நூல்: மொழியின் நிழல்
ஆசிரியர்: ந. பெரியசாமி
வெளியீடு: தேநீர் பதிப்பகம்
விலை: ரூ. 80
அட்டை எழுத்துரு & வடிவமைப்பு : சீனிவாசன் நடராஜன்
அன்புத்தோழர் பெரியசாமி அவர்கள் 40 கட்டுரைகள் அதாவது 40 நூல்கள் கவிதை , சிறுகதை, நாடகம், நாவல் உட்பட பல நூல்களையும் விமர்சனக் கட்டுரையாக எழுதியுள்ளார். அவற்றையெல்லாம் தொகுத்த நூலே “மொழியின் நிழல்”.
இவ்வகையிலான பல்வேறுபட்ட நூல்களையும் தன் பரந்துபட்ட வாசிப்பின் அனுபவத்தின் சாளரம் வழியே வெளிச்சம் பாய்ச்சுகிறார். நானும்கூட முகநூல் மற்றும் இணைய இதழ்களில் வெளியான எனது விமர்சனங்களைத் தொகுத்து “நூல்முகம்” எனும் தலைப்பில் நூலாக அமேசான் கிண்டிலில் வெளியிட்டிருக்கிறேன் என்பதைச் சந்தடிச்சாக்கில் சொல்லிக் கொள்கிறேன்.
தோழரின் விமர்சனத்தை வாசிக்கையில் ஆங்காங்கே தென்படும் உலக இலக்கியமும் நம் சங்க இலக்கியமும் தேவையான இடங்களில் பொருத்தியிருக்கும் பாங்கு தன் மேதாவிலாசத்தை வெளிப்படுத்திவிடாதவாறு போகிறபோக்கில் பன்னீர் தெளித்தாற் போன்று வெகு இயல்பாகக் கையாண்டிருக்கிறார். அதேபோல எந்த இடத்திலும் குற்றம்குறை காணாது மென்மையாக வார்த்தைக்குக்கூட வலித்துவிடாதபடி அபிப்ராயம் கூறுவது எப்போதுமான இவரது அன்பின் மொழி இயல்பு.
இலக்கியத் தளத்தில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் பல்வேறு நூல்களும் எல்லோராலும் வாசிக்கப்படுவதில்லை. சில நூல்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரமும் வெளிச்சமும் தவிர்த்து தரமான நல்ல நூல்கள் வெளிச்சத்துக்கு வராமல் போவதும் உண்டு. எந்த நூலை வாசிப்பிற்குத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமான நேரங்களில் இத்தகைய நூல்களே பெருந்துணையாகவும் வழிகாட்டியாகவும் உள்ளன.
இந்த நூலை வாசிப்பதின் மூலம் கவிதைக்குள் எப்படிப் பயணிப்பது, எப்படிப் புரிந்துகொள்வது என்பதில் தொடங்கி கதை கட்டுரை நாவல் நாடகம் இவற்றின் வாசிப்பில் தன் வாழ்வியல் அனுபவங்களையும் நெருடலே இல்லாமல் மிக எளிய வார்த்தைகளால் இயல்பாக எடுத்தாண்டிருப்பதே சிறப்பு. இதன்மூலம் எந்தெந்த நூல் நமக்கு உவப்பானது என்பதை நாம் தெளிந்தறிய முடிகிறது.
எல்லோராலும் “பெரிசு” என அன்பாக அழைக்கப்படும் பெரியசாமித்தோழர் புதிதாக எழுத வருபவர்களையும் வாஞ்சையோடு வழிகாட்டி உற்சாகப்படுத்தி அவர்களின் மிளிர்தலுக்குத் துணை நிற்பவர். ‘சாமி’யெல்லாம் இப்படிப் ‘பெரிய’மனதோடு வரமளித்தால் குறைகளே இல்லாத கொடுப்பினை நிகழுமென்பது நிச்சயம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மகிழ்ச்சி. வாழ்த்துகள்