புத்தகம் : 1729
ஆசிரியர் : ஆயிஷா நடராசன்
பதிப்பகம் : Books for children
நூல் அறிமுகம் : S. ஹரி கிருஷ்ணன் M.tech.,(Ph.D)
தமிழ் சமூகத்தில் பொதுவாக கணக்கு என்பது குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்கும். எனது சிறு பிராயத்தில் என் பாட்டனார் அவர் காலத்தில் படித்த கணக்குகளை என்னிடம் அவ்வப்பொழுது கேட்பார். உதாரணமாக ‘காலறிக்கா காசுக்கு நாலு வாழைக்காய் என்றால் காசுக்கு எத்தனை வாழைக்காய்?’ என்று கேட்பார். விழிப்பேன். முதலில் காலறிக்கா என்றால் என்னவென்று கூறுங்கள் என்பேன். பிறகு அறிக்கா, தம்படி என்றெல்லாம் அவர்கள் காலத்தில் மேற்கொண்ட அளவீடுகளை கூறுவார். ஆக நம் தாத்தா பாட்டிகள் மனக்கணக்கு, புதிர், விடுகதை என்று அறிவுக்கு தீனி போட்டார்கள்.
இலக்கியத்தில் எப்படி நாம் முன்னோடியோ அவ்வாறே கணிதத்திலும் நாம் தான் முன்னோடி.
எப்படி?…
இருபதும் மூன்றும் இருபதும் ஓராறும்
ஒரு பதின் மேல் எட்டொழிந்து என்றும் நிரூபித்த
மூன்றும் அதன் பின்னைந்தும் ஆகும் முகிழ் நகையாய்
ஆன்ற அறுபதெவை?
ஆம், சோழ வள நாட்டைச்சேர்ந்த கொறுக்கையூர் காரி நாயனார் எழுதியது. 1881ல் பெஷாவர்க்கு அருகே உள்ள பாக்ஷாலியில் ஒரு விவசாயி உழுத பொழுது மண்ணிலிருந்து கிடைத்த பழங்கால மரப்பெட்டியில், இந்தியாவின் மிகப்பழமையான கணித நூல் பாக்சாலி இருந்தது. அதில் ஏறக்குறைய ஒரு லட்சம் கணக்குகள் உள்ளன. அதில் வரும் முதல் கணக்குத்தான் மேற்குறிப்பிட்ட வெண்பா. தமிழ்தான் நமது கணக்கதிகாரத்தில் உள்ள முதல் செய்யுள்.
ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. இது போன்ற பல அரிய தகவல்கள் இன்னூலில் நிறைய காணலாம்.
இந்த புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பும் 3,5,7,9,11,13,17… என்று வருகின்றது. அதற்கான காரணமும் படித்து அறிந்து கொள்ளலாம்.
இந்நாவலில் கதாபாத்திரங்களை சிறார்களைக்கொண்டு கதை அமைத்திருக்கிறார். அந்த சிறுவர்கள் 1729 டாட் காம் எனும் வலை தளத்தை நடத்துகிறார்கள். அதில் பல கணிதப்புதிர்களை வெளியிடுகிறார்கள். தற்பொழுது எண்களைக் கொண்டு கட்டம் நிறப்பும் சுடோக்கோவை மீறி உலகில் அனைவரின் கவனமும் இவர்கள் பக்கம் திரும்புகின்றது. மாணவர்கள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை கணிதப்பித்தர் ஆக்கிய விஷயம் 1729டாட் காம்.
ஆனால் இதை நடத்தும் இந்த சிறுவர்கள் ஒவ்வொரு விதமான புற்று நோய் தாக்கத்தினால் வீட்டில் கூட வைத்து கவனிக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டவர்கள். உயிருடன் இருக்கும் பொழுதே செத்துப்போகும் ஈனர்கள் அல்ல நாங்கள் என்கின்றனர். அதாவது கணித மேதை ராமானுஜன் அவர்களுக்கு உண்டான உலகறியாத புற்று நோய் போன்ற பாதிப்பில் உள்ள இந்த சிறார்கள் கணிதத்தில் அசாத்திய திறமை கொண்டுள்ளனர். பல கணித வரலாற்று நிகழ்வுகளையும் கலந்துரையாடலில் டையோ பாண்டஸ், டேனியல் டி பர்னாலி போன்ற கணித மேதைகளை குறித்தும் பேசுகின்றனர்.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏதோ ஒரு அசாத்திய திறமையுடன் உள்ளார்கள் என்று படித்துள்ளேன். ஆனால் புற்று நோயால் பாதிக்கப்பட்டு தனது இறுதி நாட்களை பற்றின கவலையில்லாமல் கணிதத்திலேயே ஒன்றி நம்மையும் லயிக்க வைத்து விடுகிறார்கள்.
நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பல எண்களின் மகிமைகளை கலந்துரையாடலின் பொழுது மிக சுவாரஸ்யமான முறையில் கூறுகின்றனர்.
இந்திய கணிதத்தின் அஸ்திவாரம் கணக்கதிகாரம் என்றால் அதன் தூண்களாக ஆரிய பட்டா, வராஹ மிஹிரா, பிரம்ம குப்தா, மகா வீரர், பாஸ்கரா, மாதவா என பெயர்கள் நீள்கிறது. லீலாவதி நூலில் அறிமுகம் செய்த சுழியம் எனும் பூஜ்ஜியமும் நம் இந்திய தேசத்தை தலை நிமிர வைத்தது. அப்படிப்பட்ட கணிதத்தின் முகவரிதான் 1729.
1729 எண் குறித்து நான் கூறுவதைவிட புத்தகம் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
அறிவியல் நாவல்கள் என்றால் அது ஆங்கிலத்தில் தான் இருக்கும் என்பதை உடைத்து நம் சமகாலத்தில் சுஜாதா அவர்கள் என் இனிய இயந்திரா , மீண்டும் ஜீனோ போன்ற படைப்புகள் தமிழ் அறிவியல் இலக்கியத்திற்கு புத்துயிர்ப்பு அளித்தது. அவரைத் தொடர்ந்து நமது இந்நூல் ஆசிரியர் திரு.ஆயிஷா நடராசன் அவர்கள் தமிழில் அறிவியல் நாவல்கள் நிறைய எழுதி வருகிறார். இவர் சிறுவர் இலக்கியத்திற்கான சாஹித்திய அகாடமி விருது பெற்றுள்ளார். இவரின் கணிதத்தின் கதை எனும் நூலிற்கு தமிழ் நாடு அரசு இலக்கிய விருதும் பெற்றுள்ளார்.
ஜனவரி 2019ல் நடந்த சென்னை புத்தக காட்சியில் வெளியிட்டு அதிகம் விற்பனையான 1729 எனும் இந்நூல், நம் தமிழ் சமூகத்தில் அறிவியல் புனைவுகளில் ஒரு மைல் கல் என்றே கூறுவேன்.
தமிழில் நமக்கு கிடைக்கும் இது போன்ற அறிவியல் புனைவை நாம் கொண்டாடாமல் யார் கொண்டாடுவார். கணித மேதை ராமானுஜன் சுயசரிதையை எங்கிருந்தோ வந்த Robert Kanigel அவர்கள் The man who infinity எனும் பெயரில் எழுதி பெயர்வாங்கிப் போனாரே அப்படியா…
உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு இந்த நூலை வாங்கிக் கொடுங்கள். கணிதத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துங்கள்.
இந்நூலின் முகவுரையில் ச.தமிழ்ச்செல்வன் கூறியது போல் இந்நூல் எண்களாலும் உணர்வுகளாலும் கட்டப்பட்ட ஓர் காவியம்-1729 என்றால் அது மிகையில்லை.
நன்றி.