காந்தியின் தேசத்திற்கு என்னுடைய பயணம் – மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் | தமிழில்: தா.சந்திரகுருஇந்தியாவிற்குச் பயணம் செல்ல வேண்டும் என்ற விருப்பம் நீண்ட காலமாகவே என்னுள் இருந்து வந்தது. குழந்தையாக இருந்த போதே இந்தியா குறித்து என்னிடம் யானைகள், புலிகள், கோவில்கள், பாம்பாட்டிகள் போன்று கதைப் புத்தகங்களில் இருந்த பிற கதாபாத்திரங்கள் மூலமாக விசித்திரமான மோகம் இருந்து வந்தது.

மாண்ட்கோமெரி புறக்கணிப்பு நடந்து கொண்டிருந்த வேளையில் இந்தியாவின் காந்தி தான் நாம் கடைப்பிடித்த அகிம்சை மூலமான சமூக மாற்றம் என்ற கொள்கைக்கான வழிகாட்டியாக இருந்தார். அவரைப் பற்றி நாம் அடிக்கடி பேசி வந்தோம். பேருந்து பாகுபாட்டிற்கு எதிராக நாம் வெற்றி பெற்றவுடன் என்னுடைய நண்பர்கள் சிலர் என்னிடம், ‘நீங்கள் ஏன் இந்தியாவிற்குச் செல்லக்கூடாது? நீங்கள் மிகவும் பாராட்டுகின்ற மகாத்மா அங்கே என்ன செய்திருக்கிறார் என்பதை நீங்களே சென்று பார்த்து வாருங்களேன்’ என்று சொன்னார்கள்.

இந்தியப் பிரதமராக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேரு 1956ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு குறுகியகாலப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது ​​நாங்கள் இருவரும் சந்திக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் தன்னுடைய நாட்டிற்கு நான் விரைவில் வருவதற்கான சாத்தியம் குறித்து விசாரித்து வர வேண்டும் என்று தன்னுடைய பிரதிநிதிகளை என்னிடம் அனுப்பி வைக்கும் அளவிற்கு பெருந்தன்மையுடன் இருந்தார். இந்தியாவிற்கான நமது முன்னாள் அமெரிக்க தூதரான செஸ்டர் பவுல்ஸ் அதேபோன்ற கருத்துக்களுடன் எனக்கு கடிதம் எழுதியிருந்தார்.

C:\Users\Chandraguru\Pictures\Martin Luther King Jr\sddefault.jpg
Image Source: Youtube.com

ஆனால் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவிருந்த ஒவ்வொரு முறையும் ​​எனக்கு ஏதாவதொரு தடையேற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருமுறை நான் ஏற்கனவே ஒத்துக் கொண்டதன் அடிப்படையில் கானாவிற்குச் செல்ல வேண்டியதாயிற்று. மற்றொரு முறை ‘சுதந்திரத்தை நோக்கிய வீறுநடை’ (Stride Toward Freedom) என்ற புத்தகத்தை எழுதி முடித்துத் தருமாறு பதிப்பகத்தார் எனக்கு அழுத்தம் தந்து கொண்டிருந்தனர். அடுத்ததாக திருமதி இசோலா வேர் கறியின் முறை வந்தது. செப்டம்பர் மாதம் சனிக்கிழமை பிற்பகலில் ஹார்லெம் ஸ்டோரில் புத்தகங்களில் ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிந்தபோது, கடிதத்தைப் பிரிக்க உதவும் கத்தியைக் கொண்டு அவர் என்னைத் தாக்கியதால் என்னுடைய  பயணத் திட்டங்கள் தலைகீழாக மாறிப் போயின. அப்போது அந்தப் பயணத்தை மட்டுமல்லாமல், எல்லாவற்றையும் அவர் தலைகீழாக மாற்றி விட்டிருந்தார்.

அவருடன் ஏற்பட்ட அந்த ஆபத்தான சந்திப்பிலிருந்து மீண்டு இறுதியாக என் மருத்துவர்கள் என்னை விடுவித்த பிறகு, மீண்டுமொரு முறை தெற்கு இனப்பாகுபாட்டிற்கெதிரான போராட்டம் என்ற கடலுக்குள் ஆழமாக மூழ்குவதற்கு முன்பாக, இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டு விடுவது நல்லது என்று எனக்குத் தோன்றியது. அந்த நீண்ட பயணத்தில் தனியாகச் செல்ல வேண்டாம் என்று எண்ணிய நான் எனது மனைவி, நண்பர் லாரன்ஸ் ரெட்டிக் ஆகியோரையும் என்னுடன் வரச் சொன்னேன். எனது மனைவி கோரெட்டா இந்தியப் பெண்கள் மீதும், டாக்டர் ரெட்டிக் அந்த மிகப்பெரிய நாட்டின் வரலாறு, அதன் அரசாங்கம் மீதும் ஆர்வம் கொண்டிருந்தனர். காந்தியை நேரில் அறிந்தவர்கள் என்னைக் கண்டு, என் மீதும் மாண்ட்கோமெரி இயக்கம் மீதும் தீர்ப்பை வழங்குவதே எனக்கான உண்மையான சோதனையாக இருக்கும் என்று ரெட்டிக் எழுதியுள்ள ‘வன்முறையற்ற போராளி’ (Crusader Without Violence) என்ற என்னுடைய சுயசரிதை நூலில் குறிப்பிட்டிருந்தார். பார்ப்பதற்கும் கேட்பதற்குமான ஆறு கண்கள், ஆறு காதுகளுடன் மூன்று தலை கொண்ட அணியாக நாங்கள் மூவரும் உருவானோம்.

C:\Users\Chandraguru\Pictures\Martin Luther King Jr\91k4CwUGpOL.jpg

எங்களுடைய பயணத்திற்கான பெரும்பாலான செலவுகளுக்கான  மானியத்தை அமெரிக்க நண்பர்கள் சேவைக் குழு மூலமாக கிறிஸ்டோபர் ரெனால்ட்ஸ் அறக்கட்டளை வழங்கியது. தெற்கு கிறிஸ்தவ தலைமைத்துவ மாநாடு, மாண்ட்கோமெரி மேம்பாட்டுக் கழகம் ஆகியவையும் தங்கள் உதவியை எங்களுக்கு வழங்கின. எங்கள் வருகைக்கான அழைப்பை அதிகாரப்பூர்வமாக அரசு சார்ந்த வழிமுறைகள் மூலமாக இந்தியாவில் உள்ள காந்தி நினைவு அறக்கட்டளை வழங்கியிருந்தது.

நியூயார்க்கிலிருந்து 1959 பிப்ரவரி 3 நள்ளிரவுக்குச் சற்று முன்பாக நாங்கள் விமானத்தில் கிளம்பினோம். இடையில் பாரிஸில் ரெட்டிக்கின் பழைய நண்பரான ரிச்சர்ட் ரைட்டுடன் தங்கினோம். நீக்ரோக்கள் குறித்த ஐரோப்பிய அணுகுமுறைகள் குறித்த தகவல்களை அவர் புதுப்பித்துத் தந்ததோடு, சிறந்த பிரெஞ்சு சமையலின் சுவையையும் வழங்கினார்.

மூடுபனி காரணமாக சுவிட்சர்லாந்தில் இணைப்பு விமானத்தைத் தவற விட்டுவிட்டோம். சுற்றுவழிப் பாதையில் பயணத்தை மேற்கொண்டு, இரண்டு நாட்கள் தாமதமாக இந்தியாவை வந்தடைந்தோம். பிப்ரவரி 10 அன்று பம்பாயில் இறங்கியதிலிருந்து, மார்ச் 10 அன்று புதுதில்லி விமான நிலையத்தில் நாங்கள் விடைபெற்றுக் கொண்ட வரையிலும் இருந்த காலம் ​​எங்கள் வாழ்க்கையில் கிடைத்த மிகவும் செறிவான, தெளிவுறுத்தும் அனுபவங்களில் ஒன்றாக இருந்தது. சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்த போதிலும், சில முக்கியமான நிகழ்வுகளை மட்டுமே நான் இங்கே தொட்டுக் காட்டியுள்ளேன்.

இந்தியாவில் எங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது என்பதை முதலில் சொல்லிவிட வேண்டும். அங்கிருந்த மக்கள் எங்களுக்கு கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிகத் தாராளமான விருந்தோம்பலைக் காட்டினர். பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், பல்வேறு இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் உள்ளிட்டு துறவி ஒருவரும்கூட எங்களை அன்போடு வரவேற்றனர்.

C:\Users\Chandraguru\Pictures\Martin Luther King Jr\unnamed.jpg
Image Source: artsandculture.google.com

எங்களுடைய படங்கள் அடிக்கடி செய்தித்தாள்களில் இடம் பெற்றிருந்ததால், பொது இடங்களில், பொதுக் கூட்டங்களில் குழுமியிருந்த கூட்டத்தினர் எங்களை எளிதாக அடையாளம் கண்டு கொண்டனர். எப்போதாவது பெருநகரங்களில் காலை நடைப்பயணத்தை மேற்கொண்ட போது, மிகவும் எதிர்பாராத இடங்களில் என்னை எதிர்கொள்கின்றவர்களில் யாராவது ஒருவர் என்னிடம் ‘நீங்கள் மார்ட்டின் லூதர் கிங் தானே?” என்று கேட்டார்கள்.

கிட்டத்தட்ட இந்தியாவில் இருந்த அனைத்து கதவுகளும் எங்களுக்காகத் திறந்தே இருந்தன. வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் எங்களுக்கு வந்த நூற்றுக்கணக்கான அழைப்புகளை ஏற்க முடியாத நிலையே இருந்தது. அவர்கள் எங்களைத் தங்களுடைய சகோதரர்களாகக் கருதுகின்ற வகையில்  எங்களுடைய தோலின் நிறம் மிகப் பெரிய சொத்தாக அமைந்திருந்தது. இத்தகைய சகோதரத்துவத்தின் வலுவான பிணைப்பே இனவாதத்தையும், ஏகாதிபத்தியத்தையும் தூக்கி எறிவதற்காக அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்த சிறுபான்மை, காலனித்துவ மக்கள் போராடுவதற்கான பொதுவான காரணமாக இருந்தது.

நீண்ட உரையாடல்கள், ஏராளமான கலந்துரையாடல் அமர்வுகள் என்று  ஆயிரக்கணக்கான இந்திய மக்களுடன் எங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தியா முழுவதிலும் பல்கலைக்கழகத்தில் இருந்த குழுவினரிடமும், பொதுக் கூட்டங்களிலும் பேசினேன். இனப் பிரச்சனை குறித்து இந்திய மக்களிடம் இருக்கின்ற மிகுந்த ஆர்வம் காரணமாக பெரும்பாலும் நான் கலந்து கொண்ட கூட்டங்கள் நிரம்பி வழிந்தன. உரைபெயர்ப்பாளர்கள் எப்போதாவது பயன்படுத்தப்பட்டனர். பெரும்பாலும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய பார்வையாளர்களிடமே பேசினேன்.

இந்திய மக்கள் நீக்ரோ ஆன்மீகப் பாடல்களைக் கேட்பதற்கு மிகவும் விருப்பமுடையவர்களாக இருந்தனர். எனவே நான் சொற்பொழிவாற்றிய பிறகு  கோரெட்டா அந்தப் பாடல்களைப் பாடி முடித்தார். ஆட்டோகிராப் கேட்பவர்கள் அமெரிக்காவில் மட்டும் இருக்கவில்லை என்பதை அங்கே கண்டறிந்தோம். பொதுக்கூட்டங்களில் பேசி விட்டு கிராமங்களுக்குச் சென்ற போது ஆட்டோகிராப் கேட்பவர்களால் முற்றுகையிடப்பட்டோம். விமானங்களில் பயணம் செய்கின்ற போதுகூட, காக்பிட் அறைக்குள்ளிருந்து எங்களுடைய கேபினுக்குள் வந்து விமானிகள் ஆட்டோகிராஃப் கேட்டுப் பெற்றனர்.

அங்கே தங்கியிருந்த காலம் முழுவதும் எங்களைப் பற்றி பத்திரிகைகளில் நல்ல முறையில் செய்திகள் வெளியாகின. இந்திய பத்திரிகைகளுக்கு நன்றி. ஏற்கனவே மாண்ட்கோமெரி பேருந்து புறக்கணிப்பு குறித்து அங்கே நன்கு அறியப்பட்டிருந்தது. அமெரிக்காவில் இருந்த பெரும்பாலான பத்திரிகைகளைவிட சிறந்த முறையில் இந்திய பத்திரிகைகள் 381 நாட்கள் நடைபெற்ற பேருந்து வேலைநிறுத்தம் தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து வழங்கி வந்திருந்தன. 1956ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று பேருந்து ஒருங்கிணைப்பை ஏற்படுத்தித் தந்த அந்த நாளில் நமது வரலாற்றின் அந்த அத்தியாயம் முடிந்தது போய் விட்டதை படித்து அறிந்திராத அமெரிக்க சக குடிமக்களில் சிலர் என்னிடம் இப்போதும் கூட அவ்வப்போது பேருந்து புறக்கணிப்பு எவ்வாறு  போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்பதை என்னால் கேட்க முடிகிறது.

C:\Users\Chandraguru\Pictures\Martin Luther King Jr\montgomery-bus-boycott-600-600x450.jpg
Image Source: Timetoast.com

டெல்லி, கல்கத்தா, மெட்ராஸ், பம்பாய் என்று அனைத்து பெரிய நகரங்களிலும் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புகளில் நாங்கள் கலந்து கொண்டோம். நாங்கள் சென்ற எல்லா இடங்களிலும் பத்திரிகையாளர்களிடம் பேசினோம். அவர்கள் மிகவும் கூர்மையான கேள்விகளைக் கேட்டார்கள். அவை சில சமயங்களில் நமக்கு எதிரானவையாகத் தோன்றினாலும், அதுதான் செய்தியை  வெளிக்கொணர்வதற்கான வழியாக அவர்களிடம் இருந்தது. செய்தி சேகரிப்பதில் அவர்கள் மிகவும் நேர்மையாக இருந்தார்கள். அமெரிக்காவிலும், உலகின் பிற பகுதிகளிலும் நடந்து கொண்டிருப்பவை குறித்து அற்புதமான ஆற்றலுடன் அவர்களுடைய தலையங்கங்கள் எழுதப்பட்டிருந்தன.

தனிப்பட்ட முறையில் அந்தப் பயணம் என்னிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்தியின் மண்ணில் இருந்தது, அவரது மகன், பேரன்கள் மற்றும் பிற உறவினர்களுடன் பேசியது, அவருடைய நெருங்கிய தோழர்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது, அவரது ஆசிரமத்தைப் பார்வையிட்டது, அவருக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த எண்ணற்ற நினைவுச் சின்னங்களைப் பார்த்தது, இறுதியாக ராஜ்காட்டில் அவரது சாம்பல் அடங்கிய நினைவிடத்தில் மாலை அணிவித்தது என்று அனைத்தும் அருமையாக இருந்தன.

வன்முறையற்ற எதிர்ப்பு சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்திருக்கும் ஆற்றல் மிக்க ஆயுதமாக இருப்பதை முன்பைவிட இன்னும் கூடுதலாக உறுதியுடன் நம்பியவனாகவே இந்தியாவை விட்டு நான் வெளியேறினேன். அகிம்சை பிரச்சாரத்தின் அற்புதமான தீர்வுகளைப் பார்ப்பதே அற்புதமான விஷயம். வன்முறைப் பிரச்சாரங்களைப் பொதுவாகப் பின்தொடர்ந்து வருகின்ற வெறுப்பு மற்றும் கசப்பு உணர்வுகள் இந்தியாவில் எங்குமே காணப்படவில்லை. இன்று காமன்வெல்த் நாடுகளுக்குள் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் மக்களிடையே சமத்துவத்தின் அடிப்படையிலான பரஸ்பர நட்பு இருக்கின்றது. எந்தவொரு எதிர்ப்புமின்றி உடன்படுதல் தார்மீக, ஆன்மீக தற்கொலைக்கே வழிவகுக்கும். வன்முறையானது உயிர் பிழைத்தவர்களிடம் கசப்புணர்விற்கும், அழித்தவர்களிடம் மிருகத்தனத்திற்குமே வழிவகுத்துத் தருகின்றது. ஆனால் அகிம்சையோ மீட்சிக்கும், நேசிக்கின்ற சமூகத்தின் உருவாக்கத்திற்கும் வழிவகுத்துத் தருவதாக இருக்கிறது.

காந்தியின் ஆன்மா இந்தியாவில் இன்றும் மிகவும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. தேசத்தின் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் போது நடந்த நிகழ்வுகளை நினைவில் கொண்டிருக்கின்ற காந்தியின் சீடர்களில் சிலர், தங்களைச் சுற்றிலும் பார்க்கும்போது ​​மகாத்மாவிற்கு அருகே நெருங்கி வரக் கூடிய யாரையும் தங்களால் காண முடியவில்லை என்ற அவநம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் இந்திய வரலாற்றில் காந்தி மட்டுமே மிகப் பெரிய ஆளுமையாக இருக்கவில்லை என்பதையும், அவருடைய செல்வாக்கு இன்றைய வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும், பொதுக் கொள்கைகளிலும் உணரப்படுவதையும் எந்தவொரு பார்வையாளராலும் நிச்சயம் கூற முடியும்.

C:\Users\Chandraguru\Pictures\Martin Luther King Jr\5c3f4b50524147223f2c3846.jpg
Image Source: Insider.com

இந்தியாவால் ஒருபோதும் காந்தியை மறக்க முடியாது. எடுத்துக்காட்டாக தேசத் தந்தை இறந்தவுடன் சுமார் 13 கோடி டாலர்களை காந்தி நினைவு அறக்கட்டளை (காந்தி ஸ்மாரக் நிதி என்றும் அழைக்கப்படுகிறது) வசூலித்திருந்தது. தனிநபர் ஒருவரின் நினைவைப் போற்றுவதற்காக உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய, தன்னிச்சையான, வெகுஜனப் பங்களிப்பாக அந்தப் பணம் பெறப்பட்டிருந்தது. அந்த நிதியைக் கொண்டு அரசு மற்றும் பிற நிறுவனங்களின் ஆதரவுடன் காந்திய தத்துவத்தின் பரவல், மேம்பாடு, அவரது ஆக்கபூர்வமான திட்டங்களைச் செயல்படுத்துதல், நூலகங்களை நிறுவுதல், காந்தியின் வாழ்வு குறித்த படைப்புகளை வெளியிடுவது போன்றவை செய்யப்பட்டு வருகின்றன. எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும் வருங்கால சந்ததியினர் காந்தியிடமிருந்து தப்பவே முடியாது. எந்தவொரு அளவுகோலை எடுத்துக் கொண்டாலும், உலக வரலாற்றிலே இருக்கின்ற பெரிய மனிதர்கள் சிலரில் ஒருவராக காந்தி நிச்சயம் இருக்கின்றார்.

காந்தியர்கள் முழுமனதுடன் உளந்திறந்து எங்களை ஏற்றுக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். மாண்ட்கோமெரியில் நாம் மேற்கொண்ட அகிம்சை எதிர்ப்புக் கொள்கையுடனான பரிசோதனையை அவர்கள் பாராட்டினர். அவர்கள் மேற்கத்திய நாகரிகத்தில் அகிம்சையின் பயன்பாட்டிற்கான சாத்தியக்கூறுகளுக்கு நமது போராட்டம் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதாக கருதுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை நன்கு திட்டமிடப்பட்டு, செயலில் நேர்மறையாக இருக்கும்போது, அகிம்சை கொண்ட எதிர்ப்பு சர்வாதிகார ஆட்சிகளின் கீழும் திறம்படவே செயல்படும் என்பதையே அது எனக்குத் தெளிவுறுத்தியது.

இந்த விஷயம் குறித்து இந்தியாவில் பயின்று வருகின்ற ஆப்பிரிக்க மாணவர் குழுக்களுடன் சிறிது நேரம் வாதிட்டோம். தங்களுடைய எதிரிகளின் மனசாட்சியில் தங்களுக்குச் சாதகமான கூட்டாளியை எதிர்ப்பாளர்கள் கொண்டிருக்கும் சூழலில் மட்டுமே அகிம்சை வழியிலான எதிர்ப்பால் செயல்பட முடியும் என்று அந்த மாணவர்கள் உணர்ந்திருந்தனர். அமைதியான, செயலற்ற எதிர்ப்பை அவர்கள் பலரையும் போல எதிர்ப்பற்ற தன்மையுடன் குழப்பிக் கொண்டிருப்பதை விரைவிலேயே எங்களால் கண்டறிய முடிந்தது. அது முற்றிலும் தவறு.  உண்மையான அகிம்சையுடனான எதிர்ப்பு என்பது தீயசக்தியிடம் தன்னைச் சமர்ப்பித்துக் கொள்வது அல்ல. அது அன்பின் ஆற்றல் கொண்டு தீமையைத் தைரியமாக எதிர்கொள்வதாகும். வன்முறையை நிகழ்த்துபவராக இருப்பதைவிட வன்முறையை எதிர்கொள்பவராக இருப்பது நல்லது. ஏனெனில் வன்முறையை நிகழ்த்துவதன் மூலம் வன்முறை, கசப்புணர்வு ஆகியவை ஊதிப் பெருக்கப்படுகின்றன. ஆனால் எதிராளியிடம் அவமான உணர்வை வன்முறையை எதிர்கொள்பவர் உருவாக்கக்கூடும் என்பதால், அதன் மூலம் உருமாற்றமும், மனப்பூர்வமான மாற்றமும் ஏற்படலாம்.

அகிம்சை மூலமான எதிர்ப்பு அன்பிற்கான அழைப்பை விடுக்கிறது என்றாலும், அது உணர்வுப்பூர்வமான அன்பாக இருப்பதில்லை. தவறைச் சரிசெய்து கொள்வதற்கான கூட்டு நடவடிக்கையாக தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள, தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதன் மூலம் மிகவும் உறுதியுடன்  செலுத்தப்படுகின்ற அன்பாகவே அது இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய சுதந்திரப் போராட்டத்தின் போது அடிக்கடி வன்முறைக்குத் திரும்புவதற்கான காரணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது இருந்தாலும் காந்தியால் முதன்முதலாக ஆப்பிரிக்காவில் நிரூபிக்கப்பட்ட வழியிலே இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சுதந்திரத்திற்கான, மனித மாண்பிற்கான போர் நடத்தப்படும் என்றால், அது இந்த உலகில் மிகவும் சாதகமான விளைவை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதே என்னிடம் இருக்கின்ற உறுதியான நம்பிக்கையாகும்.

இந்தியா பரந்த பிரச்சனைகளைக் கொண்ட மிகப் பரந்த நாடு. வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும் மிக நீண்ட தூரங்களுக்கு நாங்கள் பறந்தோம்; குறுகிய தூரங்களுக்கு ரயில்களையும், செல்லக்கூடியதாக இல்லாத இடங்களுக்கு ஜீப் போன்ற வாகனங்களையும் பயன்படுத்தினோம்.

அமெரிக்காவின் மூன்றில் ஒரு பங்கு அளவிலான நாடாக இந்தியா இருந்தாலும், ஏறக்குறைய அமெரிக்காவைப் போல மூன்று மடங்கு மக்களை அது கொண்டுள்ளது. சாலைகள், நகர வீதிகள், சதுக்கங்கள், கிராமங்கள் என்று நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் மிகவும் நெருக்கமான மனிதநேயத்தை நாங்கள் கண்டோம்.

C:\Users\Chandraguru\Pictures\Martin Luther King Jr\trip_to_india_map r2.jpg
Image Source: Minervasperch.com

மக்களில் பெரும்பாலானோர் ஏழைகளாக, மிகவும் மோசமான ஆடைகளையே அணிந்திருந்தனர். ஒரு நபரின் சராசரி ஆண்டு வருமானம் 70 டாலருக்கும் குறைவு என்றாலும், அவர்கள் அணிந்திருந்த தலைப்பாகைகளும், கால்சட்டைக்குப் பதிலாக தளர்வாக அணிந்திருந்த வேட்டிகளும், பெண்கள் அணிந்திருந்த புடவைகளும் வண்ணமயமாக மிகவும் அழகாக இருந்தன. இந்தியர்களில் ஒரு பகுதியினர் பூர்வீக ஆடைகளையும், மற்றொரு பகுதியினர் மேற்கத்திய ஆடைகளையும் அணிகின்றனர்.

அமெரிக்காவில் வீடு குறித்த பிரச்சனை பெரிய அளவிலே இருப்பதாக நாம் கருதி வருகிறோம். ஆனால் இந்தியாவில் பம்பாய் நகரில், ஒவ்வொரு இரவிலும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளுக்கு வெளியிலேயே தூங்குகிறார்கள். பெரும்பாலும் யாரையும் சார்ந்திராதவர்களாக, வேலையில்லாதவர்களாக அல்லது ஓரளவிற்கு வேலை செய்து வரும் ஆண்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள். தங்கள் படுக்கையைத் தங்களுடனே காலாட்படையினரைப் போல எடுத்துச் செல்லும் அவர்கள், ஒவ்வொரு இரவிலும் வேறு யாரும் இல்லாத இடத்தில் – நடைபாதையில், ரயில் நிலையத்தில் அல்லது இரவில் மூடப்பட்டிருக்கின்ற கடையின் நுழைவாயிலில் – அதனைப் போட்டு படுத்துக் கொள்கிறார்கள்.

உணவுப் பற்றாக்குறை மிகவும் அதிகமாக உள்ளது. ஒரு நாளைக்கு நாம் பெறுகின்ற மூன்றுவேளை முழுஉணவில் 30%க்கும் குறைவானதையே அங்குள்ள மக்கள் பெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1930களின் பெருமந்தத்தின் போது நமது ​​தேசத்தின் மூன்றில் ஒரு பகுதியினர் வீடற்றவர்களாக, மோசமான உடையணிந்தவர்களாக, மோசமான உணவைப் பெறுபவர்களாக இருப்பதாக நாம் பேசி வந்திருக்கிறோம். அந்தச் செய்தியில் உள்ள மூன்றில் ஒரு பங்கு என்பதை இந்தியாவைப் பொறுத்தவரை மூன்றில் இரண்டு பங்கு என்று சொன்னால் அது மிகவும் சரியாகவே இருக்கும்.

வேலையின்மை எந்த அளவிற்கு அதிகமாக இருக்கின்றதோ, அந்த அளவிற்கு வேலைவாய்ப்பின்மையும் அதிகமாகவே இருக்கின்றது. இந்திய மக்களில் எழுபது சதவீதம் பேர் விவசாயத் தொழிலாளர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். பருவகால ஏற்ற இறக்கங்கள், இயற்கை அன்னையின் நிச்சயமற்ற தன்மைகளால் அவர்களில் பெரும்பாலானோர் ஆண்டுக்கு 200 நாட்களுக்கும் குறைவாகவே  விவசாய வேலைகளைச் செய்து வருகிறார்கள். வேலை எதுவுமற்ற ஆண்கள் நகர வீதிகளிலே சுற்றித் திரிகிறார்கள்.

C:\Users\Chandraguru\Pictures\Martin Luther King Jr\drought.jpg
Image Source: The Print

இந்தியாவின் வறுமையிலிருந்து பெரும் நோய்கள் உருவாகின்ற போதிலும், மிகவும் வித்தியாசமாக சிறிய அளவிலான குற்றங்களே அங்கே நிகழ்கின்றன. அற்புதமான ஆன்மீகத் தன்மையின் உறுதியான வெளிப்பாடு இந்திய மக்களிடம் இருக்கிறது. ஏழைகளாக, கும்பலுக்குள் பாதி பட்டினியாகக் கிடந்தாலும், அவர்கள் மற்றவர்களிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்வதில்லை. மிகவும் கனிவானவர்களாக அவர்கள் இருக்கின்றனர். நாம் செய்வதைப் போல அவர்கள் வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ ஒருவரையொருவர் இகழ்ந்து கொள்வதில்லை. இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் அவர்களுக்கிடையே நடந்த ஒரேயொரு சண்டையை மட்டுமே பார்த்தோம்.

வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு மாறாக ஆடம்பரமான வீடுகள், அசையாச் சொத்துகள்,  சிறந்த உடைகள், அதிகமாகச் சாப்பிட்டதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்திக் கொள்கின்ற பணக்கார இந்தியர்களும் இருக்கவே செய்கின்றனர். வெள்ளை, கறுப்பு, பழுப்பு நிறம் என்று உலகம் முழுவதிலும் முதலாளித்துவம் ஒரே மாதிரியாகவே நடந்து கொள்கிறது.

அங்கேயும் மக்களைப் பிரித்து வைக்கின்ற பிரச்சனை இருக்கின்றது. அமெரிக்காவில் நாம் இனம் என்று சொல்கிறோம்; அதையே இந்தியாவில் அவர்கள் சாதி என்று அழைக்கிறார்கள். இரண்டு இடங்களிலுமே சிலர் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இழிவானவர்களாக அவர்கள் பிறரால்  கருதப்படுகிறார்கள்.

நம்முடைய நாட்டில் இன வேறுபாட்டிற்கு எதிராக நாம் செய்திருப்பதை விட சாதி தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா அதிக அளவில் முன்னேற்றம் கண்டிருப்பதைக் கண்டு நாங்கள் ஆச்சரியமடைந்தோம், மகிழ்ச்சியடைந்தோம். இரண்டு நாடுகளும் இதுபோன்ற பாகுபாட்டிற்கு எதிரான கூட்டாட்சி சட்டங்களைக் கொண்டுள்ளன (நமது உச்சநீதிமன்றத்தின் முடிவை நமது நிலத்திற்கான சட்டம் என்று ஒப்புக் கொள்ளலாம்). ஆனால் அவ்வாறு கூறிய பிறகு, இந்தியா இதுகுறித்து என்ன செய்திருக்கிறது என்பதற்கும், மிகவும் ஒத்த இந்தப் பிரச்சனையில் நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதற்கும் பெரும் வேறுபாடுகள் இருப்பதை நாம் அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

சட்டத்திற்கு ஆதரவாக தார்மீக ஆற்றல் கொண்டவர்களாக இந்தியத் தலைவர்கள் இருக்கிறார்கள். பிரதமர் முதல் கிராம சபை உறுப்பினர்கள் வரையிலும் அனைவருமே தீண்டாமை என்பது தவறு என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்கள். ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருக்கின்ற நம்முடைய உயர் அதிகாரிகளில் சிலர் இனப்பாகுபாடு குறித்த தார்மீகத் தீர்ப்பை வழங்கிட மறுக்கின்றனர். தெற்கிலிருந்து சிலர் அந்தப் பாகுபாட்டைப் பாதுகாத்து பராமரிப்பதில் தங்களுக்கு இருக்கின்ற உறுதி குறித்து பகிரங்கமாகப் பெருமை பேசி வருகிறார்கள். அதைப் போன்ற செயல்பாடுகள் இந்தியாவில் நினைத்துப் பார்க்கவே முடியாதவையாக இருக்கின்றன.

சாதி அமைப்பிற்கு எதிராகப் பேசியது மட்டுமல்லாமல், அதற்கு எதிராகவும் காந்தி செயல்பட்டார். தீண்டத்தகாதவர்களை விலக்கி வைத்திருந்த கோவில்களுக்குள் அவர்களை காந்தி அரவணைத்து அழைத்துச் சென்றார். அதற்கு இணையாக இருக்கின்ற வகையிலே நீக்ரோ குழந்தை ஒன்றைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு லிட்டில் ராக் மத்திய உயர்நிலைப் பள்ளிக்கு அதிபர் ஐசனோவர் அழைத்துச் செல்ல வேண்டும். தீண்டத்தகாதவர்களை கடவுளின் குழந்தைகள் என்பதாக ‘ஹரிஜன்கள்’ என்று மறுபெயரிட்டு காந்தி அழைத்தார்.

C:\Users\Chandraguru\Pictures\Martin Luther King Jr\little-rock-nine-airborne-division-.jpg
Image Source: BBC.Co.UK

சமூகத்தில் ஹரிஜன்களுக்கு சமமான வாய்ப்பை வழங்குகின்ற திட்டத்தில் குறிப்பாக வேலை வாய்ப்புகள், கல்வி, வீட்டுவசதி போன்றவற்றை வழங்குவதில் அரசாங்கம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.  அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற இந்தியத் தலைவர்கள் தங்கள் நாட்டின் பிற பெரிய பிரச்சனைகள் குறித்து நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அவற்றை மிகுந்த தீரத்துடன் அவர்கள் கையாண்டு வருகிறார்கள்.

இரண்டு கருத்துகளுடன் நாடு பிளவுபட்டிருப்பது தெரிகிறது. சிலர் இந்தியா தன்னுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள விரைவில் மேற்கத்தியமயமாக்கப்பட்டு, நவீனமயமாக்கப்பட வேண்டும், அவநம்பிக்கையான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு வெளிநாட்டு மூலதனம், வெளிநாட்டுத் தொழில் ஆகியவை இந்தியாவிற்கு வரவழைக்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். மறுபுறத்தில் பெரும்பான்மையினராக உள்ளவர்கள் மேற்கத்தியமயமாக்கல்  தன்னுடன் சேர்த்து பொருள்முதல்வாதத்தின் தீமைகளையும், மிகக் கடுமையான போட்டி, மிகவும் மோசமான தனிமனிதவாதத்தையும் கொண்டு வந்து விடும் என்று கூறி வருகின்றனர். ‘யாங்கி டாலர்களைத் துரத்தினால் இந்தியா தன்னுடைய  ஆன்மாவை இழந்து விடும்; பெரிய இயந்திரங்கள் மூலமாகக் கிடைக்கின்ற வேலை ஒப்பீட்டளவில் மிகச்சில தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மட்டுமே உயர்த்தும். அதன் விளைவாக இடம்பெயர்ந்து விடக் கூடிய அதிக எண்ணிக்கையிலான மக்கள் இப்போது இருப்பதை விட மிக மோசமான நிலையில் இருப்பார்கள்’ என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

C:\Users\Chandraguru\Pictures\Martin Luther King Jr\Nehru on both.jpg
Image Source: Frontline – The Hindu

பிரதமர் நேரு அறிவார்ந்தவராகவும், அரசாங்கத்தை வழிநடத்துகின்ற நடைமுறைப் பொறுப்பை நன்கு அறிந்தவராகவும் இருக்கின்றார். இந்த இரண்டு தீவிரமான அணுகுமுறைகளுக்கு இடையில் ஒரு நடுத்தரப் போக்கை அவர் வழிநடத்தி வருகிறார். அவருடன் பேசிய போது, சிறிய அளவில் தொழில்மயமாக்கல் முற்றிலும் அவசியம் என்று தான் உணர்வதாகக் குறிப்பிட்டார். ‘பெரிய அல்லது கனரகத் தொழில்துறைகளே நாட்டிற்கு சில நல்ல விஷயங்களைச் செய்யக் கூடியவையாக இருக்கின்றன. அவற்றின் வளர்ச்சி குறித்து அரசு விழிப்புடன் இருந்தால், பெரும்பாலான ஆபத்துகளைத் தவிர்த்து விடலாம்’ என்றார்.

அதே சமயத்தில் முடிந்தவரை பொருளாதார சுய உதவி, தன்னாட்சி போன்றவை உள்ளூர் சமூகத்திற்குக் கிடைக்கும் என்பதால் வீடுகள் மற்றும் கிராமங்களில் நூற்பு, நெசவு போன்ற கைவினைத் தொழில்களை ஊக்குவிக்கின்ற, விரிவுபடுத்துகின்ற இயக்கத்திற்கும் நேரு ஆதரவு அளித்து வருகிறார்.

இந்தியாவில் இருந்து வருகின்ற மிகப் பெரிய இயக்கம் ஒன்றைப் பற்றி அமெரிக்காவில் கிட்டத்தட்ட எவருக்குமே தெரியவில்லை. அந்த இயக்கத்தின் மையமாக பூதான் என்றழைக்கப்படும் நிலச் சீர்திருத்தத்திற்கான பிரச்சாரம் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார, சமூக மாற்றத்தை அதிகாரத்தின் மூலமாக அல்லாமல் அனைவரின் இணக்கத்தின் மூலமாகத் தீர்த்துக் கொள்ளும் வகையிலே அந்த இயக்கம் இயங்கி வருகிறது. பூதான் இயக்கத்தினர் வினோபா பாவே, அமெரிக்க கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்ட அறிவுஜீவி ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோரால் வழிநடத்தப்படுகிறார்கள். தற்சார்பு கிராமங்களை உருவாக்குவதே அவர்களுடைய கொள்கையாக இருந்து வருகின்றது.

C:\Users\Chandraguru\Pictures\Martin Luther King Jr\1_wHtumc53eeQQ7lSWO49vmA.jpeg
Image Source: Dailyhunt

1. பெரிய அளவில் நிலம் வைத்திருக்கும் நில உரிமையாளர்களை நிலம் இல்லாத விவசாயிகளுக்கு தங்களிடம் உள்ள கொஞ்சம் நிலத்தை விட்டுக் கொடுக்கத் தூண்டுவது;

2.கிராமங்களின் பொதுவான கூட்டுறவு உரிமைக்காக தங்களுடைய தனிப்பட்ட உரிமையை விட்டுக் கொடுக்குமாறு சிறிய அளவில் நிலம் வைத்திருக்கின்ற நில உரிமையாளர்களைத் தூண்டுவது;

3. தங்களுடைய வேளாண் முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட ஓய்வு நேரத்தில் தங்கள் ஆடைகளுக்கான துணிகளைத் தயாரிக்கும் வகையில் நூற்பு, நெசவு வேலைகளைச் செய்வதற்கு விவசாயிகளையும், கிராமவாசிகளையும் ஊக்குவித்தல் போன்றவை அவர்களுடைய  திட்டத்திற்குள்  இருக்கின்றன.

வேலைவாய்ப்பு, உணவு, உடைகள் குறித்த  பிரச்சனைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் இருக்கும் என்பதால், கிராமங்கள் தமக்குத் தேவையான அனைத்தையும் கூட்டுறவு நடவடிக்கை மூலமாகச் செய்து கொள்ள முடியும் அல்லது மற்ற கிராமங்களிலிருந்து பண்டமாற்று அல்லது பரிமாற்றம் மூலமாக பெற்றுக் கொள்ள முடியும். அதன் மூலமாக, ஏறக்குறைய அனைத்து கிராமங்களும் தன்னிறைவைப் பெற முடியும். எனவே கிராமங்கள் கிராமப்புறங்களிலிருக்கின்ற மக்களை நகரச் சேரிகளில் குவித்து, நகர்ப்புறத்திற்கென்று இருந்து வருகின்ற தீமைகளால் துன்புறுத்தி வருகின்ற நகர்ப்புற மையங்களின் ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியும். இதையே பூதானியர்களும், பிற காந்தியர்களும் தங்களுடைய குறைந்தபட்ச வாதமாக முன்வைக்கின்றனர்.

மேற்கத்தியத்தியவர்களின் காதுகளில் இதுபோன்ற கருத்துக்கள் விசித்திரமாகவும், தொன்மையாகவும் ஒலிக்கின்றன. ஆனால் அமெரிக்கர்களாகிய நாம் எதிர்பார்த்ததை விட, இந்தியர்கள் ஏற்கனவே அதிக இலக்குகளை எட்டியுள்ளனர். எடுத்துக்காட்டாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பணக்கார நில உரிமையாளர்களால் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சிறு விவசாயிகளால் கூட்டுறவு மேலாண்மைக்கு வழங்கப்பட்டுள்ளன. மறுபுறம் அனைவரும் தீர்க்க முயற்சிக்கும் பிரச்சனைகளின் அளவிற்கேற்றவாறு அமைப்பும், இயக்கமும் இருக்க வேண்டும் என்று அமெரிக்காவில் நாம் கருதுவதைப் போல் அல்லாமல், பூதான் இயக்கத்தினர் தங்கள் இயக்கத்திற்கென்று அமைப்பை உருவாக்குவதில் இருந்து விலகி நிற்கிறார்கள்.

இந்திய அரசாங்கத்தின் ஐந்தாண்டுத் திட்டங்கள் அவற்றின் நோக்கங்களை அடைவதற்கான போதுமான வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை. மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் பதினைந்து  ஆண்டு காலப்பகுதியில் இரண்டரை கோடி புதிய வேலைகளை வழங்குகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு அறுபது லட்சம் ஆகும். இதன் பொருள் பதினைந்து ஆண்டுகளில், (இறந்தவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்களைத் தவிர்த்து) ஒன்றரை கோடி புதிய வேலைகளைத் தேடுகின்ற ஒன்பது கோடிப் பேர் இருப்பார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த திட்டமிடல் 100 சதவிகிதம் வெற்றிகரமாக நடந்தாலும், தீர்க்க முயற்சிக்கின்ற  பிரச்சனைகளின் வளர்ச்சி வேகத்திற்கு இணையாக அது நிச்சயம் இருக்காது.

அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதற்கு நம்மிடம் நிச்சயமான பதில் எதுவும் இல்லை. ஆனால் இந்தியாவிற்கு உதவி தேவை என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். வெளியில் இருந்து மூலதனம் மற்றும் தொழில்நுட்ப அறிவு இந்தியாவிற்கு கிடைக்க வேண்டும். அவ்வாறான தேவைகளுக்கான உதவிகளை நிபந்தனைகளை விதிக்காது வழங்குவதே அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் நலனுக்கானதாக இருக்கும்.

நாம் எதைச் செய்தாலும், நாட்டின் சுயநலத்திற்காக என்றில்லாமல், அதை சர்வதேச சகோதரத்துவ மனப்பான்மையுடன் செய்ய வேண்டும். ராஜதந்திர ரீதியாகப் பயனுள்ளதாக இருக்கும் என்றில்லாமல், அதைச் செய்வது தார்மீக ரீதியான கட்டாயம் என்பதாலேயே செய்ய வேண்டும். அதே சமயம், தன்னுடைய பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளும் போது தனது ஜனநாயகத்தை இந்தியாவால் தக்க வைத்துக் கொள்ள முடியுமென்றால், அது மேற்குலக நாடுகளுக்கு பயனளிப்பதாகவே இருக்கும்.

C:\Users\Chandraguru\Pictures\Martin Luther King Jr\MLK-quotes.jpg
Image Source: Pinterest

வலது அல்லது இடது என்று சர்வாதிகாரத்திடம் சரணடையாமல் ஏறக்குறைய நாற்பது கோடி மக்களைக் கொண்ட உலகின் பெரிய நாடுகளில் ஒன்று அனைவருக்கும் நல்லதொரு வாழ்க்கையை வழங்க முடியும் என்பதை   நிரூபிக்குமென்றால், அது ஜனநாயகத்திற்கான வரப்பிரசாதமாகவே இருக்கும். இன்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அமைதி, அகிம்சைக்கான மிகப்பெரிய ஆற்றல் மிக்க நாடாக இந்தியா உள்ளது. லட்சியவாதிகளும், அறிவுஜீவிகளும் மதிக்கப்படுகின்ற நிலமாக அது இன்னும் இருந்து வருகின்றது. இந்தியா தனது ஆன்மாவைப் பாதுகாத்துக் கொள்ள நாம் உதவ வேண்டும். அதன் மூலம் நம்முடைய ஆன்மாவை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

மூலம்: எபோனி இதழ் 1959 ஜுலை பக்கம் 84-92

https://kinginstitute.stanford.edu/king-papers/documents/my-trip-land-gandhi

தமிழில்: தா.சந்திரகுரு