மத்திய அமைச்சரவை ஜூலை 29 அன்று தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020க்கான ஒப்புதலை வழங்குவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட இந்திய அரசின் குறிப்பிடத்தக்க நகர்வுகள், அதன் கொள்கைக்கான கருத்தியல் கட்டமைப்பை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்தன.
இணையவழிக் கல்வியானது கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோடு இந்தியக் கல்வி உலகத் தரத்தை எட்டுவதற்கு உதவும் என்பதால், கல்விக் கொள்கையின் மையமாக அது இருக்கும் என்று மே 1 அன்று தேசிய கல்விக் கொள்கை 2020ஐ மதிப்பாய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இணையவழிக் கல்வி குறித்த இரண்டு கேள்விகள் இப்போது நம்மிடையே எழுகின்றன.
முதலாவதாக, இணையவழிக் கல்வி கல்வியின் தரத்தை அதிகரிக்கிறது என்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா? ஆனால் இதற்கு மாறாக ஏராளமான சான்றுகள், ஆசிரியரின் மனித வளம், மாணவர்களுக்கிடையிலான தொடர்புகள் ஆகியவை இல்லாவிடில், கற்றல் நிலைகள் மோசமடைகின்றன என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன. இரண்டாவதாக, இந்த உலகளாவிய தரநிலைகள் என்று குறிப்பிடப்படுபவை யாவை, யார் அவற்றை நிர்ணயித்தது? தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் இடம் பெற வேண்டும் என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. சந்தை அடிப்படைவாதத்தில் வேரூன்றிய அளவுருக்களைப் பயன்படுத்தி சந்தைப்படுத்தல் முகவர் நிறுவனங்களாலேயே இவ்வறான தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த தரநிலைகள் கல்வியின் சமூக நோக்கத்துடனோ அல்லது அதன் உருமாறும் பாத்திரத்துடனோ அல்லது அரசியலமைப்பின் விழுமியங்களுடனோ சற்றும் தொடர்பில்லாதவையாகவே இருக்கின்றன.
இந்தப் பின்னணியில், இந்தியக் கல்வியின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கான பிரதமரின் அந்த வேண்டுகோள் ஏற்கனவே அறியப்பட்ட விஷயங்களிலிருந்து விலகியே இருக்கிறது. புதிய தேசிய கல்விக் கொள்கை இது குறித்து எந்தக் கவலையும் கொண்டிருக்கவில்லை; அதற்கு மாறாக உலகத் தரம் வாய்ந்த கல்வி என்ற கருத்தையே, அது எந்தவொரு விமர்சனமுமின்றி ஆதரிக்கின்றது. இணையவழித் தொழில்நுட்பத்தை நோக்கி அனைவரையும் தள்ள வேண்டிய கட்டாயம் இப்போது ஏன் ஏற்பட்டுள்ளது?
பிரதமரின் அறிவிப்பிற்குப் பிறகு, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பெரியதொரு முதலீட்டை கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்தார். சந்தைப்படுத்தல் நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், அடுத்த நான்கு ஆண்டுகளில் இணையவழிக் கல்விக்கு 1500 கோடி டாலர் மதிப்புள்ள சந்தை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக இணையவழிக் கல்விக்கான உந்துதலானது கல்வி மீது கொண்ட முழுமையான அக்கறையால் தூண்டப்பட்டதல்ல. மாறாக புதிய தாராளமய முதலாளித்துவத்தின் நெருக்கடியைத் தீர்த்து வைக்க வேண்டியதன் அவசியத்தாலேயே, அத்தகைய உந்துதல் இருப்பது நன்கு தெளிவாகத் தெரிகிறது.
ஆத்மநிர்பார் பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று ஜூன் 11 அன்று பிரதமர் அழைப்பு விடுத்தார். சில நாட்களிலேயே, ஜூன் 24 அன்று, இந்தியாவின் ஆறு மாநிலங்களில் பள்ளிக் கல்வியில் தலையிடுகின்ற வகையிலான ஒப்பந்தத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை (இப்போது கல்வி) அமைச்சகம் உலக வங்கியுடன் ஏற்படுத்திக் கொண்டது. சுயமாக தன்னை ‘விஸ்வ குரு’ என்று கருதிக் கொள்கின்ற இந்தியாவிற்கு தன்னுடைய பள்ளிக் கல்வியை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பது தெரியவில்லை என்றால், எவ்வாறு ஆத்மநிர்பார் பாரதத்தை அதனால் உருவாக்கிக் கொள்ள முடியும்?
இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், அவ்வாறு செய்கின்ற போது கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள பாதி மாவட்டங்களில் ஆரம்பக் கல்வி முறை உருக்குலைவதற்கு வழிவகுத்த, உலக வங்கியின் முக்கிய நோக்கமாக இருந்த தனியார் பள்ளிகளுக்கான பரந்த சந்தையை உருவாக்கிய மாவட்ட ஆரம்பக் கல்வித் திட்டத்தின் (டிபிஇபி 1993-2002) வரலாற்றை இந்திய அரசு புறக்கணிக்கவே செய்திருக்கிறது. 2001-02ஆம் ஆண்டில், உலக வங்கியின் தலையீடு உச்சத்தில் இருந்தபோது, அது வழங்கியிருந்த கடன்தொகை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செய்த கல்விக்கான மொத்தச் செலவினங்களில் வெறுமனே 1.38 சதவீதம் அளவிற்கே இருந்தது.
உலக வங்கியின் இரண்டாவது தலையீடு 2002 முதல் இன்றுவரை இருந்து வருகிற சர்வ சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) மீது இருந்தது. அந்தத் திட்டம் பாகுபாடுகளுடன் கூடிய பல அடுக்கு கொண்ட பள்ளி அமைப்பு முறையை உருவாக்கியதோடு, 2010ஆம் ஆண்டிற்குள் தொடக்கக் கல்வியை (முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு) அனைவருக்குமானதாக மாற்றுகின்ற எஸ்.எஸ்.ஏவின் கட்டாய இலக்கை, தேசிய அரசியல் பின்னணியால் அழித்தொழிக்கப்பட்ட இலக்கை அடையத் தவறியது.
இந்த நிலையில் மூன்றாவது தலையீட்டிற்காக உலக வங்கியை அவர்கள் மீண்டும் ஏன் அழைக்கிறார்கள்? இந்தியாவில் வளங்கள் இல்லாததாலா? டிபிஇபியைப் போலவே, உலக வங்கியின் ஸ்டார்ஸ் (கற்பித்தல்-கற்றல் மற்றும் மாநிலங்களுக்கான முடிவுகளை வலுப்படுத்துதல்) திட்டத்திற்காக வழங்கப்பட்ட கடன்தொகையானது, கல்விக்கான மொத்த பொதுச் செலவுகளில் 1.4 சதவீதம் மட்டுமே இருந்தது. இந்த முடிவு புதிய தாராளமய முதலாளித்துவ சக்திகளின் உந்துதலால், அரசு சார்பற்ற தனியார்களுக்கான (அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் எஜு-டெக் நிறுவனங்கள் போன்றவை) இடத்தையும், கிட்டத்தட்ட 20 கோடி குழந்தைகளுக்கான தொடக்கக் கல்வியில் சந்தையையும் உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டதாகவே இருக்கிறது.
மாணவர்கள் மீது கோவிட்-19 ஏற்படுத்தப் போகின்ற பாதிப்புகள் குறித்து எந்தவொரு அக்கறையுமின்றி, இறுதியாண்டு இளங்கலை மற்றும் முதுகலைத் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் இணையவழியில் நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு ஜூலை 6 அன்று உத்தரவிட்டது. சில வாரங்களுக்கு முன்னர்தான், அந்த அறிவிப்பிற்கு முற்றிலும் முரணாக, உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்தலாமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்கான சுதந்திரத்தை மாநில அரசுகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அளித்திருந்தது. மாநிலங்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்று கருதிய பல்கலைமானியக் குழு, தேர்வுகளை நடத்துவதற்கு எதிரான ஏழு மாநில அரசாங்கங்களின் முடிவை ரத்து செய்தது. அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத்தின் மீதான மத்திய அரசாங்கத்தின் இத்தகைய தாக்குதலே, இப்போது தேசிய கல்விக் கொள்கையுடன் உள்ள ஒருங்கிணைந்த அம்சமாக ஆகி இருக்கிறது. இணையவழித் தேர்வுகள் மூலமாகத் திறக்கப்படுகின்ற மிகப்பெரிய சந்தைக்கான எஜு-டெக் நிறுவனங்களின் பேராசை, புதிய தாராளமய மூலதனத்துடன் இணைந்திருக்கின்ற மத்திய அரசுடன் பொருந்திப் போவதாக இருக்கிறதே தவிர, இந்திய மக்களுக்கானதாக இருக்கவில்லை.
மேற்கூறிய மூன்று எடுத்துக்காட்டுகளும், புதிய தாராளமய ஒருங்கிணைப்புகளை முன்னிலைப்படுத்துகின்ற வகையில், அரசாங்கத்திடம் கல்வி குறித்து இருக்கின்ற பார்வையை வரையறுப்பதாக இருக்கின்றன. மேலும் தேசிய கல்விக் கொள்கையின் மர்மங்களை அவிழ்க்கின்ற போது, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) – பாரதிய ஜனதா கட்சி கூட்டணியின் கீழ் உள்ள ஹிந்து ராஷ்டிராவின் கூடுதல் கருத்தியல் நோக்குநிலையும் வெளிப்படும்.
பிராமண மேலாதிக்கம்
‘நிலையான, பண்டைய இந்திய அறிவு மற்றும் சிந்தனைகளின் வளமான பாரம்பரியம்’ குறித்து தேசிய கல்விக் கொள்கை கொண்டுள்ள முழுமையற்ற, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்ற கட்டமைப்பு, வரலாற்றுரீதியான அதன் முற்சாய்வுகளை வெளிப்படுத்துகின்ற வகையிலே உள்ளது. பிராமணிய மரபுகள் மற்றும் அறிவின் ஆதாரங்களின் மீது போதுமான கவனத்தை ஈர்க்கின்ற அதே வேளையில், கல்விக் கொள்கையில் அறிவு, விவாதம் மற்றும் கேள்விகளாலான கற்பிதத்திற்கு புத்தர் மற்றும் மகாவீரர் போன்ற பிராமணரல்லாதவர்களால் அளிக்கப்பட்ட பங்களிப்பும், சமூக அடுக்கு மற்றும் படிநிலை சமூக ஒழுங்கு குறித்த அவர்களுடைய சவால்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அறிவின் ஆதாரங்களாக அவதானித்தல், அனுபவவாதம் மற்றும் வரையறை மீதான அனுமானம் ஆகியவற்றில் வேரூன்றியிருக்கும் சார்வாகா அல்லது லோகாயதாவின் பொருள்முதல்வாத தத்துவ நூல்கள் குறைத்து மதிப்பிடப்பட்டிருப்பதோடு, அவை இந்த தேசிய கல்விக் கொள்கையிலிருந்து முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு இருக்கின்றன. 2019ஆம் ஆண்டின் மத்தியில் தமிழ்நாட்டிலிருந்து மிகப்பெரிய எதிர்ப்பு வரும் வரையிலும், இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக தமிழ் இலக்கியம் மற்றும் அதன் உரைகளுக்கான இடத்தை அளிப்பதற்கு இந்தப் பிராமணியப் பார்வை தவறி விட்டது.
கி.பி முதல் நூற்றாண்டில் கேரள கடற்கரையில் குடியேறி, துணைக் கண்டத்தின் சமூக-கலாச்சார நிலப்பரப்பின் ஒரு பகுதியாக மாறிய சிரிய கிறிஸ்தவர்களின் பங்களிப்புகளுக்கான சரியான இடத்தையும் தருவதற்கு அதேபோன்ற தவறான எண்ணம் மறுத்து விட்டது. மேலும் ஹிந்து மரபுகளுடன் ஒத்திசைந்த சூஃபித்துவத்தை உருவாக்கிய இஸ்லாமிய மரபுகள், பல்வேறு அறிவியல் துறைகள், ஆளுகை, வர்த்தகம், இலக்கியம், இசை மற்றும் கலை ஆகியவற்றிலான அறிவை இந்தியா பின்தொடர்வதற்கான புதிய ஆற்றலைத் தூண்டிய இடைக்கால காலம் முழுவதையும் இந்த தேசிய கல்விக் கொள்கை ஒதுக்கியே வைக்கிறது. அதேபோன்று விவசாயம், வனவியல் மற்றும் இயற்கை வளங்களை நிர்வகித்தல் போன்றவற்றில் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பழங்குடி மக்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பங்களிப்புகளும் முக்கியமான இந்தியப் பாரம்பரியம் என்றழைக்கப்படுவதன் பகுதியாக அங்கீகரிக்கப்படவே இல்லை. 21ஆம் நூற்றாண்டின் இந்திய இளைஞர்களுக்கான கல்வித் திட்டத்தை, இதுபோன்ற ஒருசார்பான கருத்துக்கள் தவறாகவே வழிநடத்தும்.
சாதியும், ஆணாதிக்கமும்
கல்வி பெறுவது மற்றும் அதற்கான பங்களிப்பு, அறிவு உற்பத்தி மற்றும் கையகப்படுத்தல், சமூக-பொருளாதாரப் பெயர்விற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை உயர்கல்வி மூலமாகப் பெறுவதில் சாதி மற்றும் ஆணாதிக்கம் தொடர்ந்து மேலாதிக்கம் செலுத்தி வருவதை அங்கீகரிப்பதற்கு இந்த தேசிய கல்விக் கொள்கை தவறி விட்டது. சாவித்ரிபாய்-ஜோதிராவ் பூலே, சத்ரபதி ஷாஹு மகாராஜ், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் (மகாராஷ்டிரா); சி.அயோத்தி தாசர், சிங்காரவேலர், ‘பெரியார்’ ஈ.வெ.ராமசாமி (தமிழ்நாடு); நாராயண குரு மற்றும் அய்யங்காளி (கேரளா); கந்துகுரி வீரசலிங்கம் பந்துலு, குரஜாதா அப்பாராவ் (பிரிக்கப்படாத ஆந்திரா); குட்முல் ரங்காராவ் மற்றும் கிருஷ்ணராஜா வாடியார் IV (கர்நாடகா) ஆகியோரிடமிருந்தும், இறுதியாக 1930களில் சாதி குறித்து மகாத்மா காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான வரலாற்று விவாதங்களிலிருந்தும் கிடைத்த சாதி எதிர்ப்பு குறித்த உரைகளின் வளமான மரபுகளையும் இந்த தேசிய கல்விக் கொள்கை புறக்கணித்திருக்கிறது.
தகுதி மற்றும் பாலின விழிப்புணர்வு என்ற லென்ஸ் மூலமாக சாதி மற்றும் ஆணாதிக்கத்தைப் பார்க்க முயற்சிக்கும் போது, தேசிய கல்விக் கொள்கையின் குறைபாடுள்ள புரிதலில் வரலாற்று ரீதியாக உட்பொதிக்கப்பட்டுள்ள இந்த இரட்டை சிக்கல்களைப் பற்றிய அங்கீகாரமின்மை இருப்பது பிரதிபலிக்கின்றது. சட்டப்பிரிவு 16ஐ மீறி, சுதந்திரத்திற்குப் பின்னர் நடைபெற்ற சமூக நீதிக்கான போராட்டங்களின் மூலம் பெறப்பட்ட அனைத்து நலன்களையும் மறுக்கின்ற வகையில், தேசிய கல்விக் கொள்கையில் இடஒதுக்கீட்டிற்கும் இடமிருக்கவில்லை.
அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பை ஊக்கப்படுத்திய சுதந்திரப் போராட்ட சாதி எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற இரட்டை மரபுகள், உலக வங்கியின் நிதியுதவி பெற்ற ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள்-4 (எஸ்.டி.ஜி-4) மூலம் இழிந்த நிலைக்குச் சென்றிருக்கின்றன. இந்த இரண்டு ஆவணங்களுக்கிடையில் மேலோட்டமான ஒப்பீடு கூட, கல்வி மற்றும் பிற தொடர்புடைய சமூக உரிமைகளுக்கான மிகுந்த ஆற்றல் மிக்க கட்டமைப்பை எஸ்.டி.ஜி-4 உருவாக்குவதைவிட அரசியலமைப்பு சார்ந்த கட்டாயங்களே உருவாக்குகின்றன என்பதை வெளிப்படுத்தும். இந்த தேசிய கல்விக் கொள்கை அதனாலேயே எஸ்.டி.ஜி-4ஐச் சார்ந்திருக்க விரும்புவதோடு, அரசியலமைப்புச் சட்டத்தைக் குறைத்தும் மதிப்பிடுவதாக இருக்கிறது. தெளிவின்மை, உள் முரண்பாடு கொண்ட நிலைகள், சிந்தனைகளில் கருத்தியல்ரீதியான மங்கல், போலித்தனம் ஆகியவற்றையே இந்த தேசிய கல்விக்கொள்கை குறிக்கின்றது. அடிப்படைக் கடமைகளைப் பற்றி அது பேசுவதாக இருந்தாலும், அடிப்படை உரிமைகளைக் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சியில் (1999-2004) பின்பற்றப்பட்டதைப் போல, அது மௌனமே காக்கின்றது.
‘இலவசக்’ கல்வி என்ற கருத்து ‘தாங்கிக் கொள்ளத்தக்க செலவிலான’ கல்வி என்பதாக மாற்றப்படுகிறது, அதன் விளைவாக தங்கள் விருப்பப்படி கட்டணத்தை அதிகரித்துக் கொள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கிடைக்கிறது. கல்வி மற்றும் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கைகளுக்கு இடையிலான வேறுபாடும், அதேபோன்று ‘முறைசாரா’ மற்றும் ‘முறை சார்ந்த’ கல்விக்கு இடையிலான வேறுபாடும் மழுங்கடிக்கப்படுகின்றன. பட்டியல் சாதியினர் (எஸ்.சி), பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி), பிற பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி), மதம் மற்றும் மொழிசார் சிறுபான்மையினர் என்ற அரசியலமைப்புரீதியாக சட்டப்பூர்வமாக்கப்பட்டிருக்கும் வார்த்தைகள் ‘சமூக-பொருளாதாரரீதியாக பின்தங்கிய குழுக்கள்’ (எஸ்.இ.டி.ஜி) அல்லது ‘சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத குழுக்கள்’ என்பதாக மாற்றப்பட்டு, அதன் மூலம் பல நூற்றாண்டுகளாக பகுஜன்கள் மீது வரலாற்றுரீதியாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கும் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் ஆகியவற்றிற்கான முக்கியத்துவம் அற்றுப் போகுமாறு செய்யப்படுகிறது.
‘இந்தியா அதாவது பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ என்று அரசியலமைப்பு சட்டப் பிரிவு 1(1) கூறுகிறது. ‘மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையில் சட்டமியற்றும் மற்றும் நிர்வாக அதிகாரம் பிரிக்கப்பட்டுள்ளதே கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படைக் கொள்கையாக உள்ளது…. நமது அரசியலமைப்பின் கீழ் உள்ள மாநிலங்கள் தங்களுடைய சட்டமியற்றும் அல்லது நிர்வாக அதிகாரத்திற்காக எந்த வகையிலும் மத்திய அரசைச் சார்ந்து இருக்கவில்லை… அவற்றிற்கிடையே உள்ள பிரிவின் எல்லையை மத்திய அரசால் மாற்ற முடியாது’ என்று அரசியலமைப்புச் சட்டத்தை முன்வைத்த, வரைவுக் குழுவின் தலைவராக இருந்த அம்பேத்கர் 1949 நவம்பர் 25 அன்று அரசியல் நிர்ணய சபையில் அறிவித்தார். ‘அரசியலமைப்பின் கூட்டாட்சித் தன்மைதான் அடிப்படையான அமைப்பு’ என்று கேசவானந்த பாரதி வழக்கில் (1973) உச்சநீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு கூறியது.
இருந்தபோதிலும், அமைக்கப்பட/நிறுவப்படவிருக்கின்ற இந்திய உயர் கல்வி ஆணையம், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை, ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விக்கான [ECCE] தேசிய பாடத்திட்டம் மற்றும் கல்வி கட்டமைப்பு, பொதுக் கல்விக் குழு, தேசிய தேர்வு நிறுவனம், ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான தொழில்முறைத் தரநிலைகள் மற்றும் இதுபோன்ற பல புதிய மத்திய நிறுவனங்கள் மற்றும் வழிமுறைகள் மூலம் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியிலிருந்து துவங்கி உயர் கல்வி வரையிலும் இருக்கின்ற அனைத்து முக்கிய முடிவெடுக்கும் செயல்பாடுகளும் மையப்படுத்தப்படுவதையே இந்த புதிய தேசிய கல்விக் கொள்கை முன்மொழிகிறது.
இந்த செயல்பாடுகளின் மூலம், கல்வி தொடர்பான மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள், ஐந்தாவது மற்றும் ஆறாவது அட்டவணைகளின் கீழ் உள்ள பழங்குடியினர் கவுன்சில்கள் மற்றும் பல்வேறு சட்டங்கள் மூலமாக கிராம பஞ்சாயத்துகள் / ஜில்லா பரிஷத் மற்றும் நகராட்சிகள் / நகராட்சி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் அனைத்தும் பெரும்பாலும் சமரசம் செய்து கொள்ளப்படுவதாக அல்லது முற்றிலும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. அரசியலமைப்பு கட்டமைப்பில் ஏற்படுத்தப்படுகின்ற இத்தகைய முழுமையான மாற்றம், நாடு தழுவிய ஜனநாயகப்பூர்வமான விவாதத்திற்கும், பாராளுமன்றத்தின் முழுமையான ஆய்விற்கும் தேசிய கல்விக் கொள்கை – 2020ஐ வைப்பதற்கான தேவையை ஏற்படுத்தியிருக்கின்றது.
தேசிய கல்விக் கொள்கையில் ஊடகங்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ள ஏற்பாடாக, 3-8 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விக்கான ஏற்பாடு இருக்கின்றது. இதற்கு முந்தைய கொள்கை ஆவணங்கள் அனைத்திலும் 3-6 வயதினருக்கான ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி சேர்க்கப்பட்டிருந்தது. அங்கன்வாடி திட்டம் என்று பிரபலமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் (ஐசிடிஎஸ்) நாடு முழுவதும் 1974ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்ற போதிலும், அது ஆரம்பக் கல்விக்கான ஏற்பாடுகளை முதன்மையாகக் கொண்டிராமல், ஊட்டச்சத்து-சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாகவே இருந்து வருகிறது. 2009ஆம் ஆண்டு கல்விக்கான உரிமைச் (ஆர்.டி.இ) சட்டத்தில் 3-6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சேர்க்கப்படவில்லை. எனவே, தேசிய கல்விக் கொள்கையில் முன்-தொடக்கக் கல்வியைச் சேர்த்திருப்பது மற்றும் முதல் இரண்டு ஆண்டு தொடக்கப் பள்ளிகளுடன் (I-II வகுப்பு) அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண் குறித்த அறிவை உருவாக்குவது போன்றவை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த திட்டத்தின் நோக்கத்தையும், உள்ளடக்கத்தையும் முழுமையாக இப்போது அறிந்து கொள்வோம்.
ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி துவங்கி மேனிலைப் பள்ளிகள் வரை, பள்ளி அமைப்பிற்குள் ‘உள்ளூர் சமூகம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள சமூக சேவையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களுக்கு’ முறைசாராத பங்கை அளிப்பது குறித்து தேசிய கல்விக் கொள்கை முன்மொழிகிறது. இவர்கள் அனைவரும் யார், அங்கன்வாடிகள் அல்லது பள்ளிகளில் முறைசாராப் பணிகளை மேற்கொள்ள அழைக்கப்படுவதற்கு அவர்களிடம் இருக்கின்ற தகுதிதான் என்ன?
இந்தக் கல்விக் கொள்கையில் தன்னுடைய கோரிக்கைகளில் பெரும்பாலானவை சேர்க்கப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ் பகிரங்கமாகக் கூறியுள்ளது. அரசின் நிதியுதவியால் ஆதரிக்கப்படப் போகின்ற மேற்கூறப்பட்ட முறைசாராத பாத்திரங்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படப் போகிறது என்பது வெளிப்படையானது.
ஆர்.எஸ்.எஸ்-தொடர்புடைய கல்வி தொடர்பான அமைப்புகள் நீண்ட காலமாகவே ஹிந்து ராஷ்ட்ரத்திற்கான தொண்டர்களை உருவாக்குவதற்கு, 80 சதவிகிதத்திற்கும் அதிகமான அளவில் மூளை வளர்ச்சியடைகின்ற 3-6 வயதினரின் ஆழ்மனதிற்குள் ஹிந்துத்துவாக் கருத்துக்கள் மற்றும் ‘நெறிமுறை’ சார்ந்த விழுமியங்களை (கட்டுக்கதைகள், தவறான சிந்தனைகள், மூடநம்பிக்கைகள் என்று வாசித்துக் கொள்ளவும்) திணித்து, அவற்றை எதிர்காலத் தலைமுறையின் சிந்தனை மற்றும் சமூக நடத்தை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கூறுகளாக்குவதே மிகச் சிறந்த வழி என்று தங்களுடைய வாதங்களை முன்னிறுத்தி வருகின்றன. இவ்வாறு உருவாக்கப்படுகின்ற புதிய ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை நிரந்தரத் தொடக்கப்பள்ளி அணிக்குள் உள்வாங்கிக் கொள்வதற்கான நம்பத்தகுந்த அடிப்படையை அது உருவாக்கித் தரும் என்பதாலேயே, முதல் இரண்டு ஆண்டு தொடக்கக் கல்வியுடன் மூன்றாண்டு கால ஆரம்பகாலக் குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை இணைப்பதற்கு தேசிய கல்விக் கொள்கையும் வலியுறுத்துகிறது.
மொழிகளும், கல்விக்கான ஊடகமும்
கல்விக்கான ஊடகமாக தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளித்து ஹண்டர் கமிஷனின் (1882) முன்பாக மகாத்மா ஜோதிராவ் பூலே விவரித்ததிலிருந்தே, ஆரம்ப நிலையில் அல்லது அதற்கு அப்பாலும் கற்பிக்கும் ஊடகமாக தாய்மொழி / வீட்டுமொழியை மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தாய்மொழிக் கல்வி என்பது உலகளவில் கல்வியாளர்கள் மற்றும் மொழியியலாளர்களால் அங்கீகரிக்கப்பட்டு பொருளாதாரரீதியாக முன்னேறியிருக்கும் அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் உள்ள சிந்தனையாக உள்ளது. அறிவைப் பெறுவதற்கும், ஆங்கிலம் உட்பட வேறு எந்த மொழியையும் திறமையாகக் கற்பதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கும் தாய்மொழியே மிகுந்த அறிவாற்றல் கொண்ட ஊடகமாக இருக்கும் என்ற கருத்திற்கு காந்தி, ரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரும் தீவிர ஆதரவாளர்களாக இருந்தனர். பகுத்தறிவு கொண்டதாகவும், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் இருக்கும் அந்தக் கொள்கை இந்தியாவில் உள்ள உயர் சாதியினர் மற்றும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுடைய குறுகிய நலன்களால் நிராகரிக்கப்படுகின்றது. யாரும் குழந்தைகள் சரளமாக ஆங்கிலம் பேசக் கற்கக்கூடாது என்று சொல்லப் போவதில்லை. சிறந்த முறையில் கற்றுக் கொள்வது, ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் அன்னிய மொழியைக் கல்வி ஊடகமாகப் பயன்படுத்துவதன் மூலமாகவா அல்லது குழந்தையின் தாய்மொழியின் வலுவான அடித்தளத்தின் அடிப்படையிலே பாடங்களைக் கற்றுக்கொள்வதாலா என்பதே இப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.
‘ஒரு பாடமாக தரமான ஆங்கிலத்தை கொள்கின்ற வழியைக் காட்டிலும், கற்பித்தல் ஊடகமாக ஆங்கிலத்தைக் கொள்வதே ஆங்கிலத்தில் சரளத்தை அடைவதற்கான சிறந்த அல்லது நிச்சயமான வழி என்றிருக்கின்ற பரவலான கருத்தை ஏற்றுக் கொள்வதற்கான சிறிய ஆதாரங்கள்கூட எதுவும் இல்லை… தெற்காசியா மற்றும் சஹாராப் பகுதி ஆப்பிரிக்காவில் பொதுவாகக் காணப்படுகின்ற, குறைந்தது ஆரம்பநிலையில் அல்லது அதற்குப் பிறகு என்று ஆங்கிலத்தைக் கற்பித்தல் ஊடகமாகக் கொண்ட நகர்வு, உயர்ஆரம்ப நிலையில் இருந்து பாடத்திட்டங்களைக் கற்றுக் கொள்வதற்குத் தேவையான ஆங்கிலத்திற்கான மிகப்பலவீனமான அடித்தளத்தையே அளிக்கிறது. பிரிட்டிஷ் கவுன்சிலின் 2017ஆம் ஆண்டு ஆய்வு, ஆரம்பநிலையில் கற்பித்தல் ஊடகமாக ஆங்கிலத்தை அறிமுகப்படுத்துவது, பின்வரும் ஆண்டுகளில் ஏற்படுகின்ற கற்றலைக் குறைப்பதாகவும், கல்வி பெறுவதைக் கட்டுப்படுத்துவதாகம் இருப்பதாகக் கருதப்படுகிறது’ என்று குறிப்பிடுகிறது.
தேசிய கல்விக் கொள்கையின் திட்டம் வேண்டுமென்றே தாய்மொழி/வீட்டுமொழி பிரச்சனை குறித்து தெளிவற்றதாகவும், குழப்பமானதாகவும் இருப்பதாக இருக்கவில்லை; தமிழ், பாலி மற்றும் பாரசீகம் போன்றவை செம்மொழி மற்றும் வளம்மிக்க மொழிகளாக இருந்தாலும் அவற்றை மாற்றான் குழந்தைகளாகக் கருதி, உயர்கல்வி உட்பட கல்வியின் அனைத்து நிலைகளிலும் ஒரேயொரு செம்மொழியை (சமஸ்கிருதம் என்று கொள்ளவும்) மட்டுமே கற்பதற்கான முக்கியத்துவத்தைத் தருகின்ற மொழிப் பாடத்திட்டம் குழந்தைகள் மீது அதிகச் சுமையை ஏற்றி வைப்பதாகவே இருக்கிறது. ஒட்டுமொத்த குழந்தைகளில் 85 சதவீதமாக இருக்கின்ற பகுஜன் குழந்தைகளைப் பெருமளவில் கல்வியிலிருந்து விலக்கி வைப்பதற்கு ஓரளவு காரணமாக இருக்கின்ற இந்திய மொழிகளின் பிராமணிய சமஸ்கிருதமயமாக்கலுக்கு எதிராக தேசிய கல்விக் கொள்கை எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.
உயர்கல்வி
தேசிய கல்விக் கொள்கையின் உயர்கல்வித் திட்டங்கள் கீழே உள்ள நிலைமை ஏற்படுவதையே குறிக்கின்றன:
(அ) அரசு பட்டப்படிப்பு கல்லூரிகள் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களுக்கான நிதிகளைச் சுருக்கி, சந்தைக்கு கடன்பட்டிருக்கும்படி அவற்றைக் கட்டாயப்படுத்தி, இறுதியில் அவை மூடப்படுவதற்கான வழிவகுக்கும்;
(ஆ) அரசு – கொடைக் குணம் கொண்டோர் கூட்டு என்பதாக மாற்றியமைக்கப்படும் பிபிபி (அரசு-தனியார் கூட்டு) என்ற திட்டத்தின் கீழ், இந்தியா என்ற பெருநிறுவனத்திற்கு அரசு நிதியை வழங்குவதற்கான மற்றொரு புதிய தாராளமய சாக்கைக் கொண்ட ‘கொடைக்குணத்தை ஊக்குவிக்கிறோம்’ என்ற போலிக்காரணத்தின் கீழ், அதிக அளவில் உயர்கல்வி நிறுவனங்களை தனியார் மூலதனத்திடம் ஒப்படைப்பது;
(இ) உயர்கல்விக்கான கட்டணங்களை உயர்த்திக் கொள்வதற்கான சுதந்திரத்தை வழங்குவதன் மூலம் மட்டுமல்லாது, குறிப்பாக இடஒதுக்கீடு போன்ற சமூகநீதிக்கான திட்டங்களைத் திரும்பப் பெறுவதன் மூலமாகவும், ஒருபுறம் சமூகவியல் ரீதியாக வர்க்கம், சாதி மற்றும் ஆணாதிக்கத்தில் வேரூன்றியிருக்கும் சலுகைகள் மற்றும் மறுபுறத்தில் மொழி மற்றும் பெருநகர மேலாதிக்கத்தை ‘தகுதி’ என்று அழைப்பதன் வழியாக, உதவித்தொகை மற்றும் நிதியுதவி போன்ற கருத்துக்களைச் சிதைப்பதன் மூலமாகவும் உயர்கல்வியில் இருந்து பகுஜன்கள் மற்றும் ஊனமுற்றோர் (இந்த ஒவ்வொரு பிரிவிலும் இருக்கின்ற சிறுமிகள் இன்னும் அதிக விகிதத்தில்) விலக்கி வைக்கப்படுவதற்கான தற்போதைய சதவீதத்தை அதிகரிப்பது;
(ஈ) ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி நிலையிலிலிருந்து உயர் கல்வி வரையில் தொழிற்கல்வி என்ற போலிக்காரணத்தின் கீழ் அறிவை வெறும் திறன்களாகக் குறைப்பது, கல்வி மற்றும் தொழிற்கல்விக்கு இடையில் எந்தவிதமான கடினமான பிரிவினையும் இருக்காது என்று பலமுறை கூறப்பட்டாலும். பகுஜன் மாணவர்களை அதன் மூலமாக கல்வியிலிருந்து பிரித்து பெற்றோர் மற்றும் சாதி அடிப்படையிலான தொழில்கள் மற்றும் பிற குறைந்த ஊதியம் தருகின்ற திறன்களை நோக்கித் திருப்புதல்; விமர்சன சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் அறிவியல் மனப்பான்மையை வெறும் திறன்களாக மட்டுமே பார்ப்பது; ‘திறன் இந்தியா’வின் கருத்துக்களுக்கு ஏற்ற வகையில் அறிவு தொடர்பான அளவுருக்களை சிதைப்பது (பிரிவு 18.6);
(உ) தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மூலமாக ஆய்வுத் திட்டங்களை அதிகமாக மையப்படுத்துவதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வு அடிப்படையிலான அறிவு உற்பத்தியைத் தகர்ப்பது, அதாவது ஆய்வின் மீதான உற்சாகத்தை அகற்றுவது; மற்றும்
(ஊ) சந்தைத் தேவைகளுக்கு ஏற்றவாறு அறிவை ஒரே மாதிரியாக மாற்றுவதற்காக இணையவழிக் கல்வியின் மேலாதிக்கத்தை நிறுவுதல்; குறைந்த ஊதியம் (அமைப்புசாராத் துறைகளில் இருப்பதைப் போல) மற்றும் உலகச்சந்தை கட்டமைப்பிற்கு முற்றிலும் அடிமைப்பட்டுள்ள அதிக ஊதியம் (சிலிக்கான் பள்ளத்தாக்கு / தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் போன்றவற்றில் உள்ளதைப் போல) என்று அறிவை வெறும் திறன்களாகக் குறைத்தல்; ஆசிரியர் – மாணவர்களிடையே மற்றும் மாணவர்களுக்கிடையில் இருக்கின்ற மனிதத் தொடர்புகளை அகற்றுவதன் மூலம் கல்வியை மனிதநேயமற்றதாக்குவதோடு, கல்வி முறையையும் அரசியலற்றதாக்குவது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை வருவித்தல்
ஆளும் உயரடுக்கினர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மீது கொண்டுள்ள ஆர்வம், உண்மையைப் பார்ப்பதற்கு அவர்களை அனுமதிக்காது. ‘வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த மதிப்புமிக்க சிறந்த பல்கலைக்கழகங்கள் தங்களுக்கிருக்கும் புகழ்பெற்ற பெயர்களைப் பயன்படுத்தி, சமமான தரத்தை உறுதிப்படுத்தாமல் ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மிகவும் மோசமான படிப்புகளை வழங்கி வருகின்றன’ என்று உலக வங்கி மற்றும் யுனெஸ்கோ (தி டாஸ்க் ஃபோர்ஸ், 2000) ஆகியவை இணைந்து உருவாக்கிய கூட்டு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 100 முதல் 150 ஆண்டுகளில் தங்கள் வளமான அறிவுசார் மரபுகளை வளர்த்துக் கொண்டதன் மூலம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்கள் தங்களுக்கான நற்பெயரைப் பெற்றிருக்கின்றன. அத்தகைய உள்ளார்ந்த அறிவுசார் மரபை, தங்களுடைய இந்திய வளாகங்களுக்கு இயந்திரத்தனமாக அவற்றால் மாற்றிக் கொள்ள முடியும் என்று கருதுவது உண்மையில் அப்பாவித்தனமாகவே இருக்கும். தற்போதைய ஆட்சியால் மதிப்பிழந்திருக்கும் போதிலும், சுதந்திரத்திற்குப் பிறகு தோன்றிய பல பல்கலைக்கழகங்கள் உலகளவில் விருதுகளை வென்றெடுக்க முடிந்திருக்கின்ற வழியில் நமது சொந்த அறிவுசார் மரபுகளை உருவாக்குவதுதான், இப்போது தேசிய கல்விக் கொள்கையால் நிராகரிக்கப்பட்டவற்றை அடைவதற்காக நம்மிடம் இருக்கின்ற ஒரே வழியாகும்.
சிக்கல்களும், பிரச்சனைகளும்
i) சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், அனைத்து குழந்தைகளுக்கும் அருகமைப் பள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட பொதுப் பள்ளி முறையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தேசிய கல்விக் கொள்கை தவறி விட்டது;
ii) பாகுபாடு அடிப்படையிலான பல அடுக்கு பள்ளி முறையை அகற்றுவதற்கான எந்தவொரு திட்டமும் அதில் இருக்கவில்லை;
iii) ஒப்பந்த மற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு கண்ணியமான பணிநிலைகளை வழங்குவதற்கான உறுதியை அது தரவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் (கிராம பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை) மற்றும் பேரழிவு நிவாரணம் வழங்குவது போன்ற பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை;
iv) 3-6 மற்றும் 14-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைச் சேர்க்கும் வகையில் கல்வி உரிமைச் சட்டம் – 2009ஐத் திருத்துவதற்கான முயற்சியை தேசிய கல்விக் கொள்கை மேற்கொள்ளவில்லை. அதன் விளைவாக ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி, உயர்நிலை – மேனிலை ஆகிய இரண்டிற்கும் சட்டரீதியான அந்தஸ்தைத் தருவதற்கு மறுக்கிறது;
v) அறிவை வணிகப் பொருளாக்குவதையும், கல்வியில் வர்த்தகம் செய்வதைத் தடை செய்யவும் மறுக்கிறது; மற்றும்
vi) பள்ளிக் கல்வியில் உலக வங்கியின் தலையீட்டிற்கும், உயர்கல்வியில் உலக வர்த்தக அமைப்பு ஆட்சி செய்வதற்கும் எதிராக எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.
இந்தப் பின்னணியில் பார்க்கின்ற போது, ‘இந்தியாவின் இயற்கை மற்றும் மனித வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக புதிய தாராளமய மூலதனம் ஹிந்து ராஷ்டிரப் படைகளின் முதுகில் ஏறி சவாரி செய்கிறது’ என்று கருதுவது நியாயமானதாகவே உள்ளது! அம்பேத்கர், காந்தி, பகத்சிங் போன்றோர் முன்னர் எப்போதையும்விட இன்றைக்கு இந்தியாவிற்கு அதிகம் தேவைப்படுகிறார்கள்.
அனில் சத்கோபால்
தில்லி பல்கலைக்கழக கல்வியியல் துறையின் முன்னாள் பேராசிரியர்
கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றத்தின் நிறுவனர்
ஃப்ரண்ட்லைன் 2020 ஆகஸ்ட் 10
https://frontline.thehindu.com/cover-story/decoding-the-agenda/article32306146.ece
நன்றி: ஃப்ரண்ட்லைன்
தமிழில்:தா.சந்திரகுரு
Leave a Reply
View Comments