நா.முத்துநிலவன் "தமிழ் இனிது" - நூல் அறிமுகம் இந்து தமிழ் திசை | Na. Muthunilavan's Thamizh Inithu book review-Hindu Tamil Thisai publication | https://bookday.in/

தமிழ் இனிது – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள்: 

நூல்: தமிழ் இனிது

ஆசிரியர்: நா.முத்துநிலவன்

வெளியீடு: இந்து தமிழ் திசை

பக்கங்கள்: 158

விலை: ரூ.160/

தொடர்புக்கு: 9443 193 293.

நாடறிந்த பேச்சாளர், எழுத்தாளர், தமிழறிஞர், கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் எழுதியுள்ள ‘தமிழ் இனிது’ நூல் – அமெரிக்கக் காலக்கோட்டின்படி அந்நாட்டின் விடுதலைத் திருநாளான சூலை 04 அன்று – வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) நிகழ்வில் வெளியீடு கண்டது.

‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் கடந்த ஓராண்டாக எழுதி வந்த தொடரை நூலாக்கிப் புகழ்மிகு தமிழ் ஆளுமைகளான எழுத்தாளர் அழகிய பெரியவன், கவிஞர் அ.வெண்ணிலா, சிந்துச் சமவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருட்டிணன் இ.ஆ.ப., பேச்சாளர் ஏ.கலியமூர்த்தி, தமிழ்த் தொண்டர் பாலா சுவாமிநாதன் முதலானோர் முன்னிலையில் வெளியிட்டுள்ளார் முத்துநிலவன் அவர்கள்.

சங்க இலக்கியங்கள் சமயச் சார்பற்றவை என வெளிநாட்டினர் கூட வியந்து போற்றுவதில் தொடங்கியது இத்தொடரின் முதல் கட்டுரை. அதிலேயே அடுத்த பத்தியில் “மொழி என்பது வெறும் இலக்கியத்துக்காகவும் இலக்கணத்துக்காகவும் மட்டுமில்லை, அது நம் வாழ்வியலுக்கு வழிகாட்டவே” என்று எடுத்துக் கூறி அதற்கான எடுத்துக்காட்டாக ‘ஊழல்’ எனும் சொல்லுக்கு அசத்தலான விளக்கம் ஒன்றைத் தந்து முதல் வாரத்தை ஐயா முடித்திருந்தார்.

அடுத்தடுத்து, தமிழ் நெடுங்கணக்கில் (alphabets) எழுத்துகள் வரிசைப்படுத்தியிருக்கும் விதத்துக்கான காரணம், சென்னைத் தமிழ் வட்டார வழக்கில் ஒளிந்திருக்கும் சங்கத் தமிழ்ச் சொற்கள், “மாசறு பொன்னே வலம்புரி முத்தே…” எனும் புகழ் பெற்ற சிலப்பதிகாரப் பாடலின் ஒற்றைச் செய்யுளுக்கு ஐந்து வகை விளக்கம் என ஒவ்வொரு வாரமும் அவர் எடுத்துக் கொண்ட பேசுபொருள்கள் தமிழின் பெருமைகளை 21ஆம் நூற்றாண்டின் பிள்ளைகளுக்கும் இனிக்கும்
வகையில் பரிமாறின.

தமிழின் சிறப்புகளைச் சொன்னால் மட்டும் போதுமா? அந்தச் சிறப்புகளெல்லாம் நீடித்து நிலைக்க, நாம் பிழையின்றித் தமிழை எழுதுவதும் பேசுவதும் இன்றியமையாதது இல்லையா? அதற்கான வழிகாட்டுதலாய், தமிழில் நாம் செய்யும் பொதுவான பிழைகளையெல்லாம் தொகுத்து, அவற்றை எப்படித் தவிர்க்கலாம் என்பதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தார். ஏற்கனவே, பனிரெண்டு, கோர்வை, சில்லரை, நினைவுகூறல், சுவற்றில் என ஒரு பெரிய பட்டியல் இது. இது போக, சிவப்பா சிகப்பா? கோயிலா கோவிலா? காவிரியா காவேரியா? இயக்குனரா இயக்குநரா? வாழ்த்துகளா வாழ்த்துக்களா? மங்களமா மங்கலமா? – இப்படித் தமிழில் வெகுகாலமாக நீடிக்கும் பல கேள்விக்குறிகளுக்கும் இந்தத் தொடர் முற்றுக்குறி (முற்றுப்புள்ளி) வைத்தது.

வெறுமே இப்படி எழுத்துப்பிழை மட்டுமில்லை உச்சரிப்புப் பிழை, சொற்றொடர் அமைப்புப் பிழை, மரபுப்பிழை, பயன்பாட்டுப் பிழை, கருத்துப்பிழை, பால்மயக்கம், பண்பாட்டுக் குழப்பம் என வகை வகையாகப் பல்வேறுபட்ட பிழைகளுக்கு இத்தொடர் தீர்வு வழங்கியது. அதுவும் எது சரி என்பதை மட்டுமில்லாமல் அது ஏன் சரி என்பதற்கான காரணம், பழந்தமிழ் நூல்களிலிருந்து அதற்கான அத்தாட்சி என யாரும் மறுக்கவே முடியாதபடி அந்த விளக்கங்களைப் பதிவு செய்ததுதான் சிறப்பு! தொல்காப்பியம், திருக்குறள், அகநானூறு, புறநானூறு, சீவக சிந்தாமணி, சிறுபாணாற்றுப்படை எனத் தொடங்கி சித்தர் பாடல்கள்,

புதுக்கவிதைகள், திரைப்படப் பாடல்கள் வரை தமிழ்ப் பெரும் தேன்கடலில் சரியான சொற்களுக்கான மேற்கோள் முத்துக்களைத் தன் பெயருக்கேற்பத் தேடித் தேடி எடுத்து வந்து இறைத்திருக்கிறார் ஐயா அவர்கள்!

அதற்காக இது வெறுமே பிழைதிருத்தம் பற்றிய படைப்போ என நினைத்து விடாதீர்கள்!

ஆழமான ஆய்வுகளும் உண்டு.

மரூஉ மொழி பற்றிப் பள்ளிகளில் நாம் அனைவருமே படித்திருப்போம். ஐயாவும் இதில் சொல்கிறார் – பெயரன் என்பதன் மரூஉதான் பேரன், பெயர்த்தி என்பதன் மரூஉதான் பேத்தி என்றெல்லாம். ஆனால் இத்தோடு அவர் நிறுத்தியிருந்தால் இந்தப் படைப்பும் பத்தோடு பதினொன்றாக ஆகி இருக்கும். மாறாக இதைத் தாண்டி, சொற்கள் எப்படி மருவுகின்றன என்பதையும் அதுவும் எழுத்து மட்டத்தில் (alphabetical level) ஆராய்ந்து இதில் அவர்

சொல்லியிருப்பதுதான் அவரது நுண்மாண் நுழைபுலம்!

இதையே சொல் மட்டத்தில் அவர் கூறுவது இன்னும் சுவை. எடுத்துக்காட்டாக, நாத்தனார் எனும் சொல்லுக்கு அவர் தரும் விளக்கத்தைப் பாருங்கள்! ஓரிடத்திலிருந்து பிடுங்கி இன்னோரிடத்தில் நடப்படும் நாற்று (இளம்பயிர்) அன்னாள் (போன்றவள்) என்பதுதான் நாத்தனார் என மருவியது என்கிறார். இதே போலக் ‘கொழுந்தனார்’ என்பதற்கும் ஒரு விளக்கம் தந்திருக்கிறார். அது என்ன என்பதைப் படிக்கும் நீங்கள் இந்நேரம் கணித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கணிக்க இயலாதவர்கள் புத்தகத்தில் 12ஆம் படலத்தைப் (chapter) பார்க்கலாம்.

இது போல இன்னின்ன எழுத்துக்கள் சொல்லின் முதலில் வாராமைக்குக் காரணம், தமிழரின் பழங்கால நேர அளவீட்டு முறை, பேச்சுத்தமிழில் இன்றும் உயிர்ப்போடு விளங்கும் தமிழ் மொழிமரபு, உயிர் – மெய் என எழுத்துக்களின் பெயரிலேயே மறைந்திருக்கும் தமிழர்களின் மெய்யியல் (Philosophical) சிந்தனை – இப்படிப் பல அரிய ஆய்வுப் பார்வைகள் நூலில் உள்ளன. இவ்வளவையும் இரண்டு மூன்று பக்கங்களே கொண்ட சிறு சிறு கட்டுரைகளிலேயே சொல்லி

விடுகிறார் என்பது இன்னும் வியப்பு! அதையும் நகைச்சுவை ததும்பச் சொல்வது நூலின்

தலைப்புக்கேற்ப இனிப்பு!

இதோ சில எடுத்துக்காட்டுகள்!

‘60ம் கல்யாணமா, 60ஆம் கலியாணமா?’ என்பது ஒரு கட்டுரையின் தலைப்பு. அதை எப்படித் தொடங்குகிறார், பாருங்கள்! “‘60ம் கல்யாணம்’, ‘60தாம் கல்யாணம்’ என்று அழைப்பிதழில் அச்சிடும்போதுதான் மகன், மகள், பேரப்பிள்ளை, உறவுகளால் வராத சிக்கல் இந்தத் தொடரால் வந்து விடுகிறது.” என்ன ஒரு மொழிநயமிக்க நகைச்சுவை, பார்த்தீர்களா!

தமிழில் ஆய்த எழுத்துப் பயன்பாடு கிட்டத்தட்ட அழிந்தே வருகிறது என ஓரிடத்தில் கவலைப்படுபவர் அடுத்த வரியிலேயே சொல்கிறார், “வன்முறைக்கு எதிரானவராக இருந்தால் ஆயுதத்தை ஒழிக்கலாம். ஆய்த எழுத்தை ஒழித்து விடலாமோ?” என்று. இடுக்கண் வருங்கால்
நகுக என்பது இதுதானோ!

‘சுவற்றில்’ என்பது தவறு; ‘சுவரில்’ என்பதே சரி. இதை ஐயா சொல்லும் விதத்தைப் பாருங்கள்! “‘சுவர்’ இடையின எழுத்தில் முடிகிறது. இதனால் சுவர் விழுந்துவிடுமோ(?) என்று, ‘சுவற்றில்’ என்று வல்லெழுத்துப் போடுவது தவறு.” இனி இந்தப் பிழையை யாராவது செய்வோமா?

இப்படி ஒவ்வொரு கட்டுரையிலும் நகைநயமிக்க வரிகள் மூலம் இலக்கண நூல் என்றாலே வறட்டுத்தனமாக இருக்கும் எனும் வழமையை உடைத்து அனைவரும் விரும்பிப் படிக்கும் வகையில் நூலை உருவாக்கியிருக்கிறார் ஐயா அவர்கள். எழுத்து மட்டுமில்லை இந்து தமிழ் திசை இதழினர் ஒவ்வொரு வாரமும் இந்தத் தொடருக்கு வெளியிட்ட படங்களும் கிச்சுகிச்சு மூட்டும் விதத்தில் அமைந்திருந்தன. அந்தப் படங்கள் அனைத்தும் நூலிலும் இடம்பெற்றிருப்பது
இளம்பிள்ளைகள் களைப்பின்றிப் படிக்க ஏதுவாக இருக்கும்.

நகைச்சுவையோடு சேர்த்துச் சில நுட்பமான சிந்தனைகளையும் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் ஐயா அவர்கள். எடுத்துக்காட்டாக, “தமில் வால்க, சாதி ஒளிக என்று சொல்வதால்தான் தமிழ் தனக்குரிய பெருமையோடு வாழாமலும் சாதி ஒழியாமல் ஒளிந்து கொண்டும் இருக்கிறதோ?” என்பது வியப்புக்குரிய சிந்தனை. இதே போல “ஙப்போல் வளை” எனும் ஆத்திசூடிக்கு இதுவரை யாரும் சொல்லாத புது விளக்கம், தமிழுக்குப் புதிய இலக்கணம் படைக்க வேண்டியதன் காலக்கட்டாயம், இலக்கணப்படி பிழையாகவே இருந்தாலும் சில சொற்களை ‘மக்கள் தமிழ்’ எனும் முறையில் ஏற்றுக் கொள்ள வேண்டியதன் இன்றியமையாமை
என நுட்பமான சிந்தனைகள் பல.

இப்படி ஆங்காங்கே இருக்கும் கருத்துக்கள், விளக்கங்கள், செய்திகள், மேற்கோள்கள் எதுவும் கைவிட்டுப் போகாமலிருக்க நூலின் முடிவில் பழந்தமிழ் இலக்கிய – இலக்கண நூல்களின் பாணியில் சொல்லடைவும் (index) சேர்த்திருக்கிறார். எனவே இது வெறுமே படித்து முடித்துப் பரணில் வைக்கும் நூலாக இல்லாமல் ஐயம் ஏற்படும் பொழுதெல்லாம் சட்டென எடுத்துப் பார்த்துத் தெளிவு பெற உதவும் ஒரு நடைக்கையேடாகவும் திகழ்கிறது.

வியப்பூட்டும் இத்தகைய தகவல்களின் கூடவே கிரந்த எழுத்துப் பயன்பாடு, சந்திப்பிழைகள் பற்றிக் கவலைப்பட வேண்டா எனும் பரிந்துரை எனச் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களும் உள்ளன. இதே கருத்துக்களை வேறு யாராவது சொல்லியிருந்தால் பக்கம் பக்கமாக மறுப்பு எழுதலாம் அல்லது “அவர் கருத்து அவருடையது, நம் நிலைப்பாடு நம்முடையது”

என விட்டுவிட்டுப் போகலாம். ஆனால் எழுதியிருப்பவர் நூலாசிரியர் மட்டுமில்லை 34 ஆண்டுகள் தொண்டாற்றிய தமிழாசிரியர்!

அடுத்த தலைமுறையினருக்குத் தாய்மொழியைக் கொண்டு சேர்த்த அந்தத் தமிழ்க் கரங்கள், “இப்படிப்பட்ட சில கட்டுப்பாடுகள் அடுத்த தலைமுறையினர் தமிழில் எழுதவே தயங்க வைக்கின்றன. நான் கண்ணால் பார்த்தேன். எனவே இவற்றுள் சிலவற்றைத் தளர்த்திக் கொள்ளலாமே?” என எழுதும்பொழுது மறுக்க நமக்கு நா எழவில்லை. காரணம் இது தமிழ் மீதான அக்கறையால் தமிழர் ஒருவர் முன்வைக்கும் பரிந்துரை! தாய்மொழியைக் கொண்டு சமுகத்தையே
மாற்றிவிட முடியும் என நம்பும் தமிழறிஞர் ஒருவரின் தனிச் சிந்தனை! இப்படி ஒரு தமிழ் நலத் தொடரை வாரந்தோறும் வெளியிட்டதோடு ஐயா கேட்டவுடன்
மின்னல் வேகத்தில், கண்கவர் வடிவமைப்பில் நூலாக்கமும் செய்தளித்த ‘இந்து தமிழ் திசை’ நிறுவனத்தார்க்கு நன்றி!

மொத்தத்தில் ‘தமிழ் இனிது’ எனும் இந்நூல் தமிழ் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய படைப்பு!
படித்துப் பாருங்கள்!
நீங்களும் இது போல் உங்கள்
கருத்துக்களை அறியத் தாருங்கள்!

நூல் அறிமுகம் எழுதியவர்: 

இ.பு.ஞானப்பிரகாசன்

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 2 thoughts on “தமிழ் இனிது – நூல் அறிமுகம்”
  1. எந்த மாற்றமும் செய்யாமல் கட்டுரையை அப்படியே வெளியிட்டமைக்கு நன்றி! என் பெயரையும் குறிச்சொல்லாக (tag) உருவாக்கிச் சேர்த்திருக்கிறீர்கள்! மிக்க மகிழ்ச்சி! ஆனால் அது E. Pu. Gnanaprakasan என்பதற்கு மாறாக E.Bhu.Gnanapragasan என்று இருந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன். எனினும் நன்றி!

  2. என் பெயரின் ஆங்கில எழுத்துக்கூட்டல் தவறாக இருப்பதை நான் சும்மா ஒரு தகவலுக்காகத்தான் தெரிவித்தேன். ஆனால் அதை உடனே கவனத்தில் எடுத்துக் குறிச்சொல்லில் உள்ள என் பெயரை மட்டுமில்லாமல் கட்டுரையின் இணைப்பில் கூடத் திருத்தம் செய்து எனக்கு அதை மின்னஞ்சலிலும் தெரிவித்த உங்கள் அன்பு கண்டு அகமிக மகிழ்கிறேன்! நான் எதிர்பார்க்கவே இல்லை இப்படிச் செய்வீர்கள் என்று!! நனி நன்றி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *