முனைவர் என். மாதவன் எழுதிய “வாழும் தலமெங்கும் வகுப்பறைகள்” புத்தகம் ஓர் அறிமுகம்
“கற்றலுக்கு ஏது விடுமுறை….”
உலகமெங்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டு மனிதர்கள் அனைவரையும் ஆட்டிப்படைத்து வீட்டிற்குள்ளேயே முடக்கியது நாம் அறிந்ததே.
பள்ளிகள் முதல் கல்லூரி வரை ஏன் நம் பல அலுவலகங்கள் கூட செயல்படாமல் போனது.
நம் குழந்தைகள் பெரிய அளவில் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டது.
பெற்றோர்கள் வேலை இழப்பு ஏற்பட்டதால் பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் நிலை உருவானது.
இதனால் பல பகுதிகளில் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்களாக மாறும் சூழல் கூட ஏற்பட்டது.
இச்சூழலை அறிந்து கொண்ட தமிழக அரசு குழந்தைகள் கற்பதை எவ்வகையிலும் நின்று விடாது தொடர்ந்து கற்பதற்கான சூழலை ஏற்படுத்தியது.
குறிப்பாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கள ஆய்வில் ஈடுபட்டு, அதனுடைய தொடர்ச்சியாக தமிழக அரசின் கல்வித் துறை, “இல்லம் தேடி கல்வி” என்ற பெயரில் பல மாவட்டங்களில் குழந்தைகள் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.
இதன் தொடர்ச்சியாக களச் செயல்பாட்டார்களுக்கு பயிற்சி அளித்து “வானவில் மன்றத்தை” உருவாக்கி அதன் மூலம் மாலை நேர பள்ளிகள் தொடங்கப்பட்டு தொடர் கல்வி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
இதனால் பெருமளவு கற்றல் வாய்ப்பு தடையின்றி வழங்கப்பட்டது என்பதே உண்மை.
இந்தப் பணியில் ஈடுபட்ட மிகச்சிறந்த கல்வியாளரும் ஆசிரியருமான முனைவர் மாதவன் தொடர்ந்து ஈடுபட்டார். அப்போது பெற்ற அனுபவங்களே இந்த நூலாக உருவாகியுள்ளது.
1.கொஞ்சம் குழந்தைமை
2.கொஞ்சம் கொள்கைகள்
3.கொஞ்சம் களத்தில் இருந்து
என மூன்று அத்தியாயங்கள் கொண்ட இந்நூலில் 34 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு கட்டுரையும் மிக சுருக்கமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தை மொழியை, குறிப்பாக தாய் மொழியை அழகாக பதிவு செய்துள்ளார்.
தாய் மொழியை கூட தயக்கத்துடன் பேசும் சூழல் இன்று நிலவுகிறது.
இந்த தயக்கத்திற்கு காரணம் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்காததே என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். குழந்தை பேசும் போது வார்த்தைகள் தடுமாற்றம் ஏற்படும்.
அப்போது நாம் இடையூறு செய்து, அப்படி இல்லை, இப்படி என்று தடை ஏற்படுவது பிரதானமான காரணமாகும்.
அப்படி தடை ஏற்படுத்தாது அவர்களை பேசவிட்டு, அதன்பின் நாம் பல்வேறு இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கு நடக்கும் நிகழ்வுகளை கண்காணிப்பதன் மூலம் குழந்தைகள் பல்வேறு பொது அறிவை பெற்றுக் கொள்கின்றனர்.
அவ்வாறுதான் குழந்தைகளிடம் ஏற்படும் தயக்கத்தை மாற்ற முடியும். இதற்கு பெற்றோர்களும், பள்ளிகளும், சமூகமும் சரியான பங்களிப்பை செய்தால் மட்டுமே மாற்றம் சரியானமாற்றமாக அமையும்.
குழந்தைகள் கற்பனை வளம் மிக்கவர்கள். அந்த கற்பனை வளத்தின் துணை கொண்டு அவர்களது உளவியல் ரீதியான தேவைகளையும் அவர்களே நிறைவு செய்து கொள்பவர்கள் ஆவார்கள்.
பெற்றோர்கள் குழந்தைகளோடு செலவிடும் நேரம் என்பது இன்றைக்கு அரிதாகவே உள்ளது.
இன்றைக்கு உள்ள மின்னணு உலகம் எல்லோரையும் கைபேசிக்குள் அடக்கி வைத்துள்ளது.
குழந்தை முதல் பெற்றோர் வரை அனைவரும் அதிக நேரம் செலவிடுவது கைபேசியில் தான். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை அதிகப்படுத்தினால் மட்டுமே குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
பெற்றோர்களின் பங்களிப்பு எவ்வளவு அவசியமோ அதே அளவு பள்ளிகளின் பங்களிப்பும், குழந்தை வாழும் சமூகத்தின் பங்களிப்பும் அதிகமாக இருக்க வேண்டும். குழந்தைகளை சுயமரியாதையோடு நடத்துதல், குழுவாக விளையாட அனுமதித்தல், செயல்பாடுகளில் ஈடுபட பயிற்சி அளித்தல், வெற்றி தோல்விகளை சமமாக பாவிக்கும் மனப்பான்மையினை ஏற்படுத்துதல், அடுத்தவர்களை மதிக்க கற்றுத் தருதல் போன்றவைகளை கற்றுத் தருவது அவசியம்.
இன்றைக்கு பதின்ம வயது உடையோர் பெரும்பாலும் சினிமா மோகத்தில் ஆட்கொள்ளப்படுவது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக நடிகர், நடிகைகள் திரைப்படம் வெளி வந்தால், வெளிவந்த அன்று திரையரங்கில் நடக்கும் சம்பவங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். சில நேரங்களில் அங்கு ஏற்படும் மோதல்களில் உயிரிழப்பு கூட ஏற்படுவது உண்டு .
எனவே பெற்றோர்கள் இளையோர்களை அவர்களோடு இயல்பாக உரையாடி நேரம் செலவழித்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும் அவர்களை நல்வழிப்படுத்த முடியும்.
வளர்ச்சியும் கண்காணிப்பும் எல்லோருடைய வாழ்விலும் உள்ளது. அதை முறையாக கையாளும்பட்சத்தில் அவர் சிறந்த மனிதராக உருவாக முடியும்.
பொதுவாக ஆசிரியரிடமிருந்து தான் அனைத்து விஷயங்களையும் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள் என்ற நிலை உண்டு.
ஆனால் இன்று அம்மா, அப்பா, ஆசிரியர், நண்பன், சமூகம், சமூக ஊடகம், தொலைக்காட்சி, கூகுள் என பல்வேறு வகையான வாய்ப்புகள் அவர்கள் ஏற்படுவதால் நிறைய விஷயங்களை எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறது.
இதில் குழந்தைகளுக்கு எது சரி? எது தவறு? என புரிய வைத்து விட்டால் அவர்களை நேர்வழியில், நேர்மறை சிந்தனையோடு வாழ தொடங்கி விடுவார்கள். தேவையான நேரத்தில் பாராட்டும் தேவையான நேரத்தில் கண்டிப்பாக வழங்கி விட்டால் அவர்கள் இந்த சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு செல்வது எளிதாகிவிடும் இதன் மூலம் பல்வேறு திறன்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.
நமது குழந்தைகள் அருகாமைப் பள்ளியில் பயில வேண்டும் என்பதை மிக அற்புதமாக நூல் ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஆனால் இன்றைக்குள்ள பெற்றோர்களின் மனநிலை குழந்தைகளை விடுதியில் தங்க வைத்து படிக்க வைப்பது உட்பட வெகு தூரத்தில் உள்ள பள்ளியில் படிக்க வைக்கும் நிலை உள்ளது.
வெகு தூரத்தில் உள்ள பள்ளியில் பயிலும் குழந்தை அதிகாலையில் எழுந்து அவசர அவசரமாக அனைத்து பணிகளையும் செய்து மிகவும் தாமதமாக வீடு திரும்புகிறார்கள். இதனால் அவர்கள் உடல் நிலையும் மனநிலையும் பெரும்பளவு பாதிக்கப்படுகிறது என்பதை உண்மை. இதனால் அருகாமைப் பள்ளியில் குழந்தைகளை படிக்க வைப்பது மிக அவசியமாகும்.
அத்தோடு குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சத்தான உணவை வழங்க வேண்டும். காய்கறிகள் கீரைகள், முட்டை இறைச்சி மீன் போன்ற எளிய சத்தான உணவுகளை சமைத்து குழந்தைகளை உண்ணச் செய்தல் பெற்றோர்களின் கடமையாகும். இதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வது மட்டுமின்றி உடல் நிலையில் எந்த பாதிப்பின்றி அவர்கள் கல்வி கற்க இயலும் என்பதையும் வலியுறுத்துகிறார் நூலாசிரியர்.
இன்றைக்கு தொலைக்காட்சியும், திரைப்படங்களும் குழந்தைகளுக்கு பேச்சு மொழியினை அளவுக்கு அதிகமாக கற்றுத் தருகின்றன. ஆனால் அதே பேச்சு மொழியை குழந்தைகள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் தான் குறைவாக உள்ளன எனவே அதற்கான வாய்ப்பினை பெற்றோர்களும் பள்ளிகளும் ஏற்படுத்தித் தர வேண்டும் குறிப்பாக கதை சொல்ல வைத்தல், நூல்களை வாசிக்க வைப்பது பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்வதன் மூலம் அவர்கள் கற்றறிந்து பேச்சு மொழியை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை பெற முடியும். கற்பனை சூழல்களை ஒரு குழந்தை சந்திப்பதும், யோசிப்பதும் ஆகச் சிறந்த வாழ்வியல் கல்வியாக உருவாகும் என்பதே இயல்பான சூழலாகும்.
இன்றைக்கு நம்மிடையே ஆண் பெண் நட்பே தவறு என்ற கண்ணோட்டம் நிலவி வருகிறது இதை சரியான முறையில் மாற்றி இருவரும் பழக வாய்ப்பு ஏற்படுத்தி தருவது அவசியம் அதுவும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் நட்பாய் இருப்பது தவறல்ல என்ற பார்வையை குழந்தைகளிடம் விதைப்பது மிகவும் அவசியமாகும் பெண் குழந்தைகளிடம் துணிவை கற்றுத் தருவது சமூகமாக இயங்குவதை அவர்களுக்கு உறுதி செய்வது போன்றவை அவசிய தேவை ஆகிறது.
ஒரு குழந்தை மிகச்சிறந்த ஆளுமையாக உருவாவதற்கு பெற்றோரும், பள்ளி ஆசிரியரும் உறுதுணையாக இருப்பது மிக அவசியமாகும்.
குறிப்பாக வகுப்பறை தாண்டி கற்கும் சூழல் இன்று அதிகம் உள்ளது. இன்றைக்கு இணைய வழி கல்வி என்பது அடிப்படை தேவையாக மாறிப்போனது. எனவே வகுப்பறையை தாண்டி இணையத்திலும் கற்றுக் கொள்வதற்கு சரியான வழிகாட்டல் நாம் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கணணியும் இணையமும் ஆசிரியர்கள் விட தகவல்களை விரிவாகவும் எளிதாகவும் கற்றுத் தருகிறார் தருகிறார்கள் என்பதே உண்மை.
நாம் குழந்தைகளை கண்காணித்து நல்வழிப்படுத்தவும் ஒழுக்க நன்னெறிகளை புகுத்தவும் உறுதுணையாக இருந்தாலே அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
இது போன்ற பல்வேறு தகவல்களை திரட்டி, எளிமையான, கட்டுரையாக்கி நமக்கு வழங்கி உள்ளார் நூல் ஆசிரியர் முனைவர் மாதவன்.
கல்வித்துறையில் தொடர்ந்து பணியாற்றி வரும் முனைவர் மாதவன் தன்னுடைய அனுபவப் பகிர்வுகளை நிறைய நூல்களில் தந்துள்ளார். இந்த நூலும் அதே வரிசையில் திறம்பட கொண்டுவரப்பட்டுள்ளது.
கல்வியாளர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் இந்த நூலினை வாசிப்பது அவசியம்.
புத்தகத்தின் விவரம்:
நூல்: “வாழும் தலமெங்கும் வகுப்பறைகள்”
ஆசிரியர்: முனைவர் என். மாதவன்
வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன், சென்னை – 600018.
தொடர்பு எண்: 04424332924
விலை: ரூ.150/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
நூல் அறிமுகம் எழுதியவர்:
– MJ. பிரபாகர்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.