விகாஸ் பிரகாஷ் ஜோஷி (Vikas Prakash Joshi) எழுதிய என் பெயர் சின்னமன் (My Name Is Cinnamon) - நூல் அறிமுகம் - https://bookday.in/

என் பெயர் சின்னமன் (My Name Is Cinnamon) – நூல் அறிமுகம்

என் பெயர் சின்னமன் (My Name Is Cinnamon) – நூல் அறிமுகம்

வேர்களைத் தேடி சின்னமன்!

– சித்தார்த்தன் சுந்தரம்

”எப்படிப் பார்த்தாலும் குடும்பம்தான்
நம் பழங்காலத்துக்கு இணைப்பாகவும்
எதிர்காலத்துக்குப் பாலமாகவும் இருக்கிறது”

என்கிற அலெக்ஸ் ஹேலியின் வரிகளைக் கொண்ட இறுதி அத்தியாயத்துடன் `என் பெயர் சின்னமன்’ என்கிற இந்த மொழியாக்க நூல் நிறைவடைகிறது.
விகாஸ் பிரகாஷ் ஜோஷியால் ஆங்கிலத்தில் `My Name is Cinnamon’ என்கிற பெயரில் எழுதப்பட்டு பல விருதுகளைப் பெற்ற நூலை தமிழில் ச. சுப்பாராவ் மிகவும் எளிய தமிழில் அருமையாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இந்த நூலானது சின்னமன் என்கிற சிறுவன் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவனுடைய இயற்பெயர் ரோஷன் ரிஷிகேஷ் பரஞ்சபே என்றும் சிறுவயதில் அவனுடைய பெற்றோர் அவனுக்கு சின்னமன் என செல்லப் பெயர் வைத்து விட்டார்கள் எனவும் இப்போது அந்தப் பெயர் தனக்குப் பிடிக்கவில்லை எனவும் ஒரு தன்னிலை விளக்கத்தோடு அவன் தனது கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறான். (இதன் பின்னணி: அவனுக்கு லவங்கப்பட்டைக்கான

ஆங்கிலப் பெயரை சரியாக உச்சரிக்கத் தெரியாததால் அதுவே அவனுக்கான `செல்லப் பெயராக’ ஞானஸ்நானம் (!) செய்யப்பட்டது). கணிதம் தவிர விளையாட்டு, பாட்டு, ஓவியம் வரைதல் என பல துறைகளில் திறமை வாய்ந்த சிறுவன் ரோஷன் என்கிற சின்னமன். அவனோடு பள்ளியில் படிப்பவர்கள் அவனைப் பார்த்து, `நீ ஒன்னோட அப்பா மாதிரியோ, அம்மா மாதிரியோ இல்லை. வேற மாதிரியா இருக்க’ எனச் சொல்லவும் அவனுக்குள் அது குறித்த சிந்தனைகள் மனதில் அலை மோத ஆரம்பித்தன. இதை அவன் பல முறை அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறான். அவனுக்கும் தான் தத்தெடுக்கப்பட்டக் குழந்தை என்று தெரியும். எனவே, அவன் தன்னுடைய உண்மையான பெற்றோர்களைப் பார்க்க ஆர்வமாக இருந்தான்.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு அவன், அம்மா, அப்பா அனைவரும் கொல்கத்தாவிற்கோ, ரத்னகிரிக்கோ செல்வது வழக்கம். இந்த முறை கொல்கத்தா செல்ல முடிவு செய்ய அவர்களின் ரயில் பயணம் ஆரம்பமாயிற்று. வழியில் தான் பார்த்த காட்சிகளையும், மனிதர்களையும், ரயிலின் உட்புறத்தையும் ஓவியங்களாக வரைந்து கொண்டே பயணிக்கிறான். கொல்கத்தாவில் பாட்டி வீட்டில் சித்தி, சித்தப்பா அவர்களுடைய குழந்தைகளும் விடுமுறைக்காக பெங்களூரிலிருந்து வந்திருக்க அவர்களுடன் கொல்கத்தாவை சுற்றிப்பார்ப்பதும், கொல்கத்தாவுக்கே உரித்தான பலகாரங்களைச் சுவைப்பதிலும் பொழுது கழிய மீண்டும் புனேக்குத் திரும்புகிறான்.

அவனுக்கு படிப்பில் நாட்டம் குறைய ஆரம்பித்தது…வகுப்பில் சரியாக கவனிப்பதில்லை என்று ஆசிரியர்களிடமிருந்து புகார்… தனக்கு வேண்டியதை அப்பா, அம்மா வாங்கித் தரமாட்டேன் என்கிறார்கள் இதுவே சொந்த அப்பா, அம்மாவாக இருந்தால் இப்படிச் செய்வார்களா என்கிற ஏக்கமும் ஆதங்கமும்… ஒரு நாள் திடீரென்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் பக்கத்திலிருக்கும் பூங்காவுக்குச் சென்று அது மூடப்படும் வரை அங்கிருந்து விட்டு அவனுக்குத் தெரிந்த காவலாளி அவனை வீட்டுக்குப் போகச் சொல்ல, வீடு வந்த அவனை அம்மா இறுக அணைத்துக் கொண்டார். இது அவன் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் மருத்துவர் சந்திப்பு, பரிசோதனை அதன் மூலம் தெரியவந்த திடுக்கிடும் உண்மைகள் என இந்நூல் விரிகிறது.

சின்னமனை தத்தெடுத்த அமைப்பிடம் கெஞ்சி, கூத்தாடி ஒருவழியாக அவனுடைய உண்மையான அப்பா, அம்மா விபரம் தெரியவர அவர்களைச் சந்திக்க குஜராத், மத்தியப் பிரதேசம் எல்லையில் இருக்கும் நந்தூர்பர் செல்ல முடிவெடுக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் பெரும்பாலனவர்கள் பழங்குடியின மக்கள். அங்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஒரு பெரிய பிரச்சனையாக இருப்பதை சின்னமன் கூகுளாண்டவர் மூலம் தெரிந்து கொள்கிறான். நந்தூர்பர் செல்லும் வழியில் ரத்னாபூரை சென்றடைந்து அங்கு தங்குகிறார்கள்.

அங்கு சென்று சிலரை சந்தித்து அவர்கள் மூலம் சிறு உணவகம் நடத்தி வரும் உண்மையான அம்மா அதிதியையும், அவர் மறுமணம் கொண்டவரையும் கண்டுபிடித்து அவர்களுடன் சில நாள்கள் தங்குவதன் மூலம் சின்னமனின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது. அவர்கள் அவனை (சின்னமன் அவர்களுக்கு மூன்றாவது குழந்தை) தத்துக் கொடுப்பதற்கான காரணத்தையும், அவனுடைய உண்மையான அப்பா பழங்குடி மக்களின் பாடல்களை நன்கு பாடக்கூடியவர் என்பதையும் அவர் எப்படி இறந்தார், சின்னமனின் அண்ணாவும், அக்காவும் என்ன செய்கிறார்கள் என்பதையும் அதிதி அனைவரிடமும் கூறுகிறார்.

அவர்கள் அங்கிருக்கும் நாள்களில் அவனுடைய பதினான்காவது பிறந்தநாள் சற்றே விமர்சையாகக் கொண்டாடப்படுவது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதன்பின் அங்கிருந்து விடைபெறும் நாள் வரும்போது சின்னமனுக்கு மனதில் வருத்தம் இருந்தாலும் அதிதியும் அவனும் பரஸ்பரம் அவரவர் வீடுகளுக்கு எப்போது வேண்டுமென்றாலும் வந்து செல்லலாம் என கூறி விடைபெற்றுக் கொள்கிறார்கள்.

இந்நாவல் சிறார், பதின்ம வயதினருக்கான இலக்கியம் இதுவரையிலும் தொடாத ஒரு கடினமான விஷயத்தைத் தொடுகிறது. அது உஷர் சிண்ட்ரோம் (Usher Syndrome) ஆகும். இது செவித்திறனையும் கண்பார்வையையும் படிப்படியாகக் குறைத்துவிடும் ஓர் அபூர்வமான மரபணு நோய் ஆகும். தற்சமயம் இதைக் குணப்படுத்துவதற்கான மருத்துவம் இல்லை.

எனவே, சின்மனின் செவித் திறனும், பார்வை இழப்பும் ஏற்படும் முன்னர் அவன் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அவனுடைய உண்மையான பெற்றோரைச் சந்திக்க வைக்க தத்தெடுத்தப் பெற்றோர்களான பரஞ்சபே பல வழிகளில் முயன்று அதை நிறைவேற்றி வைக்கின்றனர். ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது சின்னமனுக்குத் தெரியாது. அவனிடம் இதை எப்போது சொல்லப் போகிறீர்கள் என அதிதியின் கணவர் சந்தோஷ் கேட்க அதற்கு சின்னமனின் அப்பா, `சரியான நேரம் வரும் போது சொல்வோம்’ என்கிறார். இதை வாசிக்கும் போது மனம் நெகிழ்ந்து போகிறது.

இந்த நாவலின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பெரும்பாலான வாசகர்கள் அறியாத மரபணு குறைபாட்டோடு நிலப்பரப்புகள், உணவு வகைகள் பற்றி எழுதியிருப்பதன் மூலம் அவை குறித்து தெரிந்து கொள்ள முடிகிறது. அதோடு சிறுவர்கள் செய்யும் குறும்புகளை நகைச்சுவையோடு விவரித்திருப்பது வாசிப்பவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நூலின் தகவல்கள் : 

நூலின் பெயர்: என் பெயர் சின்னமன்
ஆசிரியர்: விகாஸ் பிரகாஷ் ஜோஷி
தமிழில் : ச. சுப்பாராவ்
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (பாரதி புத்தகாலயம்)
விலை : ரூ.170
நூலைப் பெற :  https://thamizhbooks.com/product/en-peyar-chinnamon/

நூலோ அறிமுகம் எழுதியவர் :

– சித்தார்த்தன் சுந்தரம்

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *