கருந்துளை
*****************

இடது கை ஆள்காட்டி விரல்
நமைக்கிறது.
அதற்கு மை என்றால் ஒரு மயக்கம்.
மயக்கமும் மாற்றமும்
தவிர்க்க முடியாத
இருபெரும்
எதிரெதிர்த் தத்துவங்கள்.

இடது கை ஆள்காட்டி விரல்
நமைக்கிறது.
அதில் ஒரு கரும்புள்ளி இட்டாக வேண்டும்.

கரும்புள்ளியை
சிலர் பிச்சையெடுக்கிறார்கள்.
சிலர் பறித்துக் கொள்கிறார்கள்
சிலர் விலை குறிக்கிறார்கள்
மொத்தத்தில்
பெரும்பாலும்
கரும்புள்ளியின் புனிதம்
காப்பாற்றப் படுவதேயில்லை.

கரும்புள்ளிக்காக
ஏராளமாகப் பொய் பேசுகிறார்கள்
அலட்சியமாகக் கடந்துவிடக் கூடியவர்கள் எல்லாம்
திடீரெனப் பாசக்காரர்களாக மாறிவிடுகிறார்கள்.

விரலின் முன்னால் குத்தப்பட்டவுடனே
அவர்கள்
முதுகில் குத்த ஆரம்பிக்கிறார்கள்.

கரும்புள்ளி நம்மைப் பொறுத்தவரை
ஒரு நொடி காரியம்
அவர்களுக்கோ
ஐந்தாண்டுகளுக்கான
நாற்காலிப் புதையல்.

விரலில் புள்ளியை ஏற்கும் முன்
இதயத்துடன்
ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துங்கள்
மூளையுடன் விவாதியுங்கள்.
ஒரு காஸ் சிலிண்டரின் உண்டியலில்
எத்தனை நோட்டுகளைத் திணித்தீர்கள் என்று
தெரிந்துகொள்ளுங்கள்.
மாதாந்திர
மளிகைப் பட்டியலின் கண்ணாடியில்
உங்கள் முகத்தை
ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு லிட்டர் பெட்ரோலில்
கலந்திருக்கும் குருதியின் நெருப்பைக் கணக்கெடுங்கள்.

வாக்களிப்பதற்கு முன்பு
ஒரேயொரு முறை
உங்கள் வரலாற்றை நீங்களே
வாசித்துப் பாருங்கள்.
நீங்கள் எங்கிருந்து எங்கு வந்திருக்கிறீர்கள்?
யார் யாரெல்லாம் வழி மறிக்கிறார்கள்?
போலி மனிதர்களின் வாயசைப்புகளை
எழுத்துக் கூட்டிப் பாருங்கள்.

விரலில் வைக்கும் கரும்புள்ளி
நீங்கள் பெரும்புள்ளி என்று
பிறர் பேசட்டும்.

— நா.வே.அருள்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *