நூல் அறிமுகம்: ஞா. சிவகாமி அம்மையாரின் *மண்சோறு (சிறுகதைகள்)* – புதுவை யுகபாரதி

நூல் அறிமுகம்: ஞா. சிவகாமி அம்மையாரின் *மண்சோறு (சிறுகதைகள்)* – புதுவை யுகபாரதி



நூல் : மண்சோறு (சிறுகதைகள்)
ஆசிரியர் : ஞா. சிவகாமி
ஏகம் பதிப்பகம் வெளியீடு
விலை : ரூ.90-
ஒரு படைப்புப் படிக்கும்போது, படிக்கத் தூண்டவேண்டும்; படித்து முடித்தபின் ஏதாவது செய்ய வேண்டும் என்பார்கள் அறிஞர் பெருமக்கள். அதுதான் படைப்பின்-படைப்பாளியின் வெற்றி என்றும் கூறுவர்.

சிவகாமி அவர்கள் இக்கருத்தில் சற்றே மாறுபடுகிறார்.  என் படைப்புகள் படிப்பவர்களை ஏதாவது செய்கிறதோ இல்லையோ? எனக்குத் தெரியாது.  ஆனால், என்னை உறங்கவிடாமல் செய்த நிகழ்வுகளை மட்டுமே நான் படைப்புகளாகத் தருகிறேன் என்கிறார்.

அவர்தம் மண்சோறு சிறுகதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளும் அவ்வகையில்தான் படைக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் 27 சிறுகதைகள் உள்ளன. அத்தனை கதைகளும் இரண்டு முதல் நான்கு பக்கங்களுக்குள் அடங்கிவிடுகின்றன.  விரைவாகப் படிக்கவும் முடிகிறது; படிக்கச் சுவையாகவும் இருக்கிறது;

முதல் கதை, பேரழகி.  இக்கதை சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் இளையோர் காதலைப் பேசுகிறது. கூந்தல் என்னும் நிறைவுக் கதை பல திருப்பங்களை உள்ளடக்கிய முதியோர் காதலைப் பேசுகிறது.
விபத்தொன்றில் கணவனை இழந்து, மகளுடன் குழந்தையுடன் தவிக்கும் ஒரு தாயின் கதையிது. அவளுடைய கூந்தல் மிக நீளமானது. இவர்களுக்கு ஒரு பெண் மருத்துவர் உதவுகிறார். புற்றுநோய் மருத்துவர் அவர். மாந்தநேயம் கொண்டவர். அவரின் அன்பில் நெகிழ்ந்து போகிறாள் அந்த விதவைத்தாய்.
புற்றுநோய் மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற ஒரு செல்வந்தரின் மகளின் தலை மொட்டையடிக்கப் படுகிறது.  அவர்க்குக் கூந்தல் தேவைப்படுகிறது. விதவைத் தாயிடம் மருத்துவர் கேட்கிறார்.  தனக்கு உதவி செய்த மருத்துவர் கேட்டவுடன் அருவாமணையை எடுத்து இப்போதே அறுத்துத் தருகிறேன் என உணர்ச்சிவசப்பட்டு தன் நன்றிக்கடனைச் செலுத்த விழைகிறார் அந்த விதவைத்தாய்.
அதைக்கண்டு நெகிழ்ந்துபோன, அந்தச் செல்வந்தர், ஐந்து இலட்சம் பணத்தைத் தருவதோடு, அந்த விதவைத் தாயின் மகளைத் தானே படிக்க வைப்பதாக உறுதியளிக்கிறார்.  ஆனால், அந்த விதவைத் தாய், அந்தப் பணத்தை ஏற்காமல், அதை அந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளச் சொல்கிறாள். நெகிழ்ச்சியுடன் கதை முடிகிறது. இதுபோன்ற கதைகள்தான் இன்றைய தேவை.
சோதிடக்காரி என்னும் ஒரு துன்பியல் கதையும் உண்டு.  இக்கதை, சோதிடம் சொல்கின்ற பெண் ஒருததியின் வறுமை நிறைந்த துன்பக் கதையைப் படம்பிடிப்பதுடன், இடதுசாரி-வலதுசாரி அரசியலையும் தொட்டுப்போகிறது.  புதுமையான கதை.

இத்தொகுப்பின், மிகச்சிறப்பான கதையாக üயாரும் இல்லாதவர் கதை அமைந்துள்ளது.  முத்தின கத்தரிக்காயைக் கத்தரிப் பழம் என்று சொல்லும் இக்கதை படிக்கும்போது கண்களில் நீரை வரவழைத்து விடுகிறது. முதியோர் குறித்து வந்துள்ள கதைகளில் இக்கதை முற்றிலும் வேறுபட்டுள்ளது. கதையின் முத்தாய்ப்பான இறுதிப் பகுதியைக் கண்டிப்பாகப் பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும். இதோ…

மணி தன் படுக்கையை நனைத்திருந்தாள்.  முதன்முதலில் படுக்கையில் சிறுநீர் கழித்திருந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்பா-அம்மாயைக் காணவில்லை. கண்டதெல்லாம் கனவு. அழுதாள் சுந்தரமணி, எழுபது வயதுக் கிழவி. தன் அப்பா அம்மாவை நினைத்து.

என்று எழுபது வயது மூப்பின் கொடுமையைச் சொல்லிக் கதையை நிறைவுசெய்துள்ளது எவரையும் நெகிழச்செய்யும். இதுபோன்ற நிறைய கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

குடும்ப மேம்பாட்டுக் கதைகளைத் தொடர்ந்து தருகின்ற சிவகாமி அம்மா பாராட்டுக்குரியவர். இவர், புதின இலக்கியத்தில் கவனம் செலுத்தினால் மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளர் üஇலட்சுமிýபோல் புகழ்பெறுவர் என்பது திண்ணம்.

அன்புடன் 
புதுவை யுகபாரதி
(தமிழ் ஆலோசனைக்குழு உறுப்பினர், சாகித்திய அகதாமி)
நூல் : மண்சோறு (சிறுகதைகள்)
ஆசிரியர் : ஞா. சிவகாமி
ஏகம் பதிப்பகம் வெளியீடு
விலை : ரூ.90-



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *