கதைகள் இங்கு நிலவி வருகின்றன. காவல் செய்பவர்கள் வரத்தவறிவிட்டால் அல்லது நித்திரையாகிவிட்டால், கள்வர் தோட்டத்தில் இறங்கி விடுவார்கள். மரவள்ளி, பூசணி, வாழைக்குலை போன்றவற்றைக் களவாக எடுத்துச்செல்ல முயலும் போது நித்திரையாக இருப்பவர்களை எழுப்புதல், ஒலி எழுப்பி விரட்டுதல். வயலில் நடமாடுதல் என்பவற்றால் களவு இடம்பெறாது வைரவர் தடுத்ததாகவும், இதனைக் கண்ணால் கண்டவர்கள் சொன்னதாகவும் நம்பப்படுகிறது. அது மட்டுமன்றிக் கோயில் முருகன் ஆலயமாகக் கட்டப்பட்ட போது வைரவர் ஐயரின் கனவில் தோன்றி “எனது இருப்பிடம் இருந்த இடத்திலேயே என்னை இருக்கவிடு” எனக் கூறியதற்கு ஏற்ப வைரவர் மண்டபம் அதே இடத்தில் வைரக்கல்லால் கட்டப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது. ஊரில் உள்ளவர்களின் உதவியோடும் மலேசியா, சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் உதவியோடும் கோயில், ஆகம விதிக்கமையக் கட்டப்பட்டது. கோயிலுக்குப் பரம்பரையாக அர்ச்சகர்களும் நியமிக்கப்பட்டனர். 1912ஆம் ஆண்டின் பின் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் கொடியேற்றம் நிகழ்ந்து, பங்குனி உத்தரத்தில் தேர் இழுக்கப்படும். ஊரவர்கள் மட்டுமன்றி அயல் ஊரவர்களும் விழாக்களில் கலந்து கொள்வார்கள். கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் என்பவற்றோடு பத்து நாட்களும் ஊர் பொலிவுற்றுத் திகழும்.
பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலை.
பாடசாலை தோற்றம் பெறுவதற்கு வித்திட்டவர் திரு. மு. கந்தையா ஆவார். ஊர்கள் தோறும் சைவப் பாடசாலைகள் தோன்றிய அக்காலத்தில் பண்ணாகத்திலும் அதனைக் கட்டவேண்டும் என்ற எண்ணம் அவர் சிந்தனையில் உதித்தது. அதனை நிறைவேற்றுவதற்காக மலேசியாவில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த பண்ணாகத்து ஊரவர்களுக்குத் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அவர்களிடமிருந்து அவருக்குப் பேராதரவு கிடைத்தது. அதன் பேறாக “மலாயா வித்தியா சங்கம்” உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக திரு. மு. கந்தையா தெரிவு செய்யப்பட்டார். 1925ஆம் ஆண்டு ‘மெய்கண்டான் பாடசாலை‘ எனப் பெயரிடப்பட்டுப் பள்ளிக்கூடம் ஆரம்பமானது. அப்போது மூன்றாம் வகுப்பு வரையும் வகுப்புகள் இருந்தன. 65 பிள்ளைகளையும், அதிபருடன், மூன்று ஆசிரியர்களையும் கொண்டதாகப் பள்ளிக்கூடம் தோற்றம் பெற்றது. ஆரம்பத்தில் பிள்ளைகள் நிலத்தில் பாய் விரித்து இருந்தே தமது கல்விச் செயற்பாடுகளை மேற்கொண்டனர்.
திரு. மு. கந்தையா அவர்கள் மீண்டும் மலேசியாவிற்குச் சென்று அங்குள்ள அமைப்பின் மூலம் பணத்தைப் பெற்றுப் பாடசாலைக்குரிய தளவாடங்கள் வாங்குவதற்கும், ஆசிரியர்களுக்குரிய சம்பளத்தைக் கொடுப்பதற்குமான நிதியினைத் திரட்டி அனுப்பி உதவினார். 1930ஆம் ஆண்டு அரசினர் பாடசாலையாகிப் பண்ணாகம் மெய்கண்டான் உயர்தரப் பாடசாலை‘ என்ற பெயரைப் பெற்றது. 1945ஆம் ஆண்டு பண்ணாகத்தைச் சேர்ந்த செ. சீனிவாசன் அதிபர் பதவியை ஏற்றார். அப்பொழுது க.பொ.த சாதாரணதரம் வரையும் வகுப்புக்கள் இருந்தன. ஊரைச்சேர்ந்த பல மாணவர்கள் பதினோராம் வகுப்பிற்குரிய இறுதிப் பரீட்சைக்குத் தோற்றிச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர். ஊரைச் சேர்ந்தவர்கள் பாடசாலையின் அதிபராக இருப்பதென்பது ஒரு கொடுத்துவைப்பாகவே எண்ண வேண்டும். பின்னாளில் பாடசாலைக்கும் ஊரவர்களுக்குமான தொடர்பைக் கட்டியெழுப்பிப் பாடசாலையின் வளர்ச்சிக்காக அரும் பணியாற்றியவர் அதிபர் சீனிவாசன் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
1950ஆம் ஆண்டு பாடசாலையின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. பாடசாலையின் பிரதான மண்டபத்தில் தாபகரின் உருவப்படத்தோடு சேர்ந்ததாக இரு புறங்களிலும் நாயன்மார்கள், நாவலர், காந்தியடிகள், நேருஜி, பாரதியார், நாமக்கல் கவிஞர், இராமலிங்கம்பிள்ளை, இராஜாஜி, திருவள்ளுவர் போன்ற பெரியார்களின் திருவுருவப் படங்கள் பொலிவு பெற்றுக் காட்சியளித்தன. இந்த வேளையில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பழைய மாணவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் கவனத்திற்குப் பாடசாலை கொண்டு வரப்பட்டு 1962 இல் அரச பாடசாலையாகியது. தொடர்ந்து அதிபரின் அயரா உழைப்பும் சேர்ந்து ‘பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம்‘ என்ற பெயரைப் பெற்றுக்கொண்டது.
இப்பாடசாலையின் குறிப்பிடக்கூடிய சிறப்பு என்னவென்றால் அதிபர் சீனிவாசனுடைய பதவிக்காலத்தில் ஊரைச் சேர்ந்த ஆண், பெண் ஆசிரியர்கள் பலர் பாட ஆசிரியர்களாகவும் உதவி அதிபராகவும் இருந்தார்கள். இக்காலப்பகுதியில் ஊரவர்கள் கல்வியில் முன்னேற்றம் கண்டதோடு பல சாதனைகளையும் புரிந்தார்கள்.
பண்ணாகத்தின் மக்கள் ஆரம்ப காலம் முதலே பண வசதியுடையவர்களாக இருந்தார்கள். அதற்குக் காரணம் கல்வி அறிவு பெற்றிருந்தமையோடு, வேளாண்மைப்பயிர்ச் செய்கையுமாகும்.
படித்தவர்கள் பலர் மலேசியாவிற்குச் சென்று தொழில் புரிந்தார்கள். சிலர் அங்கே குடும்பத்தோடு நிரந்தரமாகித் தங்கிவிட்டனர். இவ்வாறு போனவர்களாக 58 பேரைக் குறிப்பிடலாம். இங்கு பலர் ‘மலேயன் பென்சனியர்‘ ஆக வாழ்ந்தார்கள். இதற்குப் பிற்பட்ட காலத்தில் போரின் காரணமாகவும் கல்வி, தொழில் காரணமாகவும் புலம்பெயர்ந்து ‘சுவிட்சலாந்து‘, ‘அவுஸ்ரேலியா‘, ‘அமெரிக்கா‘, ‘பிரான்ஸ்‘, ‘இத்தாலி‘, ‘இந்தியா‘, ‘சிங்கப்பூர்‘, ‘கனடா‘, ‘டென்மார்க்‘ போன்ற நாடுகளில் இப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சங்கங்களும் அதன் பணிகளும்
ஊரை வளப்படுத்தவும், ஒற்றுமையைக் கட்டிக்காக்கவும் பல சங்கங்கள் உருவாகின. சங்கங்களுக்குக் குறிக்கோள்கள் வகுத்து அவற்றின்படி கூட்டங்களைக் கூட்டிச் செயற்பாடுகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. அன்று தொடக்கம் இன்றுவரையும் ஊரவரின் நலனில் அக்கறை கொண்டு வாழ்வையும் வளத்தையும் மேம்படுத்தி வருவன சங்கங்கள் என்று கூறினால் அது மிகையாகாது. சின்னஞ்சிறிய ஊருக்குள் தோற்றம் பெற்ற பல சங்கங்களும் அதன் பணிகளும் மக்களைக் கட்டுக்கோப்பாக வாழ வழிவகுத்துள்ளன. அத்தகைய சங்கங்கள் பற்றிய விபரங்கள் கிழே தரப்பட்டுள்ளன.
பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலைப் பரிபாலன சபை.
இச்சங்கம் பாடசாலையின் வளர்ச்சிக்காக “மலேயா வித்தியா சங்கம்” என உருவாகிப் பின்னர் பரிபாலன சபையாக மாற்றம் பெற்றது. 1962இல் அரசாங்கம் பாடசாலையைப் பொறுப்பேற்றதோடு அதன் இயக்கம் நின்றுவிட்டது.
ஸ்ரீமுருகன் சனசமூக சேவா வாலிபர் சங்கம்
1929ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடியது. கூட்டத்தில் பேச்சு, கட்டுரை, கவிதை, விவாதம் போன்ற நிகழ்வுகள் இடம்பெறும். மாதமொருமுறை ‘தேசத்தொண்டன் என்ற கையெழுத்துப் பத்திரிகையை இந்தச் சங்கத்தின் மூலம் வெளியிட்டனர். 1936ஆம் ஆண்டு கோயிலின் மேற்குப்பக்கப் பின் வீதியில் கட்டிடம் அமைக்கப்பட்டது. இங்கே நவராத்திரி விழா கொண்டாடுவார்கள். இங்குள்ள வாசிகசாலையில் தினமும் பத்திரிகைகளைப் படிப்பதற்கு ஊரிலுள்ளோர் வருவார்கள்.
பண்ணாகம் தெற்கு ஐக்கிய நாணய சங்கம்
1930 இல் இச்சங்கம் நிறுவப்பட்டது. ஊரின் பிரதான தொழில் விவசாயம் என்பதால் இவர்கள் தமது முதலீட்டைக் கடனாகப் பெற்றுத் தவணை அடிப்படையில் கட்டுவதற்கு வசதியாகச் சிக்கன சேமிப்புக்கடன் உதவியை இன்றுவரை செய்து வருகின்றது. 1980ஆம் ஆண்டு கோயிலின் வடமேற்குப் பகுதியில் இதற்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஊரிலுள்ளவர்கள், வெளிநாடுகளிலுள்ள ஊரவர்கள் இதில் அங்கத்தவர்களாக உள்ளனர். இதன் பொன்விழா 1980 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. சாவீட்டுப் பணம் என அங்கத்தவர்களின் மரணத்தின்போது பணம் கொடுக்கப் படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
பண்ணாகம் இளம் விவசாயிகள் கழகம்
இச்சங்கம் புதிய முறைகளைக் கையாண்டு பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கான பயிற்சிகளை விவசாயிகளுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. கிருமிநாசினி தெளிகருவி, நீர் இறைக்கும் இயந்திரம் என்பவற்றைக் குறைந்த வாடகைக்குக் கொடுத்தும், கடனுதவிகளை வழங்கியும் விவசாயிகளை ஊக்குவித்ததோடு, கோழிப் பண்ணைகளை நடத்தி அதில் வரும் வருமானத்தைக் கடனுதவியாகக் கொடுத்தனர். நவீன முறைகளைப் பயன்படுத்தி பயிற்செய்கையை விருத்தி செய்வதற்காகப் பயிற்சி பெற்ற விவசாய உத்தியோகத்தர்களை வரவழைத்து ஆலோசனை, வழிகாட்டல், பயிற்சி என்பன கொடுத்தனர்.
பண்ணாகம் இந்துசமய விருத்திச் சங்கம்
சமய ஆசாரங்களைக் கடைப்பிடித்தல், திருமுறை ஓதல், சமய தீட்சை பெறல் போன்றவற்றைப் பின்பற்றுவதன் மூலம் மாணவர்களிடமும் பெரியோரிடமும் சமயப்பற்றுணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு இது அமைக்கப்பட்டது.
பண்ணாகம் மக்கள் சிக்கனக் கடனுதவும் கூட்டுறவுச்சங்கம்
அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட இச் சங்கத்தில் ஆண், பெண் உறுப்பினர்கள் பலரும் இணைந்து பணியாற்றினார்கள். கடன்கள் வழங்குவது, நிதியைச் சேமிப்பது, மரண இழப்பீடு வழங்குவது போன்ற செயற்பாடுகள் சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டன.
பண்ணாகம் அண்ணா கலை மன்றம்
1969ஆம் ஆண்டு இம்மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அண்ணாவின் கொள்கைகளைக் கொண்டு அமைக்கப்பட்டது. இதன்மூலம் பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சிறுவர் பாடசாலை, கலை நிகழ்வுகள், பயிற்சி வகுப்புகள் என்பவற்றைத் திட்டமிட்டு நடத்தினார்கள். “கலைக்கோபுரம்” என்ற கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டார்கள்.
பண்ணாகம் கிராம அபிவிருத்திச் சங்கம்
1940இல் இச்சங்கம் அமைக்கப்பட்டது. ஏனைய சங்கங்களின் கூட்டங்களும் இங்கு இடம்பெறுவதுண்டு. இதனால் சிறுவர் பாடசாலை நடத்தப்பட்டது. சங்கம் மூலம் எல்லைப் பிணக்குகள், வீதி செப்பனிடல் போன்றவற்றில் தலையிட்டு தீர்வு அளித்து வருகின்றனர்.
மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்
1973இல் ஆரம்பிக்கப்பட்டது. அரசாங்கத்தின் பண உதவியைப் பெற்று வருவாய் தரக்கூடிய மரங்களை வாங்கி நடுவதற்குக் கொடுத்தனர். 1985ஆம் ஆண்டு கைப்பணிப் பொருட்களைக் கொண்டு பொருட்காட்சியை ஒழுங்குபடுத்தி வைத்தனர். மாணவர்களிடம் தமிழ்ச் சமயப் பற்றை ஏற்படுத்தும் நோக்கில் ஊரிலுள்ள ஆசிரியர்கள் சேர்ந்து இலவசமாகக் கற்பித்தார்கள் குடும்பத்தவருக்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் வகையில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, வீட்டுத்தோட்டம் வைத்தல், சிறுவியாபாரம் தொடங்கிச் செய்தல் என்பவற்றுக்காகக் கடன் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
பண்ணாகம் அம்பாள் கலைமன்றம்
கலைகளை வளர்க்கும் நோக்கோடு இயங்கி வரும் இம்மன்றம் பல ஆக்கபூர்வமான முயற்சிகளில் இன்றுவரையும் ஈடுபட்டு வருகின்றது. நாடகம், வாத்திய இசை, கல்வி போன்றவற்றில் பயிற்சிகளை வழங்குவதோடு, பல கலை நிகழச்சிகளையும் அரங்கேற்றி வருகின்றது. அழகிய மண்டபத்தோடு கூடிய இம்மன்றம் பல்வேறு வகைகளில் வருமானத்தைப் பெறுகின்றது. ஊரவர்களிடம் கலையை வளர்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தோடு இதன் அங்கத்தவர்கள் செயல்படுகின்றனர்.
இவற்றைவிட கோயிற்பரிபாலன சபை, அன்னதானச்சபை, இணக்கசபை, முதியோர் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் மூலமும் ஊரின் நலன்காக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் ஒரே இனத்தவர், உறவினராக இருந்த போதிலும், இன்று சிலர் வெளியூர்களில் திருமண உறவை வைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடற்குரியது. அது மட்டுமன்றி புதியவர்கள் இலகுவாக ஊருக்குள்ளே வரமுடியாது. விசாரணைகள் வைத்துத்தான் உள்ளே போக விடுவார்கள். வித்தியாசமாக யாராவது நடமாடினால் சுற்றி வளைத்துப் பிடித்து விடுவார்கள். ஊரில் காவல்துறை மேலதிகாரியாக விளங்கிய குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கிராமத்து இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து ஊர்க்காவல் படையை உருவாக்கி அணியினராக செயற்பட வைத்தார்.
ஊரில் இணக்கசபை என்ற அமைப்பில் உயர்தொழில் வகிக்கும் முன்மாதிரியான ஊர்ப்பெரியவர்கள் அங்கத்தவராக இருக்கிறார்கள். கிராமத்தில் ஏற்படும் பிணக்குகளைத் தீர விசாரித்தும், நேரடியாகப் பார்வையிட்டும் தமது தீர்ப்பை வழங்குவார்கள். குடும்பப் பிரச்சினை, எல்லைத்தகராறு, காணிப்பிணக்குகள் போன்றவற்றை நடுநிலைமையோடு ஆராய்ந்து தீர்ப்பு வழங்கும் போது அதற்குப் பொதுமக்கள் கட்டுப்படுவார்கள். இத்தகைய இறுக்கமான பாதுகாப்பு, கட்டுப்பாடுகள் காரணமாக காவல்துறையினர் உட்பட யாருமே ஊருக்குள் வருவதற்குப் பயந்தார்கள்.
மக்களும் வாழ்வும்
கிராமத்தில் உள்ள எல்லைகள் அனைத்தும் பனையோலை வேலிகளாகவே இருந்தன. வீடுகளாக நாற்சார் வீடுகள்தான் பெரும்பாலும் காணப்பட்டன. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த முறையாலும் இத்தகைய வீடுகள் அதிகளவில் இருந்தன எனலாம். வீதியோர வீடுகளின் முன்னால் மடங்கள் கட்டியிருப்பார்கள். அருகில் தண்ணீர்த் தொட்டியிருக்கும். கால்நடையாகவோ, வண்டில் மாடுகளிலோ பயணம் செய்பவர்கள் இளைப்பாறுவதற்கு இது வசதியாக இருந்தது. மடத்தின் திண்ணையில் மண்பானையில் தண்ணீரும் ‘மூக்குப்பேணி‘யும் இருக்கும். அருகில் தொட்டியிலுள்ள நீர் மாடுகளுக்காக நிரப்பப்பட்டிருக்கும். மாடுகள் ‘தினவு‘ தீர்ப்பதற்காக ‘ஆவுரோஞ்சி‘க் கற்களும் அருகில் இருந்தன. சில வீடுகளில் இன்றும் இதனைக் காணலாம்.
முருகன் குலதெய்வமாக இருந்த காரணத்தினாலோ என்னவோ ஆறுமுகம், கந்தசாமி, ஆறுமுகசாமி போன்ற பெயர்களைப் பலர் கொண்டிருந்தார்கள். மாறுபடாமல் இருப்பதற்காகத் தகப்பன் பெயரைச் சேர்த்து சொல்லுவதும் உண்டு. ஆரம்பகாலங்களில் மண் மீது கொண்ட பற்றுதல் காரணமாகப் ஆண்கள் பலர் மேல் சட்டை அணியாமலும், காலில் செருப்புப் போடும் பழக்கம் இல்லாதவர்களாகவும் இருந்துள்ளனர். காலப்போக்கில் இந்நிலை மாற்றம் பெற்றது.
துன்ப நிகழ்வுகளில் ஊரவர்கள் எல்லாரும் ஒன்று கூடிவிடுவார்கள். மரணத்தின் போது மரணவீட்டுக்குச் சென்று சகல உதவிகளையும் செய்வார்கள். இறந்த உடலைத் தகனம் செய்வதற்கு வேண்டிய ஆயத்தங்களைத் தனது வீட்டுக்கடமையாக ஒவ்வொருவரும் பொறுப்பெடுத்துக் கொள்வார்கள். பணச்செலவு செய்யாமல் பாடை கட்டுவது, பந்தல் போடுவது, கட்டை குத்தி தறிப்பது, கிரியைகளை முன்னின்று செய்வது போன்றவற்றை ஒழுங்கு தவறாமல் முன்னின்று செய்வார்கள். ஒரு மாதம் முடிந்து அந்தியேட்டிக் கிரியை நடக்கும் வரை மரண வீட்டில் அடுப்புப் பற்றவைக்க மாட்டார்கள். உறவுகளிடமிருந்து மூன்று நேரச் சாப்பாடும் முறையாக வந்துகொண்டிருக்கும். இன்றுவரை அந்தமுறை பின்பற்றப்படுகிறது. அதுமட்டுமன்றி ஊரில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் சைவ உணவை உண்பவர்களாக இருப்பதால். ஒருமாதம் முடியும் வரை மாமிச உணவு எடுக்கமாட்டார்கள். காடாற்று என்பது இறந்து மூன்றாம் நாள் செய்யப்படும். கோயில் ஐயர் வந்து கிரியைகள் செய்து தானம் பெற்றுச் செல்வார். இந்த ஊருக்கு மட்டுமே ‘ஐயர்‘ வருவார். மற்றைய ஊர்களுக்குக் ‘குருக்கள்‘ தான் போவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மரக்கறி வகைகள் மட்டுமே சமைப்பார்கள். பொரியல் தாளிதம் என்பன சேர்ப்பதில்லை. இந்த ஊரவர் எட்டுச் செலவு செய்வதில்லை. முப்பத்தோராம் நாள் அந்தியேட்டிக்கிரியை வீடுகளில் நடைபெறும். வீடுகளில் நடக்கும் இன்ப துன்ப நிகழ்வுகளில் சமையல் வேலைகளைச் செய்வதற்கு உறவிலுள்ள பெண்கள், அயலிலுள்ள பெண்கள் எல்லாரும் சேர்ந்து நிகழ்விற்கு முதல் நாள் கத்திகளோடு சென்று காய்கறிகளை வெட்டி வைப்பார்கள். இன்றும் இதே முறையில் தான் நடைபெற்று வருகின்றது.
ஒருவர் இறந்துவிட்டால் உறவுமுறையுள்ள ஆண்கள் ஊரிலுள்ள ஒவ்வொரு ஒழுங்கையிலும் மரண அறிவித்தலை அறிவிப்பார்கள். அயல் ஊர்களுக்கும் இவ்வாறே செய்வார்கள். இதனை இழவு சொல்லுதல் என்று கூறுவர். அதிகாலையில் இறந்தவரின் பெயரைச் சொல்லிக் “காலஞ்சென்றுவிட்டார்” என இழவுசொல்லும் வழக்கம் இன்றும் பின்பற்றப்படுகிறது.
பொழுதுபோக்குகள்
ஊரில் உள்ள மன்றங்கள் மூலம் இளைஞர்கள் நாடகம் நடித்து விழாக்காலங்களில் மேடையேற்றுவார்கள். அதே போல் கல்வியில் முன்னேற்றுவதற்காக இலவச வகுப்பகளை நடத்தவார்கள். விளையாட்டுகள், போட்டிகள் போன்றன இடம் பெறும். ஆரம்ப காலங்களில் வட்டக் கூத்து ஆடப்பட்டது. அது இசைப்பாடலும் கதையும் சேர்ந்ததாக இருக்கும். நகைச்சுவைக்காக ‘பபூன்” வேடம் போடுவார்கள். அவர்களைத் ‘தோப்பையர்‘ என்ற பட்டப்பெயரால் அழைப்பர். அதே போன்று நாடகத்துக்கு வேடம் போட்டவர்ளை வேடத்தின் பெயரால் அழைக்கும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது. அனுமான், இயமன், வேடன், ஐயர் என்பன இவ்வாறு அழைக்கப்படும் சில பெயர்களாகும். பண்டார வன்னியன், காத்தவராயன், வள்ளி திருமணம், அரிச்சந்திர மயானகாண்டம், சத்தியவான் சாவித்திரி, பூதத்தம்பி விலாசம் போன்ற நாடகங்கள் இவ்வாறு நடிக்கப்பட்டவையாகும். இவற்றைப் பழக்குகின்ற அண்ணாவிமார்களும் பாட்டுக்காரர்களும் ஊரில் வாழ்ந்துள்ளார்கள்.
உணவும் உடையும்
இவற்றில் குறிப்பிடக்கூடிய மாற்றம் இல்லாவிட்டாலும் ஒடியல் கூழ் விசேடமான உணவாக இன்றும் இருக்கிறது. இறால், நண்டு, மீன்தலை, மரவள்ளிக் கிழங்கு, பயிற்றங்காய், பலாக்கொட்டை, கடலை போன்ற குறிப்பிட்ட பொருட்கள் சேர்த்துச் செய்வார்கள். கிழமைக்கு ஒருமுறை காய்ச்சுவார்கள். எல்லாரும் கூடியிருந்து பலாவிலை அல்லது ‘பணிவில்‘ கொண்டு கூழ் குடிப்பார்கள். பழைய சோற்றில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் மோர், ஊறுகாய், மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பழங்கஞ்சி செய்து குடிப்பார்கள். கிழமைக்கு ஒரு முறை தலைக்கும் உடலுக்கும் நல்லெண்ணை தேய்த்து முழுகுவார்கள். அன்றைய தினம் ஓய்வு நாளாக இருக்கும். ஆடு கோழி போன்றவற்றைக் கறியாக்கி உண்பார்கள்.
விளையாட்டுகள்
ஆண்கள் பெண்கள் விளையாடுவதற்கேற்ற இடங்கள் தனித்தனியாக இருந்தன. பெண்கள் ஆலடி புளியடி போன்ற இடங்களில் தம்முடைய விளையாட்டுகளை மேற்கொள்வார்கள். கெந்தித் தொடுதல், அடித்துப்பிடித்தல், கொக்கான் அடித்தல், “ஆ யு ரெடி ஐஸ்போல்”, பாண்டி விளையாட்டு, பசுவும் புலியும், கிட்டிப்புள் அடித்தல் போன்றவற்றையும் ஆண்கள் தாச்சி மறித்தல், காற்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் என்பவற்றையும் விளையாடுவார்கள் கோயில் முன்னாலுள்ள இடம் ஆண்களின் விளையாட்டு மைதானமாக அமைந்திருந்தது. கொண்டாட்டங்களின் போது தயிர்முட்டி அடித்தல், கயிறு இழுத்தல், நீச்சல்போட்டி, சைக்கிள் ஓட்டப்போட்டி, போர்த் தேங்காய் அடித்தல் என்பவை இடம்பெறும்.
திருவெம்பாவையும் பெண்களும்
மார்கழி மாதம் மரமும் நடுங்கும் குளிரில் அதிகாலை நான்கு மணிக்குக் கோயில் மணி கேட்கும். சிறுவர், பெரியவர், பெண்கள் அனைவரும் கோயிலுக்கு வருவார்கள். சங்கு, சேமக்கலம் ஒலிக்கத் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிக் கொண்டு ஊரைச் சுற்றி ஊர்வலமாக வருவார்கள். இந்தக் கூட்டத்தில் பெண்களின் தொகை அதிகமாக இருக்கும். ஊர்வலம் முடித்து வந்து எல்லாரும் கோயில் கேணிக்குள் குதித்து நீராடுவார்கள். இதனால் இந்த ஊரில் உள்ள பெண்கள் நீச்சலில் வல்லவர்களாக இருந்தார்கள்.
கோயில் சார்ந்த நம்பிக்கை
ஊரவரின் குலதெய்வமாக விசவத்தனை முருகன் விளங்குகிறார். பக்தி விசுவாசம் கொண்ட இந்த ஊர்மக்கள் பெரும்பாலும் மாமிசம் தவிர்த்துப் பிறவிச் சைவர்களாக வாழ்கிறார்கள். வெளிநாடுகளில் உள்ள ஊரவர்களின் நிதி உதவியோடு கோயில் அண்மையில் புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கும்பாபிசேகம் நடைபெற்றது. கோயில் திருவிழா பங்குனி மாதத்தில் ஆரம்பமாகும். கொடியேறினால் ஊரில் உள்ளவர்கள் தூரப்பயணம் போகமாட்டார்கள். தலையில் எண்ணெய் தேய்த்து முழுகமாட்டார்கள். மாமிச உணவை ஒதுக்கிவிடுவார்கள். அன்னதானச் சபையின் மூலம் தினமும் அன்னதானம் வழங்கப்படும். எட்டாந் திருவிழா ஊர் வாலிபர்களால் சிறப்பாகச் செய்யப்படும். அதேபோல் ஒன்பதாம் திருவிழா வேட்டைத் திருவிழாவாக இருக்கும். முருகன் வேட்டைக்குச் சென்று வந்து வள்ளி திருமணம் இடம்பெறும். விழாக்காலங்களில் பல கலை நிகழ்ச்சிகள் இரவிரவாக நடைபெறும். சில வருடங்களின் முன் தேர்த்திருவிழாவின் போது திருடர்கள் மூவர் வந்து பெண்கள் இருவரின் தாலிக்கொடியை அறுத்தபோது. இளைஞர்கள் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டார்கள். பல இடங்களில் திருடிய பொருட்கள் திருப்பிப் பெறப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்பட்டன.
அண்ணா கலைமன்றம் உருவாகிய கதை
1969 ஆம் ஆண்டு எட்டாந் திருவிழா உபயகாரர்களான ஊர் வாலிபர்கள் நாடக நிகழ்வை வெளியூரிலிருந்து வரவழைத்திருந்தார்கள். அந்தக் காலத்தில் வீ. வீ. வைரமுத்து என்ற நாடகக் கலைஞன் மிகவும் சிறந்த நடிகனாக விளங்கினார். அவரது அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்தைத் திருவிழாவில் நிகழ்த்துவதற்கு ஊர்ப்பெரியவர்கள் மறுப்புத் தெரிவித்தார்கள். இதனை எதிர்த்த இளைஞர்கள் ‘சத்தியக்காடு‘ என்ற சந்தைக்கு அருகில் உள்ள பற்றைக் காட்டை வெட்டிச் சுத்தப்படுத்தி மேடை அமைத்தார்கள். மழை தொடர்ந்து பெய்தது. நெல்குற்றி நீக்கிய உமியைக் கொண்டு வந்து கொட்டினார்கள். “அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும்” என அறிவித்தார்கள். பெரியவர்களின் கொள்கைகளை மீறி இயங்கிய அமைப்பிற்கு அண்ணா கலை மன்றம்‘ என்று பெயரிட்டார்கள். இந்த அமைப்பின் மூலம் ‘டிங்கிறி சிவகுரு‘ என்ற நகைச்சுவைக் கலைஞரை வரவழைத்து அவரது நாடகத்தை அரங்கேற்றி அவருக்கு ‘நகைச்சுவைத் தென்றல்‘ என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தார்கள்.
பரிகாரி வைத்திலிங்கம்
இவரது தந்தையார் சிறந்த நாடகக் கலைஞனாக இருந்தார். தான் நடித்ததோடு நின்றுவிடாமல் பலருக்கு நாடகத்தைத் திறம்பட நடிப்பதற்குக் கற்றுக்கொடுத்தார். ஆயுள்வேத மருத்துவத்தில் பயிற்சி பெற்ற இவர், ஊரவர்களிற்கு நோய் வந்தால் இலவசமாக மருத்துவம் செய்வார். நோய் கடுமையாக உள்ளவர்களின் வீடுகளுக்குத் தேடிச்சென்று கைநாடி பிடித்துப் பார்த்து மருந்து கொடுப்பார். அனுபவத்தின் காரணமாக உயிர் பிரியும் காலத்தையும் கணக்கிட்டுச் சொல்லி விடுவார். இவரைப்போன்று வேறுபலரும் காயங்களுக்கு இலவசமாக மருந்து கட்டும் பணியினை மேற்கொண்டிருந்தார்கள்.
மாட்டு வண்டில்
இந்த ஊரவர்கள் பலர் மாட்டு வண்டி வைத்திருந்தார்கள். இதன் மூலம் வயல் வேலைகள் மட்டுமன்றி வீடு கட்டுவதற்கான பொருட்களை ஏற்றி இறக்கவும் அவை பயன்பட்டன. மாட்டுவண்டி, ஒற்றைத் திருக்கல் வண்டி, பயணம் செல்வதற்கான கூடார வண்டி என வண்டிகள் தேவைக்கேற்ற வகையில் காணப்பட்டன. தூரத்திலுள்ள கோயில்களுக்குப் போவதென்றால் பலர் சேர்ந்து வண்டில் கட்டிப் போய்வருவார்கள்.
துலாமிதிப்பு
ஊரின் பிரதான தொழில் வேளாண்மையாகும். அதனால் பிள்ளைகள் அதிகாலையில் எழும்பித் தோட்ட வேலைகளுக்கு ஒத்தாசையாக உதவிய பின்னரே பாடசாலைக்குச் செல்வார்கள். துலாவில் இருவர் நின்று மிதிப்பார்கள். ஒருவர் பட்டையால் நீரை மொண்டு வாய்க்காலில் இறைப்பார். தண்ணீர் உடைத்துச் செல்லாமல் ஒருவர் பாத்தி கட்டுவார். இவ்வாறு குடும்ப அங்கத்தவர் பலரின் ஒத்துழைப்போடு தோட்ட வேலைகள் நடந்தன.
நோய்களும் நம்பிக்கையும்
அம்மை நோய் வந்தால் இருபத்தொரு நாட்கள் வெளியே போகக் கூடாது. வேப்பிலை வீட்டு வாசலில் கட்டியிருக்கும். எண்ணெய்ச் சட்டி அடுப்பில் வைத்துப் பொரிக்கவோ, தாளிக்கவோ கூடாது. அம்மன் கோபம் கொள்வதாகக் கூறுவார்கள். நீராடும்போது யாரும் கண்காணாத வகையில், அதிகாலையில் எழுந்து, பாவனையில்லாத கிணற்றில் நீராடி வரவேண்டும். கூகைக்கட்டு நோயைப் பொன்னுக்கு வீங்கி எனவும் கூறுவர். அதாவது பவுன் போட்டால் நோய் தணிந்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் இந்த நோய் வந்தவர்கள் சங்கிலி அணிவார்கள். கொள்ளை நோயைக் ‘கோதாரி நோய் ‘ எனவுங் கூறுவர். இந்த ஊரில் கொள்ளை நோய் வந்தபோது பலர் இறந்து விட்டார்கள். இவ்வாறே ஒரு குடும்பத்தில் வந்து எல்லாரும் இறந்து விட, ஒரே ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். அவருக்குக் ‘கோதாரிக் குஞ்சு‘ என்று பெயர் வைத்தார்கள். இன்றும் ‘கோதாரிக் குஞ்சுவின்‘ மகன் அல்லது மகள் என்றுதான் அவரின் குடும்பத்தவரை அழைக்கிறார்கள். பண்ணாகத்தில் அன்று தொடக்கம் இன்றுவரை ஐம்பதிற்கு மேற்பட்டவர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்றியதை இனங்காண முடியும். பண்ணாகம் மெய்கண்டானில் படித்து பண்டிதர்களாக வெளிவந்தவர்கள் பண்டிதர் ஆ. ஆறுமுகம், பண்டிதர் ப. இராசகுரு , பண்டிதர் ஆ. சேயோன் போன்றோர் ஆவர். பண்டிதர் இராசகுரு , பண்டிதர் ஆ. ஆறுமுகம் ஆகிய இருவரும் சமயத்துக்கும் தமிழுக்கும் பல தொண்டுகள் செய்தவர்கள். கோயிலில் கந்தபுராணத்தைப் படித்துப் பொருள் கூறியவர்களில் இவர்களும் அடங்குவர். தமிழ் படிக்க ஆர்வமுள்ளோருக்குப் பால பண்டிதர், பண்டிதர் வகுப்புகளை நடத்தினார்கள்.

பண்டிதர் அ. ஆறுமுகம்
சைவமும் தமிழும் வளரக்கப் பாடுபட்டவர். பண்ணாகம் மெய்கண்டானில் படித்து ஓய்வு பெறும் வரையும் அங்கேயே பணியாற்றிய பெருமைக்குரியவர். அருளமுதவெள்ளம், தமிழ் அறிஞர் சரித்திரம், பண்ணாக மான்மியம் போன்ற நூல்களை வெளியிட்டார். அதுமட்டுமன்றி பல தலங்கள் மீது பிள்ளைத் தமிழ் ஊஞ்சல், பதிகம் போன்றவற்றையும் பாடியுள்ளார். இவர் பெயரால் நிறுவப்பட்ட அறக்கட்டளை பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுகின்றது. அத்தோடு அவர் இறக்க முதலே தனது கண்களை மருத்துவ பீடத்திற்கு அன்பளிப்புச் செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
ராணி சீதரன்
பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலய மாணவியாகிய இவர் ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, சிரேஸ்ட விரிவுரையாளராகப் பணியாற்றிய தோடு பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். சிறுகதைத் தொகுப்புகள் சிறுவர் பாடல் தொகுப்பு, கவிதைத்தொகுப்பு, உளவியல் கட்டுரைத்தொகுப்பு, இலக்கியக்கட்டுரைத் தொகுப்பு, பாடநூல் விளக்கம், ஆய்வுக்கட்டுரைகள் என இவரது பல வெளியீடுகள் வெளிவந்துள்ளன.
ஆச்சிப்பிள்ளை நடராசா
இவ் ஆசிரியையும் பல ஆக்கங்களை எழுதியுள்ளார். எனினும் பிள்ளையார் மகத்துவம் என்ற நூல் மட்டுமே வெளிவந்துள்ளது.
இதே போன்று புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் பண்ணாகத்தவர் பலர் கவிதை கட்டுரைகளை நூல்களாக வெளியிட்டுள்ளனர். ஜேர்மனில் வாழும் ஊடகவித்தகர் க. கிருஸ்ணமூர்த்தி என்பவர் 2006 இல் “பண்ணாகம் நெற்” என்பதை உருவாக்கினார். அதன் கிளைகளை வேறு நாடுகளில் நிறுவி ஊரவர்கள் ஒன்றுகூடல்களை நடத்தி வருகிறார்கள். 2009 இல் “பண்ணாகம் டொட் கொம்” என இதனை மாற்றி ஊர் தொடர்பான சகல விடயங்களையும் பதிவு செய்து வருகின்றார். அதுமட்டுமன்றி திருமணம் செய்து வைத்தல், நிதியுதவிகளை வழங்குதல், கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றல் போன்ற செயற்பாடுகளையும் செய்து வருகின்றார்.
சித்து வேலை செய்யும் பொக்கட்டர் மிகவும் குள்ளமான தோற்றமுடையவர் என்பதால் இவருக்குப் “பொக்கட்டர்” என்ற பட்டப்பெயர் நிரந்தரமாகியது. பொக்கட்டர் தேங்காய்ப் பாதியை எடுத்துப் பிசைந்தால் பால் வடியும். அதேபோல் எள்ளை எடுத்துக் கசக்குவார் எண்ணெயாக வரும். அது மட்டுமன்றி ஏதாவது சொன்னால் அது நடக்கும். ஒருமுறை கள் எடுப்பதற்கு மரத்தில் ஏறியவரைப் பார்த்துப் பொக்கட்டர் “எனக்குக் கள்ளு வேண்டும்” என்றார். அதற்குக் கள் எடுப்பவர் சிரித்துவிட்டு “நீங்கள் எப்படிக் குடிப்பீர்கள்” எனக் கேலி செய்தார். “நீ இரு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பொக்கட்டர் போய்விட்டார். பொழுது இருளும் வரை இறங்க முடியாது பனையில் இருந்தவரைப் பொக்கட்டர் வந்து ”ஏன் இருக்கிறாய்? இறங்கு” என்றதும் தான் இறங்க முடிந்தது.
முடிவுரை
ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்த மண்ணில் பற்றுதல் வைத்திருப்பான். தவிர்க்க முடியாதபடி சில தனித்துவங்களால் தனது இருப்பினைப் பதியமிட்டிருப்பான். ஊர்ப்பெயர், வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள், கலைகள், பேச்சுவழக்குச் சொற்கள், பழக்க வழக்கங்கள் என்பவற்றின் மூலம் அவை வெளிப்படும். பண்ணாகம் என்ற எனது ஊரின் கதையும் இவ்வாறான வழி வழிவந்த வாழ்க்கை முறையின் மூலமாகப் பெற்ற சான்றாதாரங்களின் துணையோடு முன்வைக்கப்பட்டுள்ளது.
உசாத்துணை நூல்கள்:
இடப்பெயர் ஆய்வு யாழ்ப்பாண மாவட்டம். – கலாநிதி. இ. பாலசுந்தரம் – விவேகா பிறின்ரேஸ் – 2002
ஈழநாட்டுக்குறம் – ப. கு. சரவணபவன் – எடுத்த முத்துக்கள் – 2007
பண்ணாக மான்மியம் – பண்டிதர் அ. ஆறுமுகம். – பொஸ்கோ அச்சகம் – 2001
தமிழறிஞர் சரித்திரம் – பண்டிதர் அ. ஆறுமுகம் – திருமகள் அச்சகம் – 1994
தகவல் தந்து உதவியோர் : ஊடக வித்தகர் திரு. க. கிருஸ்ணமூர்த்தி
செல்வி. சுப்பிரமணியம் இரத்தினம் – ஓய்வு பெற்ற ஆசிரியை
திரு. த. துரைலிங்கம். – ஓய்வுபெற்ற பொறியியலாளர்
திரு. சோம திருச்செல்வம் – வர்த்தகர்
ஆக்கம்
ராணி சீதரன்.
சிரேஸ்ட விரிவுரையாளர், (ஓய்வு நிலை) தமிழ்த்துறை,
தேசிய கல்வி நிறுவகம்,
மகரகம்,
கொழும்பு.
அலைபேசி – 0777 243619.