நா.வானமாமலை எழுதிய “மக்களும் மரபுகளும்” புத்தகம் | Na.Vanamamalai's Makkalum Marabugalum Tamil Book Review | www.bookday.in

நா.வானமாமலை எழுதிய “மக்களும் மரபுகளும்” – நூல் அறிமுகம்

“மக்களும் மரபுகளும்” – நூல் அறிமுகம்

நா.வானமாமலை ஆராய்ச்சி என்கிற இதழை நடத்தி வந்தார். அதில் மானிடவியல் பார்வையில் பலர் கட்டுரைகளை எழுதினர். அதனைத் தொகுத்து நா.வானமாமலை 1975ஆம் ஆண்டு, என்.சி.பி.எச். பதிப்பு நிறுவனத்தின் வழியாக வெளியிட்டார். இந்த நூலின் பெயர் “மக்களும் மரபுகளும்” (மானிடவியல் கட்டுரைத் தொகுப்பு). தேர்ந்தெடுத்த 12 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது, நா.வானமாமலை பதிப்புரையை எழுதியுள்ளார்.

இருவகை கட்டுரைகள் இடம் பெற்றுள்ளதாகப் பதிப்புரையில் கூறுகிறார். இனக்குழு மக்கள் வாழ்க்கை, மொழி, கலை, பழக்க வழக்கங்களை ஆராய்கிற கட்டுரைகள் ஒருவகை. மற்றொரு வகை, தமிழகத்திலும் கேரளாவிலும் வழங்கி வரும் வேலன் வழிபாடு, பகவதி வழிபாடு பற்றிய வரலாற்று மானிடவியல் கட்டுரைகள். மேலும் பதிப்புரையில் மானிடவியல் ஆராய்ச்சிக்கு இந்தத் தொகுப்பு ஊக்கமளிக்கும் வகையில் என்.சி.பி.எச். நிறுவனம் வெளியிட்டதாகக் கூறியுள்ளார். இன்று படித்தாலும் இக்கட்டுரைகள் நமக்கு ஊக்கமளிக்கிறது. இருந்தாலும் மானிடவியல் பார்வையில் நா.வானமாமலைக்குப் பிறகு அதிகம் வெளிவரவில்லை. இந்தக் குறை எதிர்காலத்தில் இல்லாத வகையில் நாம் மார்க்சிய மானுடவியல் பார்வையில் நிறை நூல்களை எழுதி வெளியிட வேண்டும்.

நா.வானமாமலையின் இந்தத் தொகுப்பை என்சிபிஎச் நிறுவனம் பல முறை மறுபதிப்பு செய்துள்ளது. தற்போதும் இந்நூல் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய இளைய ஆய்வாளர்கள் இத்தகைய நூல்களைப் படித்து, இவ்வழியில் ஆராய்ச்சிகளை எழுத வேண்டும். கல்வி புலத்தில் மானுடவியல் துறை வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மார்க்சிய மானுடவியல் என்கிற அணுகுமுறையில் நிறைய நூல்கள் வெளிவர வேண்டும், அதனை மார்க்சியர்கள் எழுத வேண்டும், அப்படி எழுதவில்லை என்றால் மார்க்சியத்துக்கு எதிரானவர் எழுதிக் கல்வி புலத்தில் சேர்க்க வேண்டிவரும். அப்படி வருகிற நூல்களை படித்து, மார்க்சியத்துக்கு எதிராக எந்த வகையில் இருக்கிறது என்பதை நாம் எழுத வேண்டிவரும். அதனால் நாமே மார்க்சிய மானுடவியல் என்கிற துறையைச் சார்ந்த நூல்களை அதிகம் எழுதி வெளியிட வேண்டும்.

தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கட்டுரைக்கு முன்பாக நா.வானமாமலை எழுதிய குறிப்புகள், அக்கட்டுரையினைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு உதவியாய் இருக்கிறது. நமது மானிடவியல் பார்வையினை வளர்த்துக் கொள்வதற்கு உதவும் வகையிலும் இருக்கிறது.

முதல் கட்டுரை, பி.எல்.சாமி எழுதிய “வேலன் வழிபாடு”.

வேலன் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படும் பூசாரி என்று கருதலாம் என்று இக்கட்டுரை தொடங்குகிறது. அச்சத்தாலும் காதல் நோயாலும் தாக்கம் பெற்ற பெண்ணை, வேலனிடம் பெண்ணின் தாய் அழைத்துச் செல்வார். வேலன் கெட்ட ஆவிகளை விரட்ட, வேலன் முருகனிடம் வழிபடுகிறான். முருகனுக்கு ஓர் ஆட்டைப் பலிகொடுக்கிறான். முருகனது பெயரை உச்சரித்து மந்திரம் சொல்கிறான். தரையில் களம் அமைத்து அக்களத்தில் ஆட்டின் இரத்தத்தைத் தெளிக்கிறான். வேலன் முருகன் தம்மீது இறங்கியிருப்பதாக ஆட்டம் ஆடுகிறான். இதுவே சங்க இலக்கியத்தில் காணப்படும் வெறியாட்டம் நிகழ்வு. இந்த நிகழ்வின் தொடர்ச்சியைத் தமிழகத்தில் இன்று நேரடியாகக் காண முடியவில்லை, ஆனால் கேரளத்தில் வட மலபாரில் திரையாட்டம் அல்லது பேயாட்டம் என்கிற பெயரில் வெறியாட்டத்தின் எச்சங்களைக் காணமுடிவதைக் கட்டுரை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். அதிகமாகத் திருமுருகாற்றுப்படையில் இருந்தும் பரிபாடலில் இருந்தும் முருக வழிபாட்டை விளக்கி அதன் தொடர்ச்சியாகக் கேரளாவில் காணப்படுவதோடு ஒப்பிட்டு எழுதப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது.

இ.ராகவையங்கார் கருத்தை முன்வைத்து இக்கட்டுரை ஆசிரியர், தமிழகத்து வேளிர்கள் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பதை ஏற்கிறார். அகத்தியரோடு வேளிர்கள் இணைத்து பேசும் புராணத்தை நம்பி ஏற்றுக் கொண்டதை இன்று பல தமிழறிஞர்கள் மறுத்துரைக்கின்றனர். அதனால் கட்டுரையாசிரியரின் கருத்து விவாதத்துக்கு உரியதாக இருக்கிறது.

வேலன் வழிபாடு சிந்துவெளி நாகரிகத்திலும் காணப்படுவதை முன்வைத்துப் பேசுவது கவனத்துக்கு உரியதாகும்.

இரண்டாவது கட்டுரை பி.எல்.சாமி எழுதிய “கண்ணகியும் பகவதி வழிபாடும்”.

கேரளத்தில் பகவதி வழிபாடு அதிகம் காணப்படுகிறது, குறிப்பாக வடமலபாரில் பகவதி கோவில் இல்லாத கிராமமே இல்லையென்று கட்டுரை ஆசிரியர் கூறுகிறார். இந்தப் பகவதி வழிபாடு கண்ணகி வழிபாட்டில் இருந்து தோன்றியது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். இதனைக் கட்டுரை ஆசிரியர் ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் இரண்டும் இணைந்து பேசப்படுவதைக் கட்டுரையில் எடுத்துக் காட்டியுள்ளார்.

பகவதி அம்மனின் சின்னம் கொடுவாள். இவ்வழிபாட்டை நம்பூதிரி பிராமணர்கள் எடுத்துக் கொண்டவுடன் இடைக்காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் கோயிலுக்குள் செல்ல முடியாது நிலை ஏற்பட்டது. விஷாரிகாவில் பகவதி வழிபாட்டில் செட்டியார் என்கிற சாதியினர் செய்யும் சடங்கில் பாடப்படும் மந்திரப் பாட்டில் கண்ணகியின் கதை வழங்குவதைக் கட்டுரை ஆசிரியர் வியப்புடன் பதிவு செய்துள்ளார்.

பகவதியை நாகப் பகவதியாக வழிபடுவதைக் காணும்போது சமணர்களின் பத்மாவதி என்கிற நாகத் தேவதையின் வழிபாடு இதில் கலந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பௌத்தர்களின் தாரத் தேவி வழிபாடும் பகவதி வழிபாட்டில் கலந்துள்ளது.

பழங்குடி மக்களால் தொழப்பட்ட கண்ணகியாகிய பகவதியின் வழிபாடு பின்னர் மற்ற சாதியினர் வழிபட்டனர். இறுதியில் வைதிக மதத்தில் நம்பூதிரிகளால் இணைக்கப்பட்டதை அறிய முடிகிறது. இன்றைய பகவதி வழிபாடு பல தாய்தெய்வ வழிபாட்டின் கலப்பாக இருப்பதைக் கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார். பகவதி வழிபாட்டில் ஆரியர்க்கு முற்பட்ட பழங்காலத்துத் தாய்தெய்வ வணக்கமும், பழந்தமிழரின் கொற்றவை வணக்கமும், இந்து மத்தின் சக்தி, காளி வணக்கமும், சமணர்களின் பத்மாவதி வணக்கமும், பௌத்தர்களின் தாராதேவி வணக்கமும் கலந்து இருப்பதைக் கட்டுரையின் இறுதியில் ஆசிரியர் கூறியுள்ளார்.

மூன்றாவது கட்டுரை கோ.சுப்பையா எழுதிய “கோத்தர்களின் சாவி விழா.”

இன்று பழங்குடிகள் பற்றிய நிறையக் கட்டுரைகளும் நூல்களும் வருகிறது. ஆனால் நா.வானமாமலை காலத்தில் அப்படி இல்லை. நா.வானமாமலையும் அவரைச் சார்ந்த அறிஞர்களும் பழங்குடிகளைப் பற்றி அன்றே நிறைய எழுதியுள்ளனர். இந்நூலில் எழுதிய கட்டுரைகள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. இன்று பழங்குடிகளிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும், ஆனால் பழைய நிலைமைகளை இது போன்ற கட்டுரைகளின் வாயிலாகத்தான் அறிந்து கொள்ள முடியும். அதனால் இத்தகைய பழைய கட்டுரைகள் படிப்பது தேவையானதாக இருக்கிறது.

இக்கட்டுரைக்கு நா.வா. எழுதிய குறிப்பில், கோத்தர்கள் பேசும் மொழி திராவிட மொழியான தமிழோடு நெருங்கிய ஒப்புமை உடையதாக சுட்டிக்காட்டுகிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்த கோ.சுப்பையாவைப் பற்றி குறிப்பிடுகிறார். அவரே இந்தக் கட்டுரையினை எழுதியுள்ளார்.

இதற்கு அடுத்ததான நான்காவது கட்டுரையை எழுதியதும் கோ.சுப்பையா. அதன் தலைப்பு, கோத்தர்களின் உறவுமுறைச் சொற்கள். இந்த இரண்டும் கோத்தர்களின் சாவு சடங்கு மற்றும் உறவுமுறைச் சொற்களை ஆராய்கிறது.

ஐந்தாவது கட்டுரை ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய தமிழ் நாட்டுப் பளியர்கள். இந்தக் கட்டுரையினை நா.வானமாமலை அவர்கள் எழுதத் தூண்டியுள்ளதைக் குறிப்பிட்டுக் கட்டுரை ஆசிரியர் நன்றியினைத் தெரிவித்துள்ளார். மானிடவியல் ஆய்வுகளை எழுதத் தூண்டிப் பல அறிஞர்களை உருவாக்கிய நா.வா.வுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் Tribe என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு இனக்குழு என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நூல் முழுதும் அப்படியே காணப்படுகிறது. இப்போது இனம் என்பதைத் தவிர்க்கவே நாம் விரும்புகிறோம். Tribe என்கிற ஆங்கிலச் சொல்லுக்குப் பழங்குடி என்கிற சொல்லை இன்று நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதுவே இன்றைய நிலையில் சரியானதாக இருக்கிறது. தொல்குடி என்று சிலர் பயன்படுத்துகின்றனர்.

இக்கட்டுரையில் திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காணப்பட்ட பளியர் பழங்குடிகளின் பிறப்பு, பூப்பெய்துதல், திருமணம், வழிபாடு, உணவு, தொழில், இறப்பு ஆகிய சடங்குகளைப் பற்றி இக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

ஆறாவது கட்டுரை கோ.சீனுவாசவர்மா எழுதிய நரிக்குறவர்களின் வாழ்க்கை முறை.

இந்தக் கட்டுரை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது, அப்போது தமிழ் நாட்டுப் பழங்குடி பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்க்கப்படவில்லை. 2023ஆம் ஆண்டில் தான் சேர்க்கப்பட்டனர்.

பொதுவாக நரிக்குறவர்களைப் பழங்குடிகளாகக் கருதுவதும் அவர்களைப் பற்றி ஆய்வு செய்வதும் குறைவாகவே இருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நரிக்குறவர்களைப் பற்றி எழுதியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

நரிக்குறவர்களின் இடப் பெயர்வு எந்த ஊரில் இருந்து நிகழ்ந்தது என்பதில் இருந்தே இந்தக் கட்டுரை தொடங்குகிறது. குஜராத், மேவார் ஆகிய இடங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே நரிக்குறவர்கள். நரிக்குறவர்களுக்கு மற்றொரு பெயர் குருவிக்காரர்கள். இதைச் சுருக்கு குறவர்கள் என்று குறிப்பிட்டால் குழப்பத்தையே ஏற்படுத்தும். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தவர்களாகச் சங்க இலக்கியம் குறிப்பிடும் குறவர்கள் வேறு இவர்கள் வேறு. அதே போலக் குற்றாலக்குறவஞ்சி போன்ற இலக்கியங்களில் கூறப்படும் குறவர்கள் வேறு. இவர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்.

இந்தக் கட்டுரை ஆசிரியர் தமிழ் பேசும் குறவர்களையும் நரிக்குறவர்களை ஒப்பிட்டுப் பேசுவது குழப்பத்தை ஏற்படுத்தும். இதனை மனதில் கொண்டு, நரிக்குறவர்களை, குருவிக்காரர்கள் என்று கூறலாம் ஆனால் குறவர்கள் என்று பொதுப் பெயராகக் கூறுவது குழப்பத்தையே ஏற்படுத்தும். நரிக்குறவர்கள் குஜராத் பகுதியில் இருந்து வந்தவர்கள், இவர்களின் தாய் மொழி வாக்ரி போலி. இவர்கள் தங்களை வாக்ரி என்றே அழைக்கின்றனர். நரிக்குறவர்கள் என்கிற பெயர் வெளியில் உள்ளவர்கள் வைத்த பெயர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நரிக்குறவர்கள் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் அந்த மாநில மொழியினைக் கற்றுக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ்ந்தாலும் தங்களது மரபை விடாமல் பின்பற்றுகின்றனர். பொது நீரோட்ட மக்களுடன் நெருக்கமாக வாழ்ந்தாலும் கலப்பில்லாது தனித்த மரபைக் கடைபிடிக்கின்றனர்.

கட்டுரை ஆசிரியர், நரிக்குறவர்களின் நாடோடிப் பாடல்கள், தாய்க் கடவுள், தந்தை வழிக் குடும்ப அமைப்பு, திருமண உறவுகள் ஆகியவற்றைப் பற்றி எழுதியுள்ளார்.

ஏழாவது கட்டுரையும் நரிக்குறவர்கள் பற்றியதே, இதனை எழுதியவர்கள் கே.ஆர்.ராஜகோபாலன், ஜே.பி.விஜயதிலகன் எழுதியது, இதனை ஆ.சிவசுப்பிரமணியன் தமிழாக்கம் செய்துள்ளார்.

நரிக்குறவர்களிடையே காணப்படும் இரண்டு பெரிய பிரிவைப் பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது. எருமைமாடு பலி கொடுப்பவர்கள் ஒரு பிரிவினர், ஆடு பலி கொடுப்பவர்கள் மற்றொரு பிரிவினர். இரு பிரிவினர்களின் தெய்வங்களும் வேறுபடுகிறது. இக்கட்டுரையில் நரிக்குறவர்களின் திருமணம், வழிபாடு, இறப்பு போன்ற சடங்குகளைப் பற்றி பேசப்பட்டுள்ளது.

இக்கட்டுரையில் நரிக்குறவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று கூறப்பட்டுள்ளது. பழங்குடிகள் நிறுவனச் சமயத்துக்குள் வரமாட்டார்கள், நிறுவனச் சமயங்களின் தாக்கம் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவர்களை நிறுவனச் சமங்களைப் பின்பற்றுபவர்களாகக் கூறமுடியாது. பொது நீரோட்டத்தில் இணையாதவர்களே பழங்குடிகள், நரிக்குறவர்கள் என்கிற பழங்குடிகளும் நிறுவனச் சமயங்களை ஏற்றுப் பின்பற்றாதவர்கள் என்பதே உண்மை. இது இவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பழங்குடிகளுக்கும் பொருந்தும்.

இக்கட்டுரையின் இறுதியில் நரிக்குறவர்கள் அறிவுத் திறம் மிக்கவர்களாகக் கூறப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். இன்று நரிக்குறவர்களிடம் இருந்து பல கல்லூரி மாணவர்கள் தோன்றிப் படிப்பதை நாம் அறிந்ததே ஆகும்.

அடுத்த மூன்று கட்டுரைகளும் இருளர்களைப் பற்றி பேசுகிறது. மூன்றையும் ஆர்.பெரியாழ்வார் எழுதியுள்ளார்.

எட்டாவது கட்டுரையின் தலைப்பு, இருளப்பள்ளர் என்ற வெட்டக்காட இருளர்.

நா.வா.வின் குறிப்பில் இருளரும் இருளப்பள்ளரும் ஒரே பழங்குடி அல்ல என்பதைப் பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டு பழங்குடிப் பட்டியலில் இருளர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இருளப்பள்ளரைப் பிரித்துக் காட்டப்படவில்லை.

கட்டுரை ஆசிரியர் இருளர் என்று பொதுவாக இணைத்துப் பேசுபவர்களிடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக் காட்டியுள்ளார். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் காணப்படும் இருளர்கள் தமிழ் நாட்டில் மற்ற இடங்களில் அதாவது செங்கல்பட்டு, சென்னை, வடாற்காடு, தென்னாற்காடு, திருச்சி போன்ற மாவட்டங்களில் வாழும் இருளர்களிடம் இருந்து இனவியல் ஆய்வின்படி வேறுபட்டவர்கள். கோவை, நீலகிரி மாவட்டத்தைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வாழும் இருளர்கள் குட்டையாகவும் கருப்பு நிறம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். ஆனால் கோவை, நீலகிரி மாவட்டங்களில் வாழும் இருளர்கள் மூக்கு அமைப்பிலும் சமூகப் பழக்கவழக்கங்களிலும் வேறுபடுகின்றனர். இருவர்களுக்கு இடையே சமூகத் தொடர்பு இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று தமிழ்நாட்டில் உள்ள பழங்குடி பட்டியலில் 37 பழங்குடிகள் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியல், மொழிவழி மாநிலமாகத் தமிழ் நாடு பிரிப்பதற்கு முன்பு உள்ள பட்டியல். இப்பட்டியலில் காணப்படும் பலர் தமிழ் நிலப்பகுதியில் காணவில்லை, அருகில் உள்ள பிற மாநிலங்களில் மட்டுமே வாழ்கின்றனர். இதனைக் கவனத்தில் கொண்டு, தமிழ் நாட்டில் உள்ளவர்களை மட்டும் பட்டியலிட்டும், இருளர், இருளப்பள்ளர் ஆகியோர்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு இருவரைப் பிரித்துத் தனித்தனியாகப் பட்டியல் இடவேண்டும். அப்போதுதான் பட்டியல் தெளிவாகவும் துல்லியத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். பட்டியலில் உள்ள எண்ணிக்கை தவறானால், அதனை ஒட்டிய முடிவுகளும் தவறாகிப் போய்விடும்.

கோவையில் உள்ள இருளப்பள்ளர் ஒன்பது குலங்களாக இருக்கின்றனர், நீலகிரியில் வாழும் இருளரிடம் அதே பெயரின் நெருக்கத்தில் எட்டுக் குலங்கள் காணப்படுகின்றது. கோவை இருளப்பள்ளர்களிடையே கூடுதலாக நான்கு குலங்கள் கூடுதலாக இருக்கிறது. இருவர்களிடையே திருமணக் கொள்வினை கொடுப்பினை இல்லை, ஆனால் சில திருமணங்கள் இவ்விரு இனங்களிடையே திருமணம் நடைபெறுகிறது. பெரிய அளவில் நடைபெறுவதில்லை.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இருளர்கள் எலியை உண்பதில்லை, ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள இருளர்கள் எலியை உணவாகக் கொள்கின்றனர். அதே போல இருவர்களின் திருமணச் சடங்கு, பூப்புவிழா, ஈமச்சடங்கு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் வேறுபாடு காணப்படுகிறது. பயன்படுத்துகிற சொற்களிலும் வேறுபாடு காணப்படுகிறது. ”எனது” என்பதற்கு இருளப்பள்ளர்கள் “எத்து” என்றும் இருளர்கள் “நன” என்றும் கூறுகின்றனர். “உனது” என்பதற்கு இருளப்பள்ளர்கள் “நித்து” என்றும் இருளர்கள் “நின” என்றும் கூறுகின்றனர். “என்வீடு” என்பதற்கு இருளப்பள்ளர்கள் “எத்துகூரெ” என்றும் இருளர்கள் “நனகூர” என்றும் கூறுகின்றனர். “உன்வீடு” என்பதற்கு இருளப்பள்ளர்கள் “நித்துகூரெ” என்றும் இருளர்கள் “நினகூர” என்றும் கூறுகின்றனர். இத்தகைய வேறுபாடுகளைக் கணக்கில் கொள்வதே இனவரைவியலின் சிறப்பு.

தமிழகத்தில் காணப்படும் பழங்குடிகளின் இனவரைவியல் அடிப்படையில் பிரித்தறிய வேண்டும். அப்போதுதான் அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். பழங்குடிகள் என்கிற பொதுப் பார்வை மட்டும், பழங்குடிகளைப் புரிந்து கொள்வதற்குப் போதுமானதல்ல. குறிப்பாகப் புரிந்து கொள்வதே அவர்களை முழுமையாக அறிவதற்கு வழியாகும்.

ஒன்பதாவது கட்டுரையின் தலைப்பு, இருளர் திருமணம்.

இருளர்களிடையே ஆறு உட்பிரிவுகள் காணப்படுகிறது, அவை பூங்கரு, குடகர், கல்கட்டி, வெள்ளக, தெவாலா, கொப்பிலங்கம். இப்பிரிவுகளில் காணப்படும் முதல் ஐந்து பிரிவுகளைச் சார்ந்தவர்கள் சகோதர உறவுகளாகக் கருதப்படுகிறார்கள். அனைத்துப் பிரிவினர்களும் கொப்பிலங்கம் பிரிவைச் சார்ந்தவர்களோடு மட்டுமே திருமண உறவு கொள்கின்றனர்.

இருளர்களிடையே மூன்றுவிதமான திருமண வகைகள் இருப்பதாகக் கட்டுரை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். மாப்பிள்ளையின் பெற்றோர் பெண்ணை நேரில் பார்த்துப் பெண் வீட்டாரிடம் பேசி மணம் முடித்தல் முதல் வகை. மாப்பிள்ளை தனக்குப் பிடித்த பூப்பெய்திய பெண்ணோடு திருமணத்திற்கு முன்பே தொடர்பு கொண்டு அவளுடைய வீட்டில் தங்கி வாழ்க்கை நடத்திப் பின் அவளைத் திருமணம் செய்து கொள்வது இரண்டாம் வகை. மாப்பிள்ளை தமக்குப் பிடித்த பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓடித் திருமணம் செய்வது மூன்றாம் வகை. இந்தச் சிறிய கட்டுரை திருமண முறையை மட்டுமே பேசுகிறது.

பத்தாவது கட்டுரையின் தலைப்பு, இருளரும் இசையும்.

பழங்குடிகளோடு நடனமும் இசையும் இணைந்தே காணப்படுகிறது. இதில் இசை கருவிகள் முதன்மை இடத்தைப் பெறுகிறது. பழங்குடிகளிடையே காணப்படும் வளர்ச்சி அடைந்த வடிவம் என்றால் அது இசைக் கருவியே. பழங்குடிகளின் இசைக் கருவியே நாகரிகத்தின் முதல்படி என்று கருதலாம்.

இருளர்கள் தமது மொழியில் மிகச் சில இசைப் பாடல்களையே பாடுகின்றனர். புதியவர்களிடம் பாடிக் காட்ட வெட்கப்படுகிறார்கள். இதனால் அவர்களின் பாடல்களைத் திரட்டுவது கடினமான ஒன்றாகும்.

இருளர்களின் இசைக் கருவிகள் இருவகைப்படும், ஒன்று தோற்கருவிகள், மற்றொன்று துளைக் கருவிகள். ஒவ்வொன்றுக்கும் மூன்றுவிதமான கருவிகளை வைத்துள்ளனர். இவை அனைத்தைப் பற்றியும் இக்கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இசையைக் கொண்டு அவர்களின் வளர்ச்சி நிலையினைக் காணலாம், பாடல்களைக் கொண்டு அவர்களின் பண்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.

பழங்குடிகள் என்றால் சிலரிடையே இழிவான பார்வை காணப்படுகிறது. நாகரிகக் குன்றியவர்களாகப் பழங்குடிகளைக் காண்பது பொதுவான வழக்கமாகும். சில பழங்குடிகளின் இசை அமைப்பு அவர்களின் நாகரிகத்தைத் தொட்டுவிட்டதைக் காணலாம். பழங்குடிகளை நமது நாரிகப் பார்வையில் பார்க்கக் கூடாது. அவர்களின் சூழ்நிலையில் இருந்தே அவர்களை விவரிக்க வேண்டும்.

பழங்குடி சமூகங்களில் இசை என்பது ஒரு கலை வடிவம் மட்டுமல்ல, அது அவர்களின் வாழ்வியல், சடங்கு, மற்றும் சமூக நினைவகத்தின் மையமாக இருப்பதால், அது அவர்களின் நாகரிகத்தின் வெளிப்பாடாகிறது. மேலும் இசையும் பாடலும் அவர்களின் கூட்டுச் சிந்தனையின் வெளிப்பாடாக இருப்பதால், அனைத்துச் சடங்குகளிலும் இசையும் பாடலும் இடம்பெறுகிறது.

பன்னிரெண்டாவது கட்டுரை இரா.பாலகிருஷ்ணன் எழுதிய, கொடவர் வாழ்க்கை முறை.

மைசூர் மாநிலத்தின் தென்கோடியில் அமைந்துள்ள குடகு என்கிற மாவட்டத்தில் கொடவர் வாழ்ந்து வருகின்றனர். இக்கட்டுரையில் கொடவர் வாழ்வில் காணப்படும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்தையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் ஆசிரியர் எழுதியுள்ளார்.

ஆண் குழந்தை பிறந்தால் துப்பாக்கி வெடித்து அனைவருக்கும் அறிவிக்கின்றனர் கொடவர். அதே நேரத்தில் பெண் குழந்தை பிறந்தால் கிண்கிணி மணியின் மூலம் ஓசை எழுப்பி அறிவிக்கின்றனர். தங்களது கொண்டாட்டங்களை மங்கல என்கிற சொற்களைச் சேர்த்து வெளிப்படுத்துகின்றனர். கொதி மங்கலம் என்பது குழந்தையின் ஐந்தாவது வயதில் நடைபெறும் கொண்டாட்டம். இதற்குக் கொதி மங்கல என்று பெயர். இது பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் மேலுள்ள அன்பை வெளிப்படுத்தும் கொண்டாட்டமாகும். தற்போது இந்தக் கொண்டாட்டம் குறைந்துவிட்டதாகக் கட்டுரையாசிரியர் கூறுகிறார்.

கெமிகுத்தி மங்கல என்கிற கொண்டாட்டம் என்பது ஆண்களுக்கு ஏழாவது வயதில் நடைபெறும் காதணி விழாவாகும். ஆண்களுக்குக் காதணிவதையே கெமிகுத்தி மங்கலம் என்கிற பெயரில் கொண்டாடுகின்றனர். பெண்களுக்குக் காது குத்தும் வழக்கம் இருக்கிறது, ஆனால் அதைக் கொண்டாட்டமாகச் செய்வதில்லை.

கொடிய வனவிலங்கான புலியைக் கொல்பவரின் வீரத்தைக் கொண்டாடுவது நரிமங்கல கொண்டாட்டம். தற்போது வனவிலங்கைக் கொல்வது சட்ட விதிக்கு எதிரானது. ஒருவன் ஒருத்தியை முதன்முறையாகத் தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொள்ளும் மங்கலவிழாவிற்கு கன்னி மங்கல என்று பெயர். கொடவர் மறுமணத்தை அனுமதிக்கிறார்கள், இதைக் கூடாவளி மங்கல என்று பெயரிட்டுக் கொண்டாடுகின்றனர். வாரிசு எதுவும் இல்லாது ஒரு பெண் மட்டும் ஒரு குடும்பத்தில் இருந்தால், அப்பெண்ணையே அந்தக் குடும்பத்தின் வாரிசாகக் கொள்கின்றனர். அதற்காகத் திருமணம் நிகழும் போது மணமகன் பெண்வீட்டுக் குடும்பத்தின் உறுப்பினராக மாற்றப்படுகிறார். இந்த நிகழ்வுக்கு ஒக்கப் பரிஜெ என்று பெயர். இதுபோன்று பல மங்கலக் கொண்டாட்டங்களை இக்கட்டுரை ஆசிரியர் விவரிக்கிறார். இறுதியாக இறப்பு நிகழ்வின் போது நடைபெறும் சடங்குகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆராய்ச்சி இதழில் வெளிவந்த இத்தகைய கட்டுரையினை இன்று அறிமுகம் செய்வது ஏனென்று கேள்வி எழுப்பப்படலாம். காரணம் என்னவென்றால், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நா.வா. பல அறிஞர்களை உருவாக்கி ஆராய்ச்சி இதழில் மானுடவியல் பார்வையில் எழுத வைத்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கே ஆகும்.

மானுடவியல் என்கிற துறை அயல்நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் பலவாறு ஆய்வு செய்யப்படுகிறது. அதில் ஒன்று மார்க்சிய மானுடவியல். தமிழகத்தில் மானுடவியல் துறை தற்போது விரிந்து கொண்டிருக்கிறது. மானுடவியல் அணுகுமுறையில் இங்குள்ள பழங்குடிகளை ஆய்வு செய்கிறது. இந்த நிலையில் மார்க்சிய மானுடவியல் பார்வையில் அணுகுவதன் அவசியத்தை வலியுறுத்தவே இந்த நூல் அறிமுகம் செய்யப்படுகிறது.

நா.வா.வையும் அவரால் வளர்க்கப்பட்ட அறிஞர்களையும் தொடர்ந்து நாம் மார்க்சிய மானுடவியல் துறையினை வளர்ப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யும் போது தமிழகத்தில் உள்ள கல்விப்புலம், நமது மார்க்சிய மானுடவியல் நூல்களைப் பார்வை நூல்களாகப் படிக்க வேண்டிய சூழ்நிலையினை நாம் ஏற்படுத்த வேண்டும். மார்கனின் “பண்டைய சமுதாயம்” நூல் அண்மையில் தமிழில் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே எங்கெல்சின் “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற நூலும் “மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்” என்கிற சிறு நூலும் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

மனிதயினத்தின் குடும்பம் பற்றிய படிநிலை வளர்ச்சியினையும் அரசின் தோற்றதையும் நாம் சரியாகப் புரிந்து கொள்வதற்கு மார்கனின் நூலும் எங்கெல்சின் நூலும் அவசியமானதாகும். அதே போன்று பல அவசியமான மார்க்சிய மானுடவியல் நூல்களை நாம் படைக்க வேண்டும். அதற்கு நா.வா.வை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ள இத்தகைய நூல்களை முதலில் படிக்க வேண்டும். இந்த நூல் மார்க்சிய மானுடவியலுக்கு ஒரு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது. கள ஆய்வில் திரட்டப்பட்ட தரவுகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது, தொடர்ந்து செயல்படுவோம்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“மக்களும் மரபுகளும்”
ஆசிரியர்:நா.வானமாமலை
வெளியீடு:
என்.சி.பி.எச். / பிப்ரவரி 2022
விலை:₹.150
அறிமுகம் எழுதியவர்:  
✍🏻 அ.கா.ஈஸ்வரன்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *