தலைப்பை பார்த்தவுடன் ஏனோ ஓர் ஈர்ப்பு உண்டாகி எடுத்து படிக்க ஆரம்பித்த நாவல். சுதந்திரப் போராட்டக் காலத்தில் மதுரையில் நடைபெறும் கதைக்களம். உண்மை சம்பவமும் கூட என்பது தனிச்சிறப்பு.
நூலின் முதல் பகுதியில் புனைவு போல் தொடங்கும் நாவல் தனிநபரின் வரலாற்றுக் கதையாக மிளிரப் போவதாக பாவித்து விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாக ஒலிப்பது கூடுதல் சிறப்பு.
ராஜாராமன் என்ற விடுதலைப் போராட்ட வீரனின் வாழ்க்கை வரலாறே இந்நாவல் என்று சுருக்கி வரையறைத்து கூறி எளிதில் கடந்துவிட இயலாத நாவலே இது.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக கல்லூரி படிப்பை உதறுவதில் தொடங்கும் தேசப்பற்று உயிர் விடும் வரை நீள்வது “மகாவிரதமே” ஆகும்.
இந்நாவலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் கவனிக்கத்தக்கவர்களே. குருசாமி, முத்திருளப்பன், பத்தர், மதுரம், அவளது தாய் தனபாக்கியம், ஜமீன்தாரின் மனைவி மற்றும் பிரகதீஸ்வரன் என யாவரும் நம்கண் முன் வாழும் ஜீவன்களாக பரிணமிக்கும் நாவலைப் படைத்துள்ளார் நா. பார்த்தசாரதி அவர்கள்.
தாய் மட்டுமே உள்ள குடும்பத்தைக் கூட கவனிக்காமல் வாசக சாலை நடத்திக் கொண்டு அதன்பொருட்டு தேச பக்தர்களுடன் இணைந்து விடுதலை வேள்வியில் பங்கேற்று சிறைவாசம் புகுகிறான் ராஜாராமன்.
சிறைச்சாலையில் தேசபக்தராக அறிமுகமாகி உற்ற நண்பராக பரிணமித்து சேவாசிரமம் நடத்தும் கனவை ராஜாராமனின் உதவியுடன் தொடங்கி சீரும் சிறப்புமாக வழிநடத்தி ராஜாராமனுக்கு வழிகாட்டியாக ஒளிர்ந்துள்ளார் பிரகதீஸ்வரன்.
கில்டு கடை நடத்தும் பத்தரே உற்ற நண்பர். தேச அபிமானியாக மட்டுமே இருந்த போதிலும் வாசக சாலையை நிர்வகித்தல், தேச பக்தர்களுக்கு உதவுதல் என தன்னால் இயன்ற அளவு உதவும் புனிதராக வாழ்ந்துள்ளார். ராஜாராமனுக்கும் மதுரத்திற்குமிடையேயான அன்பை வளர்த்து உறவைப் பலப்படுத்தும் பாலமாக பத்தரே விளங்கியுள்ளார்.
முத்திருளப்பனும் குருசாமியும் தேர்ந்த தேசபக்தராக அல்லல்கள் பல அடைந்து இறுதி வரை ராஜாராமனின் சத்திய சேவாசிரமத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனர். கதராடை விற்றல், தனிநபர் சத்தியாகிரகப் போராட்டம் அதனால் சிறைவாசமென விடுதலைப் போரில் இவர்களின் பங்களிப்பு அளப்பரியதே.
தேச பக்தியில் ராஜாராமன் உச்சமென்றால் ராஜாராமனின் மீதான பக்தியிலும் தேச பக்தியிலும் மதுரமே சிகரமாக ஜொலித்துள்ளார். ராஜாராமனுக்கும் மதுரத்திற்குமான அன்பு வளரும் சூழல்கள் கவித்துவமானவை. “தெரியலேது ராமா பக்தி மார்க்கமு” பாடல் வழியாக வீணை வாசித்து காதல் ரசம் பாயும் இடமெல்லாம் சொர்க்கமே.

ஒண்ணாம் நம்பர் தெரு பெண்ணென்று நினைத்து துவக்கத்தில் வெறுத்து சிறைவாசத்திற்கு பின் தவறை உணர்ந்து அன்பை பரிமாறும் ராஜாராமனின் கண்ணியம் கவரக்கூடியதே. “சுதந்திரம் பெற்ற பிறகே திருமணம்” என்று மீனாட்சியம்மன் கோயில் செய்த சத்தியத்தை இறுதி வரை காப்பாற்றும் காந்தியின் பக்தனாக சத்தியமூர்த்தியாகவே வாழ்ந்துள்ளார் ராஜராமன்.
தான் கொண்ட நேசம் காரணமாகவும் நாட்டிற்குழைக்கும் நல்லவர்களுக்கு உதவுவதற்காகவும் தனது சொத்தையெல்லாம் தானமாக வழங்கி சத்திய சேவாசிரமம் அமைக்க உதவிய உத்தமியே மதுரம். தேச விடுதலை நிதிக்காக நகைகள் முதலாக தானம் வழங்கிய தேச பக்தையே மதுரம்.
ராஜாராமனின் குடும்பத்திற்கு மட்டும் உதவாமல் சிறை சென்ற குருசாமி, முத்திருளப்பனின் குடும்பத்திற்கும் உதவிய நங்கையே மதுரம். ஈகை, கருணை, தூய்மை, இசை புலமை என காண்பவர் யாவரும் நேசம் பாராட்டும் நங்கையாகவே வாழ்ந்துள்ளார் மதுரம்.
சிறையில் இருக்கும்போது தாயின் மறைவிற்கு கூட வர மறுத்த ராஜாராமனின் விடுதலை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கக் கூடியதே. மதுரத்தின் மீது காதல் உணர்வு வந்த பின் சிறையின் சித்ரவதைகளை மதுரத்தின் நினைவுகள் வாயிலாகவே கடக்க முயன்ற தருணத்தில் ராஜாராமன் இயற்றிய ” பாடிப் பசித்த குயிலின் குரல் ” பாடல் நம்மையும் நெஞ்சுருகச் செய்யக்கூடியதே…
நாவலின் ஒவ்வொரு பகுதியின் துவக்கத்திலும் இந்திய விடுதலைப் போராட்ட நிகழ்வுகளைக் கூறி அதனால் தமிழகத்தில் உண்டான தாக்கத்தை குறிப்பாக மதுரையில் நிகழும் நிகழ்வுகளை எடுத்தியம்பி அவற்றில் ராஜாராமனின் பங்களிப்பையும் அடையும் துயரங்களையும் மிக நேர்த்தியாக ரசிக்கும்படி படைத்துள்ளார் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி அவர்கள்.
1920 முதல் 1970 வரையிலான ராஜாராமன் என்ற காந்திராமனின் வாழ்க்கை வாயிலாக விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை அறிந்து கொள்ள இந்நூல் நிச்சயம் உதவும். மதுரத்தின் தியாகமே இந்நாவலின் வேராக அடியேன் கருதுகிறேன்.
இந்நாவல் குறித்து எழுதுவதற்கு ஏராளமாள தகவல்கள் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன. காந்தியடிகளின் மதுரை வருகை, காங்கிரஸ் பிளவு, நேதாஜி- காந்தி கருத்து வேறுபாடு, முத்துராமலிங்கத் தேவரின் உதவி, காமராஜர் குறித்த தகவல்கள் என இந்நூல் ஒருபக்கம் வரலாற்றுச் சுவடுகளைத் தாங்கி நிற்க மறுபக்கம் பத்தர், ஜமீன்தார் மனைவி, பிரகதீஸ்வரனின் மனைவி முதலான அனைத்து கதாபாத்திரங்களின் அன்பும் கருணையும் தியாகமும் நிரம்பி வழியே இனியதோர் அனுபவமே இந்நாவல்.
இந்நாவல் படிக்கும்போது எதிர்மறைக் கருத்துகளோ பகைவர்களே இல்லாத நிலையை பார்த்து உச்சி முகர்ந்த வேளையில் அதற்கான காரணமாக முத்திருளப்பன் கூறிய கருத்துக்களே இருந்துள்ளன என தெரிய வரும்போது ஆச்சரியமே பளிச்சிட்டது.
உண்மைச் சம்பவத்தை நேர்மறைச் சிந்தனையுடன் காந்திய வழியில் வாழ்வதற்கு வழிகாட்டுவதாக அமைந்த இந்நாவல் மிகுந்த மதிப்புரிக்குரியதே. இந்நாவலின் பதிப்பில் “சீ” என்ற எழுத்திற்கு பதிலாக “பூ” என்ற எழுத்து அச்சிடப்பட்டுள்ளதே குறையாக கருதுகிறேன்.
காந்தி ஆசிரமம் குறித்தும் காந்திராமன் குறித்தும் கூகுளில் தேடி அறியும் ஆவலை விதைத்ததே இந்நாவலின் வெற்றியாக கருதுகிறேன். தலைப்பிற்கேற்றவாறு நல்லதோர் ஆத்மார்த்தமான படைப்பு.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.
நன்றி.
“ஆத்மாவின் ராகங்கள்”
நா. பார்த்தசாரதி
மூங்கில் பதிப்பகம்
பக்கங்கள்: 232
₹. 160
பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.
Leave a Reply
View Comments