1
அது ஒரு சிறு மலைப் பகுதி
கிராமத்திற்கு வெளியே சற்று தள்ளி நீண்டிருக்கிறது
அந்த அழகான பசுமை சூழ்ந்த மலையை,
நாட்டு வெடிகுண்டு வைத்துத் தகர்த்தனர்.
அதற்கும் கொஞ்சம் இடைவெளியில்
கல்லுடைக்கும் உழைப்பாளிகள்,
தங்கள் பணி தொடரக் காத்திருக்கின்றனர்.
பாறைகள் சிதறித் துண்டு துண்டாக
உயிரிழந்த சவமாக விழுந்து கிடந்தன.
ஆண்கள் அச்சிறு சிறு பாறைகளை
உடைப்பதற்கு ஏதுவாகக் குவித்து வைத்தனர்.
தனித்தனியாக அமர்ந்து உடைக்கும்
சத்தம் கேட்டு மலை எதிரொலித்தது.
மரக்கிளை துணி ஊஞ்சலில் உறங்கிய
குழந்தை பலமாக அழத் தொடங்கியது…
2
ஊர்க்கோடியில் குட்டை. வறண்டு பல காலமாய்,
மாநகராட்சி குவியல் குவியலாய்
கொண்டு வந்து கொட்டிய ஊர்க் குப்பைகள்
மலைபோல் குவிந்து கிடக்கின்றன.
மக்கிய, மக்காதக் குப்பைகள் என ஏராளம்.
சமயங்களில் யாரேனும் ஒரு அடையாளம்
தெரியாத நபர், யாரும் பார்க்காதத்
தருணம் பார்த்துத் தீ வைத்துச் செல்வார்.
எங்கும் புகை சூழ்ந்து நாற்றம்.
அக்கம்பக்கத்தில் வாழ்பவர்கள்,
அந்த நச்சுப் புகையால் நோய் வாய்ப்படுவர்.
எத்தனைப் புகார் செய்தாலும்
மாநகராட்சி கண்டுக் கொள்வதில்லை.
மக்கள் அச்சம், பயம்
இயற்கைச் சுற்றுச்சூழல் மாசுகளோடு
என வாழப் பழகிவிட்டனர்
குட்டைக்கு வெளியில் நடக்கும் குப்பைகளாய்….