1. இதயத்தின் வடிவத்திலேயே
**************
நான் ஆச்சரியப்பட்டுத்தான் போனேன்
என் வீட்டில் எல்லோருக்கும்
எத்துணைப் பாசம்!
நான் குழந்தையாக ஒடியாடிய போது
இதயத்தின் வடிவத்திலேயே
பிஸ்கட் கொடுத்தார்கள்.
வளர்ந்த பின்னாலும்
குறையவில்லை… வளர்ந்தது பிரியம்
என் விருப்பமறிந்து
இதயத்தின் வடிவத்திலேயே
கட்லட் கொடுத்தார்கள்.
கடையில் வாங்குகிறபோது
மூடியில் உலோக இதயம் பொருத்தியதாக
பேனா வாங்கிக் கொடுத்தார்கள்
எனக்குப் பிடிக்காத திருமணத்தை
நிர்ப்பந்தித்து நடத்தும்போதும்
இதயத்தின் வடிவத்திலேயே
பத்திரிகை வாங்கி அச்சடித்தார்கள்
அதற்கப்புறம் அவர்கள் செய்ததுதான்
அவ்வளவு பிரமாதம்
இதயத்தின் வடிவத்திலேயே
மிகப் பெரிய பாத்திரம் எடுத்து
என்னையும் என் காதலியையும்
நீருக்குள் மூழ்த்தினார்கள்
எல்லாம் முடிந்தபின்
இதயத்தின் வடிவத்திலேயே
சவப்பெட்டி செய்வதற்கு
எத்தனைத் தச்சர்கள்!
எத்தனைத் தச்சர்கள்!!
2
**************
போரினால் ஒரு துப்பாக்கி செய்வதைவிட
காதலினால் ஒரு பூ மலர்வது
முக்கியமானது.
ஒவ்வொரு கண் சிமிட்டலிலும்
ஒரு பட்டாம் பூச்சி பறக்கிறது.
இமையின் முடிகள்
ஒவ்வொன்றும்
ஒரு தூரிகை
அதனால்தான் அது
ஒவ்வொரு பார்வையையும்
ஒரு ஓவியமாக வரைந்துவிடுகிறது.
காதலர்களின் முகத்துக்கு
உவமை உருவகமென்று
பயன்படுத்திப் பயன்படுத்தி
எவ்வளவுதான் நிலவு தேய்ந்தாலும்
மறுபடியும் வளர்ந்துவிடுகிறது.
மனிதர்கள்தாம் வளர்வதாயில்லை
இல்லையென்றால்
இதய உண்டியலில்
முத்தத்தை இடுகிறபோது
சமூகத்தில் ஏன்
ஒரு வெடிகுண்டு தாக்குதல்?
3
**************
வழியில் நடந்து வரும்போது
இரண்டு இதயங்கள்
துள்ளத் துள்ளத் துடித்துக் கொண்டிருந்தன
இன்னும் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது…
உங்கள் வீட்டின் எறவாணத்தில் செருகிவிடுங்கள்
உள்ளே போகும்போதும்
வெளியே வரும்போதும்
ஒவ்வொரு நாளும்
உங்கள் தலையில் சொட்டி
ஊறட்டும் ரத்தம்
சொட்டும் ரத்தம்
மூளையைச் சுத்திகரிக்கும்
இதுதான் மூளைக்கான
துப்புரவுத் தொழில் நுட்பம்
இனி-
மூளைக் குப்பைக் கூடையை
காலி செய்யுங்கள்
அழுகிய பொருள்கள் என்னென்ன என்று
ஆராய்ச்சி செய்யுங்கள்
துர்நாற்றத் துணிமூட்டைகளைப்
போட்டுவைத்தவர்களைப் புலனாய்வு செய்யுங்கள்
ஓர வஞ்சனை இல்லாமல்
உண்மையைக் கண்டடையுங்கள்
பயனற்ற பொருள்களையெல்லாம்
பட்டியலிடுங்கள்
அழுகிய பொருள்களையெல்லாம் அகற்றுங்கள்
இப்போது
கவிழ்த்த குப்பைக் கூடையை நிமிர்த்துங்கள்
கழுவுங்கள்
சுத்தமாக்குங்கள்
ஒருபிடி மண்போட்டால்
உருவாகும் உயிர்த்தோட்டம்.
இனி… மூளை
ஒரு குப்பைக் கூடையல்ல…
பூந்தோட்டம்
அதில்
உண்மையான காதல் விதைகளைத்
தூவுங்கள்.
ஆடுகளையும் மாடுகளையும்
அண்ட விடாதீர்கள்
கடித்துத் தின்றுவிடும்;
காதலை மென்றுவிடும்.
அந்தச் செடியில்
இரண்டு இதயங்கள் மலரும்
ஒன்று இளவரசன்
இன்னொன்று திவ்யா.
4. சம்பந்தம்
*************
ஒரு காதலர் தினத்தை
இப்படிக் கொண்டாடினால் என்ன
என்று நான் கேட்கிறேன்
உங்களுக்குக் கோபம் வருகிறது
என் சட்டையைப் பிடித்துக் கொள்கிறீர்கள்
பற்களை நெறிக்கிறீர்கள்
கைகளை ஓங்குகிறீர்கள்
பிடரியில் தட்டுகிறீர்கள்
கீழே தள்ளி மிதிக்கிறீர்கள்
அவ்வளவு திமிரா என்று
ஆக்ரோஷமாய்க் கேட்கிறீர்கள்
அடித்து நொறுக்குகிறீர்கள்
இனிப் பேசிப் பயனில்லை என்று
பிரேதமாய்க் கிடக்கிறேன்
நான் கேட்டது இதுதான்
“எதிர் வரும்
ஒரு காதலர் தினத்திலாவது
ஊரும் சேரியும்
ஒன்றாகாதா?”
அறிமுகம் எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.