1.
விடியலுக்காக காத்திருந்தன
அந்தப் பூக்கள்
சூரியக் கதிர்கள் பட்டு சிலிர்த்தன
தனது உடலைத் தளர்த்தி
நிலைப்படுத்திக் கொண்டன
மலர்ச்சியில் விரிந்த
இதழ்களின் சிரிப்பில்
ஒரு கணம் துயரம் மறைந்தது
அன்றாடம் யாருக்காகவோ
எதையோ உணர்த்துகின்றன
பிறப்பின் ரகசியம்
இறப்பின் ரகசியம்.
2.
பாவனை செய்யாது இயற்கை
இயற்கை நகல் எடுக்கத் தெரியாது
இயற்கையொரு காண்பொருள்
இயற்கையொரு நிஜ கவிதைக்காரி
இயற்கையொரு நாட்டியப் பெண்
இயற்கையொரு பிரபஞ்ச சொர்க்கம்
இயற்கையொரு நிரந்தரம்
3.
விக்ரமாதித்தன்
சுகிரதராணி
ரமேஷ் பிரேதன்
இவர்களின்
உடல்மொழி ஊடல்மொழி
அரசியல் மொழி கவிதைகள்
காமசூத்திர கவிதைகள் அல்ல
கலக சூத்திர கவிதைகள்.
4.
மௌனமாய் இருக்கும் பெண்ணிடம்
சற்று எச்சரிக்கையாய் இரு
அவள்
அதிர்ப்பேச்சில்…புதிர்ப்பேச்சில்…
5.
பல வயல்கள்
பல துளைகள்
வரப்பில் நண்டுகள்
வாசம்
பயிர்கள் நாசம்
ந க துறைவன்
வேலூர் – 632 009.

