1.
நம்பிக்கை
நம்பிக்கை இருக்கிறது சில நேரங்களில்
நம்பிக்கை இல்லை எவர் மீதும்
எப்பொழுதும் அதை மனமே தீர்மானிக்கிறது
நம்பிக்கையானவர்கள்
எவரும் தென்படுவதில்லை
இக்கணம் வரை
நம்பிக்கையானவர் யார்? என்று
விரைந்து முடிவெடுப்பதில்லை
மனம்
நம்பிக்கையானவர்களை
நம்பிக்கையோடு தான்
யார் யாரோ? எவர் எவரோ?
தேடுகிறீர்கள்
சதாகாலமும் மனவெளியெங்கும்.
2.
கனவு
இரவெல்லாம் கனவில் கட்டிப்பிடித்து முத்தமிட்டு மகிழ்ந்தேன்.
கனவு விளையாட்டு கற்பனை என்று
உதாசீனம் படுத்த முடியாது
நிஜம் போலவே
என்னென்னவோ தெரியாத
உணர்ச்சி பெருக்கில் ஊடல்கள்
நீண்ட நெடிய நேரம் கனவு தொடர்கிறது
விழிப்பில்லாமல் மௌனமாய்
அந்த அற்புதமான தருணத்தில்
திடீரென ஏதோவொரு சத்தம்
அருகில் இருந்த செல்போன்
ஒலியெழுப்பியது
அரைத்தூக்கம் கலைந்தது
செல்போன் எடுத்து எண் பார்த்தேன்
புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாக
தகவல் சொன்னாள்
ஊருக்கு போயிருந்த மனைவி.
3.
தவளை
மழைநீர் நிரம்பிய குளம்
நான் குளிக்க இறங்கும் போது துள்ளிக் குதித்து
அடுத்த படிக்கட்டிற்கு தாவி அமர்ந்து
என் அரைநிர்வாணக் குளியல்
பார்த்து விட்டு மீண்டும்
அடுத்த படிக்கட்டின் மீது போய் அமர்ந்தது
பாசிப் படர்ந்திருந்தப் படிக்கட்டில்
புழுவொன்று தத்தளித்து மிதந்தது
சட்டென தன் நாவை நீட்டிப்
பிடித்து வாய்க்குள் இழுத்தது தவளை
புழு, அகால மரணம்
நான் குளித்து கரையேறினேன்
என் லௌகீக வாழ்க்கைத் தொடர…!!
4.
கற்சிலை
அங்கே என்ன பார்த்தேன்
பார்வைக்கு கவர்ச்சியாய்
மனம் கவர்ந்தது எது?
அது என்னோடு பேசவில்லை
அதனுடன் நான் பேசினேன்
அந்த வார்த்தைகள்
அதற்கு புரிந்திருக்குமா? தெரியாது
எனக்கு மட்டும் எத்தனையோ கற்பனைகள்?
வெளியில் வராத கவிதை வரிகள்
என்னுள் கனன்று எழுந்தது
இன்னும் அந்த கற்சிலையை விட்டு
மனம் அகலவில்லை
அங்கேயே நின்றிருந்தேன்
அதன் முன் மௌனமாய்
கொஞ்சம் நேரம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.