கவிதை: ஏர் – நா.வே.அருள்ஏர்

****

விவசாயிகளே

உங்கள் வீரம் சாதாராணமானது அல்ல

அது விதையைப் போல எளிமையானது

ஆனால்

விருட்சத்தைப் போல வளரக் கூடியது!

நீங்கள்தான்

டிஜிட்டலில் தோற்கடித்தவர்களை

நேரில் நிலைகுலைய வைக்கிறீர்கள்.

அவர்கள் மந்திரவாதிகள்

சமாதியைக் கோயிலாக்கி

மந்திரித்த எலுமிச்சையைப் போல

திசைக்கு ஒருவராய் எறிந்து

ஆடையில்லாத டிசம்பர் மாதக் குளிருக்கு

சனாதனத்தின் பிணத்தோலை

ஓர் உயர்தர ஆடையைப்போல உடுத்தியவர்கள்.

நீங்கள் பருவத்தில் பயிர் செய்பவர்கள்

காலத்தில் களையெடுப்பவர்கள்

சிவப்பைப் பச்சையாக்கும் ரசவாதம் தெரிந்தவர்கள்

அவர்கள் சூழ்ச்சிக் காரர்கள்

கறுப்பு இலைகளை உதிர்க்கப் போவதாய்

காடுகள் முழுவதும் மரநீக்கம் செய்தவர்கள்

உங்களுக்கோ….

நிலங்கள் போர்க்களங்கள்

டிராக்டர்கள் பீரங்கிகள்

தண்டவாளத்திலும் டிராக்டர்கள் உருட்டும்

போர்த் தந்திரங்கள்

அவர்கள் உள்ளே நுழைந்தபின்

கூடாரத்திலிருந்தவர்களை வெளியேற்றும்

ஒட்டகத்தைப் போல

பூர்வ குடிகளை வெளியேற்றத் துடிக்கும்

பூசணிச் சோற்றுக்காரர்கள்.

உங்கள் உழுகையில் களைத்துப்போன

அரச மாடுகளுக்கு மூச்சு வாங்குகிறது

உங்கள் முதுகெலும்பின் முனையில் கோர்த்த

விலா எலும்புதான்

பாராளுமன்றத்தை அசைத்துப் பார்க்கும்

இந்தியாவின் ஏர்க்கலப்பை

‘ஏருழவன்’ ஐத் தேர்தல் சின்னமென்று

சுய கோமியக் குடிகாரனின் நாடகம்

இன்று வெட்கமே இல்லாமல் வெளுத்துவிட்டது.

அவர்கள் கொடியில் இருந்த ஏருழவர்கள்

இன்று தெருவில் கிடக்கிறார்கள்.

எங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது

உங்கள் முறத்தின் விதை நெல்லிலிருந்து

முளைவிடப் போகிறது சுதந்திரப் பயிர்

அவர்கள்

நீதியின் தூக்குக்கயிற்றில் பாராளுமன்றத்தையே

பம்பரம் சுழற்றுகிற–

எந்திரங்களைக் கூட பொய் பேச வைக்கிற–

தேர்தல் விஞ்ஞானிகள்.

நீங்கள் மண்புழு மருத்துவர்கள்

புதிய வேளாண் சட்டங்களால் நோயுற்றுப்போன

பாராளுமன்றத்தைக் கிருமி நீக்கம் செய்ய

கலப்பைதான் சிறந்த கருவி

                        நா.வே.அருள்