நா.பார்த்தசாரதி எழுதிய "பொன் விலங்கு" நாவல் புத்தகம் அறிமுகம் | Na.Parthasarathy's Pon Vilangu Tamil Novel Book Review | www.bookday.in

நா.பார்த்தசாரதி எழுதிய “பொன் விலங்கு” நாவல் – நூல் அறிமுகம்

திரு. நா. பார்த்தசாரதி அவர்களால் புனையப்பட்ட இந்த நாவலைப் (“பொன் விலங்கு” நாவல்) படிக்கும்போது, படிப்பவரின் மனதைத் தொடும்படி அவரது எழுத்துக்கள் பின்னிப்பிணைந்து இருக்கும். கதைக் களத்தை நேர்த்தியாகக் கையாண்டிருப்பார். இந்தக் கதை, வாசிப்பவர் மனம் கோணாதவாறு எழுத்தாளர் நகர்த்திச் சென்றிருப்பார். இது ஓர் அழகிய முக்கோணக் காதல் கதையாகும்.

கதையின் தொடக்கம்

கதைக்களம் மதுரையில் ஆரம்பமாகிறது. கதையின் நாயகன் சத்தியமூர்த்தி, அவனுக்கு இரண்டு தங்கைகள் – மூத்தவள் ஆண்டாள், இளையவள் கல்யாணி. தந்தை, ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அவர் வீட்டில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அதில் வரும் பணத்தை வைத்து அவர்களது குடும்பம் காலத்தை நகர்த்தியது.

சத்தியமூர்த்தி கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு வேலை தேடிக் கொண்டிருக்கும் சமயம், அவன் மிகவும் நேசிக்கும் தமிழ் விரிவுரையாளர் பணிக்கான நேர்காணலில் கலந்துகொள்ள, மல்லிகைப் பந்தல் கலைக் கல்லூரியிலிருந்து கடிதம் கிடைத்தது. உடனடியாக, சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் என்னும் இடத்துக்குப் புறப்பட்டான்.

நேர்காணலும் புதிய அறிமுகங்களும்

கல்லூரியின் நிர்வாகி திரு. பூபதி மற்றும் கல்லூரியின் முதல்வர் நேர்காணலை நடத்தினர். நேர்காணலில் வெகு அழகாகவும் நேர்த்தியுடனும் சத்தியமூர்த்தி பதில் சொன்னமையால், நிர்வாகி திரு. பூபதிக்கு அவன் மீது ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது. நேர்காணல் முடிந்த பிறகு, “நீங்கள் ஊருக்குக் கிளம்புங்கள், செய்தி உங்களைத் தேடி வரும்” என்று சொல்லி அவனை அங்கிருந்து வழி அனுப்பிவைத்தார்.

சத்தியமூர்த்தியின் உரையாடலைக் கேட்ட பூபதியின் மகள் பாரதி, மனம் நெகிழ்ந்து, சத்தியமூர்த்தியே இந்த விரிவுரையாளர் பணிக்கு வரவேண்டும் என்று மனதார நினைத்தாள்.

நேர்காணலை முடித்துவிட்டு மதுரைத் திரும்பும்போது, தொடர்வண்டியில் கதையின் நாயகியைச் சந்திக்கிறான். கதையின் நாயகி மோகினி, ஒரு நாட்டிய நங்கை. சத்தியமூர்த்தி பயணிக்கும் அதே பெட்டியில் மோகினியும் அவளது அம்மாவும் பயணித்தார்கள். சிறிது நேரம் ஆனதும் சத்தியமூர்த்தி உறங்கச் சென்றான்.

அப்போது, அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது சற்றே முற்றவே, மோகினி மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றபோது, திடீரென்று சத்தியமூர்த்தி அவளைக் காப்பாற்றினான். அவனால் முடிந்தமட்டும் அவளுக்கு ஆறுதல் கூறி மனதை தேற்றினான். இந்த நிகழ்வுக்குப் பிறகு, மோகினி மானசீகமாகச் சத்தியமூர்த்தியைக் காதலிக்க ஆரம்பித்தாள்.

காத்திருப்பும் காதலும்

சத்தியமூர்த்தியும் அவனது நண்பன் குமரப்பனும் கல்லூரி காலத்திலிருந்து நெருங்கிய நண்பர்கள். குமரப்பன், “குத்து விளக்கு” என்னும் பத்திரிகையில் புகைப்படம் எடுப்பது, படங்கள் வரைவது போன்ற வேலைகளைச் செய்பவன்.

மல்லிகைப் பந்தல் கல்லூரியிலிருந்து பணி நியமன ஆணை வரும் என்று சத்தியமூர்த்தி பல நாட்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஆனால், அவன் எதிர்பார்த்தபடி நடக்காததால் சற்று மனம் தளர்ந்து காணப்பட்டான். அப்போது ஒரு நாள், மோகினி அவன் வீட்டுக்கு வந்து அவனுடைய பேனாவைக் கொடுத்து, “என்னை மறந்து விடாதீர்கள்” என்று கூறிச் சென்றாள்.

அதற்குப் பிறகு, நாயகனுக்கும் நாயகிக்கும் நடக்கும் உரையாடல்கள் அனைத்தையும் எழுத்தாளர் தனக்கே உரித்தான பாணியில் அற்புதமாக எடுத்துக் கூறியிருப்பார்.

மல்லிகைப் பந்தலில் சத்தியமூர்த்தி

ஒரு வழியாக, பணி நியமன ஒப்பந்த நகல் அவனுக்கு வந்தவுடன், மல்லிகைப் பந்தல் கல்லூரிக்குப் புறப்பட்டான். அங்கே, கல்லூரியின் நிர்வாகி மகள் பாரதி, அவனது வருகைக்காகக் காத்திருந்தாள். அவள் அவன்மீது ஒருதலையாகக் காதல் வயப்பட்டாள். ஆனால், சத்தியமூர்த்தியின் மனமோ மோகினியின் நினைப்பில் இருக்க, பாரதி அவனிடம் நெருங்கிப் பேச வரும்போதெல்லாம், அவளை எப்படித் தவிர்ப்பது என்று சிந்தித்துப் பேசுவான்.

முதல் நாளிலிருந்தே சத்தியமூர்த்திக்குச் சரியான வரவேற்பு மற்ற ஆசிரியர்களிடமிருந்தும், முதல்வர் மற்றும் துணை முதல்வரிடமிருந்தும் கிடைக்கவில்லை. அவர்கள் பாரபட்சமாக நடந்துகொண்டார்கள்.

சத்தியமூர்த்தி எப்படி இந்தக் கல்லூரியில் பணியாற்றினான்?
அவன் மோகினியுடன் சேர்ந்தானா?
கல்லூரி நிர்வாகி பூபதி என்ன ஆனார்?
பாரதியின் ஒருதலைக் காதல் என்னவாயிற்று?
போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை நாவலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

நூலின் விவரங்கள்:

நூல்: பொன் விலங்கு (Pon Vilangu Tamil Novel) நாவல்
ஆசிரியர்: நா.பார்த்தசாரதி (Na.Parthasarathy)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
விலை: ரூ.300

எழுதியவர் : 

✍🏻 – லோ.பாலமுருகன் –

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 6 Comments

6 Comments

  1. விஜயலட்சுமி

    நூல் அறிமுகத்திலேயே பாதி நாவல் படித்துவிட்ட அனுபவம் வருகிறது .முடிவை அறிய ஆவலாக உள்ளதால் புத்தகத்தை நூலகத்தில் தேடி படிக்க வேண்டும் .

    • loganathan balamurugan

      நன்றி 🙏, வாசிக்க வேண்டிய நாவல் இது. நா. பார்த்தசாரதி அதைத் தனது எழுத்துக்களின் மூலம் அவ்வளவு அழகாக வெளிக்கொணர்ந்திருப்பார்.

  2. K M Murugeshan

    பொன் விலங்கு நாவலின் நூல் அறிமுகம் எழுதிய எழுத்தாளர் லோ.பாலமுருகன் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர் மற்றும் இவர் எழுதிய சிறுகதைகள் மற்றும் நூல்களின் விமர்சனங்கள் மிகவும் சிறப்பாகவே உள்ளன.தனக்கென ஒரு எழுத்து நடை அமைத்துக் கொண்டு வளர்ந்து வரும் இவருக்கு மென்மேலும் வளர்ந்து சிறப்பு பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.👍

    • loganathan balamurugan

      ஐயா,
      தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி என்ற ஒற்றைச் சொல் போதாது. உங்களைப் போன்றோர் ஊக்குவிப்பதன் மூலமே நிறைய எழுதத் தோன்றுகிறது. மீண்டும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  3. ராமச்சந்திர வைத்தியநாத்

    பொன்விலங்கு, குறிஞ்சி மலர் போன்ற புதினங்களை கல்கியில் தொடராக வந்த போதே படித்து விவாதித்தவை நினைவுக்கு வருகிறது. சிறப்பாக அது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாலமுருகன் பழைய சினிமா பாடல் புத்தகங்களில் காணப்படும் மற்றவற்றை வெள்ளித் திரையில் காண்க எனும் பாணியை பின்பற்றியுள்ளார்.

    புதினம் அறிமுகம் ஒரு பக்கம் இருப்பினும் அது பற்றிய அவரது கருத்துக்களை நிகழ்காலச் சூழலில் வெளிப்படுத்துவதும் அவசியமாக இருக்கிறது.

    எனவே இனி வரும் அறிமுகங்களில் நாவலின் சமகால பொருத்தப்பாடு குறித்தும் விவாதிக்கப்படுவது வாசிப்பையும் உள்வாங்கலையும் மேம்படுத்தும் என்றே கருதுகிறேன்.

    அவற்றையும் முயற்சிக்கலாம்.

    • Balamurugan L

      நன்றி சார்… 😉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *