பூமி மையமா? சூரியன் மையமா?
அறிவியலாற்றுப்படை – 30
– முனைவர் என்.மாதவன்
நூறு கிலோகிராம் எடைக்கல் ஒன்று. மற்றொன்று 10 கிலோகிராம் எடைக்கல். இந்த இரண்டையும் பத்து அடுக்கு மாடியின் தளத்திலிருந்து பூமியை நோக்கிவிடுகிறோம். இந்த இரண்டில் எந்த எடைக்கல் தரையினை விரைவாக வந்தடையும். உங்கள் விடை 100 கிலோ கிராம் எடைக்கல்லா? கொஞ்சம் பொறுங்கள்.
16 ஆம் நூற்றாண்டு. இத்தாலியின் பைசா நகரம். அங்கிருந்த புகழ்பெற்ற சாய்ந்த கோபுரத்தின் அருகில் பொதுமக்கள் நிற்கின்றனர். அந்த கோபுரத்தின் உச்சியை ஒருவர் அடைகிறார். அதன் உச்சியிலிருந்து வெவ்வேறு எடை கொண்ட இரண்டு பொருட்களை விடுகின்றார். ஊரே உங்களைப் போன்று எடை அதிகமான பொருளே விரைவில் பூமியை அடையும் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பாருங்கள் இரண்டு பொருட்களும் ஒரே நேரத்தில் பூமியை வந்தடைகின்றன. பல நூற்றாண்டுகளாக பலரும் நம்பிக்கொண்டிருந்த அரிஸ்டாட்டிலின் கற்பிதம் பொய்யாகிறது. ஆம் அரிஸ்டாட்டில் (Aristotle) அவ்வாறே கற்பித்திருந்தார். இரண்டு வெவ்வேறு எடை கொண்ட பொருட்களை மேலிருந்து வீசினால் அதிக எடை கொண்ட பொருளே முதலில் பூமியை அடையும் என்பதே அவரது கூற்று. பல நூற்றாண்டுகள் கேள்விக்குள்ளாக்கப்படாததை கேள்விக்குள்ளாக்கிய பெருமைக்குரியவர். யார்? ஆம் அவ்வாறு மெய்ப்பித்தவர் கலிலியோ கலிலி (Galileo Galilei). வாழ்நாள் முழுவதும் அறிவியலை மெய்பித்து மெய்ப்பித்து அவர் அடைந்த வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. அவரது வரலாறைப் பார்ப்பதற்கு முன் சில பல பஞ்சாயத்துகளை முடிப்போம்.

பூமி தட்டை என்பதை தவறென நிருபித்து அதனை கோளவடிவம் என மெய்ப்பித்ததை கடந்த பகுதியில் பார்த்தோம். இதே காலகட்டத்தில் வேறு சில கருத்தோட்டங்களும் நிலவத் தொடங்கின. காலையில் கிழக்குப் பக்கமாகத் தோன்றும் (தோன்றுவதாகத் தெரியும்) சூரியன் மாலையில் மேற்குப் பக்கமாக மறைகிறது (மறைவதுபோல் தோன்றுகிறது.) அன்றைக்கிருந்த உற்றுநோக்கல் வசதியால் அவ்வாறே கருத இயலும். இதனால் சூரியன் பூமியைச் சுற்றுகிறதா? பூமி சூரியனைச் சுற்றுகிறதா? என்ற கேள்வியும் பிறந்தது. கிரேக்க அறிஞர் டாலமி( 100 பொ.ஆ -160 பொ.ஆ) பூமியே மையம். இந்த பூமியைச் சுற்றித்தான் சூரியன் உள்ளிட்ட அனைத்து விண்பொருட்களும் சுற்றிவருகின்றன என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தார். நமக்கேன் வம்பு என அடுத்து வந்த பலரும் அதுவே உண்மையென நம்பினர். உண்மையில் அன்றைக்கிருந்த வாய்ப்பில் குறிப்பாக கிரேக்க ரோமானிய நாகரீகங்களில் அனைத்து விண்பொருட்களும் கடவுளாக ஆக்கப்பட்டிருந்தது. இதற்கு மத்தியில் விண்ணிலுள்ள பொருட்களின் இடமாற்றத்தினைத் தொடர்ந்து கண்டறிந்து கணித்து கருத்து கூறியது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது. அரிஸ்டாட்டில் (Aristotle), பிளாட்டோ (Plato) போன்றோரும் இப்படிப்பட்ட கருத்தையேக் கொண்டிருந்தனர்.
அன்றைக்கு அவர்களுக்கிருந்த செல்வாக்கினால் அவர்கள் சொன்ன அனைத்துமே வேதவாக்காகக் கொள்ளப்பட்டது. ஒருவகையில் அவர்கள் அவ்வாறான கருத்தைப் பதிந்ததும் நல்லதே. அடுத்தடுத்த வந்தவர்கள் அவர்கள் விட்ட இடத்திலிருந்து தமது பணியைத் தொடங்க உதவிகரமாக அவைகள் இருந்தன.
ஆனால் இதே காலகட்டத்தில் சூரியமையக் கோட்பாட்டிற்கான கருத்தோட்டங்களும் பதியப்பட்டன. கிரேக்க நாட்டிலிருந்த பொ.ஆ .3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரிஸ்டார்கஸ் என்பவர் சூரியமையக் கோட்பாட்டிற்கான துவக்கக் கருத்துக்களைப் பகிர்ந்தார். அவரைப் பொறுத்தவரை அவர் சரியாகவே கணித்திருந்தார். ஆனால் தாலமி (Ptolemy), பிளாட்டோ (Plato), அரிஸ்டாட்டில் (Aristotle) போன்றோரின் பாட்டுக்கு எதிர்பாட்டா இவரை பாவம் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

அடுத்து வந்த பலரும் பூமிமையக்கொள்கையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கினர். குறிப்பாக 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கோப்பர் நிகஸ் அவர்கள் சூரியன் தான் மையம். சூரியனைச் சுற்றியே பூமி உள்ளிட்ட மற்ற கோள்கள் சுற்றிவருகின்றன என்றார். இவ்வாறான கருத்தோட்டங்கள் அனைத்துமே வரலாற்றில் பதிந்துள்ளது என்பது அறிவியல் ஆரோக்கியமான திசையில் பயணிக்க உதவியது.
குறிப்பாக 16 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு இது போன்ற கருத்துப் பரிமாற்றங்கள் அதிகம் நடந்த ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவ மதம் செல்வாக்கான நிலையில் இருந்தது. இவ்வாறான மத நிறுவனங்களோடு தொடர்பில்லாத அறிஞர்கள் யாருமே அந்த காலத்தில் இருக்க இயலாத நிலையிருந்தது. அறிவியலின் மூலம் புரட்சிகரமான கருத்துக்கள் பரவுவதை இந்த நிறுவனங்கள் விரும்பவில்லை. இதனால் அறிவியல் பூர்வமாக சிந்தித்து கருத்துக்களைச் சொன்ன பலரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.

குறிப்பாக கலிலியோ கலிலி (Galileo Galilei, 1562- 1642 ) அவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கலிலியோவை அவரது அப்பா மருத்துவராக்க வேண்டுமென்ற கனவுடன் பைசா நகரத்திலிருந்த பல்கலைக் கழகத்தில் சேர்த்தார். அங்கே அப்பாவின் விருப்பப்படி மருத்துவம் பயின்றுகொண்டே கணித வகுப்புகளையும் கவனித்தார். இவர் கவனித்ததை அவரது கணித ஆசிரியரும் கவனித்துவிட்டார். பிறகென்ன இவருக்கு கணிதம் கற்பிக்கத் தொடங்கினர். கலிலியோவும் கணிதம் கற்று அக்கல்லூரியிலேயே கணிதப் பேராசிரியரானார். கலிலியோ எந்த நேரமும் எல்லாவற்றையும் உற்றுநோக்கும் ஆர்வம் கொண்டவர். ஒருமுறை தேவாலயத்திற்குச் சென்றபோது அங்கு மாட்டப்பட்டிருந்த விளக்கு அங்குமிங்கும் ஒரு குறிப்பிட்ட லயத்தில் அசைவதை ஆச்சரியத்துடன் பார்த்தார். அது ஒவ்வொரு முறை அலையும் நேரத்தையும் கணக்கிட்டு ஊசல் தத்துவத்தைக் கண்டறிந்தார்.
அன்றைய காலகட்டங்களில் எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் அரிஸ்டாட்டிலின் கொள்கைகளை வரிக்கு வரி மாறாமல் பல்கலைக் கழகங்கள் கற்பித்துக்கொண்டிருந்தன. அரிஸ்டாட்டிலின் அறிவியலுக்கொவ்வாத கருத்துக்களை கலிலியோ கேள்விக்குள்ளாக்கினார். அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்றினையே இந்த பகுதியின் முதற்பகுதியில் பார்த்தோம். கலிலியோ, கோப்பர் நிகஸ் அவர்களின் கோட்பாடுகளை ஆழ்ந்து கற்றார். இதன் மூலம் சூரியன் தான் மையம் என்ற கோட்பாட்டை மெய்ப்பித்தார். முந்தைய காலங்களைவிட லென்சுகளின் கண்டுபிடிப்பு இவரது ஆய்வுக்கு உதவியது. லென்சுகளின் கண்டுபிடிப்பையும் கொஞ்சம் பார்த்துவிட்டு கலிலியோவின் வாழ்க்கைப் பயணத்தைப் பார்ப்போம்.
படை எடுப்போம்.
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.