மு.நிரஞ்சனா எழுதிய "எனது சீரடி பயண அனுபவம்" கட்டுரை | சீரடி சாய்பாபா (Shirdi Sai Baba Article in Tamil) | www.bookday.in

எனது சீரடி பயண அனுபவம் – மு.நிரஞ்சனா

எனது சீரடி பயண அனுபவம்

– மு.நிரஞ்சனா

நான் இந்தக் கட்டுரையில் என்னுடைய சீரடி பயண அனுபவத்தைப் பற்றி எழுதுகிறேன். இதுவரை பயணித்ததில் நான் செய்த முழுமையான ஒரு பயணம் என்று இதைத்தான் சொல்வேன். இந்தப் பயணம் எனக்குப் பல நினைவுகளையும் பாடங்களையும் கற்பித்தது.

சீரடி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சீரடியைச் சென்று அடைவதற்காக சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து நேரடியான தொடர்வண்டி உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்திருந்தோம். இரண்டு நாட்கள் பயணம் செய்து சீரடியைச் சென்றடைந்தோம். சீரடியில் பாபா கோவிலுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் நாங்கள் பதிவு செய்திருந்த தங்கும் விடுதி இருந்தது.

சீரடி என்னும் கிராமம், சாய்பாபா வாழ்ந்த இடமாகச் சொல்லப்படுகிறது. அவர் பல அதிசயங்களைச் சீரடியில் நிகழ்த்தியுள்ளார். அதைப் பற்றி நம்மால் ‘சாயி சத்சரிதம்’ என்னும் நூலில் படிக்க முடியும். அந்த வரலாறு வியப்பூட்டும் வகையில் இருக்கும். சீரடியில் சாய்பாபா வாழ்ந்த இடம், அவர் பயன்படுத்திய பொருட்கள் என அனைத்தும் பாதுகாப்பான முறையில் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் பார்க்கும்போது பாபா உயிரோடு சீரடியில் வாழ்ந்த காட்சிகள் கண் முன்னே விரிந்தன.

சாய்பாபாவுக்கு எந்த ஒரு மத அடையாளமும் இருக்கவில்லை. அவரை இந்து என்றும் சொல்ல முடியாது, இசுலாமியர் என்றும் சொல்ல முடியாது. அவர் இரண்டு மதங்களையும் ஏற்றவர். இன்றும் இந்துக்களும் இசுலாமியர்களும் அவரை வழிபடுகின்றனர். பாபாவின் நல்லிணக்க முயற்சிகளால் சீரடியில் இந்துக்களின் பண்டிகையான ‘ராமநவமி’யும், இசுலாமியர்களின் பண்டிகையான ‘சந்தனக்கூடு’ திருவிழாவும் ஒரே நாளில் எந்த விதமான சலசலப்பும் இன்றி ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. பாபாவின் செயல்களால் இந்துக்களின் நிறமான காவியும் இசுலாமியர்களின் நிறமான பச்சையும் இணைந்து ஒற்றுமையின் நிறமாக மாறியது.

என்னுடைய தந்தை இந்திய இராணுவத்தில் பணியாற்றுகிறார். அதனால் நாங்கள் குடும்பமாகப் பயணம் செய்தது மிகவும் குறைவு. அதனால் நாங்கள் அனைவரும் இந்தப் பயணத்திற்காக எதிர்பார்ப்புடன் இருந்தோம். இது நீண்ட பயணம் என்பதால் ஏற்பாடுகள் பல நாட்கள் முன்பாகவே தொடங்கிவிட்டன.

இந்தியாவில் ஓர் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்குச் செல்லும்போது நம்மால் பல மாற்றங்களை உணர முடியும். மக்கள் பேசும் மொழி ஒன்றாகவே இருந்தாலும் பேச்சுவழக்கு மாறுபடும். தென் தமிழகத்தில் இருந்து மராட்டியத்திற்குச் சென்ற என்னுடைய பயணத்தில் எத்தனை மாற்றங்களை நான் பார்த்தேன் என்று வார்த்தைகளில் விவரிக்க முடியாது. இந்தியா வேற்றுமைகள் நிறைந்த நாடு என்று நான் படித்திருக்கிறேன். ஆனால் இந்தப் பயணத்தின்போது தான் அதை நான் உணர்ந்தேன்.

தமிழகத்தில் இருந்து புறப்பட்ட இரயில் ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் வழியாக மராட்டியத்தைச் சென்றடைந்தது. பயணத்தில் சன்னலைத் தாண்டி நான் வேடிக்கைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் மண்ணின் நிறம் மாறுவதையும், விளைந்திருக்கும் பயிர்கள் மாறுவதையும் கவனித்தேன். இந்தப் பயணம் முழுவதும் நான் தமிழகத்தைச் சேர்ந்தவள் என்பதை விட இந்தியாவைச் சேர்ந்தவள் என்று நினைக்கத் தொடங்கினேன்.

மராட்டியத்தில் நான் பயணம் செய்த வரை நான் உணர்ந்தது, அங்குள்ள சூழ்நிலை தமிழ்நாட்டைப் போன்று இல்லை. நான் அறிந்தவரை எந்த வட இந்திய மாநிலத்திலும் நம் மாநிலத்தில் இருக்கும் நிலைமை இல்லை. இந்தப் பயணத்தில் நான் பார்த்தது என்னவென்றால், அங்கே பணம் படைத்தவர்களின் எண்ணிக்கையும் ஏழைகளின் எண்ணிக்கையும் தமிழகத்தைவிட அதிகமாக உள்ளது. அதாவது மிகப் பணக்காரர்களும் மிகவும் ஏழைகளும் என்று உள்ளனர். அவர்களுக்கு இடையில் மிகுந்த இடைவெளி உள்ளது.

இது எதனால் என்று யோசித்துப் பார்த்தால், ஒரு வர்க்கத்தைச் சார்ந்த மக்களே சமூகத்தில் உள்ள எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வதால் மற்றவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது. இதன் விளைவாகப் பணக்காரர்கள் மேலும் மேலும் செல்வம் சேர்க்கிறார்கள்; ஏழைகள் மேலும் மேலும் ஏழையாகிறார்கள். இதனால்தான் இந்தியாவில் உலகப் பணக்காரர்களின் எண்ணிக்கையும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையும் ஒரே நேரத்தில் உலகிலேயே அதிகமாக உள்ளது. என்னுடைய கருத்து என்னவென்றால், இந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சிக்கு தமிழகத்தை உதாரணமாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

நாங்கள் சென்றிருந்தபோது மராட்டியத்தில் வெயில் குறையவே இல்லை. ஆனால், தமிழகத்தில் அப்போது வெயில் காலம் முடிவடைந்திருந்தது. எனக்கு இந்தி தெரியும் என்பதால் அங்கே எவ்விதமான அசௌகரியமும் தோன்றவில்லை. ஆனால் அங்கே எனக்கு வினோதமாகத் தோன்றியது தென்னிந்தியர்களைப் பற்றிய அவர்களது அனுமானங்கள் தான். அதை என்னால் விவரிக்க முடியவில்ல, ஆனால் உணர முடிந்தது.

சீரடி கோயிலுக்கு அருகில் இருந்த ஒரு துணிக்கடைக்கு நாங்கள் சென்றிருந்தோம். அங்கே என்னுடைய அம்மாவுக்கு ஒரு புடவை எடுக்கலாமென்று நினைத்திருந்தோம். அங்கிருந்தவர் என் அப்பாவை பாய் (அண்ணன்) என்று, அம்மாவை பாபி (அண்ணி) என்றும் அழைத்தார். அவர் மிகவும் உரிமையுடன் பேசினார். வேறொரு மாநிலத்தில் ஓர் அந்நியரின் அன்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது.

அவர் அம்மாவைப் பார்த்து உங்களைப் பார்த்தால் ஆசிரியரைப் போல இருக்கிறது என்றார். அது உண்மைதான். அம்மா ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் சில காரணங்களால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதை அறிந்தவுடன், “உங்களுக்கு பாபா அருளால் வேலை கிடைக்கும். கிடைத்தவுடன் முதல் நாள் பணிக்கு இந்தப் புடவையை அணிந்து செல்லுங்கள், பாபி’’ என்று அவ்வளவு கனிவுடன் இந்தியில் சொன்னார்.

ஒட்டுமொத்தத்தில் எனது இந்தப் பயணம் மறக்க முடியாத நினைவுகளையும் மறக்கக் கூடாத பாடங்களையும் கற்பிப்பதாக இருந்தது. ஒவ்வொரு எளிய இந்தியக் குடிமகனிடமும் மற்றொருவரிடம் மதம், மொழிகளைக் கடந்த அன்பும் மரியாதையும் இருப்பதை உணர்ந்துகொண்டேன்.

📚 எழுதியவர்:

மு.நிரஞ்சனா
கணிதவியல் முதலாமாண்டு
கலசலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம்
கிருஷ்ணன்கோவில்.

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

  1. வாழ்த்துகள் நிரஞ்சனா….

    எளிய நடை மற்றும் மனதில் பட்டதை வெளிப்படையாக எழுதிய விதம் பிடித்திருந்தது.

    தொடர்ந்து எழுதுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *