பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் நடத்திய *”என் ஊரின் கதை”* கட்டுரைப்போட்டி முடிவுகள் 

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் நடத்திய *”என் ஊரின் கதை”* கட்டுரைப்போட்டி முடிவுகள் என் ஊரின் கதை‘–கட்டுரைப் போட்டிக்கு மொத்தம் 120 கட்டுரைகள் வந்திருந்தன. இவற்றை மிகுந்த உற்சாகத்துடன் எழுதியனுப்பி, மிகுந்த ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் இருந்து இவை அனுப்பப்பட்டிருந்தன. இவ்வளவு பேர் பங்கேற்றிருப்பது உண்மையில் சிறப்பான ஒரு பங்கேற்பு. நமது மாநிலத்தின் மிகப்பெரும்பான்மையான நிலப்பரப்புகளில் இருந்து, பல்வேறுபட்ட பன்முகத்தன்மை வாய்ந்த பண்பாட்டுக் கூறுகளைப் பிரதிபலிக்கும் கட்டுரைகள் இவை. வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு சமூகமக்கள் வாழும் நிலப்பரப்புகளின் சாயல்கள் இக்கட்டுரைகளில் வெளிப்பட்டுள்ளன.

கட்டுரைகளின் வடிவங்களைப் பொறுத்தவரை ,பெரும்பாலானவை வழக்கமாகப் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகளுக்காக எழுதப்படும் வழக்கமான வடிவங்களிலேயே இருந்தன .பல்வேறு ஊர்கள் தொடர்பான புகைப்படங்கள் ஏராளமாக இணைக்கப்பட்டிருந்தன ,தகவல்களின் களஞ்சியங்களாகப் பலகட்டுரைகள் இருந்தன. அந்தந்த ஊர்களின் பெயர்க்காரணங்கள் ,அங்கு வாழும் பல்வேறுமக்கள் சமூகங்கள், அவ்வூர்களின் வரலாற்றுப் பின்னணி ,தொழில்கள், விளைபொருள்கள், கோயில்கள் ,தேவாலயங்கள் ,மசூதிகள், பிரபலமான திருவிழாக்கள்-போன்ற பன்முகப்பட்ட அம்சங்கள் பற்றி கட்டுரையாளர்கள் விரிவாக எழுதியுள்ளனர்.

கட்டுரைகளுக்குப் பொருத்தமான வாய்மொழி மரபுக்கதைகள், கர்ண பரம்பரைக் கதைகள், சங்க இலக்கியப் பாடல்வரிகள், திரைப்படப்பாடல்கள், நாட்டுப்புறப் பாடல் வரிகள், புதுக்கவிதைகள், பழமொழிகள் என,எண்ணற்ற சுவையான மேற்கோள்களையும் கட்டுரையாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஒருவகையில் விரிவான உள்ளூர் வரலாறுகளாக இவை அமைந்துள்ளன என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் அம்சம். அனைவருக்கும பாராட்டுகள்.இப்போட்டியை அறிவிக்கும்போது, வரும் கட்டுரைகள் வெறும் தகவல் களஞ்சியங்களாக மட்டும் நின்றுவிடாமல், தமது ஊர்களின் மண்சார்ந்து, மக்கள் வாழ்க்கைப்பாடுகள் சார்ந்து, அவர்களின் வரலாறு-சமூகம்-பண்பாடு-இலக்கியம் சார்ந்து ஒரு தேடலை மேற்கொள்ளும் முயற்சிகளாக இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்பினோம். அவ்வாறு வந்துள்ளவற்றில் சுமார் இருபதுக்கு மேற்பட்ட கட்டுரைகள் முதல் கட்டப் பரிசீலனையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவை நவம்பர்-20-ஆம் தேதியிலிருந்து பாரதி புத்தகாலயத்தின் www.bookday.co.in மின்னிதழில் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளன. இந்த இருபது கட்டுரைகளில் இருந்து மிகவும் சிறப்பாக எழுதப்பட்ட 10-கட்டுரைகளுக்கு சிறப்புப் பரிசுகளாகப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அடுத்த நிலையில் மேலும் 10-கட்டுரைகளை எழுதியவர்களுக்கும் சான்றிதழ்களும் ,புத்தகங்களும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்தப் போட்டி, முதல் கட்டமாக இப்போது நிறைவடைகிறது. இதில் பங்கேற்ற மாணவர்கள் எழுதிய கட்டுரைகளைத் தனிப் பிரிவாகப் பரிசீலனை செய்து அவற்றில் சிறப்பான கட்டுரைகளுக்குத் தனியே பரிசுகள் புத்தகங்களாக வழங்கப்பட உள்ளன. அந்த முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் .பங்கேற்ற அனைவருக்கும் பள்ளிக் கல்விப்பாதுகாப்பு இயக்கம், புக்டே சார்பில் எமது மனங்கனிந்த நல்வாழ்த்துகள்.

பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி நடக்க உள்ள ‘ஆயிரம் கல்வி ஆர்வலர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சிக்குப் பின் (அல்லது நிகழ்வின் போது) பரிசளிப்பு விழாவும் இணைய வழியில் நடைபெறலாம் எனத் திட்டமிடபட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பு தனியே வெளியாகும். கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பாரதி புத்தகாலயத்தின் புக்-டே மின்னிதழில் வெளியிடப்படும் கட்டுரைகள் பின்னர் ஒரு புத்தகமாக வெளியிடப்படும். பங்கேற்ற அனைவரையும் இணைய வழியே சந்தித்து உரையாடவும், அவர்களின் கருத்துகளைத் தெரிந்து கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறோம்.

இப்போதைக்கு இந்த அளவில் ‘என் ஊரின் கதை ’கட்டுரைப் போட்டியின் முதல் கட்டம் நிறைவடைகிறது .வெகு விரைவில் இதன் இரண்டாம் கட்டம் தொடங்க உள்ளது. உள்ளூர் வரலாறுகளை இன்னும் சிறப்பாக எழுதுவதற்கு உரிய வகையில் ,சிறு குழுவாக இணைந்து கட்டுரைகளை எழுதலாம். அவரவர் ஊர்களின் அன்றையநிலை, இன்றைய சூழல், நீர்நிலைகளின் பாதுகாப்புக்கு உள்ள பிரச்சினைகள், தொழில்-போக்குவரத்துச் சாதனங்களின் வளர்ச்சி, ஊர்களில் பள்ளிகள்-பிற கல்வி நிலையங்கள் உருவான வரலாறு, விடுதலைப் போராட்ட வரலாற்று நிகழ்வுகள், சமூக நீதிக்கான போராட்டங்கள், மொழி-இலக்கியம் சார்ந்து அவரவர் ஊர்களில் வாழ்ந்த-வாழ்கின்ற ஆளுமைகள் என்று இன்னும் எவ்வளவோ செய்திகளை எழுதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள், வாய்மொழி வரலாறுகள், நாட்டார் பாடல்கள், உள்ளூர் சிறு தெய்வங்களின் வரலாறுகள் என உங்களின் ஊர்களுடைய வரலாற்றுத் தேடல்கள் விரிவடையட்டும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வென்ற சாதனையாளர்களோ ,அல்லது இசை-கலை-இலக்கியம் ,நாடகம் ,திரைப்படம் போன்ற பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற சாதனையாளர்கள் உங்கள் ஊர்களில் இருப்பார்கள் தாமே? அத்தகைய பெருமக்கள் பற்றியெல்லாம் தேடி விசாரித்து எழுதினால், ’அட ,நம்ம ஊர்ல இவ்வளவு விசயமிருக்கா? இத்தன நாளா இதையெல்லாம் தெரிஞ்சுக்காம இருந்துட்டமே… ’என்று நாமே வியந்து போகக்கூடும் .சரிதானே? அடுத்த கட்டத்தில் தூள்பரத்தி விடலாமா? எங்கே ,ரெடியாகுங்க பாக்கலாம்…

போட்டியில் பங்கேற்றுச் சிறப்பித்த அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளும் நன்றிகளும்.தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிறப்பான முதல் பத்துக் கட்டுரைகள்

1. காமாட்சிபுரம்,

தேனிமாவட்டம்- திரு.கார்மல் அமல்ராஜ்

2. முகவூர் ,

விருதுநகர் மாவட்டம்- த.ஜீவானந்தம்

3. ஒல்லனூர்,

புதுக்கோட்டை மாவட்டம்- மீரா.சோமசுந்தரம்

4. இருமன்குளம்,

தென்காசிமாவட்டம் -மு.இளங்கோகண்ணன்

5. ஊர்வேய்ந்தகூரை,

திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்-ரெங்கசாமி முருகன்

6. மயிலாடும்பாறை,

தேனிமாவட்டம் -பா.அசோக்குமார்

7. பண்ணாகம்,

இலங்கை –நாகராணி சீதரன்

8. மேலத்தேமுத்துபட்டி,

புதுக்கோட்டை மாவட்டம் -ந.புஷ்பவள்ளி

9. வண்டலூர் ஏரி மீட்பு,

செங்கல்பட்டு மாவட்டம்- இரா.பன்னீர்செல்வம்

10. நரசிங்கநத்தம்,

மயிலாடுதுறை மாவட்டம் -இ.சதீஷ்குமார்

 

 

நன்றி.

​இப்படிக்கு,

Dr. வே. வசந்தி தேவி,

தலைவர்,

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்.

மேனாள் துணைவேந்தர்,

ம.சுந்தரனார் பல்கலைக்கழகம்.


ஜெ.கிருஷ்ணமூர்த்தி,

செயலர்,

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்.


Show 2 Comments

2 Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *