Harmonium - Five Photograph by Sam Hymas

கறுப்பு வெள்ளைக் கட்டைகள்

****************************

அவன் கையில் முளைத்திருந்தது

ஒரு செவ்வக இதயம்.

அதன் ஈர்ப்பில்

இரவு முழுவதும் ஊஞ்சலாடும்

இரண்டு கண்களும்

ஒருவேளை

தன்னை மீறித் தூங்கிவிட்டாலும்

இருட்டிலும் துடித்துக் கொண்டிருக்கும்

இதயத்தின் உச்சியில்

ஒரு மின்மினிப் பூச்சி.

அதற்குள்ளிருக்கும்

உலவி சாட்டையில்

உத்தரவு கிடைக்கும்.

பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்தே நாளானாலும்

செயற்கைக் கோளுடன்

சிநேகம்.

நிமிடங்களில்

புரட்சி அழைப்பு வர

போர்க்கள சிப்பாயாய்ப் புறப்படுவான்

முகநூல் டிவிட்டர்

வாட்சப் இன்ஸ்டாகிராம்

போடுகிற விருப்பங்களும்

வருகிற கமென்டுகளும்

வழிந்து குவியும்.

பிறந்தநாள் திருமணநாள்

இரண்டுக்குமே

எங்கெங்கிருந்தோ

இணைய ‘மொய்’கள்.

அடுத்தவர் நோய்க்கு ஆறுதலும்

தவறிப் போனவர்க்கு

ஆழ்ந்த இரங்கலும்

விசையழுத்தும் விரல்கள்.

அவன் கவனத்தில் தப்பிய

வீடொன்றுண்டு

தூசும் தொங்கும் ஒட்டடையுமாக

பராமரிக்காமலும் பழுது பார்க்காமலும்

அதிகம் புழங்காத அறையொன்றில்

அறுந்து விழுந்த சிலந்தி வலைகளாய்

இரண்டு இதயங்கள்.

இளமையில் விளையாடிய விரல்களின்

பழைய நினைவுகளில்

குப்புறக் கவிழ்ந்து கிடக்கும்

இருமலிசை தந்தபடி

அம்மா ஆர்மோனியப் பெட்டியும்

அப்பா ஆர்மோனியப் பெட்டியும்.

~~~~

சிலுவைகள் துப்பாக்கிகளாகின்றன

**********************************************

Flintlock Pistol, A Favoured Weapon Of 18th-century - Old ...

அகிம்சைத் தெருவுக்கு நேர் எதிரிலிருந்த

இட்லர் தெருவில்

நடந்துகொண்டிருந்தபோதுதான்

ஒரு காவியேறிய துணியால் சுற்றிவைக்கப்பட்ட

கைத்துப்பாக்கியைக் காண நேர்ந்தது

அதில் முசோலினியின் முத்திரை பதித்திருந்தது

மூக்கைத் துளைக்கும்

நாதுராம் கோட்சேவின் புலால் சமையல்

தூரத்தில்

எங்கோ தேய்ந்து மறையும்

ஹேராம் என்கிற மகாத்மாவின் கடைசி ஓலம்

ஒரு பழைய சைக்கிளின்

‘பெண்டு’ விழுந்த சக்கரத்தின்

சுழலும் ராட்டையில்

ஆரஞ்சு நிற நூல் கண்டுகள்

வழியில் நாட்டி வைக்கப்பட்டிருந்தன

சில அலங்கார பொம்மைகள்

பூனாவின் கடைத் தெருவில்

மந்திரவாதிகளைத் தோற்கடித்தவனின்

கொய்தெடுத்த சிரம்

மாகாராஷ்டிர மாசாணத்தில்

கொலுவில் அறையப்பட்ட

சிவாஜியின் சிப்பாய் பொம்மை

கர்நாடகக் கண்காட்சியகத்தில்

கல் சிலைகளில்

கண் திறந்து வைத்தவனின்

எலும்புக் கூடு

அறிவுச்சத்துக் குறைபாட்டால்

மூளைச் சிறுத்த பிள்ளைகளுக்குப் பாலூட்டித்

தளர்ந்து தொங்கிய

அறுக்கப் பட்ட

தாயொருத்தியின்

இரண்டு மார்பகங்கள்

மேலும் நடக்க முடியாமல்

மிரண்டு நின்றேன்

எங்கிருந்தோ ஒரு துப்பாக்கி

என்னைக் குறிபார்த்துக் கொண்டிருந்தது.

~~~~

நா.வே.அருள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *